மோதல் + காதல் சேர்ந்த ஒரு முக்கோண காதல் கதை கேடி. படிப்பில் ரொம் பவும் சுமாரானவர் ரவி. ஆனால் அவரது குணம் தங்கம். குணத்திற்காகவே அவரை நேசிக்கிறார் கூடப்படிக்கும் மாணவி இலியானா. மந்திரியின் தங்கை தாம்னாவும் அதே வகுப்பில் படிப்பவர். படிப்பில் கெட்டி - கூடவே மந்திரி தங்கை என்ற அந்தஸ்து என ஏக ஜபர்தஸ்து செய்யும் தாம்னாவிற்கு ரவியின் செய்கைகள் எப்போதும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது. தாம்னாவின் செய்கைகளால் ரவி துவண்டிருக்கும் நேரத்தில் தாம்னாவை விட படிப்பில் ரவியை உயர்த்திக்காட்டுகிறேன் என்று சவால் விட்டுக்கொண்டு செயல்படும் இலியானா ஒரு கட்டத்தில் ரவியை படிப்பில் ஓஹோ என்று உயர்த்துகிறார். தன்னை உயர்த்திய இலியானா மீது ரவி காதல் கொள்ள - தன் இடத்திற்கு வந்துவிட்ட ரவியை முதலில் போட்டியாளராக பார்க்கும் தாம்னா பிறகு காதலனாக பார்க்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே ரவி - இலியானா காதல் தாம்னாவிற்கு தெரியவர, புத்திசாலித்தனமாக இலியானாவை ஓரம்கட்ட பார்க்கிறார். அண்ணன் தன் காதலுக்கு எதிரியாக இருந்தாலும் எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் ரவி மீதான தனது காதலை தொடர்கிறார் தாம்னா. ஒரு கட்டத்தில் தாம்னாவின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் ரவியும் இலியானாவும். தாம்னா - இலியான இருவரில் ரவி யாருக்கு கிடைத்தார் என்பதே கிளைமாக்ஸ்.
அப்பா தயாரிப்பாளர் - அண்ணன் இயக்குனர். இந்த தகுதி மட்டும் தான் இருக்கிறது ரவிக்கு. பொம்மை கூட சற்று அழகாக கொடுத்த வசனத்தை உச்சரிக்குமோ என்று நினைக்க வைக்கிறது அவர் வசனம் பேசும் அழகு. மேலும் எல்லாக் காட்சிகளிலும் அவரது ஸ்டீரியோ டைப் முகபாவம் எரிச்சலைக் கிளப்புகிறது. பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் எப்படியோ ஒப்பேற்றும் ரவி கொஞ்சமாவது நடிக்கக் கற்றுக் கொண்டுதான் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்க வேண்டும். அதுதான் அவருக்கும், அவர் நடிக்கும் படங்களைப் பார்க்கும் நமக்கும் நல்லது.
இலியானா - ரவிக்கு இவர் எவ்வளவோ தேவலை. இயக்குனர் சொன்னதை பிழையில்லாமல் செய்துள்ளார். தொய்ந்து விழும் படத்தை தூக்கி நிறுத்துவது தாம்னாவின் நடிப்புதான் என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை. கண்களிலேயே பணக்காரத் திமிரையும், பிடிவாத குணத்தையும் அநாயாசமாகக் காட்டுகிறார். கிட்டத்தட்ட மன்னன் விஜயசாந்தி, படையப்பா ரம்யா, திமிரு ஸ்ரேயாவை நினைவு படுத்துகிறது இவரது பாத்திரப் படைப்பு என்றாலும் தன்னுடைய அற்புதமான நடிப்பால் அந்த நினைப்புகள் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளுகிறார்.
ரமேஷ்கண்ணா காமெடியில் படுத்துகிறார். மந்திரியாக வரும் அதுல் குல்கர்னி பிரமாதமாக சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமே செய்யவில்லை என்பது ஏமாற்றமே. திறமையான ஒரு நடிகர் மீண்டும் வீணடிக்கப்பட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். ஆதிவாசி நானே பாடல் மட்டும் கொஞ்சம் நினைவில் நிற்க முயல்கிறது. இயக்குனர் ஜோதி கிருஷ்ணா கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் கேடி இன்னமும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.
|