தமிழக அரசின் முத்திரை சின்னமான பெரிய கோபுரம் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருக்கிறது. இக்கோபுரம் வரலாற்றுப்புகழ் பெற்றவை. இதே புகழ் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கும் உண்டு. தனிச்சுவையுடைய திருவில்லிபுத்தூர் பால்கோவா, கிண்டுதல் முறையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பொருளாகும்.
சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்துக் கொண்டால் ஒன்றரை கிலோ சக்கரை பால்கோவா தயாரிக்க தேவைப்படும். முதலில் பாலினை தண்ணீர் கலப்படம் செய்யாமல் அடுப்பில் வைத்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடியில் பிடிப்பு ஏற்பட்டு பால்கோவா நிறம் மற்றும் சுவை மாறி விடும். இப்படி சுமார் 20 நிமிடம் பாலினை மட்டும் கிண்டிக் கொண்டு இருக்க வேண்டும். பின் பால் நன்கு சுடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சக்கரையை பாலில் போட்டு விட்டு நன்கு கிண்ட வேண்டும். அப்படி ஒரு 15 நிமிடம் கிண்டிக் கொண்டு இருந்தால் பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வரும் பின் நன்கு கிண்டினால் ஒரு நிலையில் நன்கு மணத்துடன் கூடிய பால்கோவா தயார் ஆகிவிடும்.இதனுடன் நறுமணப் பொருள்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். பால்கோவா தயாரிக்கும் பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் பாலினைக் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அது போல் பாலின் அளவிற்கு ஏற்ப சக்கரையை சேர்க்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்போவா இந்தியா மற்றும் உலகின் வின் அனைத்துப்பகுதிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கிலோக்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறும் கூட்டுறவு பால்போவா கடையின் நிர்வாகி ஜெயராமன் இந்தப் பால்கோவாவிற்கு தனி வரலாறே இருக்கிறது என்றார். 1970ம் ஆண்டு சிறிதாக உற்பத்தி செய்யப்பட்ட பால்கோவா இன்று 34 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு மக்களுக்கு தனி ருசியினை அளித்து வருகிறது. இந்த வெற்றி மற்றும் வளர்ச்சிக்குக் காரணம் தரமான பால்கோவாவினை எங்களது கூட்டுறவு சொசைட்டியின் உற்பத்தி தான் காரணம் என்கிறார்.
பால்கோவா தயாரிக்கும் முறை எப்படி என்றால் முதலில் கூட்டுறவு சொசைட்டி ஊழியர்கள் மாடுகளில் பால் கறந்து வரும் பொழுது அதனை முதலில் தரமான பாலாக இருக்கிறதா அல்லது தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என்பதை லேப்பில் டெஸ்ட் செயத பின் தான் பால்கோவா செய்ய அனுமதியளிப்போம். தண்ணீர்கலந்த பால் கொண்டு வரப்பட்டால் பாலை கறந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தரமான பால் இருந்தால் தான் தரமான பால்கோவா கிடைக்கும். அதே போல் பாலில் சேர்க்கப்படும் சர்க்கரையும் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கி வருகிறோம். இப்படி தரமான முறையில் பால்கோவா செய்வதால் தனியாரால் உற்பத்தி செய்யப்படும் பால்கோவா எங்களின் தரத்திற்கு போட்டிபோட முடிவதில்லை. தனியார்கள் தயாரிக்கின்ற பால்கோவா அதிக தண்ணீர் கலப்படம் மற்றும் சர்க்கரையோடு ரவைகளை கலந்து விடுகின்றனர். அதே போல் பால்கோவா மஞ்சள் நிறத்திற்கு வர எலுமிச்சை சாறு சேர்த்து விடுகின்றனர். ஆனால் நாங்கள் அப்படி எதுவும் செய்வதில்லை. இதனை அறிந்து பொது மக்களும் 1000 தனியார் கடைகள் இருந்தாலும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் எங்கள் கடையை தேடி பிடித்து வந்து வாங்குகின்றனர். இவை தவிர 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு பால்கோவா உற்பித்தி செய்யப்படுவதை சொல்லலாம்.
அதனால் ஒரே நாளில் ஒரு கடையில் 1000 கிலோ பால்கோவா வரை விற்பனையாகிறது. அதே போல் பிற இடங்களில் பால்கோவா ஸ்டவ் அடுப்பு, கேஸ் அடுப்புகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் எங்களிடம் பழைய முறைப்படி விறகு அடுப்பில் தான் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி ஓசுர், சித்தூர், மும்பை போன்ற இடங்களில் பால்கோவா தயாரிக்கப்பட்டாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் ருசி இருப்பதில்லை. இதுவும் எங்களின் சிறந்த பால்கோவாவை 20 நாள் வரை வைத்து இருந்து சாப்பிடலாம். அது வரை அதன் தன்மை கெட்டுப் போகாமல் இருக்கும் என்கிறார்.
இவை தவிர கிரிம் பால்கோவாவும் தயாரிக்கப்படுகிறது. இது இனிப்பு இல்லாதது. சாக்லெட் மற்றும் பேக்கரிகளில் இனிப்பு பதார்த்தங்கள் தயாரிக்க இந்த கிரிம் பால்கோவா அதிகளவு பயன்படுகிறது. பொதுவாக பால்கோவா தயாரிக்க அதிகளவு மூலதனம் தேவையில்லை என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஏளாரமானோர் பால்கோவா உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பேருந்த நிலையங்களில் கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எது எப்படியோ ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சிறுவர் முதல் பெரியவர் வரைஅனைவரையும் சுண்டி இழுக்கிறது. இதற்கு தனி சுவை, தனி தரம் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை 34 ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு வருகிறதாம். இந்நிலை நீடிக்கிறது, நீடிக்கும் என்கின்றனர் பால்கோவா அபிமானிகள்.
|