Tamiloviam
நவம்பர் 06 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ஒபாமா வெற்றி
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தலில் மக்கள் எதிர்பார்த்தபடியே பராக் ஒபாமா மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை எதிர்கட்சி வேட்பாளர் மெக்கெயினும் வரவேற்றுள்ளார். பெரும்பான்மையான மக்களும் அவரது வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் எந்த அமெரிக்க அதிபரும் எதிர்கொள்ளாத அளவிற்கு ஒபாமாவிற்கு முன் பிரச்சனைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. உலகிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் சில அமெரிக்க கம்பெனிகள் செய்த தவறால் ஸ்தம்பித்துள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை உடனடியாக சீர்தூக்கி நிறுத்தவேண்டிய நிலையில் ஒபாமா பதவியேற்கவுள்ளார். விரும்பியோ விரும்பாமலோ உலகப் பொருளாதாரம் ஓரளவிற்கு அமெரிக்கப் பொருளாதாரத்தை சார்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க பங்கு வர்தகத்தை உடனடியாக சீர்தூக்கியாகவேண்டிய கட்டாயம் அதிபருக்கு உள்ளது.

மேலும் ஈராக் மற்றும் ஆப்கான் போரின் தாக்கத்திலிருந்து அமெரிக்கா இன்னும் முழுவதும் மீளாத நிலையில் உள்ளது. ராணுவத்திற்காக செலவழிக்கும் தொகையைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஆப்கான் மற்றும் ஈராகில் தங்கியுள்ள படைகளுக்காக மட்டுமே செலவழித்துவருகிறது. புலி வாலைப் பிடித்த கதையாக தனது படைகளை உடனடியாகத் திரும்பப் பெறமுடியாத நிலையில் அதிபர் புஷ்ஷால் துவங்கப்பட்ட இந்தப் போர்களினால் கணிசமான உயிரிழப்பை மட்டுமல்லாமல் கணக்கிலாத அளவில் பொருளாதார சேதத்தையும் அனுபவித்து வருகிறது அமெரிக்கா.  

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்காவும் அமெரிக்கர்களும் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் அதிபர் பதவி என்பது ஒபாமாவிற்கு மலர் கிரீடமாக நிச்சயம் இருக்காது.  நம்மூர் அரசியல்வாதிகளைப் போல இலவசங்களைக் காட்டி பதவிக்கு வந்தவர் அல்ல அவர். நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய பதவியேற்ற உடனேயே சில வரிகளை விதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நான் உள்ளேன் என்று அவர் வெளிப்படையாக சொல்லியிருந்தும் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் அவரால் தமது வாழ்வில் - நாட்டில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என்று அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.

நிதி நிலையை சீர் செய்ய புதிய வரிககளை அமுலாக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள அதிபர் மக்களின் வரிச்சுமையை உணர்ந்து நடுத்தர மக்கள் அதிக அளவிற்கு பாதிக்கப்படாத அளவில் தனது வரிவிதிப்புகளை அறிவிக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு மாநிலமும் தனது வருவாய்க்கு ஏற்ற அளவில் செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தவேண்டும் என்பதும் மக்களின் பிரதான எதிர்பார்புகளில் சிலவாகும்.

மாற்றத்தை வேண்டித்தான் அமெரிக்கர்கள் தன்னைத் தேர்தெடுத்துள்ளார்கள் என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் செயலிலும் அவர் காட்டினால் நல்லது. பெரும் எதிர்பார்புகளுக்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா சீர்குலைந்திருக்கும் அமெரிக்காவை தூக்கி நிறுத்தி அமெரிக்க மக்களின் விடிவெள்ளியாவாரா?? அல்லது..... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |