ஏகப்பட்ட சினிமாக்களில் பார்த்த முக்கோணக் காதல் கதை தான் - ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பணக்கார இளசுகளின் காதலை டாம்பீகமாக காட்டியுள்ளார் இயக்குனர்.
கல்லூரி மாணவரான சாந்தனுக்கு கூடப்படிக்கும் இஷிதாவின் மீது காதல். சாந்தனுவின் அத்தை மகள் வேதிகாவுக்கு சாந்தனு மீது காதல். இந்த முக்கோண குழப்படியில் சாந்தனு வேதிகாவை காதலிப்பதாக நினைத்து அவருடன் சண்டை போட்டு பிரிகிறார் இஷிதா. கடைசிவரை தன்னை நம்பாத காதலிக்கு உண்மையை புரியவைக்க சாந்தனு எடுக்கிற முயற்சிகள் வெற்றியளித்தனவா ? அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே க்ளைமாக்ஸ். துள்ளல் நடனம், துறு துறு ரியாக்ஷன்களில் மனதை அள்ளுகிறார் சாந்தனு. ஒரே நேரத்தில் காதலியையும் அத்தை பெண்ணையும் சமாளிக்கும் இடம் சூப்பர். வெற்றி நாயகனாக காலூன்றுவதற்கான அத்தனை தகுதிகளும் சாந்தனுவிடம் இருப்பதற்கான அடையாளம் முதல் படத்திலேயே தெரிகிறது. சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.
முதல் நாயகி இஷிதா ஓக்கே ரகம். நடிக்க அதிக வேலையில்லாததால் தப்பித்தார். இன்னொரு நாயகி வேதிகா. காதலுக்காக உருகும் டிபிகல் தமிழ் நாயகி. நடிப்பில் இஷிதாவை பல இடங்களில் ஓவர்டேக் செய்கிறார்.
நகரத்து நாகரீகத்தை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறார் டைரக்டர் கலாப்பிரபு. வீட்டை விட்டு வெளியூர் கிளம்பும் அமிதா தனது மகனிடமும், அவனது பிரண்ட்சுகளிடமும் "நோ வீடியோ, நோ பேட் ஹேபிட்ஸ்" என்று எச்சரித்துவிட்டே கிளம்புகிறார். லவ் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் மகளிடமும், அவளது தோழிகளிடமும் "நீங்க பேசிட்டு இருங்க" என்று அறையை விட்டு வெளியேறுகிறார் இன்னொரு அம்மா. நிழல்கள் ரவி, அமிதா, சந்துனுவின் நண்பர்கள் என எல்லோருமே இன்றைய நாகரிக உலகை பிதிபலிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு பெரும் பலம் என்றால் மிகையில்லை. இசை, பின்னணி என இரண்டிலும் அசத்தியுள்ளார். ஆன்ட்ரூவின் ஒளிப்பதிவு ரஹ்மான் இசையுடன் கைகோர்கிறது.
பாடல்களிலும் காட்சியமைப்புகளிலும் மட்டும் 'சக்கரக்கட்டி' இனிக்கிறது. முக்கோண காதல் கதையும் அதை சொன்ன விதமும் ரொம்ப பழசு என்றாலும் இனி வரும் படங்களிலாவது புதிய இயக்குனர் கலாபிரபு அழுத்தமான கதை இல்லாத குறையை சரிசெய்வார் என்று நம்பலாம்.
|