நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : குளிச்சா குற்றாலம் - 1
- திருமலை ராஜன் [strajan123@yahoo.com]
| Printable version | URL |

ஆடி மாதக் காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள். ஆனால் இந்த வருடம் ஆடிக் காற்றெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டது. இயற்கையை ஒழுங்காக்ப் பாதுகாக்கத் தெரியாத இந்த மக்களுக்காக நாம் ஏன் மெனக்கெட்டு அடித்து நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணூவானேன் என்று அந்த ஆடி மாச தெ மே பருவக்காற்று முடிவு செய்து, இந்த வருடம் பருவக் காற்று அடிக்காமல் சத்தியாக்கிரகம் பண்ணி விட்டது. அப்படி பேய்க் காற்றும், ஓவென ஓயாது அடிக்கும் ஊழிக்காற்றும் காணப்படவில்லையென்றால், கேரளாவில் தென்மேற்குப்
பருவ மழை மந்தம் என்று அர்த்தம், கேரளாவில் தெ மே பருவ மழை மந்தம் என்றால் தமிழ் நாட்டில் கோடைக்காலம் இரண்டாவது இன்னிங்ஸை தமிழ் நாட்டில் தொடங்குகிறது என்று அர்த்தம். அது போன்ற ஒரு இரண்டவது அக்னி நட்சத்திரத்தில் இந்த முறை தமிழ்நாடு வசமாக மாட்டிக் கொண்டு வேர்த்து ஒழுகியது. பகல் பொழுதுகளில் புளுக்கம் வாட்டியது. ஜூலை ஆகஸ்ட் மாதம்  அருமையான சீசன் அனுபவிக்கப் போகிறோம் என்ற ஆசைப் பட்டவர்கள் எண்ணத்தில்  ஒரு லாரி மண் விழுந்தது. இனிமேல் இப்படித்தான் நிரந்தரமாகவே பருவம் மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

Kutralamகுற்றால சாரல் சீசனை அனுபவித்திராத துரதிருஷ்டசாலிகளுக்கு ஒரு சின்ன அறிமுகம். தெ மே பருவ மழை வழக்கமாக ஜூன் 1 மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் துவங்கும். ஆனால் அந்த பருவகாலக் காற்றுகள் கொண்டுவரும் மேகங்களையெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் தடுத்துவிட மழையெல்லாம் அங்கேயே கொட்டி விட, மிஞ்சிய மழையற்ற மேகங்களும், சிறு மழைத்தூறல்களைச் சுமந்து வரும் காற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் உள்ள மழை மறைவுப் பிரதேசங்களுக்கு விட்ட குறை தொட்டகுறையாக கல்யாண வீட்டில் பன்னீர் செம்பிலிருந்து தெளிக்கும் பன்னீர் போல தெளித்துக் கொண்டிருக்கும். மழையை எல்லாம் சேர நாட்டுக் காரர்கள் எடுத்துக் கொள்ள அதன் எச்சங்களான பேய்க்காற்றையும் அதனுடன் சேர்ந்து வரும் பூத்துவாலைகளாக துவானங்களையும் தென் தமிழ் நாட்டுக் காரர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அந்தச் சாரலையும் பேய்காற்றையும் தென் தமிழ்நாட்டில் பரவலாகவும் வலுவாகவும் உணரலாம். வட தமிழ் நாட்டில் கொஞ்சம் சோகையாகத் தெரியும். அந்த மாதங்களில் காற்று பிய்த்துக் கொண்டு அடிக்கும், வானம் எப்பொழுதும் மப்பும் மந்தாரமாக இருக்கும், லேசான தூறல்கள் சிலு சிலுத்துக் கொண்டே இருக்கும், காற்றில் குளிர்ச்சி தெரியும் கருத்தம்மாவில் வரும் தென் மேற்குப் பருவக் காத்து பாடல் காட்சி போல. அந்த மாதிரி சீசனில் மதுரை வரும் சாரலை உணர முடிந்தால் குற்றாலம் போன்ற மேற்குப் பகுதிகளில் உள்ள மலைகள் மேல் மழை வலுவாகப் பெய்கிறது என்று அர்த்தம். இயற்கை வழங்கும் ஒப்பற்றக் கொடைகளில் ஒன்று அந்த சீசனில் வரும் காற்றும் மழைச் சாரலும். கொஞ்சம் மேற்கு மலைப் பகுதிகளை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவிலிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, குற்றாலம் போன்ற ஊர்களில் இந்த சாரலை மிக நன்றாக அனுபவிக்க முடியும். தீடீர் தீடிரென நினைத்துக் கொண்டால் போல் வேகமான காற்றுடன் கூடிய சிறு அல்லது பெருந்தூறல்கள் ஓங்கி அடிப்பதும் நிற்பதும், ஈரக்காற்று பரவசப்படுத்துவதும் மீண்டும் தொடர்வதுமாக இயற்கை காட்டும் வர்ணஜாலம் மண்ட மருதம் வீசும் அந்தப் பருவம். மேற்கு மலைத்தொடரை ஒட்டி வாழ்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் அந்த அளவுக்கு அற்புதமாக இல்லாவிடினும், மந்தாரமும் ஈரக்காற்றும் அது போன்ற தினங்களை வாழ்க்கையின் பொன்னான தினங்களாக உற்சாகம் மிகுந்த தினங்களாக மாற்றி புத்துணர்வை அளிக்கும். வெப்பமான பருவநி லைகளிலேயே வேர்த்துத் தவித்த உடலுக்கும் மனதுக்கும் அது போன்ற நாட்கள் சொர்க்கமாகத் தெரியும். குற்றாலச் சாரல் என்பது மழைநாட்களில் வரும் குளிர்ச்சி அல்ல, இது வேற வகை. அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை.
 
ஆயிரங் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே. குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குமா? தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும், செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும். அனைத்துமே அனுபவித்து எழுதப் பட்ட வரிகள் என்பது குற்றாலக் காடுகளையும் அருவிகளையும்  பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். தெற்கே நாகர்கோவில் அருகே திற்பரப்பு அருவி தொடங்கி கோடைக்கானலின் கீழே கும்பக்கரை அருவி, மேற்கே திருமூர்த்தி மலை அருவி, கம்பம் அருகே சுருளி அருவி, ராஜபாளையம் அய்யனார் கோவில் அருவி, பொள்ளாச்சி குரங்கருவி, காவிரி ஓடி வந்து விழும் ஹோகனேக்கல் அருவி, அதன் கர்நாடகச் சகோதரிகளான சிவசமுத்தி ரம் அருவி, அபே அருவி, இருப்பு அருவி, கோடைக்கானல் அருவிகள், கேரளாவில் உள்ள தேக்கடி அருவி, அதரம்பள்ளி அருவி (புன்னகை மன்னன்), ஜோக் அருவி, ஆந்திராவின் திருப்பதி அருவி வரை எண்ணற்ற அருவிகள் இருந்தாலும் குற்றால அருவிக்கு என தனியாக ஒரு சிறப்பு உண்டு.  நயகரா எல்லாம் பார்த்து ரசிக்க மட்டுமே லாயக்கு.
 அமெரிக்காவின் அருவிகளில் குளிக்க விடமாட்டார்கள், அப்படியே விட்டாலும் தண்ணீரைத் தொட முடியாது உறைந்து விடுவோம் எல்லாம் ஐஸ்கட்டிகளில் இருந்து அப்படியே வருபவை.

அவையெல்லம் காண்பதற்கு மட்டுமே சரிப்படும். நயகராவில் காசு கொடுத்தால் லேசாக ஒரு மஞ்சள் கோட்டை அணிவித்து அடைக் கோழியை நனைத்து விட்டது போல அருவிச் சாரலில் நனைத்து மட்டும் விடுவார்கள். தமிழ்நாட்டின், கர்நாடகத்தின் அருவிகள் அனைத்துமே குளிப்பதற்கு அற்புதமானவை என்றாலும் கூட குற்றாலத்துக்கென்று பல தனிச்சிறப்புகள் இருப்பதால்தான் ஒரு கவிஞரை குளித்தால் குற்றாலம் என்று பாடச் சொல்லியிருக்கிறது.

திருக்குற்றாலம் சம்பந்தரும், திரிகூடராசப்ப கவிராயரும் பாடிய திருத்தலம். நடராஜனின் ஐந்து நடனசபைகளில்
ஜோக்

"நேத்து நீ தண்ணியடிச்சதை உங்கப்பா பார்த்துட்டாருன்னு சொன்னியே, அப்புறம் என்னாச்சு?"

"வேற என்னாச்சு. இதுவரைக்கும் தண்டச்சோறுன்னு என்னை திட்டிக்கிட்டு இருந்தவரு, இப்ப தண்ட'பீர்'ன்னு திட்டறாரு"

- சம்பத்
ஒன்று. அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலரை அல்லது தென்னகத்து ஸ்பா. அடர்ந்த வானாந்திரங்களும், பச்சை மலைத்தொடரும், மூலிகைப் புதர்களும்,அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி. ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். இயற்கை அன்னை சற்றும் வஞ்சகமில்லாமல் வாரி வளங்கிய வெள்ளிச் சரிகை வேய்ந்த பச்சைப் பட்டாடை அணிந்த மலைமகள். தென்மேற்குத் தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்கள், கேரளாவின் தென்மலையில் பெய்யும் மழை நீர் நதியாக உருவெடுத்து, வனாந்திரங்கள், மலையிடுக்குகள், மரத்தடிகள், மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் சரிந்து அருவிகளாக உடலையும் மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம். கிட்டத்தட்ட 550 அடி உயரம் உள்ள மலைத்தொடர்களின் ஒரு பகுதி கேரளத்தின் உட்புறமும் மறு பகுதி குமரியை நோக்கியும் வளைந்து செல்கின்றன. அருவியில் இருந்து வழிந்தோடும் சிற்றாறுகளின் உபயத்தில் பச்சைக் கம்பளம் விரிந்து வயல்வெளிகளாலும் தோப்புக்களாலும், தேக்கு, பலா மரங்களாலும் நிறைந்த சமவெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. திருநெல்வேலியில் இருந்து 50கி மீ தொலைவில் உள்ளது, வடக்கில் இருந்து வருபவர்கள் மதுரை, ராஜபாளையம் வழியாக வரவேண்டும்.

Kutralam 9 riversமொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பழைய அருவி, மெயின் ·பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன. தெ மே பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலங்களில் காற்றும் சாரலும் ஓவென்ற சத்தத்துடன் கானகத்திலுள்ள மரங்களையெல்லாம் பேயாட்டம் போட விட்டு, ஓ ஓவென்றும், ஊ ஊ வென்றும், ஓயாத ஓசைப் பிரளயமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்தக் காலங்களில், அந்தப் பொன்னான பொழுதுகளில் அங்கே தங்கியிருந்து அதை அனுபவிக்க வேண்டும், ரசிக்க வேண்டும். ஜூன் மாதம் தொடங்கும் சாரல் ஆகஸ்டு இறுதி வரை தொடரும். அருவிகளில் தண்ணீர் பொங்கி வரும். அது தவிர பிற மழைக்காலங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து விழுவதுண்டு, கோடையில் கார்ப்பரேஷன் குழாயில் ஒழுகுவது போல லேசாக ஓரத்தில் வடிந்து கொண்டிருக்கும். இந்த அருவி நீர் பல்வேறு மூலிகைகளைக் குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனி 1817லிலேயே ஒரு கமிட்டியை அமைத்து அதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்துள்ளனர். டாக்டர் வொயிட் என்பவர் 2000 வகையான மலர்களையும்,செடிகளையும் இந்த மலைகளில் இனம் கண்டுள்ளார். மலையின் மீது ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற் எண்ணற்ற பல வகைகள் காய்க்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை.

பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன. மெயின் அருவியில் விழும் நீர் பத்தடி முதல் நூறடிகள் உயரம் வரை பல்வேறு உயரங்களில் இருந்து விழுகின்றன. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கி மீ தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும்.

(தொடரும்..)

oooOooo
திருமலை ராஜன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |