சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி மாலையில் நடந்த கோர சம்பவம் மீடியாக்களின் வாயிலாக வெளியானதைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் பதைபதைப்பின் பிடியிலிருந்து இன்னமும் மீளாமல் தவிக்கிறது. எதிர்கட்சி அரசியல்வாதிகளோ வெறும் வாய்க்கு அவல் கிடைத்த விதமாக அரசையும் காவல் துறையையும் காட்டுத்தனமாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் வெறித்தனமான இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் - நடந்தது மாணவர்களுக்கிடையேயான ஜாதிச் சண்டை என்பதை ஏன் எல்லோரும் மறைக்கிறார்கள் ?
பல வருடங்களாகவே சட்டக் கல்லூரியில் ஜாதி பிரச்னை மாணவர்களை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்றும் சட்டக்கல்லூரியில் படிக்கும் மொத்த மாணவர்களும் எஸ்.சி. மாணவர்கள், எஸ்.சி. அல்லாத மாணவர்கள் என்று இரண்டு குழுக்களாகத்தான் செயல்படுகிறார்கள் என்றும் இப்போது தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையும், அரசும். முக்குலத்தோர் மாணவர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக தேவர் ஜெயந்தி விழாவைக் கொண்டாடிய போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்கு ஆரம்ப காரணம் என்று சாக்கு சொல்லும் அரசும் கல்லூரி நிர்வாகமும் இத்தகைய ஜாதி அமைப்புகளை கல்லூரியில் கொண்டுவர முதலில் அனுமதித்தது ஏன் ?
நடந்த சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக வேண்டிய ஒன்று என்பதிலும் கல்லூரி நிர்வாகம் இந்தக் கலவரத்தை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதிலும் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் இவை எல்லாமே சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள். அரசியல்வாதிகள் அனைவரும் சம்பவத்தை மட்டுமே பார்கிறார்களே தவிர பிரச்சனையின் ஆணி வேரை யாரும் பார்க்கவில்லை - அல்லது பார்க்க விரும்பவில்லை. அது கல்லூரிக்குள் நுழைந்த ஜாதிப் பேய்..
ஜாதியின் காரணமாக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இந்தியா முழுவதும் சாகிறார்கள் - மாநிலம் தோறும் - மாவட்டம் தோறும்.. அப்பேர்பட்ட ஜாதி படிக்கும் இடத்தில் நுழைய அரசு இடம் கொடுத்திருக்கிறது என்பது எப்பேர்பட்ட தவறு? ஜாதி அமைப்பை நாங்கள் உருவாக்க இருக்கிறோம் என்று சொன்ன உடனேயே அதற்கான அனுமதியை கல்லூரி நிர்வாகம் மறுத்து - உடனடியாக அரசுக்குத் தகவல் கொடுத்து வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்கவே வந்திருக்காது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒரு விஷ விருக்ஷத்தை அசுரத்தனமாக வளர விட்டுவிட்டது அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மாபெரும் தவறு.
முன்னேறிய நாடுகளைப் பாருங்கள். நம் நாட்டில் உள்ள அளவிற்கு ஜாதியும் இனமும் அங்கே இருக்கிறதா என்று, ஜாதியின் பெயரால் அவர்கள் அரசியல் செய்கிறார்களா என்று, ஜாதியின் பெயரால் அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகிறார்களா என்று.. இந்தியா உண்மையாக முன்னேற வேண்டும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் - ஜாதியை ஒழிக்க முற்படுவதுதான்.. "ஜாதி கரப்பான் பூச்சியைப் போன்றது - அதை அவ்வளவு சீக்கிரம் ஒழித்து விட முடியாது" என்றாலும் குறைந்த பட்சம் முயற்சியாவது செய்து பார்க்கலாமே.. முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகளில் ஜாதியை ஒழிக்க வேண்டும். அட்மிஷனின் போது கேட்கப்படும் "என்ன ஜாதி??" என்ற கேள்வி கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும்..ஜாதி ரீதியான அமைப்புகளை உருவாக்க முற்படுவோரை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.. ஆனால் ஜாதியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளா இதைச் செய்யப்போகிறார்கள்?
ஆகவே உங்களையும் உங்கள் சந்ததியையும் காப்பாற்ற விரும்பினால் - மக்களே நீங்கள் தான் ஜாதியை ஒழிக்க முற்படவேண்டும்.. மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்பதை மனதில் வைத்து ஜாதி சார் சமூக அமைப்புகளை மாற்ற முற்படுங்கள் - இந்தியா தானே வளரும்.. இல்லாவிட்டால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நாம் முழுமையாக முன்னேறவே மாட்டோம்.
|