சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்களால் இயன்ற அளவிற்கு தகவல், தொழில்நுட்ப, வேலைவாய்ப்பு விஷயங்களில் முன்னேறத் துடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்கள் மாநில மக்களின் அடிப்படை வசதிகளைப் பற்றிக் கூட கொஞ்சமும் கவலைப் படாமல் பீகாரில் கிட்டத்தட்ட ஒரு தாதாவைப் போன்று கடந்த 15 ஆண்டுகளாக பீகாரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த லாலுவின் பிடியிலிருந்து ஒரு வழியாக பீகார் மக்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. அம்மாநில மக்கள் நிஜமான மாற்றத்தை விரும்பி நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் புதிய முதல்வரும் "எனது அமைச்சரவையில் ஊழல் கறை படிந்த அமைச்சர்கள் நிச்சயம் இடம்பெற மாட்டார்கள்.." என்று உறுதியளித்தார்.
ஆனாலும் அவரது அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் பதவியேற்ற ஜிதன்ராம் மன்ஜி என்ற அமைச்சர் மீதான பல லட்ச ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே செய்தியாளர்கள் நிதிஷிடம் தெரிவிக்க, அந்த புகாருக்கு மறுமொழி தரும் விதமாக சம்மந்தப்பட்ட அமைச்சர் உடனே ராஜினாமா செய்துள்ளார். ஊழல் அமைச்சர்களால் ஊறித் திளைத்த பீகார் மக்களுக்கு இந்த ராஜினாமா ஒரு இன்ப அதிர்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தன் அமைச்சரவை சகாக்கள் ஊழல் புகார்கள் எதிலும் சிக்கியிருக்கக் கூடாது என்பதில் பெருத்த அக்கறை காட்டும் நிதிஷிற்கு நம் பாராட்டிகள். அதே நேரத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, சாலை வசதிகள் கூட இல்லாமல் பீகாரின் பல கிராமங்களிலும் - ஏன் பல நகரங்களிலும் கூட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சட்ட ஒழுங்கு நிலையைப் பொறுத்த மட்டில் பீகாரில் போலீஸ், கோர்ட் என்ற அமைப்பே கிடையாதோ என்று சந்தேகப்படும்படி ரெளடி, குண்டர்கள் மற்றும் நக்ஸல்கள் அராஜகம் தாண்டவமாடுகிறது. இது சம்மந்தமாக கொதித்துக் கொண்டிருக்கும் மக்களின் குறைகளை கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தி செய்ய நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க முன்வரவேண்டும்.
ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த 15 வருடங்களாக மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத லாலு இனிமேல் மக்களின் உண்மைத் தொண்டனாக தன்னைக் காட்டிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார் - சட்டமன்றத்தை உருப்படியாக நடக்கவிடாமல் செய்ய இவரது அடிபொடிகள் எந்த வழியை வேண்டுமானாலும் கையாள்வார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் இத்தடைகள் அனைத்தையும் மீறி பீகார் மக்களின் மனதில் நல்லவிதமாக நிதிஷ¤ம் அவரது அமைச்சரவை சகாக்களும் இடம்பிடிக்க வேண்டும்..
இந்தியாவிலேயே மிகவும் பிற்போக்காக இருக்கும் பீகாரின் இன்றைய நிலையை மாற்ற நிதிஷ் தலைமையிலான அரசால் தான் முடியும். மக்களும் அந்த நம்பிக்கையில் தான் தடைகள் அனைத்தையும் மீறி அவர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளார்கள். ஆகவே ஊழல் விவகாரத்தில் தான் காட்டும் கண்டிப்பை மக்கள் முன்னேற்றத்திலும், சட்ட ஒழுங்கை சரியாக அமுலாக்குவதிலும் நிதிஷ் காட்டுவார் என்று நம்புவோம்.
|