நவம்பர் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : கல் சாமி
- நாகராஜன் [iyernag@rediffmail.com]
| | Printable version | URL |

'கோவிலின் வடக்கு மூலையில் இருக்கும் கல் சாமி என்கிற பாறையை நெம்பி வசதியான வேறு  இடத்தில் போட முயற்சி செய்தால் ஏதாவது சண்டை சச்சரவு வந்து குடமுழுக்கே நடக்காமல் நின்று போய் விடும்.."

அந்தக் கிராமத்துக் கோவிலின் வடக்கு மூலையில் 'கல் சாமி'ப் பாறையைப் பற்றிக் கிராமமே  இப்படிப் பட்ட ஒரு கருத்திலாழ்ந்து கிடந்தது. கடந்த பத்தாண்டுகளில் மூன்று முறை முயன்றும் குட முழுக்கு ஏற்பாடுகள் பாதியிலேயே சுருண்டு போனதற்கு அந்தப் பாறையை நெம்பிப்பார்த்த தவறு ஒன்றே காரணம் என்று ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

குடமுழுக்கு ஏற்பாடுகளைத் தொடங்கிய போது இந்த எச்சரிக்கையை மனத்திலிருத்தித்தான் பரமமூர்த்தி செயலாற்ற முனைந்தார். 'எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது' என்று மனப்பாடம் செய்துபார்த்துக் கொண்டார்.

"அந்தக் கல் சாமி இருக்கிற இடத்துக்கே போகாதீங்க.." என்று குடமுழுக்குக் குழுவினரிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவைக்கப் பட்டது.

'எதற்கு விஷப் பரிட்சை?'யென பரமமூர்த்திக்குப் பயம் தான்.

ஆனாலும் மனசில் ஓர் ஆர்வம்....'இந்தப் பாறைக்கு அப்படியென்ன ஒரு மகிமை?'

அருகே போய் நின்று அதை உற்றுப் பார்த்தார். எத்தனையோ முறை பார்த்த கல் சாமி தான். கால் பட்டு விடாமல் எட்டி வந்து நின்று பூச்சூட்டி, சூடம் காட்டிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு பக்தியோடு தாய்மார்களோடு சேர்ந்து சுற்றி வந்த அதே பாறாங்கல் தான். இவருடைய  பல வேண்டுதல்களைச் சங்கடமின்றி நிறைவேற்றும் அதே கல் சாமிதான்.

புதியதாக வரும்  யாராவது கோரிக்கை வைப்பார்கள்...."பாறையைக் கொஞ்சம் நகர்த்திப் போட்டுச் சுலபமா சுத்தி வர வழி செய்து குடுத்தால் தாராளமாகச் சுத்தி வரலாமே? மதில் சுவர் ஓரமாக கால் இடிக்கிற மாதிரி இருக்கிறதே?"
 
உடனே அவர்கள் அமைதிப்படுத்தப்படுவார்கள்.

"பயபக்தியோடு சுத்தினா கால் எப்படிங்க இடிக்கும்? எத்தனை மகான்கள் தபசு செய்த பாறையோ? பக்தியிருக்குன்னா ஆராய்ச்சி எதுவும் செய்யாம சுத்துங்க..." என்று பாய்வார்கள்.

"குடமுழுக்கை ஒரு சாக்காக வைத்து ஒரு தனி பூஜையைப் பண்ணி ஜனங்க சுத்திவர வசதியா இதைக் கொஞ்சம் நகர்த்தி வச்சாத்தான் என்ன?" என்று சில அன்பர்கள் பரமமூர்த்தியோடு சேர்ந்து பேசினார்கள். "நாம் நன்றாகக் கும்பிடத்தானே இம்மாதிரி செய்யலாம்னு சொல்றோம்.."
 
பரமமூர்த்திக்கு இது நல்லதாகப் பட்டாலும் சரியா தவறா என்று தெரியவில்லை. சிலரது பேச்சைக் கேட்டு நடந்து அதனால் குடமுழுக்குக் கமிட்டித் தலைமைப் பதவிக்கே ஆபத்தாக வந்து அவப்பெயரும் மிஞ்சி, ஒரு நல்ல காரியம் தடைபட்டுப் போய்விட்டால்? மனம் அலைபாய்ந்தது.

'ஜனங்க வசதியா வழி பாடு செய்ய கொஞ்சம் நகர்த்த சொல்கிறார்கள். அவ்வளவு தானே? இதிலே தப்பு எதுவும் வந்துடாது. நல்லது நடந்தாலும் நடக்கலாம்.. முதலில் விளம்பரமில்லாமல் நாமே கொஞ்சம் அசைத்துப் பார்ப்போம்... நல்லதோ கெட்டதோ ஊரைப் பாதிக்காம என்னோடு போகட்டும்...'
 
தூக்கம் வரவில்லை. நம்பிக்கையான வேலையாள் இருவரைக் கூட்டிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். "இருட்டு நேரம்.... பார்த்து நெம்புங்க. பாறை மேல கடப்பாரை மம்முட்டி படாம பக்குவமா பள்ளம் தோண்டிப் பாறை நகருதான்னு பாருங்க.."
 
அவர்கள் நெம்பிக் கொண்டிருந்த நேரத்தில் பாறையைப் பார்த்து அடிக்கடி கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

சுற்றியிருந்த மண்ணை அள்ளி வெளியே போட்டுப் பாறையின் அடியில் கையை வைத்தபோது ஒருவன் சொன்னான்: "அய்யா இது கவுத்துப் போட்ட அந்தக் காலத்துக் கல்லுரலுங்க.. அடியிலே குழியிருக்கு... மடப்பள்ளிக் கல் உரல் கவுத்துப் போட்டிருக்குன்னு நினைக்கிறேன்..."

பகீரென்றது பரமமூர்த்திக்கு.

"நல்லா பார்த்தியா?"ன்னு கேட்டார்.
 
"நிசமாவே கல் உரல்தானுங்க.. திருப்பி வேணா போட்டுக் காட்டவா?"

"வேண்டாம் வேண்டாம்...சீக்கிரம் மண்ணைப் போட்டு மூடிட்டுக் கிளம்பு..."

உடல் நடுங்குவது போல் ஒர் உணர்வு. இனம் புரியாத அச்சம் கவ்விக் கொண்டது போலிருந்தது.

வேலைக்காரன் தைரியம் சொன்னான். "ஊர்ல ஜனங்க மத்தியில் நிசத்தைச் சொல்லிப் பார்த்து புரியவச்சிட்டுக் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்திடுங்க..இதிலே என்ன தப்பு வந்துடப் போகுது?"

எந்தக் கேள்வியும் சுலபம்....பதில் தான் யோசிக்க வேண்டிய ஒன்று.

"இல்லேப்பா...நான் பெரிய தப்பான வேலையைச் செய்யப் பார்த்துட்டேன்....இது கவிழ்த்துப் போட்ட கல்லுரலா இருந்தாலும் நிறைய பேர் கல் சாமி, கல் சாமின்னு சொல்லிக் கும்பிட்டு  உரமேறிப்போச்சு...இப்ப இது சாமிதான். இல்லாட்டி பல பேருக்கு வேண்டிக்கிட்டதையெல்லாம் நடத்திக் குடுத்திருக்குமா? இதை ஒரு கல் உரலா  பார்த்துட்டா சில  பேர் நம்பிக்கை இழக்க ஆரம்பிச்சுடுவாங்க...அதனால குடமுழுக்கும் தடைபட்டாலும் படும். கோவிலுக்கு வரும் கூட்டம் குறையும். மூட நம்பிக்கையானாலும் அதை சட்டுனு இழக்க வச்சிட்டா அந்த இடத்திலே அதிர்ச்சி வந்து உட்கார்ந்துடும். உடனே மண்ணை மூடிட்டுக் கிளம்புங்க. வெளியே எங்கேயும் இதைப் பற்றி மூச்சு விட வேண்டாம்.... மனசிலே சாமியை வச்சா மறந்து போய் விடுவோமோன்னு கல்லுலே சாமி செய்து கும்பிடற நம்மவூர் ஜனங்களுக்கு இது கல் உரல்னு தெரியறது நல்லதில்லே..."

சட்டைப் பையில் வைத்திருந்த சூடத்தை எடுத்துக் கொளுத்திக் கண்ணில் ஒற்றிக் கொண்டு கிளம்பினார்.

காலையில் பரமமூர்த்தியின் வீட்டு முன்பாக ஒரு கூட்டம் நின்றது. பரம மூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
 
"நேத்து ராத்திரி நம்மவூர் கோவில்ல ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. யாரோ கல் சாமியை நெம்பி அதன் சக்தியை சோதிக்கப் பார்த்திருக்காங்க. அது முடியல. தோண்டத் தோண்ட போயிட்டே இருந்ததைப் பார்த்ததும் பயந்து ஓடிட்டாங்க. கேள்விப் பட்டதும் காலைல ஓடிப்போய்ப் பார்த்தேன் .. சக்தி தெரிஞ்சும் பரிட்சை செய்து பார்க்கலாமா? என்ன செய்றது? கல் சாமிக்குநாற்பது  நாளுக்கு பூஜையைப் போட்டு அதன் பின்னால் தான் குடமுழுக்கைப் பற்றி யோசிக்கணும்னு ஊர்ப் பெரியவங்க அபிப்பிராயப் படறாங்க.."

இப்போதெல்லாம் கல்சாமியிடம் கூட்ட நெரிசல் தாளவில்லை. முதல் ஆளாகப் பரம மூர்த்தியே பதினெட்டுத் தேங்காயை உடைத்து நூற்றியெட்டு சுற்று சுற்றி வருகிறார்.

குடமுழுக்கு கொஞ்ச நாளுக்குத் தள்ளி வைக்கப் பட்டு, "கல்சாமியை நெம்பினதாலே குடமுழுக்கே தள்ளிப் போச்சுபார்த்தியா?" என்று பேச்சு பரவத் தொடங்கியிருக்கிறது.
  
'தப்பு செய்யாம விட்டோமே!' என்று பரமமூர்த்தியும் நிம்மதிப் பெருமூச்சு  விடுகிறார்.

| |
oooOooo
                         
 
நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |