உலகமெங்கிலும் பத்திரிக்கை மற்றும் மீடியாக்காரர்கள் நடுநிலைமை தவறாமல் செய்திகளை வழங்கவேண்டும் என்று பொதுஜனமாகிய நாம் எதிர்பார்தாலும் மீடியாக்களில் பெரும்பாலானவைகள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். தேர்தல் சமயங்களில் அக்கட்சிக்கு சாதகமாக பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவது நம் உள்நாட்டு மீடியாக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மீடியாக்களிலும் சகஜம் - என்றாலும் இயற்கைச் சீற்றங்கள் போன்ற பேரழிவுகளால் மக்கள் வாழ்க்கை அசாதாரணமாக பாதிக்கப்படும் போது ஆளும் கட்சியின் மீட்பு நடவடிக்கை சரியில்லை என்றால் என்னதான் அக்கட்சியின் ஆதரவு மீடியா என்றாலும் நடக்கும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அரசைக் கண்டிக்கவோ வெளிநாட்டு மீடியாக்கள் தவறுவதே இல்லை. அதே நேரத்தில் சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் போது அரசைப் பாராட்ட எதிர்கட்சி மீடியாக்கள் தயங்குவதில்லை. அரசியல் தாண்டிய மனித நேயம் அங்கு இருப்பதை நாம் கண்கூடாக உணரலாம்.
அகில இந்திய அளவில் கூட தேசியத் தலைவர்கள் தங்கள் மனமாச்சரியங்களை கொஞ்ச நேரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் துயர்துடைப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபடுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்போது ஒருவரை ஒருவர் மனம்விட்டு பாராட்டுகிறார்கள். இதுவும் நாம் நிஜத்தில் காணும் உண்மை.
ஆனால் நம் தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் எப்பேர்பட்ட இக்கட்டிலும் ஒருவரை ஒருவர் குறைகூறுவதை மட்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்களே தவிர மறந்தும் அடுத்தவர் செய்யும் நல்ல வேலைகளுக்காக அவர்களைப் பாராட்ட முன்வருவதே இல்லை. தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்கள் வழிநடத்தும் மீடியாக்கள் என்ற வகையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பற்றிய உண்மை நிலவரத்தை ஆளும் - எதிகட்சிகளின் மீடியாக்களின் வழியாக கண்டே பிடிக்க முடியாது என்ற நிலை.
வெள்ளச் சேதங்களையும், நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைப் பற்றி ஆளும் கட்சி தொலைக்காட்சிகளில் ஒரு விதமான செய்தி வெளியாகிறது என்றால் அதற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தை எதிர்கட்சி தொலைக்காட்சி வெளியிடுகிறது, பத்திரிக்கைகளும் இக்கட்சிகளின் ஆளுகையில் இருப்பதால் பேப்பர் படித்து உண்மை நிலவரத்தை அறியலாம் என்ற எண்ணமும் முளையிலேயே தரைமட்டமாகிறது. ஏதோ நடுநிலைமையான தொலைக்காட்சிகள் ஓன்று இரண்டு தமிழகத்தில் இருப்பதால் உண்மை நிலவரங்களை ஓரளவிற்காவது தெரிந்துகொள்ள முடிகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் எப்படியாவது அடித்துக்கொண்டு போகட்டும். ஆனால் பொதுமக்களுக்கு நாட்டில் நடப்பதை நியாயமான முறையில் எடுத்துரைக்கவேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்கள் தவறான(கட்சி சார்புடைய) செய்திகளைத் தருவது நியாயமா? அதிலும் மக்களுக்கு நாட்டின் உண்மை நிலை போய் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் அதற்கு எதிர்மறையாகச் செயல்படுவது மீடியாக்களுக்கு எந்த விதத்தில் அழகாகும்?
சிந்திப்பார்களா சம்மந்தப்பட்ட மீடியாக்காரர்கள்?
|