சரண் - அஜித் இணைந்து கலக்கியிருக்கும் மூன்றாவது படம் அட்டகாசம். கதை என்னவோ அந்த காலத்து எம்.ஜி.ஆர் சிவாஜி படம் மாதிரி இருந்தாலும் அதை இந்த காலத்திற்கு ஏற்றவாறு ரீமிக்ஸ் செய்திருகிறார் இயக்குனர் சரண். இரட்டை வேடப் படங்கள் அஜித்திற்கு நிச்சயம் கைகொடுக்கும் என்ற சென்டிமெண்டைப் பொய்யாக்காமல் அட்டகாசம் அஜித்திற்கு ஒரு வெற்றிப் படமாய் அமைந்திருக்கிறது.
டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தும் ஜீவா அம்மா சுஜாதாவிற்கு அடங்கிய பிள்ளை. ஒரு வம்பு தும்பிற்கும் போகாத சாது டைப். ஒரு நாள் இவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள நிலத்தில் அடாவடியாக நுழைகிறார் தாதா பாபு ஆண்டனி. தாதாவைக் கண்டதும் சப்த நாடியும் ஒடுங்கிவிடுகிறது சுஜாதாவிற்கு. சுஜாதாவின் கணவன் நிழல்கள் ரவியைக் கொன்றவன் தான் இந்த தாதா என்பதும், அந்தக் கொலையைப் பார்த்த தனது இன்னொரு மகன் குருவை சுஜாதா ஒரு பணக்காரருக்கு தத்து கொடுப்பதும் பிளாஷ் பேக். பாபு ஆண்டனி ஜீவாவை முறைத்துப் பார்ப்பதைக் கண்டு நடுங்கும் சுஜாதா கொலையைப் பார்த்த மகன் இவனல்ல என்பதைக் கூறுகிறார். இதற்கிடையே தன்னுடைய நாய்காக துணை தேடிவரும் பூஜா, ஜீவாவுடன் டூயட் பாட ஆரம்பிக்கிறார்.
தன்னுடைய டிரைவிங் ஸ்கூல் ஆள் ஒருவன் தன்னுடைய காரில் தூத்துக்குடியில் திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து கொள்ளும் ஜீவா, தன்னுடைய காரை மீட்பதற்காக தூத்துக்குடி செல்கிறார். அங்கே ஜீவாவைப் பார்ப்பவர்கள் அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள். மாமூல் கொடுக்கிறார்கள். கிடைக்கும் மரியாதையைப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடும் ஜீவா சென்னை திரும்புகிறார்.
தூத்துக்குடியைக் கலக்கும் தாதா குரு சுஜாதாவால் தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளை. சிறு வயதிலேயே தாயை வலுக்கட்டாயமாகப் பிரிந்த குருவிற்கு தன் அம்மா மீதும் சகோதரன் மீதும் ஏகப்பட்ட வெறுப்பு. தன்னைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள தன் சகோதரனால் தன்னுடைய ஆட்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொதிக்கும் குரு தந்திரமாக ஜீவாவைத் தூத்துக்குடிக்கு வரவழைத்துவிட்டு தான் சென்னை சென்று விடுகிறான் அம்மாவைப் பழிவாங்க. சகோதரர்களுக்குள் நடக்கும் பழிவாங்கும் போராட்டம் என்ன ஆகிறது? எங்கோ நல்லபடியாக இருக்கிறான் தனது இரண்டாவது மகன் என்று நம்பிக்கொண்டிருக்கும் சுஜாதாவிற்கு குருவைப் பற்றிய உண்மைகள் தெரிந்து விடுகிறதா? இதுவே மீதிக்கதை.
ஜீவா மற்றும் குருவாக கலக்கியிருக்கிறார் அஜித். இருவரும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்ற கதையம்சத்தால் பிழைத்தோம். கெட்டப் சேஞ்ச் கிடையாது. தூத்துக்குடி தாதாவாக ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார் அஜித். ஏகப்பட்ட பஞ்ச் டயலாக் வேறு. ஆனாலும் தாதாவை விட மனதைக் கவர்கிறார் அப்பாவி ஜீவா. இந்த கெட்டப்பிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் யாரையோ டயலாக்கால் போட்டுத் தாக்குகிறார். அஜித்தின் காமெடி இந்தப் படத்தில் சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது. கருணாஸ¤டன் அவர் செய்யும் அந்த ஆட்டோ காமெடி சூப்பர். ஆனால் பூஜாவுடனான டாக்டர் சீன் கொஞ்சம் சீ டைப். தூத்துக்குடி பாஷை பேசுசிறேன் பேர்வழி என்று வார்த்தைக்கு வார்த்தை லே போட்டு அஜித் பேசுவது எரிச்சலாக உள்ளது. தூத்துக்குடி பிரபல தாதா மகாதேவனிடம் அப்பாவி அஜித் மாட்டிக்கொள்வதும் பிறகு அதிலிருந்து தப்புவதும் சுவாரஸ்யமான சீன்கள். இருந்தாலும் அந்த திருச்செந்தூர் சீன்கள் எல்லாம் டூமச். இயக்குனரின் கற்பனை ஊற்று அங்கே வற்றிவிட்டது போலும்.
கதாநாயகி பூஜா அழகான பொம்மை மாதிரி வந்து போகிறார். போகப்போக நடிப்பார் என்று நம்புவோம். வெகுநாட்களுக்குப் பிறகு நிஜம்மாகவே காமெடியில் கலக்கியுள்ளார் கருணாஸ். அஜித்தின் ஆட்டோ மெக்கானிஸத்தை இன்னொருவரிடம் காட்டி அடிவாங்கும் சீன் மற்றும் அடுத்த தெருவில் இருக்கும் இடத்திற்கு பூஜாவிடமிருந்து 1000 ரூபாய் வாங்கும் சீன் - கலக்குங்க கருணாஸ்.
ரமேஷ் கண்ணா காமெடி மட்டுமல்லாது கொஞ்சம் குணச்சித்திரமாகவும் குருவின் நண்பனாக தூத்துக்குடி பாஷை பேசியபடி வருகிறார். ஆனால் குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லாதது ஏமாற்றமே.. வில்லன்கள் பாபு ஆண்டனி மற்றும் பிதாமகன் மகாதேவன் இருவரும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஏதும் இல்லை. சுஜாதாவின் நடிப்பு இதில் கொஞ்சம் டல்லடிக்கிறது. யதார்த்தம் என்ற போர்வையில் சுஜாதா கணவரைக் கொன்ற வில்லனிடமே மகனைக் காப்பாற்றும் படி சொல்லுவதும், அவனை வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுப்பதும் யதார்தமாக இல்லை.
பரத்வாஜ் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் ஓக்கே. ஆனாலும் உனக்கென்ன பாடலும், தலபோல வருமா பாடலும் ரொம்ப ஓவர். ஹீரோ பில்டப்பின் உச்சகட்டத்தை எட்டிவிட்டார் அஜித். எப்படியோ ஆறிய பழைய கஞ்சியை சுடவைத்து ஊறுகாயுடன் கொடுத்திருக்கிறார் சரண். அமர்களமா அட்டகாசம் பண்ணுங்க அஜித் - சரண்!!
|