டிசம்பர் 08 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : திரைப்படத்தில் வாரிசுகள்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| Printable version | URL |

இந்தியாவில் கல்வித் தகுதி இல்லாமல் பேர், புகழ் பெறக்கூடிய துறைகள் எது என்றால் சினிமாத்துறை மற்றும் அரசியல் துறைகளைச் சொல்லலாம். அதிலும் சினிமாத்துறையில் கிடைக்கின்ற பெயர் மற்றும் புகழ் போன்றவை வேறு எந்தத் துறைகளிலும் எளிதில் கிடைப்பதில்லை. அதன் காரணமாக சினிமாத்துறை வாரிசுகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்து இன்றைய காலக்கட்டம் வரை கனவு தொழில்சாலையான சினிமாத்துறையில் வாரிசுகளின் ஆக்கிரமிப்புகள் தங்கு தடங்களின்றி நடந்து வருகிறது.

சினிமாத்துறையில் வாரிசுகளுக்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சொல்லலாம். பராசக்தி திரைப்படத்தின் மூலம் வசனம் எழுதி திரைப்படத்துறையில் நுழைந்த கருணாநிதி தனது அபார சிந்தனை கருத்துக்களால் கொடிகட்டிப் பறந்தவர். அப்போதைய தி.மு.கவின் உறுப்பினராக இருந்த எம். ஜி. ஆருக்கு திரைப்படத்துறை மூலம் கிடைத்த பெயர் மற்றும் புகழை பார்த்து தனது மகனான மு.க.முத்துவை திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் பாவம்.. மு.க.முத்துவை தமிழக ரசிகர்கள் நிராகரித்து விட்டனர்.

அதற்கு அடுத்து திரைப்படத்துறையில் வாரிசுகளை அறிமுகப்படுத்தியவர் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா. நாடக மற்றும் சினிமா நடிகையாக இருந்த சந்தியா நாட்டியம், நடனம் என பல்துறையில் ஜெயலலிதாவிற்கு பயிற்சி கொடுத்து திரைப்படத்துறையில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். சினிமாவில் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தாலும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இவர் நடித்த படங்கள் புகழும், பெயரும் பெற்றதோடு எம்.ஜி.ஆருக்குப் பின் அவர் வளர்த்த அ.தி.மு.க கட்சியை கைப்பற்றி ஆட்சியை பிடித்து 10 ஆண்டுகள் முதல்வர் பதவியை பூர்த்தி செய்யும் நிலையில் ஜெயலலிதா இருந்து வருகிறார்.

அதே காலக்கட்டத்தில் பெரும் நடிகனாக அவதாரம் எடுத்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது வாரிசுகளை திரைப்படத்திற்கு தாரை வார்த்தார். தனது மகன் பிரவுவை திரைப்படத்தில் நடிக்க வைத்த சிவாஜி, பிரபுவின் வளர்ச்சிக்காக அவருடன் சேர்ந்து 20 படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி திரைப்படத்துறையில் பெயர் பெற்ற பிரபு இன்றும் வசூல்ராஜா, சந்திரமுகி என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படத்தில் வில்லனாக கலக்கிய எம்.ஆர்.ராதா தனது வாரிசுகளான ராதாரவியை வில்லனாக அறிமுகப்படுத்தினார். ராதாரவியும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கிவிட்டு, நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பின் தற்பொழுது அ.தி.மு.க கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாக நகர் வலம் வந்து கொண்டு இருக்கிறார். எம்.ஆர்.ராதாவின் மற்றொரு வாரிசான நடிகை ராதிகா திரைப்படத்துறையில் ஒரு கலக்கு கலக்கியதோடு தற்பொழுது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

டி.எஸ்.பாலையா தனது மகனான ஜீனியர் பாலையாவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் டி.எஸ்.பாலையா போல் ஜீனியர் பாலையா திரைப்படங்களில் ஜொலிக்காவிட்டாலும் அவ்வப்பொழுது சில திரைப்படங்களில் தனது தலையை காட்டி வருகிறார்.

அதே போல் ஆஸ்கார் நாயகன் என்றழைக்கப்படும் கமலஹாசன் குடும்பமே திரைப்படத்துறையில் இருக்கின்றனனர். சாருஹாசனில் தொடங்கி மணிரத்னம், சுஹாசினி, அனுஹாசன் - இவர்கள் அனைவரும் கமலஹாசனின் உறவினர்கள் தான்.

Kanakaஅந்தக்கால நடிகை தேவிகாவும் தனது மகள் கனகாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். கனகாவும் தமிழகத்தை கரகாட்டக்காரன் உட்பட பல படங்களில் நடித்து வெற்றி உலா வந்தார். தமிழக மக்கள் என்ன நினைத்தார்களோ திடீரென்று கனகாவை காணாமல் போகச் செய்துவிட்டனர். கனகாவும் தமிழ்நாடு கை விட்டால் ஆந்திரா, கர்நாடகா என்று மாற்று மொழிப்படங்களில் நடிக்க போய் விட்டார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இரண்டாம் நிலை கதாநாயகனாக நடித்து வந்த முத்துராமன் தனது மகன் கார்த்திக்கை திரைப்படத்துறைக்கு அர்பனிக்கிறேன் என்று சொன்னவர். நடிகர் கார்த்திக்கும் ஆரம்ப காலங்களில் பெற்ற பெயரை தற்பொழுது பெறமுடியவில்லை. அதே போல் திரைப்படத்தில் நகைச்சுவை மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்த நாகேஷ் தனது மகன் ஆனந்த்பாபுவை திரைப்படத்தில் நடிக்க வைத்தார். சிறந்த டான்சரான ஆனந்த்பாபுவை திரைப்படத்துறை தொடர்ந்து ஏமாற்றிவருகிறது. குணசித்திர நடிகராக நீண்ட நாள் நடித்துவரும் நடிகர் விஜயகுமார் தனது மகன் அருண்குமார் மற்றும் தனது மூன்று மகள்களை திரைப்படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் அவர்களுக்கும் பெயர் புகழை தர தமிழக மக்கள் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Suryaதிரைப்படத்துறையில் ஜென்டில்மேன் என்று சொல்லப்படும் நடிகர் சிவக்குமாரும் தனது மகனான சூர்யாவை திரைப்படத்தில் நடிக்க வைத்தார். ஆரம்ப காலத்தில் பெயர் கிடைக்காமல் கஷ்டப்பட்ட சூர்யா இன்று தமிழகத்தில் சூப்பர் ஹீரோ அந்தஸ்தில் இருக்கிறார். அதே போல் இயக்குனர் சந்திரசேகர் தனது மகன் விஜயை தனது இயக்கத்தில் அறிமுகப்படுத்தினார். இன்று விஜய் தான் அடுத்த ரஜினி என்று சொல்லும் அளவிற்கு தமிழக மக்கள் மயங்கிப் போய் அவரைத் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் மூலம் பெயர் பெற்ற இயக்குனர், வசனகர்த்தா நடிகர் என்று பல முகங்களைக் கொண்ட தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை சினிமாவில் நடிக்க வைத்து வருகிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்று கரகரத்த குரலில் கிராமிய மண்வாசனையைப் பற்றி பேசும் பாரதிராஜா தனது மகன் மனோஜை கதாநாயகனாக தாஜ்மகால் படத்தில் அறிமுகப்படுத்தினார். மக்கள் அவரை நிராகரித்து விட்டதால் இயக்குனர் துறையில் சாதிக்கலாமா என மனோஜ் யோசித்துக் கொண்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ஆரம்ப காலத்தில் இருந்து அடுக்குமொழி வசனம் பேசி ரசிகர்களை கவர்ந்த டி.ராஜேந்திரன் தனது மகன் சிலம்பரசனை பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்கு போட வைத்து விட்டு கைகளை ஆட்டிக்கொண்டு நடிக்க வைத்து வருகிறார். இதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வேறு அவருக்கு.

என்னம்மா கண்ணு என்று வசனம் பேசி, பெண்களை அல்வா கொடுத்து கற்பழிப்பது எப்படி என்று நடித்துக் காண்பித்த நடிகர் சத்தியராஜ் தனது மகன் சிபிராஜை நடிகராக அறிமுகப்படுத்தி அவருடன் இணைந்த நடித்து புரட்சி செய்து வருகிறார். இயக்குனர் கஸ்தூரிராஜாவும் தனது மகன்களான தனுஷை நடிகனாகவும், செல்வராகவனை இயக்குனராகவும் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி அடைந்து வருகிறார். அடிக்கடி வடிவேலுடன் நக்கல் அடிக்கும் பார்த்திபன் தனது 5ம் வகுப்பு படிக்கும் மகளை திரைப்படத்தில் நடிக்க சொல்லி தேசிய விருது வாங்க வைத்து விட்டார்.

தமிழகத்தில் மட்டும் தான் சினிமாவில் வாரிசுகள் இருக்கின்றனர் என்றால் அது தான் இல்லை. ஆந்திராவில் நடிப்பு மூலம் ஆட்சியைப் படித்த என்.டி.ராமராவ் வாழ்ந்து மறைந்தாலும் அவரது மகன்களும், பேரன்களும் ஆந்திர சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். அதே போல ஹிந்தியில் தர்மேந்திரா தனது மகன்கள் சன்னி மற்றும் பாபி தியோலை ஹீரோக்களாக்கி அழகு பார்த்து வருகிறார். அமிதாப்பச்சன் மகனும் ஹிந்தி திரை வானில் ஜொலித்து வருகிறார்.

நடிகர்கள் தான் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்கின்றனர் என்றால் பிரபல இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் தங்களது வாரிசுகளை சினிமாத்துறையில் ஈடுபட வைக்கின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் பிரபல இயக்குனர் பீம்சிங்கைச் சொல்லலாம். இவர் தனது மகன் லெனினை அறிமுகப்படுத்தியதால் தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் குறும்பட இயக்குனர் கிடைத்து இருக்கிறார். அதே போல இசையமைப்பாளர் இளையராஜா தனது வாரிசுகளான யுவன்சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா போன்ற தனது வாரிசுகளை அறிமுகப்படுத்தி இசையை தங்களது குடும்ப சொத்தாக்கிக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

பிரபல இயக்குனுர் பாலச்சந்தர் தனது மகளை தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலம் படத் தயாரிப்பளாராக மாற்றியுள்ளார். அதே போல தீனா நாத் மங்கேஷ்கர் தனது மகள் லதா மங்கேஷ்கரை அறிமுகப்படுத்தினார். லதா இன்று வரை ஒரு இசைக்குயிலாக வாழ்ந்து வருகிறார்.

திரைப்படத்துறையில் என்ன தான் வாரிசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு படம் எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. பிடித்து இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள். பிடிக்கா விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விடுவார்கள்.  இந்த விஷயத்தில் நம்ம ஆட்கள் ரொம்ப தெளிவாகவே இருக்கிறார்கள்.

oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |