குழந்தையாக இருக்கும் போது பிரிந்த இரட்டையர்களான சூர்யா & சூர்யா பெரியவர்களாகி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்ற ஒற்றை வரி கதைதான் வேல்.
சரண்ராஜ் சரண்யாவிற்கு இரட்டைக் குழந்தைகள். ரயிலில் செல்லும்போது ஒரு குழந்தையை திருடன் ஒருவன் நகைக்காக தூக்கிச் சென்று விட - தனியாகக் கிடக்கும் அக்குழந்தையை நாசர் அம்பிகா தம்பதிகள் எடுத்து வளர்க்கிறார்கள், அதுதான் கிராமத்து வெற்றிவேலாகிய சூர்யா.
சரண்ராஜ் சரண்யாவிடம் வளரும் பிள்ளையான நகரத்து சூர்யா ஒரு பிரபல டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர். அவர் காதலி பிரபல பேட்டியாளராக வேண்டும் என்ற கனவில் வாழும் ஸ்வாதி (அசின்). எந்த ஒரு சிறு குழந்தையைப் பார்த்தாலும் பல வருடங்களுக்கு முன் தொலைந்து போன தன் பிள்ளையை நினைத்து ஏங்கும் சரண்யா எப்படியாவது ஒருநாள் தன் மகன் தனக்குக் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார்.
நாசர் ஊர் பெரிய மனிதர் மற்றும் எம்.எல்.ஏவான கலாபவன் மணி செய்த பல தில்லுமுல்லுக்களை அம்பலப்படுத்திவிட, கலாபவன் மணி கைது செய்யப்படுகிறார். அவரையும் அவர் மனைவி அம்பிகாவையும் கலாபவன் மணி பழிவாங்க அன்று முதல் பற்றிக்கொள்கிறது இரு குடும்பத்துக்கும் விரோதம்.
இந்நிலையில் இரு சூர்யாக்களும் அடுத்தவரை பற்றி தெரிந்து கொள்ள படம் சூடு பிடிக்கிறது. வேல் தன் தாயாரோடு சேர்ந்தாரா ? கலாபவன் மணியை பழி வாங்கினாரா சுறுப்பான க்ளைமேக்ஸ்.
உருவத்தில் பெரிய அளவில் வேறுபாடு காட்டாவிட்டாலும் தன் நடிப்பால் அழகாக இருவேடங்களுக்கிடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் சூர்யா. முறுக்கிய மீசை - துறு துறு கண்கள் - சட்டைக்குள் அரிவாள் என்று அதிரடி வெற்றிவேலாக வருபவர் சாந்தமான முகம் அமைதியான பேச்சு அம்மா பாசம் - அசினுடன் காதல் என்று வாசுவாக நடிப்பில் வெகுவாக வித்தியாசத்தைக் காட்டுகிறார். அரிவாள் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்று அண்ணன் நம்ப - அறிவே சிறந்தது என்று வாதாடுகிறார் தம்பி. இறுதியில் அரிவாளும் அறிவும் இணைவது அருமை.
டி.வி தொகுப்பாளினியாக வரும் அசின் முதலில் தான் ஒரு பி,பி.சி நிருபராக ஆசைப்படுவதும் அதற்காக தன் திருமணத்தைத் தள்ளி வைப்பது ஓக்கே என்றாலும் வாசுவைப் பார்த்ததும் தன் நிருபர் ஆசைக்கெல்லாம் ஒரேடியாக டாடா காட்டுவது கொஞ்சம் நெருடல். ஆனாலும் கதையோடு ஒட்டி வரும் தன் நடிப்பால் அதை சரி செய்கிறார் அசின்.
வடிவேலு வழக்கம் போல அடிவாங்கி அதிரவைக்கிறார். குறிப்பாக டீக்கடை காமெடியும் அதைத் தொடர்ந்து நடக்கும் மிரட்டலும் வயிற்றை புண்ணாக்குகிறது. கதையோடு ஒட்டிய அவரது நகைச்சுவை அருமை.
அம்மா சரண்யா மற்றும் பாட்டி லஷ்மி இருவரும் பெற்ற - வளார்த்த பாசத்தைக் காட்ட போட்டி போடுகிறார்கள். சரண்ராஜ் சும்மா தலையக் காட்டியுள்ளார்.
கலாபவன் மணியின் வில்லத்தனத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. வில்லனை இன்னும் சற்று வித்தியாசமாக காட்டியிருக்கலாம் இயக்குனர்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையும் ப்ரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். ஏற்கனவே பல காலமாக பார்த்து சலித்த ஒரு கதையை விறுவிறுப்பாக - மக்கள் ரசிக்கும்படி தொய்வில்லாமல் எடுக்க நிறைய புத்திசாலித்தனம் தேவை. இயக்குனர் ஹரியிடம் அது நிறைய இருக்கிறது.
|