டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : (புகைப்) படமும் - விமர்சனமும்
- கோ. இராகவன் [gragavan@gmail.com]
| | Printable version | URL |

புகைப்படம் எடுப்பது எளிதாகத் தோன்றினாலும் எளிதல்ல. அதற்கும் நுணுக்கமும் அறிவும் வேண்டும். அதெல்லாம் இல்லாமல் நாம் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினாலும் ஒன்றிரண்டு சிறப்பாகவே வந்துவிடுவது எப்படியென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ அமைந்த புகைப்படம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படி நான் நினைக்கும் சில புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இதோ இங்கே. அத்தோடு மயிலாரின் கிண்டலையும் பாருங்கள். மயிலார் யார் தெரியுந்தானே! தெரியாது என்றால் ஒரு சின்ன அறிமுகம். அவர் ஒரு பெரிய தில்லாலங்கடி.


Photo-01புகைப்படம் - 1

அழகான கல்தரை. கற்களுக்கு நடுவே புற்கள். நேர்த்தியாக அமைந்திருக்கிறது அல்லவா! இது எங்கள் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். பலமுறை நடந்து சென்ற பாதைதான். ஆனால் புகைப்படத்தில் அழகாகவே இருக்கிறது.

மயிலார் :  கேமராவ நேரா வெச்சி எடுக்கத் தெரியாம தரையப் பாத்து வெச்சு எடுத்துட்டு கல்லு தெரியுது...புல்லு தெரியுதுன்னு...

 

 

 

 

புகைப்படம் - 2

இதுவும் எங்கள் அலுவலகமே. பெங்களூர் இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அழகான ஒரு மழைப் பொழுதில் கண்ணாடிப் பிரமீடு அழகாக விழுந்திருக்கிறது. அதற்கு முன்னே இருக்கும் குளத்தில் மழை நீரினால் உண்டான அசைவும், பிரமீட்டின் பின்புறத்தில் திரண்டிருக்கும் கருமேகங்களும் அழகோ அழகு.

மயிலார் : அப்ப நான் தோகைய விரிச்சி ஆடிக்கிருந்தேன். அப்பப் பாத்து ஒழுங்கா ஒரு போட்டா எடுத்துட்டான்.

 

 

 

 

 

புகைப்படம் - 3

நீயின்றி நானில்லை என்று திரைப்படங்களில் வசனமும் பாடலும் கேட்டிருப்போம். ஆனால் நீரின்றி நாமில்லை என்கிறார் வள்ளுவர். ஒகேனகல் அருவியின் எழில்மிகு தோற்றம் இதோ. நன்றாக மழை பெய்த பொழுது நண்பர்களாகச் சென்றிருந்தோம். மீன் வறுவலாகவே வாங்கித் தின்றுகொண்டு சுற்றி வருகையில் எடுத்த படம். வெள்ளத்தின் சீற்றமும் பாறைகளோடு அவை மோதுவதும் பார்க்கப் பார்க்க அலுக்காதவை.

மயிலார் : பார்க்கப் பார்க்க அலுக்காதவைன்னா...அங்கயே இருக்க வேண்டியதுதான.  திரும்ப பெங்களூருக்கு எதுக்கு வந்தானாம்?

 

புகைப்படம் - 4

நான் எடுத்த புகைப்படங்களிலேயே நான் மிகவும் ரசிக்கும் படம் இது. திருச்செந்தூர் திருக்கோயிலின் சாண்டோ சின்னப்பாத்தேவர் மண்டபத்தில் இரவு வேளையில் நடந்து வரும்பொழுது கண்ட காட்சி இது. இரண்டு குட்டி ஆடுகள்...மிகவும் சிறியவை...ஒன்றுக்கொன்று துணையாய்...ஆதாரமாய்..இதமாய்...அன்போடு நெருக்கிக் கொண்டு குளிரில் உறங்கிக் கொண்டிருந்தன. பார்க்கப் பார்க்கப் பாசம் பொங்கிய அந்தக் காட்சியைப் படம் பிடிக்க மனம் விரும்பியது. அப்படிப் பிடித்ததுதான் இது.

மயிலார் : ஆட்டப் பாத்ததும் பிரியாணி நெனவு வந்திருக்கும். கேட்டா பாசம் நேசம்னு கத சொல்றது

 

 

 

 

புகைப்படம் - 5

தஞ்சைப் பெரிய கோயில். இராசராச அருள்மொழிவர்மன் காலத்தில் எழுந்தது. அதன் கோபுரத்தின் புகழ் அனைவரும் அறிந்ததே. சுற்று மதிலும் மிக அழகானது. பெரியது. வியக்கத்தக்கது. வெளியில் இருந்து அந்த மதிலுக்குள் இருக்கும் கோபுரத்தைப் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்கும். இந்தப் படத்தில் இடதோரம் மதிற் கோபுரம். வலதோரம் கோயில் கோபுரம். இரண்டையும் இணைப்பது போல நடுவில் மதிற்சுவர்.

மயிலார் : படத்தப் பாத்தா எதையோ எடுக்கப் போய் எதையோ எடுத்தாப்புல இருக்கு. இதுல விளக்கம் மட்டும் நூறு வரிக்கு....

 

புகைப்படம் - 6

இதுவும் தஞ்சைக் கோயிலுக்குள் எடுத்ததுதான். சுற்று மண்டபங்களில் இருந்த ஓவியங்களில் பெரும்பான்மையானவை அழிந்து விட்டன. ஊனத்தோடு தப்பிப் பிழைத்த ஒரு சில ஓவியங்களில் இந்த மயிலேறும் பெருமான் ஓவியமும் ஒன்று. முருகனின் திருமுகத்தைப் பாருங்கள். கருணை ததும்பும் கண்களைப் பாருங்கள். அபயக்கரம் காணுங்க. இடமாக வள்ளியும் வலமாகத் தெய்வயானையையும் பாருங்கள். மயிற்றோகையின் ஒழுங்கைப் பாருங்கள். இன்னும் ஒவ்வொரு அணுவாகப் பாருங்கள். எவ்வளவு அரிய கலை வீணாகப் போயிருப்பது தெரியும். இனிமேலாவது இது போன்ற கலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு என்பதை உணர வேண்டும்.

மயிலார் : எல்லாம் ஒன்னயப் போல ஆளுங்க பண்ணுன வம்புதான் படம் இப்பிடி இருக்கு. மனுசப் பயகளே மோசமப்பா!

 

புகைப்படம் - 7

இது மொபைல் ஃபோனில் எடுத்த படம். நோக்கியா 3230 மொபைல் வழியாக எடுத்தது. முளைப்பாரி என்பது தெற்கில் மிகவும் புகழ் பெற்றது. பயறுகளை முளைக்க வைத்து கோயிலுக்குக் கொண்டு சென்று ஊர் கூடிக் கும்மியடித்து வழிபடுவார்கள். ஆனால் சென்னையிலும் இது காணக் கிடைக்கும் என்று உணர்ந்தது அன்றுதான். ஒரு மழை பெய்த இரவின் விடியலில் கோட்டூர்புரம் சாலையில் எடுத்த படம். இந்தப் படத்தில் இடது ஓரத்தில் ஒருவர் மூக்கைத் துளைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்படியோ படத்தில் வந்து விட்டார். நல்லவேளையாக அவர் மீது நிழல் விழுந்திருக்கிறது.

மயிலார் : மூக்க நோண்டுறத வெட்டீட்டாவது போடலாம்ல...அப்படியே போடுறது...படம் எடுக்கத்தான் தெரியாது.  ஒழுங்கான படத்தையாவது போடத் தெரியுதா !

புகைப்படம் - 8

காகிதப் பூ. மணமற்றது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் அழகான நிறமுடையது. தொலைவில் இருந்து பார்த்தாலே கண்ணைப் பறிக்கும் அழகு.

மயிலார் : நல்ல வெயில்ல எடுத்திருக்கான். அதான் பளிச்சுன்னு தெரியுது. ஆனாலும் வெளிச்சம் பத்தாதுன்னு ஃபிளாஷும் போட்டிருப்பான்.

 

 

 

 

 

 

 

புகைப்படம் - 9

பரமார்த்த குருவும் சீடர்களும் தமிழர்களுக்கு மறவாத பாத்திரங்கள். அந்தப் பாத்திரங்களை வைத்து நாடகம் நடத்தினர் கூத்துப்பட்டறையினர். அப்பொழுது எடுத்த படம் இது. பரமார்த்த குருவின் சீடர்கள் மிகவும் மகிழ்ச்சியாக குருவைப் பிடித்துத் தூக்கிச் சுற்றுகின்றனர். அவர்கள் சுற்றிய வேகம் படத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது பாருங்கள்.

மயிலார் : நிக்குறப்பவே பால் கறக்க மாட்டாதவன் ஓடுற மாட்டுல கறந்தாப்புல இருக்கு...

 

 

 


புகைப்படம் - 10

இது நானேதான். சென்னையில் இருந்தால் அடிக்கடி செல்லும் இடம் இது. Coffee World. ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி.ராமசாமி சாலையில் இருக்கிறது. வீட்டிலிருந்து பக்கமும் கூட. நானும் என் நண்பனும் சேர்ந்தால் அங்கு செல்லாமல் இருப்பதில்லை. அங்கு ஸ்ட்ராபெர்ரி சுவையில் ஒரு காஃபி கிடைக்கும். அடடா!

மயிலார் : போட்டிருக்குற சட்டை ஒன்னோடதில்ல. ஓசிச் சட்டை. அதச் சொல்லு

| |
oooOooo
                         
 
கோ. இராகவன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |