டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : நியூயார்க் பாரதி விழா
- ஆனந்த் சங்கரன் [anand_sankaran@yahoo.com]
| Printable version | URL |

நியூயார்க் பாரதி சங்கம் சார்பாக கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி விழா ஒன்று லாங்ஐலாண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் குழந்தைகள்-பெரியவர்கள் என அனைவரும் பாரதியார் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்கள். உலகின் எப்பகுதியில் வசித்தாலும் நாங்கள் தமிழர்கள், பாரதியை மறக்க மாட்டோம் என்ற ரீதியில் சரியான தமிழ் உச்சரிப்புடன் அக்குழந்தைகள் பாரதி பாடல்களைப் பாடிய விதம் மிக அருமை.

பாடலைத் தொடர்ந்து நியூஜெர்சி சுமித்ரா ராம்ஜி குழுவினரின் "குப்பத்து ராணி பார்க்கும் பார்வை" நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. சென்னையில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கும் - குப்பத்தில் வாழும் ஒரு குடும்பத்திற்கும் இடையே நிலம் மற்றும் காதல் தொடர்பாக ஏற்படும் பிரச்சனை தான் நாடகத்தின் மையக்கருத்து.

Bargavi as Kuppathu Raniஇந்நாடகத்தில் குப்பத்து ராணியாக வரும் கண்ணாத்தா தான் ஹீரோயின். கண்னாத்தாவின் மாமியார், குடிகார கணவன், பி.ஹெச்.டி படிக்கும் இளைய மச்சினன், நாத்தனார், நாத்தனாரின் குடிகாரக் கணவன் மற்றும் குப்பத்தில் வாழும் இன்னும் சிலர் என்று குப்பத்து பக்க குடும்பம். மறுபக்கத்தில் ஒரு டாக்டர், அவரது மனைவி, மகள் மற்றும் அவரது பெற்றோர் என்று நடுத்தர ஐயர் குடும்பம். கண்ணாத்தாவின் மச்சினனும் ஐயர் வீட்டுப் பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலால் இரு குடும்பத்திலும் குழப்பம் ஏற்படுகிறது. கண்ணாத்தா எப்படி பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார் என்பதே நாடகத்தின் மீதிக் கதை.

நாடகத்தில் பலரும் நடித்திருந்தாலும் குறிப்பாக கண்ணாத்தாவாக நடித்தவரும், அவரது குடிகாரக் கணவன் மற்றும் ஐயர் வீட்டு டாக்டர் என இரு வேடங்களில் நடித்தவரும் கலக்கியிருந்தார்கள். மேலும் அமெரிக்காவில் பிறந்த ஒரு சின்னப் பெண் குப்பத்து பாஷை பேசியபடி நடித்திருந்ததும் அருமை. நாடகத்தில் நடித்திருந்த பலரும் அநாயாசமாக குப்பத்து பாஷை பேசி கலக்கினர்.

நல்ல நகைச்சுவை நாடகம் என்றாலும் ஆங்காங்கே சில குறைகள். நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் சில இடங்களில் நாடகம் சற்று தொய்வதைப் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. நாடகத்தின் நீளத்தைக் குறைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நாடகத்தில் பங்கேற்ற பலர் அருமையாக நடித்திருந்தாலும் சிலர் வசனத்தை மறந்து சற்று திகைத்தனர். ஆனாலும் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் வசனத்தை எடுத்துக்கொடுத்து சமாளித்தார்கள்.

சென்னை உள்ளிட்ட மொத்த தமிழ்நாட்டிலுமே தற்போது நேர்த்தியான நாடகம் நடத்தும் குழுவினர்களும்Entire Cast அவர்கள் இயக்கும் நாடகங்களும் அரிதாகிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு வளர்ந்த நாடகக் குழுவினரின் நேர்த்தியில் அமெரிக்காவில் அருமையான நகைச்சுவை நாடகத்தை எழுதி, இயக்கிய சுமித்ரா ராம்ஜிக்கும் தேர்ந்த நடிகர்களைப் போல பிரமாதமாக நடித்த அவரது குழுவினருக்கும் பாராட்டுகள்.

இதைப் போன்ற திறமையாளர்களை உள்ளூரிலும் வெளியூரிலும் தேடிப்பிடித்து வரவழைத்து நல்ல பல நிகழ்சிகளை நடத்தி வரும் பாரதி சங்க தலைவர் ரகுநாதனுக்கு எனது பாராட்டுகள். இதைப் போன்ற நிகழ்சிகளை அவர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே நம் விருப்பம்.

oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |