'அரும்பு'
மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும். அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.
தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...) முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?
இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.
இந்த வாரத்தில்..
ஜெயந்தி சங்கர்
எந்தவொரு படைப்பாளியும் தான் வளரவளர தன் படைப்புகுறித்த தன் பார்வையையும் மாற்றிக்கொள்கிறான். 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு' போன்ற பிடிவாதமெல்லாம் உதவவே உதவாது என்றுணர்ந்து, பாராட்டுக்கு உருகுவதையும் எதிர்மறை விமரிசனத்துக்கு வருந்தித் துவளுவதையும் கூட விட்டுவிட்டுக் கடந்துவிடுகிறான். தனது படைப்புகளை விலகி நின்று பார்த்து அங்கீகரிக்கவும் நிராகரிக்கவும் மெதுவாகக் கற்றுக்கொண்டு விடுகிறான். இந்தக் கற்றலுக்கு மறைமுகமாகத் துணைபுரிவது சகபடைப்பாளிகள், விமரிசகர்கள், நண்பர்கள் ஆகியோரில் இருக்கக்கூடிய 'வாசகன்' மற்றும் அவனின் எதிர்வினையுமே. போற்றலோ தூற்றலோ, எதுவானால் தான் என்ன? படைப்பு பெறும் கவனமானது படைப்பாளியின் எழுத்துப் பயணத்தில் செய்திடும் மாற்றங்கள் ஏராளம்.
பொதுவாகவே கவிதையில் துவங்குவோர் தான் அதிகம் என்பது நாம் அறிந்ததே. அப்படியில்லாமல் சிறுகதை வடிவமே முதலில் என்னைக் கவர்ந்து, எனது துவக்கமாகவும் அமைந்தது. ஒரு சிறுகதையானது எழுதும் முன்னர் நம் மனதில் நாம் எழுதியபடியே முடிக்கும் போதும் அமைந்துவிட்டதாய் நாம் உணரும் சந்தர்ப்பங்கள் அரிது என்பது என் அனுபவம். அதனினும் அரிது நாம் எதிர்பார்த்த சிறுகதைக்கு நாம் எதிர்பார்த்த கவனம் கிடைப்பது. சிலநேரங்களில் எதிர்பாராத சிறுகதைக்கு எதிர்பாராத அளவில் கவனம் கிடைக்கும். 1995 முதல் இதுவரை கிட்டத்தட்ட எண்பது சிறுகதைகள் எழுதியிருக்கிற நிலையில் சில சிறுகதைகள் தொலைந்து போனவை. அதிகமாகப் பேசப்பட்டவற்றையும் அங்கீகாரம் பெற்றவற்றையும் சேர்ந்து, பெரும்பான்மையானவை ஏதோ ஒருவகையில் கவனம் பெற்றன. கிட்டத்தட்ட எல்லாச் சிறுகதைகளுமே சிங்கப்பூரைக் களமாக, வெறும் topo-graphicகாக மட்டுமே இல்லாமல், உள்ளூர் சிறப்புகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சவால்களையும் உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்டவை.
ooOoo
திலகராணி என்ற பெயரில் நான் அறியந்தேயிராத ஒரு வாசகி சிங்காநல்லூரிலிருந்து 'ஈரம்' கதையை திசைகள் மின்னிதழில் படித்து விட்டு பள்ளிநாளில் தான் வாசித்த 'ஏ.ஜி.கார்டினரின் கதைக்கு இணையாக'க் குறிப்பிட்டுப் பாராட்டி அடுத்த மாத இதழின் 'கடிதம்' பகுதியில் எழுதினார். அதே கதையை 'ஒரு (மத்திய வயதுப்) பெண்மணி மின்தூக்கியில் சிறுநீர் கழிப்பார்' என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று பெங்களூரிலிருந்து ஓர் இளைஞரும் அதே சமயத்தில் மின்மடலில் எழுதினார். இந்தச் சிறுகதையில் சொன்ன 'சூழல் செய்த சதி'யையே 2004 கல்கி தீபாவளி மலரில் வெளியான 'நாலேகால் டாலர்' சிறுகதையும் சொன்னது. அதுவும் இருவேறு எதிர்வினைகளைக் கொணர்ந்தது. சிலர் சொல்லவந்ததைச் சரியாகப் புரிந்துகொண்டனர். மற்றவரோ இப்படியெல்லாம் கூட நடக்குமா? சிங்கப்பூரை இந்தக் கதை தவறாக வெளியுலகுக்குக் காட்டாதா? என்பது போன்ற பல்வேறு குறுகிய பார்வையுடன், சிறுகதை பிடிக்காதது போலப் பேசினர். ஒவ்வொரு சிறுகதையும் எனக்கு ஏராளமான வாசகர்களையும் சில நண்பர்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
ooOoo
'முகவரி வாங்கிக் கொடுத்த முதல் படைப்பைப்பற்றி' அல்லவா சொல்ல வேண்டும் ! சரி, அதற்கு வருவோம். இந்தச் சிறுகதைகளுக்கெல்லாம் முன்பே தொண்ணூறுகளின் இறுதியில், நான் எழுதத் துவங்கி 2-3 வருடங்களில் யாஹூ குழுமங்கள் சிலவற்றில் நான் மிகக்குறைவாக எழுதி நிறைய படித்து வந்தேன். அப்போது, டாக்டர். லோகநாதன் எனும் மனோவியல் நிபுணர் எழுதிய ஒரு மனோதத்துவம் குறித்த சிறுகட்டுரை ஒன்றை வாசித்தேன். அச்சமயத்தில் குழுமத்திலும் அச்சிலும் எத்தனையோ எழுத்துக்களை வாசித்திருந்தும் இந்தக் கட்டுரை என் மனதில் பதிந்ததற்கு அதை நான் வாசித்த போது இருந்த என் மனநிலையும் முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்றே பின்னாளில் நான் யோசித்ததுண்டு. என்னில் ஏற்பட்ட தாக்கத்தினால் சிலநாட்களுக்கு எனக்குள் ஏதேதோ தோன்றியபடியிருந்தது. ஒரு வடிகால் தேடியது என் மனம். கற்பனையில் மிதந்து ஒரு சிறுகதையை எழுத நினைத்தேன். அப்படி 1997ல் நான் எழுதிய சிறுகதை தான் 'நுடம்'. உண்மையில் இந்தச் சிறுகதையை முதலில் 'நொண்டி' என்ற தலைப்பில் தான் எழுதியிருந்தேன். அந்தச் சிறுகதையை முதன்முதலில் படித்து ரசித்து 'நுடம்' என்ற தனித்துவமான பெயரைக் கொடுத்தவர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்.
Deletion Syndrome குறித்து எழுதிய திரு. லோகநாதன் மலேசியாவில் பினாங்கு நகரில் இருக்கிறார். Deletion Syndromeஐ குழந்தை உளவியலில் பொருத்தி ஒரு சிறுகதை எழுத நினைப்பதையும், அதற்கு அனுமதி கேட்டும் அவருக்கு மின்மடல் எழுதினேன். மிகவும் மகிழ்ந்து, தராளமாக எழுதுங்கள் என்று பதிலளித்திருந்தார். சிறுகதையைத் தான் படிக்க மிகவும் ஆர்வமாய் இருப்பதைச் சுட்டியிருந்தார். எழுதி முடித்ததும் வாசித்த முதல் வாசகரும் அவர் தான். வாசித்துவிட்டு, "உன் மகளா? இப்போது அவளுக்கு எப்படியிருக்கிறது?", என்று மிகவும் அக்கறையாகக் கேட்டிருந்தார். அதுவே என் கதைசொல்லலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதினேன். ஏனெனில், கற்பனையில் உதித்திருந்த கதையின் நம்பகத்தன்மையில் அதுவரை எனக்கே ஒருவித நியாயமான ஐயமிருந்தது. அதுவரை சுமார் 9-11 சிறுகதைகள் மட்டுமே முயற்சிகளாக எழுதியிருந்தேன். அவரது மின்மடலுக்கு எழுதிய பதிலில் நான், எனக்கு மகளே இல்லையென்றும், ஆரோக்கியமான இரு மகன்கள் மட்டுமே என்றும் விவரித்தெழுதினேன். யாரேனும் தெரிந்தவரின் குழந்தையா என்று மீண்டும் டாக்டர் கேட்டிருந்தார். நான் எழுதியது முற்றிலும் கற்பனையில். ஆகவே, சிறுகதை வெறும் கற்பனை என்று நான் பதில் எழுதிய போது, 'சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது', என்று பாராட்டியிருந்தார். இலக்கிய ஈடுபாடும் சிறுகதை குறித்த அறிவும் கொண்ட வேறொரு நண்பர், 'இந்தக் கதை வேற்று மொழிக்கு, முக்கியமாக ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு மூலம் போகக் கூடிய அளவில் உங்களையறியாமலே எளிமையாக அமைந்திருக்கிறது. இதுவே சிறுகதைக்குரிய சிறப்பு', என்றார். பின்னாளில், வேறு சிலர் எனது வேறு சிறுகதைகளுக்கும் இதேபோன்ற ஒரு கருத்தை முன்வைத்தனர்.
இதே 'நுடம்' சிறுகதையை வேறு கோணத்தில் பார்த்த சிலரோ, 'வேலைக்குச் செல்லும் பெண்களின் ஊக்கத்தைக் குறைக்கும் வித'த்தில் எழுதப் பட்டிருக்கிறது என்றார்கள். குழந்தை உளவியல் சார்ந்தெழுதப்பட்ட 'நுடம்' சிறுகதையில் சொல்லப்பட்ட செய்தி அவ்வாறானதல்ல என்பது தான் உண்மை. அதிரூப சுந்தரியான ரம்பைக்கே 'மூக்கு கொஞ்சம் கோணலோ' என்பதுபோன்ற எதிர்மறைப் பார்வையும் மனப்போக்குமுடையவர்கள் இலக்கிய உலகிலும் இருக்கத் தானே இருக்கிறார்கள்! அவ்விதப் பார்வைகளையும் பார்வையாளர்களையும் நான் என்றுமே அலட்சியப் படுத்துவதில்லை. ஏனெனில், அவ்விதமான விமரிசங்கள் ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும் என்றே நான் என் வரையில் நம்புகிறேன். நடைமுறை வாழ்க்கைக்கையில் திருடனுக்கு போலிஸ்காரனின் சிந்தனையோட்டமும் போலிஸ்காரனுக்கு திருடனின் சிந்தனையோட்டமும் தெரியத் தானே வேண்டியிருக்கிறது. தவிரவும் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான ஒரு கூட்டுநடவடிக்கை தான் எழுத்து என்று நான் நம்புகிறேன். வளர்ச்சிக்கு தேவையானதை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றதைத் தள்ளிவிட வேண்டியது தான்.
'சமகால வாழ்வைப் பதிவு செய்வது இலக்கியத்தின் முக்கிய கடமைகளில் ஒன்று என்பது என் நம்பிக்கை. அதை அந்தக் கதை சிறப்பாகவே செய்திருந்தது. கதை சிந்தனையைத் தூண்டும் வகையில் open endedஆக முடிந்திருந்தது என்பது இன்னொரு சிறப்பு', என்று உலகளவில் அறியப்பெற்ற ஒரு மூத்த படைப்பாளி 'நுடம்' குறித்து எழுதியிருந்தார். படித்தவர்களில் வெகுசிலர் சிறுகதையின் முற்பகுதியைப் படிக்கும் போதே முடிவை ஓரளவிற்கு ஊகித்துவிட முடிகிறது என்று சொன்ன போதிலும் சிறுகதையில் நம்பகத்தன்மை இருப்பதையும் சுட்டிக்காட்டவே செய்தனர். வேறு பலரோ சிறுகதை என்ன சொல்லப் போகிறது என்று ஊகிக்க முடியவில்லை என்றனர்.
'நொண்டி' என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற 'நுடம்' முதலில் 'சிங்கச்சுடர்' 2002 மே மாத இதழில் அச்சேறியது. அதன் பின்னர், திண்ணை மின்னிதழ் (19-06-03), பதிவுகள் மின்னிதழ் (ஆகஸ்ட் 2004), தென்றல் முல்லை (நான்காம் காலாண்டு அக்டோபர்-டிசம்பர் 2004) அச்சிதழ் போன்றவற்றில் மறுபிரசுரமாகி பின்னர் ஸ்விஸ் நாட்டின் 'நிலா' FMல் 'இசையும் கதையும்' நிகழ்ச்சியில் 25/26-09-05 ஆகிய நாட்களில் ஒலிபரப்பானது. பிறகு 2005ஆம் ஆண்டில் எனது 'நாலேகால் டாலர்' தொகுப்பிலும், சிறுகதை எழுதப்பட்டு பத்தாண்டுகள் கடந்தபிறகு, இப்போது சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுப்பான 'வேறொரு மனவெளி'யிலும் இடம் பெறவிருக்கிறது.
ooOoo
முதலில் புனைகதையில் எனக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருந்தது. 'நுடம்' பெற்ற கவனம் என்னுடைய கற்பனையில் மீது எனக்கிருந்த நம்பிக்கையைக் கூட்டியது என்றே தொன்றுகிறது. கற்பனை கலந்து எழுதுவது ஒரு மாதிரி. ஆனால், ஒரு உளவியல் கூற்றை உள்வாங்கிக் கொண்டு முழுக்க முழுக்க கற்பனையில் எழுதும் போது சில சந்தேகங்கள் இயல்பாகவே எழுமில்லையா? டாக்டர்.லோகநாதனே முதல் வாசகராக இருந்து அந்த நம்பகத்தன்மைக்கு நற்சான்றிதழ் வழங்கியதும், உண்மை நிகழ்வுகளில் கற்பனை கலப்பதற்கு என்னில் அதுவரை இருந்த மனத்தடைகள் நீங்கின. ஆகவே, புனைவு எனும் தளத்தில் நான் மேலும் இயல்பாக என் பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன். இந்தச் சிறுகதை பெற்ற கவனங்களே தொடர்ந்தும் நான் முனைப்புடன் எழுதக் காரணமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.
யாரிடமிருந்து வந்தாலும் எதிர்மறை விமரிசனங்களைக் கூர்ந்து கேட்டு கவனிக்கக் கற்றுக்கொண்டேன். முதலில் கொஞ்சம் எரிச்சல் வரும். ஆனால், முதல் கட்ட அதிர்வுகள் என்னில் மெதுவாக அடங்கி நிதானம் பெற்றதும் அவை தாங்கி வந்த நியாய அநியாங்களையும், உள்நோக்கமுடையவையா நேர்மையானவையா என்றும் சீர்தூக்கிப் பார்த்தேன். தொடர்ந்து எழுதிய படைப்புகளிலும் எனது நுண்ணிய கவனத்தைக் கோரி நின்றவற்றை என்னால் அறிய முடிந்தது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பயன்பெற்றேன். எழுத எழுத நான் யோசிக்கவேண்டிய திசைகள், யோசிக்காமல் விடக்கூடிய திசைகள் யாவும் என்னில் தெளிவாக பெறத் துவங்கின. வளர விரும்புவோர் கடைபிடிக்கக் கூடியவற்றை நான் யாருடைய வழிகாட்டுதலெல்லாம் இல்லாமலேயே அன்று கடைபிடித்திருக்கிறேன் என்பதை இன்று உணர்கிறேன். அதேநேரத்தில், நேரடியாக இல்லாவிட்டாலும் சிறுகதையைப் படித்து கருத்து - நேர்மறையும் எதிர்மறையும் சேர்த்துத்தான், சொன்னவர் எல்லோருமே ஒருவிதத்தில் எனது வளர்ச்சிக்கு உதவியவர்களாகிவிட்டனர்.
ooOoo
எதையுமே ஓரேடியாக தூக்கி உயர்த்துவதில் (glorify செய்வதில்) எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இன்னொரு புறமும் இருக்கிறது என்பதைச் சுட்டினால் சிலருக்குப் பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரி எழுத எனக்குப் பிடிப்பதில்லை. எனக்கு வரவும் வராது. பொதுவாக பலராலும் ஏற்கனவே தொடப்பட்ட விஷயங்களைத் தொடாமல் புதியதாக எழுத நினைத்து எழுதப்பட்ட என் சிறுகதைகளைச் சிலர், 'விதிவிலக்குகளை எடுத்து எழுதுகிறார்', என்பதுமுண்டு. அரிதான நிகழ்வேயானாலும் நம்பகத்தன்மையுடன் அந்தச் சூழல் அமைக்கப் பெற்றிருக்கும். தவிர, கதை சொல்லலில் செலுத்தப்பட்டிருக்கும் கவனத்தையும் கோணத்தையும் உணரவே சிலர் முயற்சிப்பதில்லை என்பதில் என்றுமே எனக்கு இருந்து வந்த வருத்தம் இப்போதெல்லாம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் நான் அவற்றைக் கடந்து செல்கிறேன் என்பது தானேயன்றி, நான் அவர்களால் புரிந்து கொள்ளப்படுகிறேன் என்பதல்ல பொருள்.
கருத்துரைப்பவர்கள் ஒருபுறமிருக்கட்டும். விமரிசகர்களில் சிலருக்கே கூட ஒரு படைப்பைப் படைப்பாக மட்டும் பார்க்கமுடிவதில்லை. தெளிவு படுத்திக் கொள்ளும் நோக்கில் கேட்பதாகச் சொல்லி விட்டு படைப்பாளியிடம் அநாவசிய கேள்விகள் கேட்கின்றனர். நாகரீகம் கருதி நாமும் பதில் சொல்லவேண்டிய நிர்பந்தங்கள். முற்றிலும் கற்பனை என்று நாம் சொன்னால் படைப்பைப்பற்றிய அவரது பார்வையே மாறிப்போகிறது என்பது மிகவும் வேடிக்கை. நடந்ததைக் கேள்விப்பட்டு எழுதியதாகச் சொன்னால் கெள்விகளின் திசையே மாறும். ஒரு பாத்திரத்தின் பெயரைச் சொல்லி அந்த நபரைப் போன்ற ஒருவருடன் உங்களுக்குப் பரிச்சயமுண்டா என்பார். விமரிசகருக்கு இதெல்லாம் தேவையா? படைப்பாளியை தனிப்பட்ட முறையில் அறிந்திராவிட்டால் இவர் என்ன செய்வார்? ஒரு படைப்பு உருப்பெற்றதற்கான பின்னணியைவிடவும் குறிப்பிட்ட அந்தப் படைப்பல்லவோ அதிகமும் முதன்மை பெறவேண்டும்? வடிவ, உத்திகளையெல்லாம் பார்க்கவும் பரிச்சயப்படாத இலக்கிய அறிவு இல்லாத சில விமரிசகர்களைச் சந்திக்கும்/உரையாடும் இக்கட்டுக்கள் எனக்கும் ஏற்பட்டதுண்டு. அதேநேரத்தில் படைப்பை ஒரு படைப்பாக மட்டுமே பார்க்கவும் ரசிக்கவும் செய்த வாசகர்களும் சகபடைப்பாளிகளும் எனக்கு அமையவே செய்தனர் என்பதையும் இங்கு மறக்காமல் குறிப்பிட விரும்புவேன். ஏனெனில், கருத்துவேறுபாடுகளுக்கிடையேயும் இணக்கங்கள் நிலவிடும் அந்தத் தருணங்கள் மிக அற்புதமானவை; அரிதானவையும் கூட. அவ்வனுபவங்கள் படைப்பையும் கடந்து நம் மனதில் நிலைத்துவிடுவதால், மறக்கவே முடியாதவை.
ooOoo
இதுவரை அனுபவித்தேயிராத ஒரு திசையை நோக்கிய நனவோடையில் திளைத்திடத் தூண்டுதலாக அமைந்த இந்த நல்வாய்ப்புக்கு மிக்க நன்றி.
|