உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியும் கேரள அரசு அதனை செயல்படுத்த மறுக்கிறது. இன்றைய தி.மு.க. ஆட்சியிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தின் முக்கிய அரசியல் வாதியாக வலம் வருபவர். இன்றைய மத்திய அரசிலும் இவருக்கு செல்வாக்கு இருப்பதாக கட்சிக்காரர்கள் பெருமையாக சொல்கிறார்கள். கட்சிக் கூட்டம், பொங்கு தமிழ் பண்ணிசை என்று பரபரப்பாக இருந்த இவர் அளித்த பேட்டி.
தமிழோவியம் : இன்றைய தமிழக ஆட்சியிலும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியிலும் உங்களுக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில் : செல்வாக்கு இருக்கிறது என்பதை விட அங்கு கூட்டணிக் கட்சிக்காரர்களை மதிக்கும் பண்பு இருக்கிறது. அந்த பண்பு காரணமாக செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார்கள். அதே போல தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அதனை பரிசீலனை செய்யும் பக்குவம் கொண்ட முதல்வர் இருக்கிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் எங்களின் கூட்டணி உறவு சுமூகமாகச் செல்கிறது. மத்திய அரசிலும் பாட்டாளி மக்கள் கட்சி பங்கு வகிக்கிறது. அதனால் அங்கும் எங்களுக்கு மதிப்பு இருக்கிறது என்பது உண்மை தான்.
தமிழோவியம் : உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மோதல்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தி.மு.க.விற்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறதே?
பதில் : கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனை அனைவரும் அறிவார்கள். கூட்டணி ஒப்பந்தங்கள் போடப்பட்ட பின்னர் எங்களது கட்சியினரை தி.மு.க.வினர் தோற்கடித்துள்ளனர். இதனை தீவிரமாக கண்டித்தோம். அதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அவை விரிசல்களை ஏற்படுத்தும் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தி.மு.க. உடனான கூட்டணியை நாங்கள் மனப்பூர்வமாக தொடர்கிறோம்.
தமிழோவியம் : பாட்டாளி மக்கள் கட்சி சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று நீங்கள் அறிவிப்பதற்கு என்ன காரணம்?
பதில் : இன்றைய எதிர்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தனது கடமையைச் செய்யாமல் இருக்கிறது. அதனை செய்ய நாங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. அதே சமயத்தில் இந்த அரசின் அனைத்து விஷயங்களையும் ஆதரிக்கும் மனப்பான்மையும் எங்களுக்கு கிடையாது. மக்களின் நலனுக்கு குரல் கொடுக்கவே அப்படி சொன்னேன். மற்றபடி வேறு மர்மங்கள் எல்லாம் இதில் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம்.
தமிழோவியம் : உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் அளிக்க பல போராட்டங்களை நடத்தினீர்கள். இந்த இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுமா?
பதில் : முதல் அமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு வெளியே பல காரியங்களை செய்ய வேண்டும். பிரதமரும், சோனியா காந்தியும் நமது முதல்வரை வழி காட்டக் கூடிய முதுபெரும் அரசியல் தலைவர் என்று சொல்கிறார்கள். நமது முதல்வர் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு ஒரே தவனையாக 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்த முயற்சிக்க வேண்டும் என நாங்கள் முதல்வரை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என நம்புகிறேன்.
தமிழோவியம் : உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு தமிழகத்தை சேர்ந்த சில மத்திய அமைச்சர்களே இடையூறாக இருப்பதாக சொன்னீர்கள் இல்லையா?
பதில் : உண்மை தான். ஆனால் பெயரை சொல்ல விரும்பவில்லை. வேறு பேசலாம் என நினைக்கிறேன்.
தமிழோவியம் : முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் இரண்டு மாநிலங்களுமே பிடிவாதமாக இருக்கிறது. இதற்கான தீர்வு தான் என்ன?
பதில் : அனையை உயர்த்தலாம் என உச்சநீதி மன்றம் சொன்ன உடனே அன்றைய தமிழக அரசு முயற்சி செய்திருந்தால் இன்று இப்பிரச்சினை வளர்ந்திருக்காது. உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியும் கேரள அரசு அதனை செயல்படுத்த மறுக்கிறது. இன்றைய தி.மு.க. ஆட்சியிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு தான். இந்த நதி நீர் இணைப்பு திட்டத்திற்கும் கேரளா சம்மாதிக்காது என அம்மாநில நீர்வள அமைச்சர் ஜேக்கப் சொல்லி இருக்கிறார். அதனால் நதிகளை முதலில் தேசியமய மாக்க வேண்டும். அதனை அடுத்து அரசியலமைப்பு சட்டப் பிரிவு 262 மற்றும் மாநில அதிகார பட்டியலில் உள்ள 17வது பிரிவுகளிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் தான் வருங்கால நீர் தேவைகளை சமாளிக்க முடியும்.
தமிழோவியம் : நீங்கள் சினிமாவை அதிகமாக எதிர்ப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
பதில் : இன்றைக்கு சினிமா துறை தான் இளைஞர்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆபாசம், வக்கிரப்புத்தியைக் வளர்த்து இன்றைய தமிழ் சினிமா இளைஞர்களை மயக்குவது வெட்கப்பட வேண்டிய செய்தி. இந்த நிலையை மாற்றியயே ஆக வேண்டும். அதற்கு பள்ளிகளில் கேள்வி ஞானத்தை குழந்தைகள் மனதில் வளர்க்க வேண்டும். அப்படி கேள்வி ஞானத்தை மாணவ சமூகத்தினரிடையே வளர்த்தால் தான் வரும் தலைமுறை செழிப்பாக இருக்கும்.
தமிழோவியம் : இன்றைய தமிழக அரசு திரைத் துறையினருக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறார். தமிழில் பெயர் வைத்தால் சலுகை போன்றவற்றை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : நமது முதல்வரை அழைத்து திரைத் துறையினர் ஒரு விழா நடத்தினார்கள். அதில் 4 மணி நேரம் நமது முதல்வரை உட்கார வைத்து அவர் முன்பு அபாசமாக சீனாதான........ என்ற ஆபாசப் பாட்டுக்கு ஆடுகிறார்கள். படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று முதல்வர் அறிவித்தற்கு அவர்கள் முதல்வருக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டார்கள்..
தமிழோவியம் : பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் சார்பில் 4ம் ஆண்டு பண்ணிசை பெருவிழா நடத்தி வருகிறீர்கள். இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில் : மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நல்ல முயற்சி என்று தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். சென்னையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட சபாகக்கள் உள்ளன. ஆனால் இதில் எதிலுமே தமிழிசைகள் பாடப்படுவதில்லை. யாராவது கேட்டால் மட்டுமே பாடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற முயற்சிக்கிறோம். தமிழிசையை பாட நிரந்தர சபாவை அமைக்க வேண்டுமு;. அது ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமையும். தமிழிசை, பண்ணிசை மன்றங்கள் தொடர்ந்து இயங்க நிரந்தரமான ஒரு இடம் தேவைப்படுகிறது. அதனை மாவட்ட அளவில் உருவாக்க உள்ளோம்.
தமிழோவியம் : இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தமிழக கட்சிகள் கடுமையாக கண்டிக்கின்றன. அதே சமயத்தில் இங்கிருந்து இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் அனுப்புவது, பயிற்சி அளிப்பது தொடர்ந்து நடந்து கொண்டு தானே இருக்கிறது?
பதில் : அதனை தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இலங்கை பிரச்சினை தீர தனி ஈழம் தான் தீர்வு. இதனை நாம் ஏற்றே ஆக வேண்டும். மதுரை மாவட்டம் வேலுர் அருகே வாகனச் சோதனையின் போது வெடி மருந்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அது நாக்பூரில் தயாரிக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கை கடற்படைக்கு அனுப்ப்பட்டது என எங்களுக்கு தெரிய வந்தது. இதனை கடுமையாக கண்டித்தோம். அதே சமயத்தில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடிகளால் தான் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ஆயுதம் வழங்க முடியாது என சொல்லி வருகிறது. வெடி பொருட்கள் குறித்து விசாரனைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
தமிழோவியம் : தமிழ்நாட்டில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?
பதில் : இது முன்னாள் முதல்வரின் கருத்து அவ்வளவு தான். வேறு முக்கியத்துவம் எல்லாம் இதற்கு இல்லை என நான் நினைக்கிறேன்.
தமிழோவியம் : தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நிலைத்து இருக்காது என்று எதிர்கட்சியினர் சொல்கிறார்களே?
பதில் : அடுத்த 5 ஆண்டுகளுக்கு கலைஞர் தான் முதல்வர். இதில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு..க. ஆட்சி நிலைத்து இருக்கும். இது தான் நிரந்தரம்.. ஆட்சி நிலைத்து இருக்காது என்பது எல்லாம் கற்பனைகளே. இந்த ஆட்சியாளர்கள் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து வருகிறார்கள். கோரிக்கைகளை செவி கொடுத்துக் கேட்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வில் இது சாத்தியம் இல்லை. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எஜமான மனப்பான்மையோடு நடந்து கொள்வார்.
|