டிசம்பர் 23 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கட்டுரை
கட்டுரை
சமையல்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "லூஸ் டாக்"
  - எஸ்.கே
  | Printable version |

  இந்தக் கட்டுரைக்கு நான் முதலில் "பயனில சொல்லாமை" என்றுதான் தலைப்புக் கொடுக்க எண்ணினேன். ஆனால் திருக்குறள் அறத்துப் பாலின் இல்லறவியல் அதிகாரம் ஒன்றின் பெயரை அப்படியே பயன் படுத்தல் தகாது என்ற கருத்தில், வேறொரு தலைப்பைத் தேடியபோது, இக்கட்டுரையில் சொல்ல வந்ததை நேரடியாக எடுத்துறைக்க "லூஸ் டாக்" என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், ஆங்கிலமானாலும் பரவாயில்லை என்று அதையே இட்டு விட்டேன்.

  நாம் எல்லோரும் பல முறை தேவையில்லாத சொற்களைப் பேசுகிறோம். அதனால் எற்படும் தொல்லைகளையும், பின் விளைவுகளையும் அநுபவிக்கிறோம். எங்கு மௌனம் தான் சிறந்த பேச்சாக ஆகுமோ, அங்கு அதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். அது போன்ற நேரங்களில் நாம் மௌனம் மூலமாகவே ஒரு கருத்துச் செறிந்த சொற்பொழிவை ஆற்ற இயலும்! "Silence can be very eloquent" என்று கூறுவர் பெரியோர். ஒருவரை, "நீங்கள் நிறைய ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்களே, உங்களால் மௌனமாக இருக்க முடியுமா" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என்னால் 127 மொழிகளில் மௌனமாக இருக்க முடியும்" என்றாராம்!

  மௌனத்திற்கு இன்னொரு பயனும் உண்டு. இலேசாக நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு மௌனமாக இருந்தால், "ஓஹோ, இவர் நிறைய விஷயம் தெரிந்தவர் போலிருக்கிறது. அதனால் தான் நிறை குடமாக மௌனமாக இருக்கிறார்" என்று ஏனையோர் எண்ணிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அவ்வாறல்லாமல் வாயைத்திறந்து ஓயாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தோமானால், நம் அறியாமை வெட்ட வெளிச்சமாகிவிடும். இதையே இன்னொருவர் கிண்டலாக, "It is better to keep your mouth shut and let others think you are a fool than opening it to confirm their assumption!" என்கிறார்!

  ஒருவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். பையன் வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். எல்லோரையும் வரவேற்று அமரச் செய்தாகி விட்டது. சம்பிரதாயமான உபசரிப்புக்குப்பின், சாதாரணமாக அளவளாவுவதற்கு ஆரம்பித்தனர். அப்போது பையனின் தகப்பனார், அங்கிருந்த ஒரு மாதப் பத்திரிக்கையைப் பிரித்து எதோ மேலெழுந்தவாரியாக பக்கங்களைப் பிரட்ட ஆரம்பித்தார். அதனிடையில் ஒரு பக்கத்தில் இருந்த ஊறுகாய் விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பெண்ணின் தந்தை, "இந்த பிராண்ட் ஊறுகாய் நல்லாவே இல்லைங்க" என்றார். அதோடு விட்டாரா. "இந்த ஊறுகாய்ங்கறதே ஒரு தேவையில்லாத சமாசாரங்கிறது என் கருத்துங்க" என்றார். பையனைப் பெற்றவர் சிரித்துக் கொண்டு பேசாமலிருந்தார். பெண்ணின் தகப்பன் விடாப்பிடியாக, "ஊறுகாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் போய் நிறைய சாப்பிடறவங்களெல்லாம் முட்டாள்கள்" என்ற தன் தீர்மானமான கருத்தை முன் வைத்தார். அதற்குள் பெண்ணை அழைத்து வந்து மேற்கொண்டு நடக்கும் வழக்கமான டிராமாக்கள் தொடங்கி விட்டதால் இந்தப் பேச்சு அத்துடன் நின்று விட்டது. பையன் வீட்டார் வழக்கம் போல "ஊருக்குப் போய் எங்களுக்குள்ள கலந்து பேசி ஃபோன் பண்றோம்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.

  கதைகளில் வரும் பல அரக்கர்களின் உயிர் ஏதோ ஒரு குகையில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவாலின் மூக்கில் இருக்கும் என்பது போல அந்தப் பையனின் தந்தைக்கு உயிர் பலவித ஊறூகாய்கள் மீதுதான் என்பது பெண்ணின் தந்தைக்கு தெரியாது. அவர்கள் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் இந்த நிகழ்வுக்கு "லூஸ் டாக்" தானே காரணம்! ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்பது கட்டாயமா? ஒரு புன்சிரிப்பு சிரித்து விட்டு, தேவைப் பட்டபோது ஓரிரு சொற்கள் பேசினால் போதாதா? அதிலும், தன் அயிப்பிராயங்களை உறுதிப் படுத்தி இவ்வாறு தேவையில்லாத இடங்களில் பறைசாற்றுதல் அவசியமா? சாதாரணமாகவே நாம் நம்முடைய கொள்கைகளையும், நம் உள்ளத்தில் நாம் கொண்டுள்ள முடிவுகளையும் சுலபத்தில் எல்லோரும் கண்டுகொள்ளுமாறு வெளிக்காண்பித்தல் நமக்கு நல்லதல்ல. அவ்வாறிருக்கும்போது அவற்றை இப்படி "கர கர" வென்று உப்புத்தாள் வைத்துத் தேய்ப்பதுபோல் மற்றவர்களிடம் தண்டோரா போட்டுத் தெரிவிக்க வேண்டுமா?

  "Discretion is the better part of valour" என்று சேக்ஷ்பியர் போன்றோர் சுட்டிக் காட்டிய கருத்தும் இதையொட்டித்தான் அமைந்திருக்கிறது. அவசரப்பட்டு சொற்களைக் கொட்டாமல், எச்சரிக்கை உணர்வுடன், சிந்தித்து, தேவையானவற்றை மட்டும் பேசி, புத்தி கூர்மையுடன் செயல் படுவது சிறந்த வல்லமையாகும் என்பது இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் கருத்து. அசட்டு வீரத்தை விட அடங்கி இருத்தல் நலம்!

  என்னுடன் பணிபுரிந்த ஒருவரை வழியில் பார்த்தேன். சாலையோரத்தில் தன் காரை நிறுத்தி விட்டு அதில் ஏதோ உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒன்றும் பேசாமல் சென்றால் ஏதாவது நினைத்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்து, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, "என்னங்க, கார் ஏதாவது ரிப்பேரா?" என்று கேட்டேன். அவ்வளவு தான். சலேரென்று திரும்பியவர், "உங்க சாமர்த்தியமெல்லாம் என்னிடம் காட்டாதீங்க. நீங்க என்ன அர்த்தத்தில கேட்கிறீங்க அப்படீங்கறது எனக்குத் தெரியும்" என்று கடுமையான குரலில் சொன்னார். எனக்கு என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டேன். ஆனால் அவர் ஏன் அவ்வாறு கோபப்பட்டார் என்பது விளங்காமல் அந்த நிகழ்ச்சியே என் மனதில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஏனையோரிடம் அவரைப் பற்றி தீர விசாரித்த பிறகு தான் அவருடைய அத்தகைய எதிர்வினைக்குக் காரணம் எனக்குப் புரிந்தது.

  அந்த நபருக்கும் அவருடைய குழுவில் சேர்ந்து பணியாற்றும் இன்னொருவருக்கும் பெரிய சண்டை. கோபப்பட்ட நபர் மற்றவரிடம் போய் மன்னிப்புக் கேட்கப்போகிறார் என்றன அலுவலக புல்லெடின் வதந்திகள். ஆனால் இவர் அந்த வதந்திகளை விறைப்பாக மறுத்திருக்கிறார். அந்த விபரமெல்லாம் எனக்குத் தெரியாது. அன்று அவருடைய  கார் நின்றிருந்த இடம் அவர் சண்டை போட்டிருந்த நபரின் வீட்டுக்கு எதிரில் இருந்தது. அந்தத் தகவலும் நான் அறியவில்லை. ஆனால் ஏனையோர் தன் மனம் என்ணியபடி assume செய்து கொள்வதை நாம் எப்படி தடுக்க முடியும்? அவரென்னமோ தன்னை எதிர் வீட்டில் இருப்பவரிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாக நினைத்து, என்னைக் கண்டவுடன் கார் ரிப்பேர் செய்வது போல் பாவனை செய்கிறார் என்று பொருள் தொனிக்க, "என்னங்க, கார் ரிப்பேரா" என்று நான் கிண்டல் செய்வதாக எண்ணிக் கொண்டார். சரி. அவர் செய்தது தவறாகவே இருக்கட்டும். நான் என் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாமல்லவா? அதை அநாவசியமாகத் திறந்ததால் என் மனத்தையும் ego-வையும் புண்ணாக்கிக் கொண்டேன் அல்லவா? இது தேவையா?

  ஆகையால், சம்பிரதாயத்துக்காக எதாவது பேசியேயாக வேண்டும் என்கிற உந்துதலை அடக்குதல் அவசியம். நம் கணிப்பில் சாதாரணமான பொருள் கொண்ட சொற்கள் இன்னொருவர் நோக்கில் வேறு பொருள் கொண்டதாக அமையும் சாத்தியம் உள்ளது. மேலும் ஒரே சொல்லுக்கு அவரவர்கள் தம் (அப்போதைய) மன நிலை, குடும்பச் சூழல், பின்னணி இவற்றைப் பொருத்துப் பொருள் கொள்வர். ஆகையால் நம் மேதா விலாசத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது அதிகப்படியாகப் பேசாமல், சொற்களின் எண்ணிக்கையில் கருமியாகவும், ஆனால் அதன் நயத்திலும், பொருட்செறிவிலும் பெருஞ்செல்வராகவும் விளங்குவது சாலச் சிறந்தது!

  ஒரு முறை கிண்டலாக நீங்கள் ஒன்றை உரைத்து அதை மற்றவர் சிறு நகையுடன் சகித்துக் கொண்டார் என்பதற்காக மீண்டும் அதையே சொன்னால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் கோபமுறுவதற்கு வாய்ப்புண்டு. அப்போதிருக்கும் மனநிலையைப் பொருத்தது அது. தவிர, ஒருவர் தனியே இருக்கும்போது சில கேலிப் பேச்சுக்களை சகித்திருப்பார். ஆனால் பலர் முன்னிலையில் அதே கிண்டல் அவருடைய ego-வைப் பாதிக்கலாம். அதனால் பகை மூளலாம். எனவே, எப்போதுமே எந்த வித உரையாடலிலும் என்ன பேசுகிறோம் என்பதை ஆராய்ந்து நிதானத்துடன், தகுந்த சொல்லாட்சியுடன் உரையாடினால் எல்லோராலும் போற்றப் படுவீர்கள். இல்லாவிடில் அடுத்தவர் மனதில் ஒரு பொருட்டிலாத மனிதராக, ஒரு non-serious and flippant type என்கிற image ஏற்பட்டுவிடும்.

  Inferiority complex என்கிற தன்மை கொண்ட பலர் தன் குறையை பிறர் அறியாவண்ணம் நிரப்பும் குறிக்கோளுடன் எல்லாம் அறிந்தவராகக் காட்டிக் கொள்ள எண்ணி ஒயாமல் ஏதாவது பேசிய வண்ணம் இருப்பர். இந்தக் குறைப் பாட்டை மனத்திட்பத்துடன் எதிர் கொள்ள வேண்டும். சிலர் கேட்காமலேயே பலருக்கு அறிவுரை கூறுவர். இவர்கள் மதிக்கப் பட மாட்டார்கள்.

  என் நண்பரொருவருடன் ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். எதிரே அமர்ந்திருந்தவரிடம் என் நண்பர் சும்மாயில்லாமல் அவருடைய கவனத்தைத் திருப்பி, "நீங்கள் சாமா தானே?" என்று வினவினார். அவரென்னமோ பைத்தியத்தைப் பார்ப்பது போல் அரைக் கண்ணைத் திருப்பி, இரெண்டு மில்லி மீட்டர் தலையை ஆட்டி இல்லை என்பதாக கோடி காட்டினார். நான் என் நண்பரிடம் கூறினேன், "உமக்கு வேணுமைய்யா இந்த அவமானம்" என்றேன். ஆனால் இவர் விடாமல், 'நிச்சயமாக என்னுடன் திருச்சி ஆண்டார் தெருவில் ரூம் மேட்டாக இருந்த சாமாதான் அவர். என்ன காரணத்தினாலோ இல்லையென்கிறார். ஏதோ குடும்பப் பிரச்னையோ, கடன் தொல்லையோ தெரியவில்லை" என்று சிலம்பிக்கொண்டிருந்தார். பொது இடங்களில் இது போன்ற embarrassing situations - களைத் தவிர்த்தல் நலம்.

  இப்போது திருவள்ளுவரை துணைக்கழைக்கிறேன்!

  வள்ளுவர் இந்தக் கருத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு முழு அதிகாரமே படைத்திருகிறார்!

   நயனிலன் என்பது சொல்லும் பயனில
   பாரித் துரைக்கும் உரை

  எவ்வளவுதான் அறிவாளியாக ஒருவர் விளங்கினாலும், அவர் பயனற்றவைகளைப் பற்றியே விரிவாகப் பேசிக்கொண்டிருந்தால், அவரையே ஒரு பயனற்றவராக எல்லோரும் எண்ணுவர் என்பதை அறிவுருத்துகிறார்.

  இதே போன்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார் இக்குரளில்:-

   சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
   நீர்மை யுடையார் சொலின்.

  இன்னும் ஒரு படி மேலே போய், பயனற்றவைகளைப் பேசுபவன் ஒரு "பதர்" என்று கோபமாக அழைக்கிறார் வள்ளுவர் பெருந்தகை இந்தக் குறளின்பால்:-

   பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
   மக்கட் பதடி எனல்.

  அறிவிற் சிறந்தவர்களுடைய அடையாளச் சின்னமே பொருளற்ற சொற்களை உரைக்காமலிருத்தல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் இங்கே:-

   பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் தீர்ந்த
   மாசறு காட்சியவர்.

  முத்தாய்ப்பாக திருவள்ளுவரின் இந்த அறிவுரையுடன் முடிக்கிறேன்:-

   சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
   சொல்லிற் பயனிலாச் சொல்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |