பாடல் 71
பறைகளைச் சுமந்துவரும் பாண்டியனின் யானைகள், கொலைத்தொழில் பழகியவை.
சிறப்பு மிகுந்த அந்த யானைப் படையின் தலைவனாகிய பாண்டியன், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியாளும் சக்கரவர்த்தி - அவனுக்குக் கீழே அடங்கியுள்ள சிற்றரசர்கள் எல்லோரும், அவனை வணங்கி அடிபணிந்து கப்பம் செலுத்துகிறார்கள்.
ஒருவேளை யாரேனும் அப்படிக் கப்பம் செலுத்த மறந்(றுத்)துவிட்டால், அவர்கள் 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்றுதான் அர்த்தம் - உடனடியாக அவர்கள்மீது போர் தொடுத்துவிடுவான் பாண்டியன்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின்மீது போர் தொடுக்கும் அரசர்கள், அதற்கு முதல் அடையாளமாக, அந்த நாட்டிற்குச் சென்று, அங்குள்ள பசுக் கூட்டங்களை விரட்டிக்கொண்டுவந்துவிடுவார்கள்.
உடனே, பசுக்களைப் பறிகொடுத்த நாட்டவர்கள், அவர்களைத் துரத்திக்கொண்டு சென்று, அவர்களோடு சண்டையிட்டு, பசுக்களை மீட்டுவரவேண்டும் - இதுதான் பொதுவான மரபு.
ஆனால், இந்த விதிமுறைகளெல்லாம், சம பலமுள்ள நாடுகளிடையே போர் மூள்கிறபோதுதான் சரிப்படும் - பாண்டியனைப்போன்ற வலிமை மிகுந்த அரசன், வேறொரு சிறு நாட்டின்மீது போர் தொடுக்கத் தீர்மானித்துவிட்டால், அங்கிருக்கும் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்றுவிட்டால், அதைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் பதறிப்போய்விடுவார்கள், அந்தப் பசுக்களோடு, தங்களின் உயிரும் போய்விட்டதுபோல் நடுங்கிப்போவார்கள்.
'ஐயோ, பாண்டியனோடு போரிட்டு நாம் ஜெயிப்பதா ? அது எப்படி முடியும் ?', என்று அச்சப்பட்டுக்கொண்டு, அந்த ஊரிலுள்ள பெண்கள், குழந்தைகளெல்லாம் ஊரைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.
பெண்கள் எல்லோரும் வெளியேறியபின், ஊருக்குள் ஆண்களுக்கு என்ன வேலை ? ஒன்று, அவர்களும் பயந்து ஓடிவிடுவார்கள், அல்லது பாண்டியனுடன் போரிடச் சென்று, இறந்துபோவார்கள்.
இப்படியாக, அந்த நாட்டிலுள்ள எல்லோரும் காலியானபின், அங்கே வெறும் பேய்கள்தான் தங்கியிருக்கும்.
பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதோர் தேயம் முறைமுறையின் ஆன்போய் அரிவையர்போல் ஆடவர்போய் ஆய்ஈன்ற ஈன்பேய் உறையும் இடம்.
(நிறை - நிறைவு / அழிவின்மை / சிறப்பு பஞ்சவர் - பாண்டிய மன்னர்கள் திறை - வரி / கப்பம் உய்யாதோர் - பிழைக்கமுடியாதவர்கள் தேயம் - தேசம் முறைமுறை - அரசர்களின் போர் மரபுப்படி ஆ - பசு அரிவை - பெண் ஆய் - தாய் உறையும் - தங்கும்)
பாடல் 72
போர் முடிந்தபின், அந்தப் போர்க் களத்தை வலம் வருகிறான் பாண்டியன்.
வழியெங்கும் எதிரி நாட்டு மன்னர்களின் பிணங்கள் விழுந்துகிடக்கின்றன. உயிர் நீங்கிவிட்டாலும், அந்தக் கண்களில் இன்னும் ஆத்திரம் குறையவில்லை, கோபத்தால் உதடுகளை அழுத்திக் கடித்திருக்கிறார்கள், அவர்களின் கைகளிலுள்ள கூர்மையான வேல்கள், யாரையோ வானத்தில் குறிபார்க்கின்றன.
அந்த மன்னர்களின் பட்டத்து யானைகள் சரிந்து கிடக்க, அவற்றை அணைத்தபடி விழுந்துகிடக்கும் அந்தப் பிணங்களைப் பார்க்கும்போது, இவர்கள் நிஜமாகவே இறந்துவிட்டார்களா, அல்லது இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்களோ என்று புரியாதவன்போல் திகைத்து நிற்கிறான் பாண்டியன்.
கொடித்தலைத்தார்த் தென்னவன் தேற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையால் பிடித்தவேல் கண்நேரா ஓச்சிக் களிறுஅணையாக் கண்படுத்த மண்நேரா மன்னரைக் கண்டு.
(தார் - மாலை தேற்றான் - தெளிவில்லாதவன் கண்நேரா ஓச்சி - கண்ணுக்கு நேராக நீட்டியபடி அணையா - அணைத்தபடி கண்படுத்த - தூங்கிக் கிடந்த)
|