முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்மணி ( a typical career woman ! ) ஒருவர் மிகவும் சீரியஸாக, " என் கணவர் காட்டும் நட்பு எனக்குப் போதும். அதேபோல நானும் ஒரு நாய்க்குட்டி வாங்கி அது என் கணவரை 'அப்பா' (daddy) என்று அழைக்கப் பழக்கப்போகிறேன். என் கணவருக்கு இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறேன்." எவ்வளவு பெருந்தன்மை பார்த்தீர்களா? ! சிங்கப்பூரின் பிரபலமான ஆங்கில நாளிதழான the straits times ஒரு 'சர்வே' (கணக்கெடுப்பு) எடுத்தது. அப்போது தான் மேற்படி சீரியஸ் (நமக்குக் காமடி) டயலாக் பேசப்பட்டது.
இக்கணக்கெடுப்பில் 200 மணமான ஜோடிகள் பங்கெடுத்தனர். இவர்களில் அதிகபேர் 'குழந்தைகள்' மற்றும் 'உடலுறவு' ஆகிய இரண்டையும் தங்களின் தேவைகள் பட்டியலில் ஆகக் கடைசியாக சொல்லியிருக்கின்றனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இந்தத் தம்பதியரில் 80% பேருக்கு ஏற்கனவே குழந்தைகளுண்டு. அவர்களின் மனதில் 'குழந்தைகள்' பெரிய பாரம். இவர்களின் முதல் தேவைகளில் தங்களின் வேலை (career), சம்பளம் போன்றவற்றுடன் தனியார் வீடு மற்றும் உயர்ரக கார்களும் வருகின்றன. குடிமக்கள் தங்களின் சொந்த சுதந்திரம் மற்றும் சுகங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து 'சுயநலவாதிகளாகி' வருகின்றனர் என்கிறது கண்டுபிடிப்பு. குழந்தைகள் இருந்தால், 'செலவு', 'தொந்தரவு' என்றெல்லாம் கருதுகிறார்கள்.
ஆண்களில் 30% பேர் மூன்றும் அதற்கு மேலும் குழந்தைகள் 'வேண்டும்' என்றனர். பெண்களில் 18% பேர் மட்டுமே 'வேண்டும்' என்றனராம். இது குறித்துத் திருமணத்திற்கு முன்னரே கலந்துபேசியவர்கள் குழப்பங்களில்லாமல் தொடர்ந்து குடித்தனம் செய்தனர். பேசத்தவறியவர்களோ குழம்பி, பிணங்கி விலகுகின்றனர். குழந்தை பெற்றுத் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் இங்கு அதிகரித்து வருகின்றனர். இப்பெண்களில் பெரும்பாலோர் தங்கள் தொழிலில் (career) முழுக்கவனம் செலுத்துவோர் ஆவர். 'முதுமையில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி அன்பும் ஆதரவும் கொடுத்து/பெற்று வாழ்வோம். எங்களுக்கு எதற்குக் குழந்தைகள்?' என்கின்றனர் இவ்வகைப் பெண்கள். திருமணங்கள் முறிய 'திருமணம்' பற்றிய இருவேறு புரிதல்கள் தம்பதியினரிடையே நிலவுவதே காரணமாகிறதாம் பெரும்பாலும். மணவிலக்கினால் பெரும்பாலும் பாதிப்படைவது குழந்தைகள். இதுவும் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கச் செய்கிறது.
முன்பெல்லாம் குழந்தைகளை பெரும்சொத்தாகவும், தங்களின்முதுமையின் பாதுகாப்பாகவும் கருதிவந்தனர். இந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. இக்காலக்குழந்தைகளின் தேவைகள்/ஆசைகள் ஆகியவை மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நிறைவு செய்வது என்பது பெரும் சவாலாகவும் சிரமமாகவும் இருக்கின்றது என்கிறார்கள் இவர்கள்.
சமீபகாலங்களில் சிங்கப்பூரின் இளைஞர்களிடையே ஒரு தீவிரக்கருத்து நிலவுகிறது. அதாவது, சமூகம் பெண்ணாதிக்கம் நிறைந்ததாகி வருகிறதாம். சீனாவின் ஷாங்கெய்யில் 50% திருமணங்கள் முறிவில் முடிகின்றன. சிங்கப்பூரும் அந்தவழியையே நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது அக்கறைக்குரியது. முறிவென்று வந்துவிட்டால் பெண்களுக்குத் தான் எல்லாவிதத்திலும் சாதகம். பெண்களுக்குத் திருமணம் செய்துகொள்ள மிகவும் பிடிக்கும். அதற்குக்காரணமே இவ்விளைஞர்களின் கண்ணோட்டத்தில், சட்டம், அரசாங்கம், போலீஸ், நீதிமன்றம் கூட பெண்களுக்குச் சாதகமாயும் ஆண்களுக்கெதிராகவும் செயல்படுகின்றன. மணமுறிவு என்று வரும்போது இது நிரூபணமாகிறது. சட்டத்திற்குப் பணம் அழுது அழுது ஓட்டாண்டியாகின்றனர். பெண்கள் அப்படியில்லை. பாக்கெட்டை நிரப்பிக்கொண்டு சென்று விடுகின்றனர்.
ஒரு பெண் நாடாளுமன்ற உருப்பினர். இன்னும் அதிக பெண் அமைச்சர்களும் பெண்களுக்கேற்ற சட்டங்களும் தேவை என்று சொல்லியிருக்கிறார். இதைப்படித்ததுமே பல இளைய தலைமுறை இளையதலைமுறை ஆண்களுக்குப் பயங்கரக் கடுப்பு. மேல்·ப்ரெண்ட்லி (male friendly) நாடுகள் ஏதும் உண்டென்றால் அங்கு புலம்பெயர்ந்துவிடவே விரும்புகின்றனராம். இவர்களில் பலர் பல அடிப்படை உரிமைகளே ( ! ) இவர்களுக்கு மறுக்கப்படுவதால் மணம்புரிவதைப் பற்றிச் சிந்திக்கவே போவதில்லையாம்.
இளையர்களைப் பார்த்துப் பார்த்து இப்போதெல்லாம் முதியவர்களும் அதிக அளவில் மணவிலக்கை நாட ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணம் மௌனமாகச் சகித்து வந்த அவர்களுக்கு இப்போதெல்லாம் 'டைவோர்ஸ்' என்பது சமூகத்தில் பரவலாகவும் சகஜமாகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டுவருகிறது என்னும் எண்ணம். பிள்ளைகள் வளர்ந்து செட்டில் ஆனதும் இவர்களுக்கு திருமண பந்தத்திலிருந்து 'வெளியேறும்' ஆசை வந்துவிடுகின்றது.
எனக்குத் தெரிந்த ஒரு சீனர். அவருக்கு இரண்டு பாட்டிகள் அப்பாவின் பக்கம் மட்டுமே. அதாவது அவரின் தந்தையின் தந்தை இருதாரமுடையவர். தாய் இருமுறை மணந்ததால், அவருக்கு இரண்டு தந்தையர். தந்தையும் இரண்டு முறை மணந்தபடியால் இரண்டு தந்தை. ஏழு தம்பி தங்கையர். எல்லோருமே மாற்றாந்தாயிற்கும், மாற்றாந்தந்தைக்கும் பிறந்தவர்கள். ஒரு திருமணமும் இந்தக்குடும்பத்தில் முறியாமல் தொடர்ந்த சரித்திரமேயில்லை.
போன வாரம், பூங்காவில் நான் மெதுவோட்டப் பயிற்சி செய்துவிட்டு உட்கார்ந்திருந்தபோது சுவாரசியமான விவாதம் காதில் விழுந்தது. பதின்ம வயதுகும்பல் ஒன்று காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தது. எல்லோருமே 16,17 வயதுடையவர்கள். இரெண்டும்கெட்டான் பசங்கதானே என்று ஒதுக்கிவிடமுடியாத அளவிற்கு இருந்தது அவர்களின் காரணகாரியங்களோடு கூடிய அலசல். அதில் ஒரு பையன் மட்டுமே திருமணத்தில் இருக்கக்கூடிய சாதகங்களைக் காணும் 'பார்வை' பெற்றிருந்தான். மற்றவர்களின் பேச்சுச்சாதுரியத்தால் சிறுபான்மையான அவன் வாய்மூடிக்கேட்கும்படியானது. மீதி ஐந்துபேரும்,'திருமணமே வேஸ்ட்', 'பிள்ளைபெறுதல் பாவம்', 'நாம படற கஷ்டம் போதாதா?', 'நம்ம வாரிசுன்னு வேற பெத்து அவங்களையும் கஷ்டப்படுத்தணுமா?', 'பூமியில மனிதனாப் பிறக்கறதே கொடுமை', 'என்னை எங்க அப்பா அம்மா கேட்டிருந்தா, .. நான் பிறக்கவே சம்மதிச்சிருக்கவே மாட்டேன்', என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தனர். முதலில் என்னை அதிரவைத்து மெதுவாக ஆழ்ந்து யோசிக்க வைத்தது.
சிங்கப்பூரில் பிறப்புவிகிதம் குறைந்துவிட்டதற்கு இன்னும் வேறு காரணங்கள் தேவையா வாசகர்களே ? !
|