இந்து - முஸ்லீம் ஒற்றுமை பற்றி ஓயாது பேசிவரும் காந்திஜி, தன்னுடைய மகளையோ, மகனையோ ஒரு முஸ்லீமுக்கு திருமணம் செய்து கொடுப்பாரா? முஸ்லீம்களுடன் சரிசமமாக உட்கார்ந்து சமபந்தி உணவு சாப்பிடுவாரா? - இந்த கேள்விகளெல்லாமே காந்திஜியிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கேட்கப்பட்ட கேள்விகள். கலப்பு மணம் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இருந்தாலும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியமான விஷம் என்று காந்திஜி சொல்வார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், காந்திஜியிடமிருந்து ஒரு வித்தியாசமான பதில்.
'கலப்பு மணமும் சமபந்தி உணவும் சமூகத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என்பது மேலைநாடுகளிலிருந்து கடன் வாங்கிய மூட நம்பிக்கை. கலப்பு மணங்கள் அமைதியை கொண்டு வரும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இவற்றிற்கும் சமூக ஒற்றுமைக்கும் சம்பந்தமேயில்லை என்பது எனது உறுதியான கருத்து' (யங் இந்தியா, 25.2.1920)
காந்திஜி ஏன் அப்படி சொன்னார்? கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம். இந்து - முஸ்லீம் பிரச்னையைப் பொறுத்தவரையில் அன்றைய இந்தியாவுக்கும் இன்றைய இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. அப்போதிருந்தே இப்பிரச்னை காலை சுற்றிய பாம்புதான்.
சமபந்தி உணவெல்லாம் அவசியமில்லை என்று காந்திஜி சொன்னதற்கு காரணம் அவருக்கு மதச்சார்பின்மை பெயரால் நடக்கும் போலித்தனங்களை தவிர்க்கத்தான். முஸ்லீம்கள், கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் வீட்டில் சமைத்த உணவை அங்கேயே உட்கொண்டிருக்கிறார். ஆனால், இதையெல்லாம் தனக்கு சகிப்புத்தன்மை இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்பாக அவர் நினைக்கவில்லை. என்னதான் சொந்த மகனே என்றாலும் ஓரே தட்டில் சாப்பாட்டை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை. அதுபோல சாப்பாடு விஷயத்திலும் சிலருக்கு மதரீதியான கட்டுப்பாடுகளோ, வழிமுறைகளோ இருக்கலாம். அதெல்லாம் தனி நபர் சார்ந்த விஷயம். அதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டியது அவசியம்தானா? சமபந்தி உணவு உட்கொள்வதால் பெரிய அளவுக்கு சமூக ஒற்றுமையெல்லாம் வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். இதைப் பற்றியெல்லாம் அதிகமாக விவாதித்தால் சமபந்தி உணவு இல்லாமல் இந்துக்களும், முஸ்லீம்களும் சமூகத்தில் ஒன்றாக வாழ முடியாது என்கிற எண்ணம் வந்துவிடும். அப்படியொரு எண்ணம் வரும்பட்சத்தில் இரு சமூகத்திற்கும் இடையே அதுவே செயற்கையான தடையாக இருந்துவிடும் என்கிற அவரது பார்வையை தற்போதைய மதச்சார்பின்மை பற்றிய பார்வையோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டியிருக்கிறது.
சமபந்தி பற்றி காந்திஜி விரிவாக பேசாததால் அவரது கருத்துக்கள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன. ஆனால், கலப்பு மணம் பற்றி அவர் நிறையவே பேசியிருக்கிறார்.
'முஸ்லீம் இளைஞர்கள், இந்துப் பெண்களையோ அல்லது இந்து இளைஞர்கள் முஸ்லீம் பெண்களையோ காதலிப்பது சட்டவரம்பிற்கு உட்பட்டதுதான் என்று நினைப்பது இரு சமூகத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை பாதிக்கும். எனவே, இரு சமூகத்தாரும்ம இந்த எல்லைகளை தெரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமென்று நான் நினைக்கிறேன்' (யங் இந்தியா, 25.2.1920)
காந்திஜியைப் பொறுத்த வரை கலப்பு மணங்களால் தொண்ணூறு சதவீதம் பிரச்னை வரும் என்று தெரிந்துவிட்ட நிலையில் இதையெல்லாம் தவிர்த்து விடலாமே என்கிற நிலைதான். சில சந்தர்ப்பங்களில் ஒரு சில கலப்பு மணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருப்பதில் தப்பில்லை. ஆனால், அதையே ஒரு பொதுக் கொள்கையாக வைத்து இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதால் என்ன பயன்?
கலப்பு மணத்தால் பிரச்னை வரும் என்பது மட்டுமல்ல காந்திஜி சொல்லும் இன்னொரு காரணத்தையும் நாம் கவனிக்கவேண்டும். கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கிடையே பிரச்னை வர முக்கியமான காரணமாக இருப்பது அவரவர் மதம் சார்ந்த வழிபாடுகளும், நெறிமுறைகளும்தான். மண வாழ்க்கையில் அவரவர் மதத்தை சரிவர பின்பற்றுவதும் நடக்காத காரியம். இரு சமூகத்திற்கும் இடையே சகிப்புத்தன்மை என்பது சில காரணங்களுக்காக கேள்விக்குறியாக மாறிவரும்போது அத்தகைய சகிப்புத்தன்மை கணவன், மனைவியரிடையே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? நியாயமான கேள்விதான்.
இந்து - முஸ்லீம் பிரச்னைகளுக்கு அரசியல், பொருளாதார விஷயங்களே காரணம். அந்தப் பிரச்னைகள் திருப்திகரமாக தீர்க்கப்பட்டாலே போதும். சமூகம் சார்ந்த காரணங்கள் எதுவுமில்லை. அடிப்படையில் இரு சமூகமும் பரஸ்பர புரிதலுடன் அமைதியாகத்தான் இருந்து வருகிறது. (யங் இந்தியா, 4.6.1921)
கலப்பு மணம் என்கிற கஷ்டமான விஷயத்தை முயன்று பார்ப்பதை விட பொதுவான விஷயங்களுக்கு மட்டும் இந்து, முஸ்லீம் சமூகங்கள் இணைந்து செயல்படலாம் என்பதுதான் அவர் இறுதியாக சொல்ல வரும் விஷயம். ஒரு பொதுவான லட்சியத்திற்காக ஒன்று கூடுவதன் மூலம் ஒற்றுமையை வளர்க்கமுடியும். நாடு சுதந்திரமடையவேண்டும் என்பதுதான் அந்த பொதுவான லட்சியம். ஆயிரம் பிரச்னை இருந்தாலும் நாட்டை பற்றி நினைக்கும்போது எந்த வேற்றுமையும் வரவே வராது; வரவும் கூடாது.
|