சதாம் உசேனிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய பெருமையில் அமெரிக்க திளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சதாமை தூக்கில் போட்டதன் மூலம் அமெரிக்கா உண்மையில் சாதித்தது என்ன? ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போருக்கு காரணமாக அமைந்த பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருக்கின்றன என்ற அமெரிக்க குற்றச்சாட்டே பொய்யாகிவிட்ட நிலையில் - குற்றச்சாட்டு விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோம் என்று அமெரிக்க அதிபரே ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட பொம்மை அரசாங்கத்தால் அவசர அவசரமாக தூக்கில் போடப்பட்டுள்ளார் சதாம்.
ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுத்தது என்ற உண்மைக்காரணமே இன்னும் பலருக்கு தெளிவாக விளங்கவில்லை. மேலும் ஈராக் விஷயத்தில் அமெரிக்க அரசின் போக்கை அந்நாட்டு மக்களும் எதிர்கட்சிகளுமே ஏகமாக எதிர்த்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு கைகொடுத்த பிரிட்டிஷ் ஆளும் கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டு மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஈராக்கில் சதாம் ஆதரவாளர்களால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. அமெரிக்காவிற்கு பாடம் கற்றுக்கொடுக்கப்போகிறோம் என்று பிதற்றிக்கொண்டு தீவிரவாதிகள் ஒவ்வொரு நாளும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வெடிப்புகளுக்கு காரணமான - அமெரிக்கா உலக நாடுகளிடம் தீவிரவாத எதிர்ப்பு பற்றி பேசக்காரணமான ஓசாமாவைப் பிடிக்க வழியில்லை - ஆனால் இதற்கு சம்மந்தமே இல்லாத சதாமைப் பிடித்து அவசரம் அவசரமாக பக்ரீத் திருவிழா காலகட்டத்தில் அவருடைய தண்டனையை நிறைவேற்றி தன் பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது அமெரிக்கா.
சதாம் ஒரு கொடுங்கோலர் - அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானவர்கள் என்றாலும் புஷ்ஷின் அவசரப்போக்கினால் கொடுங்கோலர் சதாம் இன்று ஒரு சரித்திர நாயகனாகிவிட்டார். சதாமின் கொடுங்கோல் முகம் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் மறந்துவிட்டன. அவர் அநியாயமாக அமெரிக்காவால் தண்டிக்கப்பட்டார் என்பதே முக்கால்வாசி நாட்டுத்தலைவர்களின் கருத்து. அப்பா புஷ் அநாவசியமாக ஈராக்குடன் போரில் ஈடுபட்டார் என்றால் பிள்ளை புஷ் ஈராக்கையே ஒரு சுடுகாடாக மாற்றியுள்ளார். ஏற்கனவே அவரைப்பற்றிய நல்ல அபிப்பிராயம் அந்நாட்டு மக்களுக்கே இல்லை. இந்நிலையில் சதாம் விவகாரம் நிச்சயமாக புஷ்ஷின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட ஒரு கரும்புள்ளிதான்.
ஏற்கனவே உள்நாட்டு கலவரங்கள் நித்தமும் நடக்கும் ஈராக்கில் தற்போதைய நிலவரம் மேலும் மோசமாகியுள்ளது. அமெரிக்காவை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் தீவிரவாதிகள் அடிக்கப்போகும் லூட்டிகளும் இனி அதிகமாகும் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. ஆக மொத்தத்தில் ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த ஈராக்கை நியாமான ஒரு காரணமும் இல்லாம நாசமாக்கியதைத் தவிர தீவிரவாதத்தை ஒழிக்கும் எந்த ஒரு உருப்படியான வேலையிலும் அமெரிக்கா இதுவரை ஈடுபடவில்லை. போகப்போக என்ன நடக்குமோ பார்ப்போம்...
|