Tamiloviam
டிசம்பர் 31 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பந்தாடப்படும் வுட்ஸ்
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |
கோல்ஃப் விளையாட்டை யாரும் நேரிலோ டிவியிலோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு மட்டுமல்ல, பொதுவாகவே கோல்ஃப் ஒரு பிரபலமான விளையாட்டு கிடையாது. ஒலிம்பிக்கிலும் அதற்கு இடம் கிடையாது. இப்படி யாரும் அக்கறைப்படாத கோல்ஃப் விளையாட்டுக்கு அதிகப் பார்வையாளர்களைக் கொண்டுவந்து  தந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் வுட்ஸ். இன்று,  பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தன் ரசிகர்கள் முன்னால் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார்.
 
மனிதன் அல்ல, அவர் ஒரு ரோபோ என்று அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டவர் டைகர் வுட்ஸ். மிகச்சிறிய வயதிலேயே (இரண்டு வயது) கோல்ஃப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்ததால் மீடியா அவருடைய ஒவ்வொரு சாதனையையும்  பதிவு செய்தது. இதனால் உலகின் மிகப்பெரிய விளையாட்டு வீரராக மதிக்கப்பட்டார் வுட்ஸ். விளம்பரங்களால் அவர் சொத்து மதிப்பு நம்பமுடியாத அளவுக்கு அதிகமானது.
 
மூன்று வருடம் காதலில் திளைத்தபிறகு 29 வயதில் எலின் நார்டெகிரனைத் திருமணம் செய்துகொண்டார் வுட்ஸ். அடுத்த இரு வருடங்களில் இரு குழந்தைகளுக்குத் தந்தையானார். இப்படி எல்லாமே வாய்க்கப்பெற்ற டைகர் வுட்ஸ் மீது இப்போது சாரைசாரையாகப் பாலியல் குற்றச்சாட்டுகள்.
 
சில மாதங்களுக்கு முன்பு ‘நேஷனல் என்கொயரர்’ பத்திரிகையில் டைகர் வுட்ஸ்  கிசுகிசு வெளிவந்தது. நைட்கிளப் மேனேஜரான ராச்சலுடன் வுட்ஸ் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்தார் என்றது அப்பத்திரிகை. இதற்கு வுட்ஸ் மெளனம் சாதித்தார். ஆனால் செய்தி கேட்ட ரசிகர்கள் கொதித்தெழுந்தார்கள். பத்திரிகைமீது கோபம் கொண்டார்கள். அதற்கு சிலநாள் கழித்து ’யுஎஸ் வீக்லி’ என்கிற பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்த ஜைமி க்ரப்ஸ் என்கிற ஹோட்டல் உதவியாளர் பெரிய குண்டை வீசினார். ’எனக்கும் வுட்ஸுக்கும் இரண்டு வருட பந்தம் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அதற்கு ஆதாரங்களையும் காண்பித்தார். ’டியர், நீ எனக்கு ஒரு நல்லது செய்யவேண்டும். உன் போனில் இருந்து என் பெயரையும் நம்பரையும் எடுத்துவிடு. விஷயம் என் மனைவிக்குத் தெரிந்துவிட்டது.’ என்று அப்பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவ்வளவுதான்; விவகாரம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
 
நிலைமை கைமீறிப்போனதைத் தொடர்ந்து இப்போது தலைகவிழ்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார் வுட்ஸ். ’என் குடும்பத்துக்கு நான் துரோகம் இழைத்துவிட்டேன்’ என்று சொன்னவர் தனக்கு 14 பெண்களுடன் தொடர்பு உண்டு என்கிற உண்மையையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜில்லட், அக்சன்சர் போன்ற கம்பெனிகள் வுட்ஸ்வுடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன. பிரச்னையைச் சமாளிக்க விளையாட்டிலிருந்து தாற்காலிக ஓய்வு பெற்றுள்ளார் வுட்ஸ்.
 
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரபலங்களை அமெரிக்கர்கள் மன்னிப்பதில்லை. பில் கிளிண்டன் சிறந்த உதாரணம். இப்போது டைகர் வுட்ஸ். நிச்சயம் டைகர் வுட்ஸ் கத்தோலிக்க தேவாலயத்திலோ, தொடக்கப் பள்ளியிலோ பணிபுரியவில்லைதான். ஆனாலும் இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருக்கிற ஒருவர் அமெரிக்கக் கலாசாரம் வழங்குகிற கட்டற்ற சுதந்தரத்தைப் பயன்படுத்தி பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம். பிரபலம் என்பதால் பொதுவாழ்க்கைக்கு வருகிற ஒருவர் தன் திறமையால் மட்டுமல்ல, நன்னடைத்தையாலும் உதாரணப் புருஷராகத் திகழவேண்டும். அந்த விஷயத்தில் டைகர் வுட்ஸ் தன் ரசிகர்கள் அத்தனை பேரையும் ஏமாற்றியிருக்கிறார். இனி அவர் என்ன சாதித்தாலும் அது பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்வதாக அமையாது.
 
நன்றி : கல்கி
 
oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |