Tamiloviam
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
 
"நீ விரும்பும் நான்"
கேளுங்கள் கொடுக்கப்படும்!
மனத்தளவே ஆகும் மகிழ்வு!
ஒப்பிடாமை
வெற்றி மற்றாங்கே!
"லூஸ் டாக்"
வாதம் விவாதம்
ஒரு கிராம் இமேஜ்
சுற்றம் பேணில் ஏற்றம் உண்டு!
சொல்லும் பொருளும்
நுணங்கிய கேள்வியர் ஆதல்!
உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!
இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்
பெர்ஸனாலிடியும் பொரிவிளங்காய் உருண்டையும்
தலைமை ஒரு திறமை
அடி சிறிது, ஏற்றம் பெரிது
ஆற்றல் தரும் ஆதிக்கம்
மெய்ப்பாடு படுத்தும் பாடு
அளந்து பேசி ஆளுமை கொள்
"அப்படியே கொட்டுதல் அறிவின்மை"
பகை மூலம் பயன் கொள்
Networking செயல்பாட்டு
சிறப்புப் பார்வை
ஆதிக்கம் கொள்ள அனுமதியோம்!
அனைவரையும் ஆசானாக்கு!
 
  முதல் பக்கம்
பெட்டகம்
"அப்படியே கொட்டுதல் அறிவின்மை"
- எஸ்.கே

கேள்வி. 3

அதிகமாகப் பேசக்கூடாது என்று சொன்னீர்கள், சரி. ஆனால் வெளிப்படையாக என் எண்ணங்களை ஏன் அனைவரும் அறிய பொதுவில் வைக்கக்கூடாது? போர்த்தந்திரங்கள், அரசியல் சூழ்ச்சிகள் போன்றவற்றுக்கு நீங்கள் கூறும் அறிவுரை பொருத்தமாக இருக்கும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் எதிரிகளாகவும், நம்மைக் கவிழ்க்க அனவரதமும் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்ச்சிக்காரர்களாகவும்  பாவித்துக் கொண்டு, பூரண கவசத்துடன் உரையாடுவது சாத்தியமா? மனம்விட்டுப் பேசி, முழுமையாக ஒளி ஊடுருவும் கன்னாடிபோல், தெளிந்த நீர்போல்தான் நான் நானாகவே இவ்வுலகத்துக்கு வெளிக்காண்பிக்க விழைகிறேன். இதில் தவறென்ன இருக்கிறது?


பதில்:

மனிதர்களில் பலருடைய எண்ண ஓட்டம் உங்களுடையதைப் போன்றுதான் இருக்கிறது. அவர்கள் "திறந்த புத்தகமாக"வே இருக்க விரும்புகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதனை அப்படியே (உப்பு, மிளகு கூட தூவாமல்!) உலகின்முன் இறைக்க முனைகிறார்கள். தம் கருத்துக்களை அப்பட்டமாக பறைசாற்றுகிறார்கள். தம் செயல் திட்டங்களையும், பிறரைப் பற்றிய தம் அயிப்பிராயங்களையும் எல்லோர் முன்னிலையிலும் முரசறைவர். இது தன்னிச்சையாக விளையும். மிகச் சுலபமான விஷயம். ஆனால் சொற்களை அளந்து, நிதானமாக, அளவாக வெளிப்படுத்துவதுதான் கடினம். அதற்குத்தான் முயற்சி தேவை.

இவ்வுலகத்தின் அடிப்படை உண்மை ஒன்றினை நாம் எப்போதும் நம் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். இயற்கையில் தானாகக் கிடைக்கும் எப்பொருளும் அவை நம் கைக்குக் கிட்டும் இயற்கை நிலையிலேயே நம்மால் பாவிக்க ஏற்றதாக அமைவதில்லை. அவற்றின் தன்மை நாம் விரும்பும் வண்ணம் அமைய வேண்டுமானால் அவற்றை சில வேதிய மாற்றங்களுக்கும், மற்றும் பல புறமாற்றங்களுக்கும் உட்படுத்த வேண்டும். அதன்பின்தான் அவற்றை நாம் பாவிக்க இயலும். இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் தவிர வைரம் போன்ற உருமாற்றம் செய்ய வேண்டிய பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும். இத்தகைய ஜடப்பொருட்களுக்கே பொருந்தும் இந்த செயல்பாடு மனிதர்களுக்கும் முழுதும் பொருந்தும் இயல்புடையது.

“அப்பட்டமான" உண்மைகளை இந்த உலகம் தாங்காது! “யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்பார்கள். நீங்கள் பாட்டுக்கு மனதில் பட்டதையெல்லாம் இவ்வையமெங்கும் இறைத்துக்கொண்டே சென்றீர்களானால், உங்களை "எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்பும் தீயனாய், நல்லார்க்கும் பொல்லனாய்"த்தான்  நாடு நோக்கும் என்பது திண்ணம்! "உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைத்தால்" உங்கள் கதி என்னவாகும்?

பேசுவது என்பதே பிறர் மனத்துக்கு இதமாய், இசைவாய் அமைவதுதான் சரி, உங்கள் எண்ணங்களை அப்படியே உப்புத்தாள் கொண்டு தேய்ப்பதல்ல. உங்கள் அணுகுமுறை, எண்ணப்பாங்கு, கண்ணோட்டம், முடிவுகள் முதலியவை அடிப்படையில் தவறாயிருக்கும் பட்சத்தில் அதன் வெளிப்பாடு பிறர் மனத்தைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, உங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாய் முடியும். ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு கோணங்கள் இருக்குமல்லவா? அனைவற்றையும் நாம் ஆராந்திருக்கிறோம் என்று தீர்மானமாகக் கொள்ளமுடியாத சூழ்நிலையில், நம் கூற்றுதான் சரி என்று அதனை அப்படியே உரைத்தல் எவ்வாறு தகும்? அதனால் உங்கள் சொற்களை அறிவுசார்ந்த விழிப்புடன் பகுத்துணர்ந்து, அவற்றின் பின் விளைவுகளையும் நன்கு ஆராய்ந்து அதன் பின் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

நம் உரையாடல்கள் நம்மை மட்டும் சார்ந்த செயல்பாடு அல்ல. நாம் ஒன்றை உரைக்கிறோம் என்றால், முதலில் ஒரு எண்ணத்தை மனதில் இருத்தி அதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் ஒரு சொல்வடிவம் கொடுக்கிறோம். பின் அது நம் குரல் மூலம் வெளிவருகிறது. நம் எண்ணங்கள் இவ்வாறு சொல்வடிவம் பெற்று ஓசையாக வெளிவரும்போது, அவை எத்துணை பாங்குடன் வெளிவருகின்றன என்பது நம் சொல்லாட்சியின் தன்மை, சக்தி, திறமை, ஆற்றல் மற்றும் நம் இயலாமைகள், பலவீனங்கள் போன்ற அடிப்படை இயல்புகளைப் பொருத்து அமையும். நான் முன்னமையே விளக்கியுள்ளபடி நம் "மெய்ப்பாடு" வேறு அதன் வேலையைச் செய்யும். இத்தனையும் தாண்டி நம் சொற்களைச் செவி மடுப்பவர்தம் இயல்புகள், நிறைகுறைகள், பின்புலம் ஆகியவற்றைப் பொருத்து அவர்களின் புரிதல் அமையும். அவர்களுடைய கண்ணோட்டம், அதன்பால் எடுக்கப்படும் தீர்வுகள் - போன்றவை அவர்தம் புரிதல் பொருட்டமையும். இத்தனை variables, தடைக்கற்கள், பேதங்கள் ஆகியவற்றைத் தாண்டி நம் பேச்சு நம் எண்ணப்பாங்கை எந்த அளவுக்கு இலக்குக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது ஒரு ஐயப்பாடான விஷயம். இந்த நிலையில் "நான் பேசுவதுதான் சத்தியம், அதனை நான் என்ணியபடி வெளிப்படுத்துவேன், அதனைக் கேட்பது பிறருடைய கடன்" என்பது எப்படி சரியாகும்?

சரி, இப்போது உறுதியாகத் தெரிந்த விஷயம் என்னவென்றால் நாம் உரையாடுவது நமக்குள்ளே மட்டும் அல்ல. அது இன்னொருவருக்குச் சென்றடைவதற்காக. ஆகையால் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் மனத்தில் கொண்டு, “என் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் 'பொட்'டென்று உரைப்பேன். அது பிறரால் எவ்வகையில் புரிந்துகொள்ளப்படும், அது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை" என்கிற வாதம் எவ்வாறு சரியாகும் சொல்லுங்கள்! அது ஒருதலைப்பட்சமான அணுகுமுறை அல்லவா?

இது தவிர, பலர் இன்னொரு தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். நம் எண்ணங்களையும், செயல் திட்டங்களையும், முடிவுகளையும் "உள்ளது உள்ளபடி" உரைத்தல்தான், நியாயம், நேர்மை போன்ற உன்னத குணங்களின் லட்சணம் என்பது பலரின் கோட்பாடு. இதைவிட முட்டாள்தனமான கருத்து வேறொன்று இருக்க முடியாது. இத்தகைய அணுகுமுறையால் நமக்கும் மற்றோருக்கும் பெருத்த தீங்குதான் விளையும். இதனால் நம்மை சமூகம் வெறுத்து ஒதுக்கும். "ஓட்டைவாய்" மனிதரிடம் யாரும் "ஒட்ட" ஆசைப்பட மாட்டார்கள். "வெட்டிவிட"த்தான் எண்ணுவார்கள்.

உண்மை பெரும்பாலும் கசப்பும் அருவருப்பும் கலந்ததாகத்தான் இருக்கும். இதனால் பலர் அதனை நேருக்குநேர் எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆகையால் பிறர் தவிர்க்க நினைப்பதை பிடிவாதமாக அவர்கள் முன் நீங்கள் திணிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். மேலும் இது பிறர் மனத்தைக் காயப்படுத்தும்.  “அப்பட்டமான நேர்மை” என்று நாம் கற்பனை செய்துகொண்டிருப்பது உண்மையில் ஒரு துருப்பிடித்த மொட்டைக் கத்தி. அதைக்கொண்டு நோண்டிநோண்டி புண்களைத்தான் உருவாக்கத்தான் முடியும்.  ஆகையால், பிறர் கேட்க ஆசைப்படும் சொற்களைப் பேசுதல்தான் நேர்மையாகும். இதனை ஸமஸ்கிருதத்தில் “ஹிதவாதா” என்கிறார்கள். இதே கருத்தைத்தான் பல நன்னூல்கள் வலியுறுத்துகின்றன:“சுளிக்கச் சொல்லேல்”
“நொய்ய உரையேல்”
“வெட்டெனப் பேசேல்”

"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்."

"குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்."

ஆர்.கே.நாரயணனின் “மால்குடி நாட்கள்” (Malgudi Days) என்னும் கதையில்  ஒருவர் வெகு சிரமப்பட்டு தன் பெண்ணின் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிலையில் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாகிவிட்ட செய்தி அவருக்கு தபால் மூலம் வருகிறது (பழைய காலம்). அதனைக் கொண்டு சேர்க்க வேண்டிய தபால்காரர்  அந்தக் குடும்பத்தின் நிலைமையை முழுதும் அறிந்தவர். பெண்ணின் தகப்பனாரின் சிரமங்கள் பற்றியும், இந்த செய்தி போய்ச்சேர்ந்தால் திருமணம் தள்ளிப் போகும் என்பதையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் யோசித்து, அக்கடிதத்தை திருமணம்  முடியும்வரை கொடுக்கவேயில்லை. நீங்கள் சொல்லுங்கள், இத்தகைய மனிதாபமான அணுகுமுறை சிறந்ததா, இல்லையா என்று. “புரைதீர்ந்த நன்மை” பயக்கும் தன்மை கொண்டதாகத்தான்  நம்சொற்களும் செயலும் அமையவேண்டும். “வரட்டிழுப்பு” வேலைக்காகாது!

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. நம் செயல்திட்டங்களையும் முடிவுகளையும் வெளிப்படையாகத் தெரியப்படுத்துவது, நம் கையிலிருக்கும் எல்லா சீட்டுக்களையும் முகம்தெரிய மேஜைமேல் பரப்பிவைத்துவிட்டு, பின் சீட்டு விளையாடுவது போன்றதாகும்! பிறர் எப்போதும் நம்கைவசம் பல "ஏஸ்கள்" குடிகொண்டிருப்பதாகக் கருதவேண்டும். அதுபோன்ற மெய்ப்பாட்டை நாம் வெளிப்படுத்தவேண்டும். அப்போதுதான் நம் ஆளுமை வெளிப்படும். நம்மிடம் பிறர் மரியாதை கலந்த பயத்துடன் அணுகுவர். இல்லையெனில் நம்மிடம் சலிப்புக் கொண்டு, நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். படித்து முடித்த பழைய பேப்பராக நாம் ஆகிவிடுவோம். சிவகாசியில் வெடிமருந்து சுற்றக்கூட நாம் பயன்பட மாட்டோம்!

ஒரு வெற்றித்தலைவனுக்கு அமைய வேண்டிய முக்கியமான குணநலன், அவனுடைய எண்ண ஓட்டங்கள், நுட்பங்கள், செயல்திட்டங்கள், தீர்வுகள் போன்றவை கடைசி நிமிஷம் வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவையாக இருக்க வேண்டும். இதன் முக்கியத்துவம் கருதி என் கட்டுரைத் தொடரில் இக்கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

ஒரு செயலை முடிக்க எண்ணி, அதற்கான நாம் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறும்போது, நாம் செல்லும் திசையையும் நம் நடவடிக்கைகளையும், உபாயங்களையும் (strategies) பிறர் கணித்துவிடாவண்ணம் அவர்கள் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். இதனை "red herring", "smokescreen" என்று அழைப்பார்கள். உங்கள் எதிரிகளும், பொறாமை கொண்டவர்களும் உங்கள் திட்டங்களை அறியவேண்டி ஒரு "திக்குத் தெரியாத காட்டில்" அலையும்போது, நீங்கள் வெற்றி இலக்கை எட்டிவிட வேண்டும்!

இவ்வுலகம் நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை எடைபோடுவதில்லை. நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான சாதனைகள் படைத்திருக்கிறீர்கள், எந்த அளவுக்கு ஒரு புதிராக இருக்கிறீர்கள், எவ்வளவுதூரம் பிறர் மனத்தில் பயம் கலந்த மரியாதை உணர்வை தோற்றுவித்திருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் ஆளுமையின் அளவுகோல்!

மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் அறிந்ததாகக் கருதும் நீங்கள் உண்மையில் நீங்களல்ல. பிறர் கண்ணுக்குத் தெரியும் நீங்கள் யார் என்பதுதான் உங்களுடைய அசல் வடிவம்!

சாமர்த்தியமாகப் பிழைச்சுக்கோங்க!

[உங்கள் கேள்விகளை skichu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்]

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |