தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : கோடிட்ட இடங்கள்
- சித்ரன்

[ பாகம் : 1 ]

கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து....

நான் கவிதைகள் எழுதுவதுண்டு. என் ஆரம்பநிலைக் கவிதைகள் வழக்கம்போல்தான் இருந்தன. இயற்கையைப் பற்றியும் தன்னம்பிக்கையைப் பற்றியும்தான் அவைகள் அதிகம் விளக்கம் தந்தன. எனக்கே சலித்து இவைகளை ஒதுக்கி நான் முதன் முதலாய் எழுதின கவிதை அம்மாவைப் பற்றித்தான். கல்லூரி ஆண்டு மலரில் அது பிரசுரமானது. அந்தக் கவிதைக்குத்தான் எத்தனை பாராட்டுக்கள்! நானும் ஒரு கவிதையை உணர்ந்தது அந்தப் படைப்பில்தான். எப்படி எழுதினாய்? அத்தனை உணர்வாய் அத்தனை நிஜமாய் எப்படி முடிந்தது என்றார்கள். நான் சொன்னேன். அதில் ஒரு வரிகூட என் கற்பனை அல்ல. அத்தனையும் நிஜம். காரணம் என் அம்மா மொத்தமாய் ஒரு கவிதைத் தொகுப்புதான். இந்தக் கவிதை அதில் ஒரு சாம்பிள் என்றேன்.


கோவை ரயில்நிலையம்.

அரை வட்ட வடிவக் கவுண்டருக்குள்ளிருந்து விசிறப்பட்ட ப்ளாட்பாரம் டிக்கெட்டைப் பொறுக்கிக்கொண்டு நகர்ந்தான் சத்யா. நீலகிரி எக்ஸ்பிரஸ் இரண்டாவது ப்ளாட்பாரம் என்று போர்டில் போட்டிருந்தது. அவனுக்கு முன்னதாக கிருஷ்ணா அதற்குள்ளாக பெட்டி படுக்கையுடன் வந்திறங்கியிருப்பானா என்று யோசித்தான். வண்டி கிளம்ப இன்னும் நிறைய சமயமிருக்கிறது.

தலையிலும் தோளிலும் லக்கேஜூகளைச் சுமந்தபடி நகர்ந்த குடும்பங்களுக்கு நடுவே புகுந்து நடந்தான். ப்ளாட்பாரத்துக்கு வழிநடத்தும் பாதையைப் பிடித்து பின் படிகளில் ஏறினான். வண்டி எண், வண்டியின் பெயர், ப்ளாட்பாரம், வருகிற அல்லது போகிற ஊர்ப்பெயர்களை பல மொழிகள் கலந்து துப்பிவிட்டு ஒலிபெருக்கி மெளனமாக, அடுத்த இரைச்சல் பொறுப்பை தலைக்கு மேலிருந்த டி.வி பெட்டிகள் எடுத்துக்கொண்டன.  ஈர தோசை மாவையும் முன்னணி நாளிதழ்களையும் விற்க முனைந்த டி.வி-யின் விளம்பரக் குரல்கள் பயணிகளின் கவனத்துக்குப் போட்டி போட்டன.

ப்ளாட்பாரத்தை வந்தடைந்து சாயா, காபி, புத்தக விற்பனைக் கடைகளைத் தாண்டி நடந்தான். நீலகிரி எக்ஸ்பிரஸில் இணைக்கப்படவேண்டிய பெட்டிகள் அடுத்த தண்டவானத்தில் காத்திருந்தன. வண்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவேண்டும். தங்கள் உடைமைகளின் மேல் ஒரு கண்ணையும், தூரத்து சிக்னல் விளக்குகளில் ஒரு கண்ணையையும் வைத்துக்கொண்டு ஜனங்கள் காத்திருந்தார்கள். குளிர்ந்த பிஸ்லெரி பாட்டில்கள் சூடாக விற்பனையாயின.

ஒரு பெரிய கூவலை உதிர்த்துவிட்டு பக்கத்துப் ப்ளாட்பாரத்தில் என்ஜின் ஒன்று அதிர்ந்து கடந்தது. தண்டவாளத்தில் கிரீச்சிட்டு விரைந்த சக்கரங்களை பிரயாணக் குழந்தைகள் காதுகள் பொத்தி விரிந்த விழிகளுடன் பார்த்தார்கள்.

கிருஷ்ணாவைத் தேடி சத்யாவின் கண்கள் கூட்டத்துக்கு நடுவே புதைந்தது. அவன் எங்கே நின்றிருப்பான் என்று தெரியவில்லை. எந்தக் கோச் என்று கேட்டுவைத்திருந்தால் நேராக அங்கே போயிருக்கலாம். கேட்காமல் விட்டுவிட்டான். பரவாயில்லை. அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. கண்டுபிடித்துவிடலாம். மேலும் வழியணுப்ப வருகிற சில பேரில் யாராவது ஒருத்தன் எங்கேயாவது கண்ணில் படாமலா போய்விடுவான்?

கிருஷ்ணாவை சென்னை ஏர்போர்ட் வரை போய் வழியனுப்ப அவனுக்கு ஆசையாகத்தான் இருந்தது. என்ன பண்ணுவது? நினைத்தபடி போக முடியவில்லை. போயிருந்தால் அவனும் அதற்காக சந்தோஷப்பட்டிருப்பான்.

ஓரமாக எங்கேயாவது நின்று பார்க்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் முதுகில் யாரோ அறைந்தார்கள். திரும்பாமலே அது கிருஷ்ணாதான் என்று அவனுக்குத் தெரிந்துபோயிற்று. மிதமான வலியைப் பொறுத்துக்கொண்டு அவன் திரும்பினான்.

அவன்தான்.

"என்னடா பராக்குப் பாத்துட்டு திரியறே?!' என்றான்.

முழங்கால் வரையிலான ட்ரெளசரும், வட்டக் கழுத்து பனியனும் ஆக பிரயாண கெட்டப்பில் நின்றிருந்தான் கிருஷ்ணா. ட்ரெளசர் பாக்கெட்டில் துருத்தித் தெரிகிற சிகரெட் பாக்கெட்டை அவன் மறைக்க முயன்றிருக்கவில்லை. எப்போதும் போல் மூக்குக் கண்ணாடி வழியே ஒளிர்கிற பெரிய கண்களால் சிரித்தான்.

"ஒரு பொறம்போக்கை வழியணுப்ப வந்தேன்." என்றான் சத்யா. அவன் மீண்டும் சிரித்தான்.

"இந்த மாதிரி முதுகுல அடிக்காதன்னு பல தடவை உங்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணியிருக்கேன். நீ எப்ப திருந்துவே?"

"அடுத்த ஜென்மத்துல!.. சரி.. கோச்சுக்காத மச்சி.. உங்கம்மா அப்பவே வந்துட்டாங்க தெரியுமா?. நீ ஏண்டா லேட்டு? நான் உனக்காக வெயிட்டிங்." என்று சத்யாவைக் கூட்டிக்கொண்டு நடந்தான்.

"அப்பறம் டேய் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்கூட சொல்ல வேண்டியிருக்கு. ஆனா அது சஸ்பென்ஸ்!"

"சொல்லுடா என்ன?"

"இப்ப சொல்ல மாட்டேன். நான் கிளம்பறதுக்குள்ள நீ மறக்காம எங்கிட்ட அதைக் கேட்டுக்க." என்றான்.

"ஆரம்பிச்சிட்டியா உன் புதிரை" என்றான் சத்யா.

"இல்ல மச்சி! இது ஸீரியஸ் மேட்டர். ஆனா இன்டரஸ்டிங். கேட்டா ஆச்சரியப்படுவே! சரி அத விடு.. இங்க என்னை வழியணுப்ப நீ மட்டுமில்ல, ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கு. அப்பா அம்மா, தங்கச்சி மட்டும் எங்கூடவே மீனம்பாக்கம் ஏர்போர்ட் வரை வராங்க. மத்தவங்க இங்கயே கழண்டுக்கிறாங்க. எல்லாரும் அங்க வெயிட்டிங்" என்றான் என்று ஜனத்திரளுக்கு நடுவே ஓரிடத்தைக் காட்டினான்.

"எல்லாரையும் அங்க விட்டுட்டு நீ இங்க எதுக்கு சுத்திட்டு இருக்க?"

அதற்கு அவன் பதில் சொல்லாமல் சில நொடிகள் மெளனமாயிருந்தான். மிக மெல்லிய சோகங்கலந்த புன்னகையொன்று அவனிடமிருந்து வெளிப்படுத்திவிட்டுச் சொன்னான்.

"இல்லடா நான் சிங்கப்பூர் போறனில்ல, நாலஞ்சு நாளா என்னைச்சுத்தி ஒரே கூட்டம். கொஞ்சம்கூட ப்ரைவஸி கிடைக்கல. இதோ இங்க ரயில்வே ஸ்டேஷன் வர்ர வரைக்கும் அப்படித்தான். அதான் படிக்க புக்ஸ் வாங்கிட்டு வந்துர்றேன்னுட்டு நைஸா நழுவி வந்துட்டேன். ஆனா பாரு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. பணம் சம்பாதிக்கலாம்னு வெளிநாடு போறேன். எல்லாரையும் விட்டுட்டு. திரும்பி வர ஒரு வருஷம் ஆகலாம். ரஞ்சனி ரொம்ப ஃபீல் பண்ணி அழுவறா.. அவளும் ஸ்டேஷனுக்கு வந்திருக்கா. என்னால சமாதானப்படுத்த முடியலை.  சரி.. இதோ இந்த ஜனங்களுக்கு நடுவில தனியா அஞ்சு நிமிஷம்  உலாத்திட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். படுபாவி நீ வந்து கெடுத்தே"

"கிருஷ்! இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலை. நான் வெயிட் பண்றேன் நீ போயிட்டு வா!."

"சே! சும்மா சொன்னேன்டா. இட்ஸ் ஆல்ரைட்! வா போலாம்." சத்யாவின் தோளில் கை போட்டுக் கொண்டு அவனை வழியணுப்ப வந்தவர்கள் நின்றிருந்த திசை நோக்கி நடந்தான்.

"நீ போறதுல எனக்குக்கூட கொஞ்சம் வருத்தம் கலந்த சந்தோஷம்தான். சரி எங்கிட்ட ஏதோ முக்கியமா சொல்லணும்னியே..."

"பறக்காத.. அப்பறமா சொல்றேன்..." என்றான். "தோ பாரு வினோத், டகால்டி ரெண்டு பேரும் வந்துட்டானுக.. என்னை வழியனுப்ப அலைகடலென கூட்டம் திரண்டு வந்திருக்கு. நான் கிளம்பறதுல எத்தன பேருக்கு சந்தோஷம் பாரு."

கிருஷ்ணா ஹாய் ஹாய் என்று விளித்த குரல்களுக்கு நடுவே போய் ஐக்கியமானான். அவன் சொன்னபடி அங்கே நிறைய வந்திருந்தார்கள். கிருஷ்ணாவின் அம்மா, அப்பா, தங்கை தவிர, வேலை செய்கிற ட்ரூ ஃப்யூஷன் அட்வர்ஸை஢ங் கம்பெனி ஆட்களில் முக்கால்வாசிப்பேர், அப்புறம் ப்ரகாஷ், டைம்ஸ் பாலா, ராசி க்ராஃபிக்ஸ் சுபாஷிணி, கிருத்திகா, ப்ருந்தா, சுப்ரியா, மலர், ஜெயஸ்ரீ, கிருஷ்ணாவின் ஆள் ரஞ்சனி, வேணு அங்கிள் மற்றும் சத்யாவின் அம்மா. அப்புறம் இப்போது வந்து சேர்ந்து கொண்ட வினோத், டகால்டி என்றழைக்கப்படுகிற தன்ராஜ்.. மற்றும் சில அறிமுகமில்லாத கிருஷ்ணாவின் ஓரிரு நண்பர்கள்.

சத்யா பொதுவாய் எல்லாரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவர்களுடன் கலந்து கொண்டான். அவன் அம்மாவைப் பார்த்து "நீ யார் கூட வந்தே.." என்றான்.

"ரஞ்சனி கூட ஆட்டோ ல"

கிருஷ்ணா எப்போதும் மாறாத அவன் ட்ரேட் மார்க் சிரிப்புடன் எல்லோருடனும் கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டான். அவனை கிண்டலும், கேலியுமாக சீண்டி உற்சாகமாய் எழுந்த குரல்கள் ரயில் நிலைய இரைச்சலில் கலந்தது. தன் மகன் இத்தனை நண்பர்கள் வைத்திருக்கிறானே என்ற பெருமிதம் அவன் அப்பா முகத்தில் சிறு புன்னகையாய் நிலைத்திருந்தது. சத்யாவுக்கும்கூட அவர் ஆச்சரியம் தொற்றிக் கொண்டுவிட்டதுதான். கிருஷ்ணா அப்படிப்பட்ட ஆள்தான். யாருடனும் நெருப்பு மாதிரி உடனே ஒட்டிக்கொண்டுவிடுவான். ரொம்ப ஃப்ரீயாக பழகும் டைப். குறிப்பாய் பெண்களிடம்.

சத்யாவுக்கு முதன் முதலாய் அவனுடன் ஏற்பட்ட அறிமுகம் நிழலாடுகிறது. ட்ரூ ஃப்யூஷன் அட்வர்டைஸிங்கில் வேலைக்குச் சேர்ந்த முதல்நாள் கம்பெனி வரவேற்பரை ஸோபாவில் உட்கார்ந்திருக்கிறான். எதிரே கரப்ஷன் என்ற டைட்டிலில் வரையப்பட்டிருந்த மாடர்ன் ஆர்ட்டை வெறித்து ரசித்துக்கொண்டிருந்தபோது அதை மறைத்துக்கொண்டு வந்து
நின்றான். "ஹலோ மிஸ்டர் நியூ அப்பாயிண்ட்மெண்ட்" என்று கை நீட்டினான். "ஐ அம் கிருஷ்ணா.. கால் மி கிருஷ்! ஆனா இந்தக் கம்பெனில என்ன பண்ணிட்டிருக்கேன்னு கேக்காத.."

அவன் தயங்கி கை நீட்டினான். கிருஷ்ணா சிரித்துவிட்டு நல்ல உறுதியாய் கைகுலுக்கினான். புதிதாய் அறிமுகமான ஒருத்தனுடன் இத்தனை சகஜமாய் பேச முடியுமா?. சத்யா அவனை வியந்து உள்ளே போனான். அதைவிட வியப்பு மேலிடுகிற சம்பவம் அன்றைய காலை 11.00 மணிக்கே நடந்தது. முதல் விளம்பர அசைண்ட்மெண்ட்டை எப்படி லே-அவுட் பண்ணலாமென்று அவன் மண்டையைப் பிய்த்தபடி யோசித்துக்கொண்டிருந்த போது பின்னாலிருந்து முதுகில் பளார் என்று அறை விழுந்தது. அவன் அதிர்ச்சியடைந்து திரும்பினான். பின்னால் அந்த கிருஷ்ணா நின்றிருக்கிறான். சத்யா வலித்த முதுகை பரிதாபமாய் சொறிந்து நிற்க, அவனது அதிர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிருஷ்ணா மிகக் கூலாக "டேய்.. மச்சி, வெளிய டீ சாப்பிடப் போறேன் வரியா?" என்கிறான். சத்யா ஒரு நிமிடம் புரியாமல் நின்றிருந்தான். எப்படி என் அனுமதியில்லாமல் இத்தனை உரிமை எடுத்துக்கொள்கிறான் என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அவனைத் தள்ளிக் கொண்டு நடந்தான். ஆனாலும் அவனின் அந்த நடவடிக்கை புது இடத்தின் முதல்நாள் டென்ஷனை நிச்சயம் குறைத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுடனும் ஜாலியாக பிற்பாடு அவன் மூலம் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.

அதற்கு மேல் அவனிடம் சம்பிரதாயம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை சத்யாவுக்குத் தோன்றிவிட்டது. ஆயிரத்தில் ஒருத்தன்தான் இப்படியிருப்பான். இப்படியொரு நண்பன் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று பின்னாளில் அவன் நிறைய தடவைகள் நினைத்துப்பார்த்த சம்பவங்களுண்டு. ரொம்ப இயல்பாய் இருப்பான். நன்றாய் அதிர்ந்து சிரிப்பான். ஆஃபிஸ் பாய் ஆறுமுகத்துடன் அவன் பேசுவதை உற்றுக் கவனித்தாலே அவன் எல்லோரிடமும் பழகும் பாங்கு தெரிந்து போகும். எல்லோருக்கும் மிகப் பிரியமான ஒரு பையன் அவன்.

இதோ இன்றுவரை முதுகில் அவன் கொடுக்கிற அந்த அறை தொடர்ந்து வருகிறது. சத்யாவால் மட்டுமல்ல, எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட அறை. ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு வலிப்பதில்லை. சுபாஷிணி முதுகில்கூட இப்படித்தான் உரிமையாய் அறைவான். ஆனால் மெதுவாய். அவன் நட்புக்குக் கொடுக்கிற விலையாக அந்த அறையை எத்தனை தடவை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது அவனுக்கு.

பயணிகளைக் கவனிக்கச் சொல்லி, நீலகிரி எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக்கொண்டிருப்பதாக ஒருபெருக்கியில் பெண்குரல் அறிவித்துவிட்டு அடங்கியது. கிருஷ்ணா குடும்பம் உடைமைகளை ஒரு முறை ஓரக்கண்ணால் சரிபார்த்துக்கொண்டு ரயில் வரும் திசையில் பார்வையை ஓட்டினார்கள். அதிக பட்சம் இன்னுமொரு பதினைந்து நிமிடத்தில் கிருஷ்ணா இவ்விடம்விட்டுக் கிளம்பி விடுவான். அவன் என்னமோ முக்கியமான விஷயம் சொல்லவேண்டும் என்று சொன்னானே. என்னவாக இருக்கும்? அவன் சொன்னதை மனதில் ரீவைண்ட் செய்து பார்க்கும்போது லேசாய் ஒரு ஆர்வம் தலைதூக்கியது. ஒரு வேளை என் வேலை பற்றி? அல்லது என் சம்பள உயர்வு பற்றி தேவ் எதாவது அவனிடம் சொல்லியிருக்கலாம்! இல்லையென்றால், சிங்கப்பூர் போவதற்கு முன்னால் எதற்கும் இருக்கட்டும் என்று யாருக்கும் தெரியாமல் ரஞ்சனிக்கு திருட்டுத் தாலி கட்டிவிட்டானா? ஆச்சரியப்படுமளவு என்ன செய்தி அது? ஏன்தான் எப்போது பார்த்தாலும் புதிர் போடுகிறானோ.. படுவாவி! எப்போதுமே அவன் அப்படித்தான். அவனிடமிருந்து ஒரு விஷயத்தை முழுசாகச் கேட்டுமுடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சத்யா யோசித்துக்கொண்டே அவனிருந்த திசையைப் பார்த்தபோது.. சத்யாவின் அம்மாவுடன் அவன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையைப்பிடித்து அம்மா என்னவோ சொல்வதும் அதற்கு அவன் தலையாட்டுவதும் தெரிந்தது.
 
அப்புறம் அவன் மெல்ல நகர்ந்து எல்லோரிடமிருந்தும் தள்ளி நின்றிருந்த ரஞ்சனியிடம் போய் கிசுகிசுப்பாய் என்னவோ பேச ஆரம்பித்தான். ரஞ்சனி கர்சீப்பால் லேசாய் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சத்யாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது. கிருஷ்ணாவின் மேல் லேசாகக் கோபம்கூட வந்தது. ஒரு அழகான பெண்ணை இப்படி அம்போ என்று தவிக்கவிட்டுப் போவதா?

நீலகிரி நிதானமாய் வந்து பெருமூச்சிட்டு நின்றது. ஓரிரு நிமிடங்களில் பக்கத்துத் தண்டவாளத்தில் காத்திருந்த பெட்டிகளை ஷண்டிங் இன்ஜின் இழுத்து வந்து எக்ஸ்பிரஸோடு கோர்த்தது. கோச்சில் ஒட்டியிருந்த ரிஸர்வேஷன் சார்ட்டில் தத்தம் பெயர் தேட பயணிகள் ரயிலை அணுகினார்கள். கிருஷ்ணாவின் அப்பாவும் இதர நண்பர்களும் அந்த மெகா சூட்கேஸை ரயிலுக்குள் திணிக்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்ள... தானும் ஏதாவது உதவலாமா என்று சத்யா யோசிக்கும்போது கிருஷ்ணா அவனை நோக்கி வந்தான். மற்றவர்களிடம் "ஒரு நிமிஷம்... தோ வந்துர்றேன்." என்று மறுபடி அவன் தோளில் கைபோட்டு தள்ளிக்கொண்டு போனான்.

"டேய்.. சத்யா.. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னேன்ல!.." என்றான்.

"நான் அதுக்குத்தான் ரொம்ப நேரமா வெயிட்டிங்"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒண்ணு ரெண்டு கேள்வி"

"ஏண்டா படுத்தறே? சொல்ல வந்ததை நேரா சொல்லித்தொலை!" என்றான் சத்யா கடுப்பாய்.

அவன் ஹாஹா என்று சிரித்துவிட்டு.. "சரி.. நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா? இல்ல பண்ணிட்டு இருக்கியா?" என்றான். அவன் அவனைக் குழப்பமாய்ப் பார்த்தான்.

"ஏதாவது காதல் அனுபவம், 'இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது' ன்னு பாட்டுப்பாடற மாதிரி.. படபடன்னு நெஞ்சுக்குள்ள புறா, பட்டாம்பூச்சியெல்லாம் துடிக்கிற மாதிரி... இல்லைன்னா மனசுக்குள்ள ஒரு பெரிய அலை, இல்ல மழை, குளிர் அப்பறம்..."

எதற்கு கிளம்புகிற நேரத்தில் உளறிக்கொண்டிருக்கிறான் என்று சத்யாவுக்கு யோசனை ஓடியது. "என்னடா ஆச்சு உனக்கு?" என்றான்.

"கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா"

"அப்படியெதும் இருந்தாதான் நான் உங்கிட்ட சொல்லியிருப்பனே..! என்ன விஷயம் சுத்தி வளைக்காம சொல்லு."

அவன் முகத்தைப்பார்த்தால் ஏதோ பெரிய விஷயத்தை மனசுக்குள் மறைத்து வைத்துக்கொண்டிருப்பவனைப் போல் இருந்தது. கிருஷ்ணா பதில் சொல்லாமல் கம்பார்ட்மெண்ட் ஜன்னலோரம் நிற்கிற ரஞ்சனியைப் பார்த்து ஒரு தடவை கண்ணடித்துச் சிரித்தான். அவள் முகத்தில் லேசாய் வெட்கப் புன்னகையொன்று உதித்து மறைந்தது.

"டேய் உன் ரொமான்ஸை ரெண்டு நிமிஷம் தள்ளி வெச்சுட்டு மேட்டர சொல்லிருடா கண்ணா" சத்யாவுக்கு பொறுமையிழந்துவிட்டது.

"பாம்" என்று ரயில் ஹார்ன் அடித்து கிளம்பப் போவதை எச்சரித்தது. அவன் அப்பா ஜன்னலிலிருந்து அவனை ஏறிக்கோ என்று சைகையால் அழைத்தார்.

"சரி சொல்லிர்ரேன். மச்சி உன்னை ஒரு பொண்ணு ரொம்ப ஸீரியஸா லவ் பண்ணிட்டு இருக்கு. அது உனக்குத் தெரியுமா?" என்றான். சத்யாவுக்கு அவன் சொன்னதன் தீவிரம் கொஞ்சம் லேட்டாய் உறைத்து ஜிர் என்று பாதத்திலிருந்து உச்சந்தலைக்கு ஒரு இனிய அதிர்வு நேர்கோட்டில் ஓடியது.

"ஏய் என்னடா? விளையாடறியா?!!!" என்றான் நம்பிக்கையில்லாமல். கிருஷ்ணா அவன் முகத்தில் பரபரவென்று ஓடிய உணர்வுகளை உற்றுப் பார்த்தான்.

"விளையாடலை. நிஜமாத்தாண்டா!."

அந்த சூழ்நிலைக்கு ரீரெகார்டிங் மாதிரி ஸ்பீக்கரில் டிங் என்று மணி அடித்து தொடர்ந்து ரயில் புறப்படப்போவது அறிவிக்கப்பட்டது.

"யார்ரா?" என்றான் சத்யா குழப்பம் கலந்த ஆர்வத்துடன்.

"தோ பார்ரா!!.. உனக்கு புல்லரிச்சுப் போச்சு! என்ன? ஜிவ்வுன்னு பறக்கற ஃபீலிங் வருதா?" என்று கப கபவென சிரித்தான். "ஆனா அது யார்னு நான் சொல்ல மாட்டேன் சத்யா. சஸ்பென்ஸ். அது உனக்கே கூடிய சீக்கிரம் தெரியவரும். அதுவரைக்கும் இதே ஃபீலிங் மெயின்டெய்ன் பண்ணு. ஓகேவா? ஹேவ் எ க்ரேட் டைம். வண்டி கிளம்பப் போகுது வர்ட்டா.!

அவன் எல்லோரிடமும் கைலுக்கி, டாட்டா காட்டி விடைபெற்றுவிட்டு ஓடிப்போய் S3 பெட்டியில் ஏறிக்கொண்டான். சிக்னல் விழுந்து ரயில் ஓரிரு விநாடிகளில் மெல்ல நகர ஆரம்பித்தது. ஜன்னலில் கிருஷ்ணாவின் முகம் தெரிந்தது. மீண்டும் எல்லோருக்கும் டாட்டா காட்ட வெளியே நீட்டின கையால் அப்படியே ரஞ்சனியின் கையைப்பிடித்து லேசாய் அழுத்திவிடுவதைப் சத்யா பார்த்தான். அவன் உடம்பில் ஊடுறுவிய பரபரப்பு நட்சத்திரங்களோடு கிருஷ்ணாவைப் பார்க்க அவனும் கூட்டத்தினிடையே இவனைப் பார்த்து கட்டைவிரல் உயர்த்திக்காட்டினான். சத்யா கண்களால் அவனிடம் மறுபடி 'யார்ரா?' என்று கேட்டான். பதிலுக்கு அவனிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது.

ரயில் நகர்ந்து வேகமெடுத்து அதன் பின்புற X கண்ணிலிருந்து மறையும்வரை சத்யா ஸ்தம்பித்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 2 ]

கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து....

அம்மாவுடன் கோவிலுக்குப் போவதே ஒரு அனுபவம்தான். அம்மா சாமி கும்பிடுகிற அழகு. அந்த கோவில் மணியை அடிக்கிற நிதானம். கற்பூரம் கொளுத்தி வாசனையை முகத்தில் கைகளால் ஒற்றுகிற பாங்கு. அத்தனையும் ரசனைக்குரியதாகவே இருக்கும். நான் அங்கே கடவுளை விடவும் அம்மாவையே அதிகம் கவனிப்பேன். ஒரு சம்பிரதாயமாகத்தான் அந்தப் படியில் அமர்ந்தோம். எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று "அதோ அங்க பாருடா.. அந்தப் பொண்ணு மாதிரிதான் உனக்கு மனைவி அமையணும். எவ்வளவு புத்திசாலியா அழகா தெரியறா.." என்றாள். நான் அம்மா காட்டின பெண்ணை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போனேன். அது ரஞ்சனிதான். நான் காதலித்துக்கொண்டிருக்கும் அதே ரஞ்சனிதான். இன்னும் அது யாருக்கும் வெளிப்படாத ரகசியக் காதலாய் இருந்தது. அதற்குள் எப்படி என் மனதிற்குள் இருந்ததை அம்மாவால் சொல்ல முடிந்தது? தெரிந்து சொன்னாளா? தெரியாமல் சொன்னாளா? அம்மா என்றாலே ஆச்சரியங்கள்தானோ?


'மச்சி உன்னை ஒரு பொண்ணு ரொம்ப ஸீரியஸா லவ் பண்ணிட்டு இருக்கு'

கிருஷ்ணா காற்றுவாக்கில் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ரீய்ங்ங் என்று அவன் மனதில் ஓட்டை போட்டுத் துளைக்க ஆரம்பித்துவிட்டன. அது ஒரு ரயில் இன்ஜின் மாதிரி இரைச்சலாய் தடக் தடக் என்று மனத் தண்டவாளத்தில் திரும்பத் திரும்ப ஓடியது. அவன் விளையாட்டுக்குச் சொன்னானா? இல்லை நிஜமாகவா? நிஜமாகவே என்றால் அதை ஏன் அவன் கிளம்புகிற நேரத்தில் இப்படி அறிவித்துவிட்டுப் போகவேண்டும்? மடையன்.

"ஹலோ, என்ன ஸ்டில்லா நின்னுட்டிருக்க? வீட்டுக்குக் கிளம்பற ஐடியா இல்லையா?" என்று சுபாஷினி பின்னாலிருந்து நிமிண்டினாள். சத்யா சுய உணர்வுக்கு மீண்டுவந்து அவள் முகத்தை உற்றுப்பார்த்தான்.

"என்ன அப்படி முழுங்கற மாதிரி பாக்கற?" என்றாள்.

"அய்யய்யோ, ஒண்ணுமில்ல, ஏதோ யோசனை" என்று அவர்களுடன் நடந்தான். 'நீ என்னை லவ் பண்றியா என்ன?' என்று அவளிடம் பளிச்சென்று கேட்கலாமா என்று அவனுக்கு அற்பமாய் யோசனை தோன்றியது. கேட்டால் அதைவிட கிறுக்குத்தனமான கேள்வி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சுபாஷினிக்கு ஏற்கெனவே ஒரு ஆள் இருப்பது தெரியும்.

எல்லோரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். நேரமாகிவிட்டது என்று ப்ரகாஷ், டகால்டி என்று ஒவ்வொருராக விடைபெற்றுக் கிளம்பிவிட்டார்கள். சத்யாவின் அம்மா அவனுக்கு முன்னாலேயே ரஞ்சனியுடன் போயிருந்தாள். சுபாஷிணி, கிருத்திகா, ப்ருந்தா, சுப்ரியா, மலர், ஜெயஸ்ரீ, ரஞ்சனி எல்லோரும் கும்பலாய் யாருக்கோ காத்திருக்க, ரஞ்சனி அவனைப்பார்த்து சோகமாய் புன்னகைத்தாள். அவளுக்கு ஏதும் ஆறுதல் சொல்வதா என்று அவனுக்குத் தெரியவில்லை.  அவன் அவர்கள் எல்லோரையும் ஓரக்கண்ணால் மெதுவாய் ஏறிட்டான். இவர்களில் யாரையோதான் கிருஷ்ணா சொன்னானா? குறைந்தபட்சம் அந்தப் பெண்ணின் பேரைக்கூடச் சொல்லாமல்...ச்சே! போயே போய்விட்டான். அவன் சொன்னதை ஸீரியஸாய் எடுத்துக்கொள்வதா? நான் அவளை எங்கே தேடுவது? இது என்ன பெரிய அவஸ்தையாய் போய்விட்டது?

இரவாகிவிட்டதால் வேணு அங்கிள் பெண்கள் எல்லாரையும் காரில் அவரவர் வீட்டில் ட்ராப் பண்ணுவதாகச் சொல்லியிருக்கிறாராம். அது சரி. சத்யாவின் அம்மா, அவன் ஸ்டேண்டிலிருந்து பைக்கை எடுத்து வர ஸ்டேஷன் கேட்டருகில் காத்திருந்தாள். 'சரி அம்மாவைக் கூட்டிக்கொண்டு தானும் கிளம்ப வேண்டியதுதான்' என்று நினைத்தான். "ஓகே நாளைக்குப் பாக்கலாம்" என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு டூவீலர் ஸ்டேண்ட் நோக்கி நடந்தான்.

முதன் முதலாய் வாழ்க்கையில் ஏதோ ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு, அவள் சத்யாவை லவ் பண்ணுவது பற்றி கிருஷ்ணா ஒரு செய்தியாய் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். திரும்பத் திரும்ப, அதை நம்பவேண்டும் என்று உடலின் அத்தனை செல்களும் முடிவு செய்துவிட்டதுபோல் தோன்றியது. அதற்குள்ளாகவே என்னென்னவோ ரசாயன மாற்றங்கள் அவனுக்குள் நடந்து முடிந்திருந்தது. நிஜமாகவே அவனுக்குத் தரையில் தன் கால்கள் பாவவில்லையோ என்று சந்தேகமாயிருந்தது. ஒரு மணி நேரத்தில் வாழ்கையே தடம் புரண்டுவிட்டது. "டேய் கிருஷ்ணா... யு டிஸ்டர்ப்ட் மி டா" என்று மனசுக்குள் கத்தினான். இந்நேரம் அவன் போன ட்ரெயின் வடகோவை எல்லாம் தாண்டி வேகமெடுத்திருக்கும். அவ்வளவுதான்! இனி அவன் ஒரு வருஷம் கழித்துத்தான் திரும்பி வருவான். அவன் நடுவில் ஏதாவது போன் பண்ணினால் கிடைக்கிற குறைந்த அவகாசத்தில் இது பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. கேட்டாலும் சொல்வானா என்று சந்தேகமாயிருந்தது. அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நாளைக்கு நடக்கும் என்று தெரியாதே.

அவள் யாரென்று தானாகவே உனக்குத் தெரியவரும் என்று அவனே சொன்னானே. அப்படியென்றால் நான் காத்திருப்பதா? என்னில் சாரலைத் தெளித்துவிட்டுப் போகப் போகிற அந்த மேகம் எப்போது வந்து பொழியப்போகிறது? உடனேயா? நிறைய சமயம் எடுத்துக்கொள்ளுமா? கிருஷ்ணா எப்போதுமே இப்படித்தான். அவன் பழகுகிற எல்லோரிடமும் இது மாதிரியேதான் சின்ன சின்ன சஸ்பென்ஸ் வைத்து நிறைய விஷயங்கள் செய்வான் அல்லது சொல்வான். நிறைய பேருக்கு அது பிடித்தே இருந்தது. ஆனாலும் இந்த மேட்டரில் கொஞ்சம் ஓவர்தான். மற்றவை வெண் திரையில் காண்க என்பது மாதிரி பொசுக்கென்று பாதியில் நிற்கிறது கதை. இப்போது திடீரென்று அவன் முன்னால் வந்து நின்று மீதிக் கதையை விட்ட இடத்திலிருந்து சொல்ல மாட்டானா என்றிருந்தது.

சத்யா பைக்குடன் திரும்பிப் வந்தபோது மலர் அவனைக் காட்டி சுப்ரியாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொல்கிறாள் என்று யோசித்தான். மலர்! அவளை சத்யாவுக்கு கொஞ்சம் பிடிக்கும். அவன் பழகின மற்ற எல்லா பெண்களைவிடவும். ஆனால் அவளையெல்லாம் காதல் உணர்வுகளோடு ஒரு நாள்கூட ஏறிட்டுப் பார்த்தது கிடையாது. ஃப்ரெண்ட்லியாகப் பழகுவதோடு சரி. ஆனாலும் அவளாக இருந்தாலும் சந்தோஷம்தான். ச்சே! பொறு சத்யா! நட்பை நட்பாகக் காப்பாற்றுவது மிக முக்கியம். அது ஒரு பட்டிழை மாதிரி. அறுந்தால் போச்சு! மனக் குதிரையை ரொம்ப ஓடவிடாதே!

ரெண்டு பேரும் அவனைப் பார்த்து லேசாய் சிரித்தார்கள். அவன் ஹெல்மெட்டுக்குள்ளிருந்து மெதுவாய் சிரித்தது அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. அம்மா மட்டும் இங்கே இல்லையென்றால், வேணு அங்கிள் காரோடு வரும் வரை ஒரு பத்து நிமிஷம் நின்று மலரோடு பேசிவிட்டுப்போகலாம். சத்யா தலையை உலுக்கிக்கொண்டான். இன்றைக்கு வேண்டாம். யாரோடும் இன்றைக்கு சகஜமாய்ப் பேசிவிட முடியாதென்று தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும் இவளா இவளா என்று சந்தேகம் வந்துவிடும் போல இருந்தது. சரி இதைக் கொஞ்சம் மனசுக்குள் ஊறப் போடலாம்.

அவன் தோளைப் பிடித்துக்கொண்டு அம்மா பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். இரவின் அந்த ஒன்பதரை மணிக் காற்றில் வீடு நோக்கி விரைந்தபோது திடீரென்று ஏதோ ஒரு உற்சாகம் அவனுக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோல் உணர்ந்தான். விர்ரென்று ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

"மெதுவாப் போடா" என்று அவன் அம்மா கலவரமாய்ச் சொன்னது அவன் காதிலேயே விழவில்லை.

வீட்டுக்கு எப்படி எந்த வழியாக வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. யோசனைகள் குவியல் குவியலாய் மண்டையில் கொட்டிக் கிடந்தன. அனிச்சையாய் கை கால்கள் பைக்கை இயக்கி எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டது. அவனுக்கு தலைவெடித்துவிடும் போல இருந்தது. ஒரு பத்தே நிமிடத்தில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டான் இந்த கிருஷ்ணா. வீடு வந்து சேரும்வரை அம்மாவுடன்கூட வழியில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அம்மா சாப்பிடக் கூப்பிட்டபோது வேண்டாம் என்றான்.

"ஏண்டா ஒரு மாதிரியிருக்கே?"

அவன் பதில் சொல்லவில்லை.

"கிருஷ்ணா போனதுல எனக்கே ரொம்ப வருத்தமாயிருக்கு. அவன் க்ளோஸ் ஃப்ரெண்ட் உனக்கு இருக்காதா? பரவாயில்ல.. ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ. பட்டினி கிடக்காத." என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்குப் பசிக்கல." என்று சொல்லிவிட்டு மொட்டை மாடிக்குப் போனான். அவனுக்கு கொஞ்சம் தனிமையாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது. பாக்கெட் தடவி சிகரெட் தேடினான். கிடைக்கவில்லை.

மொட்டை மாடியின் சொர சொரப்பான தரைக் குளிர்ச்சியில் அப்படியே காலை நீட்டிப் படுத்துக்கொண்டான். சில்லென்று காற்று தலையைக் கலைத்து அலைந்தது. நேர் மேலே விரவியிருந்த ஆகாயக் கருமைக்குள் அந்த முகம் தெரியாத பெண்ணை யோசித்து நேர்பார்வையை நிலைக்கவிட்டான். யார்? என்று ஒற்றைக் கேள்வி இதயத்துடிப்புக்கு இணையாக துடித்து துடித்து அடங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சுக்கூட்டுக்கு நடுவே என்னவோ பிசைந்தது அவனுக்கு. ஒரு கண்ணுக்குத் தெரியாத வலை மாதிரி அவனைச் சுற்றி ஏதேதோ உணர்வுகள் படர்ந்து இறுக்கின.

கொஞ்சம் ஆழமாய் யோசித்தால் கிருஷ்ணா சொன்ன பெண் யாரென்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அவனுக்குத் தெரிந்த பெண்களையெல்லாம் இவனுக்கும் தெரியும். அவர்களில் யாரோ ஒருத்தியாக இருக்கலாம். அவனிடத்தில் அவள் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்தப் பட்டியலை யோசித்தால் மிக நீளமாக இருக்கிறது. கிருஷ்ணாவுக்கு பசங்களைக் காட்டிலும் பெண் நண்பிகள்தான் அதிகமாக இருந்தார்கள். பெண்களை எப்படித்தான் இப்படி ஃப்ரெண்ட் பிடிக்கிறானோ என்று ரொம்ப ஆச்சரியமாக இருக்கும் அவனுக்கு. கிருஷ்ணாவுக்கு ட்ரூ ஃப்யூஷனில் இருக்கிற நண்பிகள் தவிர அவன் அடிக்கடி போய்வருகிற டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிண்டு, ராசி கிராபிக்ஸ், கேபியார் பிரிண்டர்ஸ், ஆடிட்டர் ஆஃபிஸ் என்று எல்லா இடத்திலும் யாராவது நாலு பெண்களை நட்பாக்கி வைத்திருக்கிறான். அந்த லிஸ்டில் யார் என்று எப்படி தேடுவது? மேலும், கண்டுபிடித்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிற மனதின் குரலுக்கும் இப்போது பதில் சொல்லியே ஆகவேண்டும்.

சத்யா யோசித்தான். முதன் முதலில் காதல் உணர்வுகளெல்லாம் எப்போது வந்து நெஞ்சில் உட்கார்ந்து கொண்டது? படிக்கிற காலத்தில் அப்பாவின் நண்பர் அனந்த கிருஷ்ணன் மகள் பானுவை அவன் உருகி உருகி மனசுக்குள்ளேயே லவ் பண்ணினதும், அதை அவளிடம் தெரிவிப்பதற்கான தைரியம் பழகுவதற்குள் அ.கிருஷ்ணனுக்கு மாற்றலாகி ஜெய்ப்பூருக்கு நடையைக்கட்டிவிட்டதும் ஞாபகம் வந்தது. பாதியிலேயே எல்லாம் நின்றுவிட்டது. ஆனால் அதைக் காதல் என்றும் முழுசாய் சொல்லிவிட முடியாதுதான். இன்பாக்சுவேஷனின் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த, கனிந்த உணர்வுகளாக இருந்தது அது அவனுக்கு. இதே காலனியில் அவன் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி பானுவின் வீடு இருந்தது. அப்போது இதே மொட்டை மாடியிலிருந்து, கொஞ்சம் தள்ளி அவள் வீட்டு மொட்டை மாடியில் நடந்துகொண்டிருக்கும் அவளின் நிழலுருவம் பார்த்து "உன் நினைவே போதுமடி... மனம் மயங்கும்.. மெய் சிலிர்க்கும்" என்று மனசுக்குள் எஸ்.பி.பாலசுப்பிரமணியனாகி குரலில் சத்தமாய் பாடியபடி அவளிருக்கும் திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நடந்தது ஞாபகம் வந்தது.

ஆனால் அந்த காலகட்டமும் அவளும் லேசாய் மனசில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தார்கள். சமீபத்தில்கூட சத்யா எதற்கோ அவன் படித்த காலேஜூக்குப் போனபோதுகூட வைஸ் பிரின்ஸிபால் அறைக்கு எதிரே கைப்பிடிச்சுவரில் அவன் அன்றைக்கு எழுதி வைத்த பானுவின் பெயர் இருக்கிறதாவென்று பழைய நினைவில் பார்த்துவிட்டு வந்தான். அதற்கப்புறம் புதிதாய் இரண்டுதடவை பெயிண்ட் அடித்துவிட்டார்கள் போல. அது இருந்த இடம் அத்தனை தெளிவாய் கண்ணுக்குத் தெரியவில்லை. லேசாய் வருத்தத்தமாய் இருந்தாலும் அந்தக் காலகட்டம் கடந்து போய்விட்டது என்பதை உணர்ந்து மனசு சமாதானமாயிற்று. அதனால் பெரிய பாதிப்பெல்லாம் ஒன்றும் ஏற்படவில்லை. அது ஒரு சின்ன அனுபவம் அவ்வளவே. இந்நேரம் அவளுக்குக் கல்யாணம் ஆகி நாலு குழந்தைகூடப் பெற்றிருக்கலாம்.

அதற்கப்புறம் அத்தனை நெருக்கமாய் மனசுக்குப் பக்கத்தில் யாரும் வரவில்லை. அப்பா இறந்ததற்கப்புறம் பொறுப்புகள் தலையில் விழ கவனமெல்லாம் வேலை தேடுவது, செட்டிலாவது என்று போய்விட்டது. பெண்களுடன் நட்பாய்ப் பழகுகிற சந்தர்ப்பங்களே இதோ இந்த ட்ரூ ஃப்யூஷனுக்கு வந்தபிறகுதான் வாழ்க்கையில் வாய்த்திருக்கிறது. அது அவனுக்குப் பிடித்தும் இருந்தது என்றாலும் எல்லாருடனும் ரொம்பவெல்லாம் ஒட்டாமல் அளவாய்த்தான் பழகினான். தினசரி அட்டெண்டென்ஸில் கையெழுத்துப் போட்டுவிட்டு கிரியேட்டிவ் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து விட்டால் பிறகு அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருப்பான். மதியம் லஞ்ச் ப்ரேக்கில் எல்லாருடனும் உட்கார்ந்து சாப்பிடும்போது கொஞ்சமாய் பேசுவதோடு சரி.

யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் அல்லது சீக்கிரமே தெரிந்துவிடப்போகிறது. வரட்டும்! அதுவரை குறுகுறுப்பை சுமந்துகொண்டு காத்துக்கிடக்கலாம். என்னை ஒருத்திக்குப் பிடித்திருக்கிறதென்பது அற்புதமான விஷயம். என்னிடம் இருக்கிற ஏதோ ஒன்று அவளை ஈர்த்திருக்கிறது. அவள் எங்கிருந்து வரப்போகிறாள்? என்ன சொல்லப்போகிறாள்? எப்படிச் சொல்லுவாள்? அல்லது ஒரு நல்ல நாளில் ஏகாந்த வேளையில் அது இயல்பாய் நடந்துவிடுமா?

கிருஷ்ணா நாளைக்கு சிங்கப்பூருக்கு ப்ளைட் ஏறிவிடுவான். சொகுசு சீட்டில் நன்றாய் சாய்ந்துகொண்டு இங்கே நான் படுகிற அவஸ்தையை கற்பனை செய்து பார்த்து மனசுக்குள் சிரித்துக்கொண்டிருப்பான்.

டேய் கிருஷ்ணா.. நீ இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டுப் போனது ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு புது மாதிரியான அனுபவம். என்னை நேசிக்கிற பெண் யாரென்று தெரியாமல் தேடுகிற அவஸ்தை சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. காத்துக்கொண்டிருக்கிற இம்சைகூட சுகமானதாகத்தான் இருக்கும்போல. நல்லது! நீ மனசு மாறி முந்திரிக்கொட்டை மாதிரி என்னிடம் அவள் யார் என்று சொல்ல விழைந்தாலும்கூட நான் காதுகளை இறுக்கப் பொத்திக்கொள்வேன். சொல்ல வேண்டாம். இந்தத் திரில்லை நான் அப்படியே அனுபவிக்கவேண்டும்.

இதோ நான் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன். யாராக இருந்தாலும், எப்போது வந்து அவள் மனசை வெளிப்படுத்தினாலும் இதோ அதை என்னுள் கரைத்து ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டேன். எதையும் மறுப்பதற்கில்லை. இந்த உணர்வுகள் எல்லாமே எனக்கு ஏனோ தேவையாயிருக்கிறது. இன்றைய அனுபவத்தை, உணர்வுகளை அப்படியே டயரியில் பதித்துவைத்துக்கொள்ளவேண்டும்போல இருந்தது. பின்னாளில் அவளுடன் இணைந்து உட்கார்ந்திருக்கிற பொழுதில் அதைப் படித்துக்காண்பிக்கலாம் என்று என்னென்னவோ எண்ணங்களெல்லாம் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அதற்கப்புறம் நினைவுகள் கன்னாப் பின்னாவென்று எங்கெங்கோ அலைய எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு எழுந்தான். போதும். எதுவானாலும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். நாளைக்கு அலிகேட்டர் இண்டர்நேஷனலுக்கு கிட்டத்தட்ட பத்து விளம்பரங்கள் டிசைன் பண்ணுகிற வேலை இருக்கிறது. ஆஃபிஸூக்குக் கொஞ்சம் சீக்கிரமே போகவேண்டும். இன்றைக்கு ரொம்ப யோசித்துக்கொண்டிருந்தால் மூளை சூடாகி அப்புறம் தூக்கம் வராமல் புரள வேண்டியிருக்கும். நாளைக்கு வேலை ஓடினமாதிரிதான். அவளை நாளைக்குத் தேட ஆரம்பிக்கலாம்.

தென்னை மரங்கள் அனுப்பின காற்றின் ஜிலுஜிலுப்பில் குளிர் ஏறியிருந்தது. வானம் ரொம்ப மேக மூட்டமாய் இருந்திருக்கவேண்டும். நட்சத்திரங்களே தெரியவில்லை. அவனுக்கு லேசாய் பசிக்கிற மாதிரிகூட இருந்தது. அம்மாவிடம் ஏன் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னோமென்றிருந்தது. அவன் கீழே இறங்கி வந்தபோது வாசல் கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. லைட் எல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு அம்மா தூங்கப்போய்விட்டாள். இனிமேல் போய் சமையலறையை உருட்டிக்கொண்டிருக்கவும் முடியாது. சத்யா உள்ளே போய் கதவை சப்தம் வராமல் தாழிட்டுவிட்டு அவன் அறைக்குப்போய் நைட் லேம்ப்பை ஆன் பண்ணினான். பளீரென மஞ்சள் ஒளி அறைக்குள் பரவியது. லேசாய் சோம்பல் முறித்துவிட்டு படுக்கையைத் தட்டும்போது லேம்ப்புக்கு பக்கத்தில் அதைப் பார்த்தான். போன பிறந்த நாளன்று பரிசாய் கிடைத்த ஒரு சில வாசகங்கள் தாங்கின சின்ன டேபிள் டாப் ஒன்று. அது மாதிரி நிறைய ஆங்காங்கே வீட்டுக்குள் இருக்கின்றன. அதை ஏனோ எடுத்துப்பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அரையிருட்டு வெளிச்சத்தில் அதைக் கையில் எடுத்து உற்று நோக்கிப் படித்தான். 'யு ஆர் ஸோ ஸ்பெஷல்' என்று ஆரம்பித்த எழுத்துக்கள் தெரிந்தன. அதை மெதுவாய் திருப்பிப்பார்த்தான். அதன் பின்னால் 'வித் லவ் சுப்ரியா & மலர்' என்று கையெழுத்துடன் ஒரு லேபிள் ஒட்டியிருந்தது. அவனுக்கு லேசாய் சிரிப்பு வந்தது.

அன்றைக்கு இரவு எத்தனை முயன்றும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 3 ]

கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து...

அதிகாலைப் பனியில் தவறாமல் கோலம் போடுகிற அம்மா. இட்லி பொடியும், பருப்புப் பொடியும் மாதம் தோறும் தவறாமல் அரைப்பாள். மகன் சாப்பிடும்வரை காத்திருப்பதும், இரவு திரும்பும்வரை தூங்காமல் விழித்திருப்பதும், சின்ன தலைவலிதான் என்றாலும் பெரிய அளவில் பதறுவதும் எத்தனை சொல்லியும் இதுவரை அம்மா மாற்றிக்கொள்ளாத குணங்கள். இது அம்மாவின் ஒரு பகுதி. இன்னொரு பகுதியில் படிக்கிற நாவலை திடும்மென பாதியில் நிறுத்துவாள். எழுத்து நடை பிடிக்கவில்லை என்பாள். நான் எழுதி வரும் கவிதைக்கு சட்டென மாற்றங்கள் சொல்வாள். பார்த்த படத்தில் உறுதியாய் திரைக்கதையை மாற்றியிருக்க வேண்டும் என்பாள். எனக்குத்தான் குழப்பமாகும். உன் செண்டிமென்ட்ஸையும், புத்திசாலித்தனத்தையும் புரிஞ்சுக்கவே முடியல என்பேன். அம்மா சொல்வாள். புத்திசாலிகளுக்கு செண்டிமென்ட்ஸ் கூடாதுன்னு யாரு சொன்னா? அப்படி சொன்னா நான் புத்திசாலியா இருக்கறதைவிட அன்பா இருக்கிறதைதான் பெரிய விஷயமா நினைக்கிறேன் என்றாள். அதற்குப் பிறகு அம்மாவைப் பற்றி எனக்கு மேலும் புரிந்தது. அம்மா ஒரு 'புத்திசாலித் தாய்'.


ட்ரு ஃப்யூஷனின் கிரியேட்டிவ் ஸ்டுடியோவில் அலிகேட்ட்டர் இன்டர்நேஷனல் விளம்பர லே-அவுட்டுக்கு சத்யா மூளையை பிராண்டிக் கொண்டிருந்தான். ஸ்டுடியோ என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு பத்துக்குப் பத்து ஏ.சி அறை. அதில் மூன்றுபேர். சத்யா, ப்ரகாஷ், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர். மூன்று கம்ப்யூட்டர்கள். ஒரு யு.மேட்டிக் எடிட்டர். வெளியே கதவில் Admission not restrictred for gals! என்று பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருக்கும். சுவரில் எத்தனை உற்றுப்பார்த்தாலும் ஒன்றும் புரியாத தேவ் வரைந்த மாடர்ன் ஆர்ட்.

ஹரிஹரனின் 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ...' டெஸ்க் டாப் ஸ்பீக்கர்களில் சன்னமாய் எம்பித்ரீ உபயத்தில் வழிந்து கொண்டிருந்தது. சத்யா அதை லேசாய் தலையாட்டி ரசித்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தபோது கதவு திறந்து பிருந்தா உள்ளே நுழைந்தாள். டர் என்று அருகிலிருந்த குஷன் ஸ்டூலை இழுத்துப்போட்டு சத்யாவின் அருகில் உட்கார்ந்தாள். அவன் கம்ப்யூட்டரிலிருந்து கண்களை விலக்கித் திரும்பினான்.

அந்த இடத்து அமைதி சட்டென்று திடீரென கலைந்துவிட ஸ்ரீ திரும்பி, "ஏய் லூசு! இந்த மாதிரி டர் டர்னு ஸ்டூலை இழுக்காதன்று எத்தன தடவை சொல்லியிருக்கேன்." என்று சொல்லிவிட்டு அவளை முறைத்தான்.

"ஏன்? உன் கிரியேட்டிவிட்டி டிஸ்டர்ப் ஆயிருச்சா? போடா! நீ தினத்தந்திக்கு ஆட்கள் தேவை ஃபைவ் பை டூ -தானே கட்டம்போட்டு டிசைன் பண்ணிட்டு இருக்க? அதுக்கே ஏன் இப்படி அலட்டிக்கற." என்றாள் பிருந்தா பதிலுக்கு.

"ஆமா நீ அக்கெளண்ட் எக்ஸிக்யூட்டிவ்வா இருந்து என்னத்தை கிழிக்கற? என்னைக்காவது ஒரு ஹிண்டு ஃபுல் பேஜ் ஆல் எடிசன்ல வர்ர மாதிரி நல்ல அக்கெளண்டா எடுத்துட்டு வா. என் க்ரியேட்டிவிட்டியை அப்ப காமிக்கறேன்."

பிருந்தா அவனை உர்ரென்று முறைத்தாள். "ச்சீ போடா!" என்று முகச்சுழிப்புடன் சட்டென்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சத்யாவிடம் திரும்பினாள். ஸ்ரீயும் அந்தப் பக்கம் திரும்பி அவன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டான். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று இதையெல்லாம் கவனிக்காமல், காதில் தனியாக ஹெட்போனை மாட்டிக்கொண்டு ப்ரகாஷ் தனியே ஏதோ பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.

இது தினசரி நடக்கிற கூத்து. பிருந்தாவும் ஸ்ரீயும் எப்போதும் இப்படித்தான். டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி மாற்றி மாற்றி அடித்துக்கொண்டிருப்பார்கள். அதை யாருமே பெரிதாய் கண்டுகொள்ளமாட்டார்கள். இவர்கள் சண்டை தீரவே தீராது. சத்யாவும் இதை இங்கு வந்த இரண்டு வருடமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

பிறகு பிருந்தா கொஞ்ச நேரம் அமைதியாய் உட்கார்ந்திருந்தாள். அப்புறம் சத்யாவிடம் "எனக்கு போட்டோ ஷாப் எப்ப சொல்லித்தரப்போற?" என்றாள்.

"நாளைக்கு" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சத்யா. தொடர்ந்து "ஸ்ரீ கிட்ட கேளு. அவன்தான் பிஸ்த்து இங்க. அவன் சொல்லித்தருவான். உனக்குதான் அவன் ஜிகிரி தோஸ்த் ஆச்சே! உனக்குன்னா ஸ்பெஷல் க்ளாஸே எடுப்பான்." என்றான்.

"அயெ!" என்றாள். "அவன் பேச்சையே எடுக்காத. அதுக்கு நான் எதுவும் கத்துக்காமயே வாழ்ந்துட்டுப் போறேன்."

அவளிடமிருந்து லேசான பவுடர் வாசமும் தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூவின் வாசமும் கலந்து கட்டி அந்த ஏ.ஸி அறையில் பரவி நிறைந்ததை உணர்ந்தான் சத்யா. இன்னும் கொஞ்சநேரம் அவள் அங்கே உட்கார்ந்திருந்தால் கிறங்கிவிடும்போல் இருந்தது. லேசாய் அவளைத் திரும்பி உற்றுப்பார்க்கவேண்டும் என்கிற ஆவலை ஏனோ அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. பார்த்தான். அவள் அழகான கண்களை சிமிட்டியபடி அங்கே இங்கே என்று மானாவாரியாய் அந்த அறையை மேய்ந்துகொண்டிருந்தாள். ப்ருந்தா ரொம்ப அழகெல்லாம் கிடையாது. சுப்ரியா, மலர், கிருத்திகாவுடன் நிறுத்திவைத்துப் பார்த்தால் கொஞ்சம் சுமாரான பெண்ணாய்தான் தெரிவாள். புருவம் திருத்தி, குட்டையாய் முடிவெட்டி, முகத்தை ஃபேசியல் செய்துகொண்டதில் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கிறாள். மெல்லிய வயலட் நிற ஸாரி கட்டியிருந்தாள். ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது அவளிடம். மிக முக்கியமாய் அந்தக் கண்கள்.

பிருந்தா ஒரு பட பட டைப். அவளுக்கு பரபரவென்று எதையாவது பண்ணிக்கொண்டேயிருக்கவேண்டும். எதையாவது கேட்டுக்கொண்டு, எதையாவது பண்ணிக்கொண்டு, யாரிடமாவது சண்டை போட்டுக்கொண்டு, நகத்தைக் கடித்துக்கொண்டு, இல்லை யாரிடமாவது போனில் பேசிக்கொண்டு எப்போதுமே எப்படி இவ்வளவு பிஸியாக இருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கும். ஒரு இடத்தில் அவள் பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல உட்கார்ந்தால் அது உலக சாதனை. கொஞ்சம் வெகுளி டைப்பும் கூட.

'என்னை லவ் பண்ணுகிற பெண் இவளாக இருக்க எத்தனை சதவீத வாய்ப்பு இருக்கிறது' என்று யோசித்துப்பார்த்தான். எப்படிக் கண்டுபிடிப்பதென்கிற உத்தி மட்டும்தான் புரியவில்லை. திடீரென்று யாராவது பின்னாலிருந்து அவனை நிமிண்டி அவன் திரும்பியதும், 'நீ யாரைத் தேடறியோ, அது நான்தான்.' என்று சிம்பிளாய் சொல்லிவிட்டுப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்? விருப்பமிருந்தால் லவ் பண்ணலாம். அல்லது தன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போய்விடலாம்.

விருப்பமில்லாமலில்லை. அவனுக்கு இன்றைய தேதிக்கு ஐம்புலன்களும் மிகக் கூர்மையாகி மிகத் தயார் நிலையில் இருப்பதை உணர்ந்தான். எப்போது பார்த்தாலும் இதே சிந்தனையாகவே இருக்கிறது. எல்லாம் ஒரு பெண்ணின் பொருட்டு. அவள் எங்கேயிருந்து வரப்போகிறாள் என்பதன் ரகசியம் மனதை அலைக்கழிக்கிறது. யார் எப்படியிருப்பாள்? ஏதோ ஒரு மர்ம நாவல் மாதிரி ஆகிவிட்டது என் தற்போதைய இருப்பு. இங்கே இத்தனை பேர் இருக்கிறார்கள். யாருக்கும் இந்த விஷயம் தெரியவில்லையா? இல்லை என்னை என் ரியாக்ஷனை ரகசியமாகக் கண்காணிக்கிறார்களா? அவன் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போனது ஏப்ரல் ஒண்ணாந்தேதி ஒன்றும் இல்லையே? அவனுக்கு சில சமயம் எல்லாப் பெண்களும் தன்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது. அவஸ்தை!

எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய உன்னதம் ஒரு பெண்ணால் விரும்பப்படுதல் என்று நினைத்தான். அத்தகைய பாக்கியம் தனக்குக் கிட்டிவிட்டதா? அவளின் மென்மையான விரல்களைக் கோர்த்துக்கொண்டு அந்தி மயங்கும் சமயம், மந்தகாசப் பூக்கள் சிரிக்கும் ஒரு பூங்காவில் நேருக்கு நேர் எதிரெதிரே அமர்ந்து ஊடுறுவி அவள் விழிகளில் உலக ரகசியங்களைத் தேடியபடி... அல்லது மெல்ல அவளைப் பின்னாலிருந்து அணைத்துக்கொண்டு அவள் காதுக்குப் பின் இருக்கிற பிரதேசத்தில் மூச்சுக்காற்றால் புதையல் தேடியபடி...

அவன் யோசனையை பிருந்தாவின் குரல் கலைத்தது. அவன் திடுக்கிட்டு சுயநிலைக்கு வந்தான்.

"ஆக்ச்சுவலி.. நான் ஹிண்டு பேப்பர் தேடிட்டு வந்தேன். ரிஷப்ஷன்ல இருந்ததை நீ எடுத்துட்டு வந்ததா மலர் சொன்னா. எங்க அது?" என்று எழுந்தாள்.

சத்யா கண்களாலேயே அது இருக்குமிடத்தைக் காட்டினான். அதை எடுத்துக்கொண்டு அவள் நகர்ந்துவிடுவாள் என்று நினைத்தான். ஆனால் அவள் போகாமல் "நீ என்ன ஒர்க் பண்ணிட்டு இருக்க? பாக்கலாமா?" என்றாள் ஆர்வமாய்.

"அலிகேட்டர் வெஸ்ட்ஸ் அண்ட் ப்ரீஃப்ஸ்." ஒரு கட்டுமஸ்தான ஆண் மாடல், உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு நிற்கிற விளம்பர லே-அவுட்டை சத்யா அவளுக்குக் காண்பித்தான்.

"ச்சீய்ய்..!" மறுநொடி சினிமாவில் வருவது மாதிரி ஸ்டாப் ப்ளாக்கில் மறைந்துவிட்டாள். ஸ்ரீ ஒரு முறை திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு மறுபடி கம்ப்யூட்டரில் மூழ்கினான்.

அவள் விட்டுச் சென்ற வாசம் கொஞ்ச நேரத்துக்கு அறையிலேயே உலவிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம் கரைந்தது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி மூச்சுக்காற்றுக்கு வாசனையைப் பரப்பிவிட்டுப் போனால் எந்த ஆண்பிள்ளை பலவீனமாகாமல் இருப்பான்? ஒரு பெண்ணின் அருகாமையும் வாசனைகளும் ஒரு ஆணின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும்போல.

சத்யா மணி பார்த்தான். லஞ்ச் டைம் ஆகிவிட்டது. ஆக இத்தனை பொழுதுக்கும் எந்த அதிசயமும் நிகழக் காணோம். கண்ணாடி ஜன்னல் திறந்து திரை விலகி எந்த தேவதையும் அவனுக்கு தரிசனம் கொடுத்துவிடவில்லை.

சத்யா இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்துக்கொண்டான். மானிட்டரையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்ததில் கண்கள் எரிந்தது. கண்ணாடியைக் கழற்றி சட்டையில் துடைத்து மறுபடி போட்டுக் கொண்டான்.

"சாப்பிடப் போலாமா?" என்று பிரகாஷ் கேட்டதற்கப்புறம்தான் அன்று காலை அம்மா சமைக்க ஆரம்பிக்குமுன்னரே கிளம்பி சீக்கிரமே ஆஃபிஸ் வந்துவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. அப்படியென்றால் இன்றைக்கு மத்யான லஞ்ச் வெளியேதான். எங்கேயாவது ஹோட்டலில். சரி சாப்பிட்டுவிட்டு வந்து அலிகேட்டருக்கு உட்காரலாம் என்று நினைத்தான். இந்தக் க்ளையண்ட் கடன்காரன் வேறு ஒரு ஜட்டி விளம்பரத்துக்கு பத்து டிசைன் வேண்டுமென்று கேட்டு உயிரெடுக்கிறான்.

பிருந்தா எந்த ஹிண்டுப் பேப்பரை தேடிக்கொண்டு வந்தாளோ அது எடுக்கப்படாமல் அங்கேயே கிடக்கிறது. அப்படியென்றால் பின் எதற்குத்தான் வந்தாள்? சும்மாவா? அவனுக்கு லேசாய் பொறிதட்டியது. ஒரு வேளை, ஒரு வேளை...

ஹரிஹரனை ஆஃப் பண்ணிவிட்டு, சத்யா அந்த ஹிண்டு பேப்பரை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு வந்து அதை எடுத்த இடத்தில் வைத்தான். ரிஷப்ஷனையும் மீடியா ப்ளானிங்கையும் ஒரு சேர கவனித்துக்கொள்ளும் கிருத்திகா இடைவிடாமல் யாருடனோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் போனில் பேசிக்கொண்டிருந்தாள். தடபுடவென்று அவள் பேசுகிற இங்கிலீஷூம், தமிழும் சத்யாவுக்கோ வேறு யாருக்கோ முதல் முறை கேட்கும்போது புரியவே புரியாது. விநாடிக்கு பத்து வார்த்தைகள் வீதம் எப்படித்தான் அவ்வளவு ஸ்பீடாய் பேசுகிறாளோ என்று ஆச்சரியமாய் இருக்கும். அவள் அவனிடம் வந்து இப்போது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றால்கூட அது 'நாவுன் கலிக்றேன்' என்றுதான் கேட்கும். அவ்வளவு வேகம்.

சொல்வாளா தெரியவில்லை. அவன் வந்ததையோ ரிஷப்ஷன் டீப்பாயில் நியூஸ் பேப்பர் வைத்ததையோகூட ஏறெடுத்தும் பார்க்காமல் ரொம்ப மும்முரமாய் பேசிக்கொண்டிருக்கிற இவளுக்கு என் மேல் வேறு விதமான கவனங்கள் இருக்குமென்று அத்தனை நிச்சயமாய் சொல்லிவிட முடியாது. அவன் தேடலிலிருந்து இவளை நிச்சயம் மைனஸ் பண்ணிவிடலாம். ஹிண்டு, சண்டே, தேர்ட் பேஜ், `ஸிக்ஸ்டி காலம், ஆல் எடிசன் என்று விளம்பர வார்த்தைளை மறுமுனைக்கு கலந்து கொட்டிவிட்டு போனை வைத்துவிட்டுத் திரும்பினாள். உஃப் என்று ஒருமுறை பெருமூச்சு விட்டாள். அப்புறம் ஹேண்ட் பேகிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

சத்யாவைப் பார்த்ததும் மலர்ந்து "ஏய் இங்க வா! ஒரு கிசு கிசு சொல்றேன்" என்று அருகில் வந்தாள். "ஆனா நான்தான் சொன்னேன்னு யாருகிட்டயாவது சொன்ன? தொலைச்சுடுவேன்!"

"எதையாவது அதிர்ச்சி ரிபோர்ட் வாசிச்சு மத்யானம் சாப்பாடு உள்ள எறங்காதமாதிரி பண்ணிறாத" என்றான்.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. கேட்டா சந்தோஷமா ரெண்டு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவ!"

"என்ன சொல்லு"

"கிருஷ்ணா சிங்கப்பூர் கிளம்பின அன்னிக்கு வேணு மாமா எங்களையெல்லாம் அவங்கவங்க வீட்ல ட்ராப் பண்ணினாரில்ல.. அதில ஒருத்தி மட்டும் கார்ல வர்லை. நம்மாளுகூட பைக்ல சொய்ங்க்னு போய்ட்டா."

"யாரைச் சொல்ற? இந்த நம்மாளுன்றது யாரு?"

"ஹ! தெரியாதமாதிரி கேக்கற! நிஜமாவே தெரியாதா? இல்ல நடிக்கிறியா?"

"நான்தான் அவங்களுக்கு முன்னாலயே அம்மாவைக்கூட்டிட்டு வீட்டுக்குப் போயிட்டனே. எனக்கென்ன தெரியும்? சொல்லு யாரு?"

"அதான் நம்ம டாம் அண்ட் ஜெர்ரி. அந்த ரெண்டுபேரும்... முந்தா நேத்துகூட கே. ஜி பக்கத்துல மில்கி வே இருக்கு பாரு. அங்க உக்காந்து குசுகுசுன்னு பேசிகிட்டிருக்காங்க. நான் பல தடவை பாத்தாச்சு"

"பிருந்தா, ஸ்ரீதரையா சொல்ற?" சத்யா நம்பாமல் பார்த்தான். பெருக்கெடுத்த ஆச்சரியத்தை மறைத்துவிட்டுக் கேட்டான்.

"ச்சே! எல்லாத்தையும் இப்படித் தப்பா பார்த்தா எப்படி? சும்மா கேஷூவலாகூட உக்காந்து பேசிட்டிருந்திருக்கலாம்" என்றான்.

"ஹலோ மிஸ்டர்.. எந்த உலகத்துல இருக்க நீ?! மிரட்டின மிரட்டல்ல ஸ்ரீ எங்கிட்ட எல்லா உண்மையையும் கக்கிட்டான். ரெண்டு பேரும் உருகி உருகி லவ்வாம். உம்பக்கத்திலயே உக்காந்து வேலை செஞ்சுட்டு எப்படி அமுக்கமா இருக்கான் பாரு. எந்த விஷயத்தையாவது சொன்னானா அந்த ராஸ்கல் உங்கிட்ட. அவன் கூட சேராத" சொல்லிவிட்டு கிருத்திகா டிபன் பாக்ஸோடு கான்பரன்ஸ் ஹால் பக்கம் நகர்ந்தாள்.

சத்யா திகைத்து நின்றான். ஓரிரு விநாடிகளுக்கு அவள் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றான். மெல்ல பிருந்தாவின் அந்த கதம்ப வாசம் ஞாபகத்துக்கு வந்ததை வலுக்கட்டாயமாகக் கலைத்தான். இனி கூடாது. அவள் ஏன் அடிக்கடி ஸ்டுடியோவுக்கு வருகிறாள் என்று பளிச்சென்று புரிந்து போய்விட்டது. ஹிண்டு பேப்பர், அடோ ப்பி ஃபோட்டோ  ஷாப் எல்லாம் ஒரு சாக்கு. இந்த ஸ்ரீ இருக்கிறானே. சரியான ஊமைக்கோட்டான். பிருந்தா எப்போதெல்லாம் ஸ்டுடியோவுக்கு வருகிறாளோ அப்போதெல்லாம் அவளை சுத்தமாய் கண்டுகொள்ளாமலிருப்பதுபோல் பாவ்லா காட்டிவிட்டு எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.

கிசுகிசு என்று சொல்லிவிட்டு நல்ல தகவலைத்தான் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அவன் முன் புதிராய் நின்றிருந்த பெண் பிம்பங்களிலிருந்து ஒன்று அழிந்து மறைகிறது. கிருஷ்ணா சொன்ன ஆள் இவள்தானா என்று அவன் இனி அவள் கண்களுக்குள் காதலைத் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவஸ்தையின் கனம் முன்பிருந்ததைவிடக் கூடிவிட்டது. ஒரு மாதிரி பரிதவிப்பாய் இருந்தது. ஏன் என் வாழ்க்கையில் இப்படி ஒரு விளையாட்டு நடக்கவேண்டும். ஏன் எனக்கு இந்தப் புதிரை அவிழ்க்க இத்தனை விருப்பமாயிருக்கிறது. அடப் போடா எனக்கு இதிலெல்லாம் பெருசா இண்டரஸ்ட் இல்லை என்று ஏன் ஊதித் தள்ளிவிட்டுப் போய்விட முடியவில்லை? ஐயோ நான் என்ன பண்ணுவேன்?

அவனுக்கு பசி அதிகமாகிவிட்டதுபோல் இருந்தது. அஜந்தா ரெஸ்டாரண்டுக்குப் போய் வயிற்றுக்குக் கொட்டிவிட்டு வந்துவிடலாம் என்று படிகளில் இறங்கினான். பின்னாலிருந்து அவசரமாய் "சத்யா.. சத்யா" என்று யாரோ கூப்பிடுகிற மாதிரி இருந்தது. திரும்பினபோது மலர் நின்றிருந்தாள்.

ரொம்பத் தயக்கமாய்க் கேட்டாள். "லஞ்சுக்கு வெளில போறிங்களா சத்யா. நானும் உங்ககூட ஜாயின் பண்ணிக்கட்டுமா? வீட்டிலேர்ந்து லஞ்ச் எடுத்துட்டு வரலை."

"வாயேன். ஆனா நீதான் எனக்கும் சேத்தி பே பண்ணணும். சரியா?' என்று சிரித்தான்.

"தாராளமா'' என்று படிகளில் இறங்கினாள். "உங்களுக்காக இதுகூட பண்ணமாட்டேனா சத்யா?" என்றாள் முகத்தில் நிலைத்த புன்னகையுடன். அவனுக்கு ஜிலீரென்றது.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 4 ]

கிருஷ்ணாவின் டயரி குறிப்பிலிருந்து...

அம்மாவின் கோபமும் அதன் வெளிப்பாடும் வித்தியாசமானது. அம்மாவின் கோபம் முகத்தில் தெரியாது. ஆனால் அந்த நீண்ட மெளனமும், உதட்டில் முணுமுணுக்காத பாட்டும் அம்மாவின் கோபத்தைச் சுலபமாய் அறிவித்துவிடும். பிறகு சமையலறை வேலைகளை மிக வேகமாய் முடிப்பதும், ஒரு ஓரமாய் அமர்ந்து பாசிமணி பொம்மைகள் கோர்ப்பதும், ஷெல்ஃபில் கலைந்த புத்தகங்களை தூசிதட்டி அடுக்குவதும், தன் பழைய தோழியின் முகவரி தேடி கடிதம் எழுதுவதும், மொட்டை மாடியில் அரிசி போட்டு, வந்த குருவிகளோடு கொஞ்ச நேரம் இருப்பதும் அம்மாவின் கோபத்தில் அழகான வெளிப்பாடுகள். அநாவசிய கோபமோ அர்த்தமுள்ள கோபமோ எதுவானாலும் அதை ஆக்கபூர்வமாக மாற்றும் குணத்தை நான் அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.


ஆஃபிஸை விட்டு வெளியே வந்தபோது மலர் கேட்டாள்.

"சத்யா நீங்க வழக்கமா சாப்பிட எங்க போவீங்க?"

"அஜந்தா"

"ஃபார் எ சேஞ்ச் இன்னிக்கு ப்ளூ பேர்ல் போலாமா?"

"போலாமே" என்றான்.

என்னடா இது வாழ்க்கை நொடிக்கு நொடி மாறுகிறது என்று நினைத்துக்கொண்டான். எல்லாமே "ஃபார் எ சேஞ்ச்" மாதிரிதான் இருக்கிறது இங்கே. நேற்றைக்கு இருந்தது எல்லாம் இன்றைக்கு மாறிவிட்டது. நேற்றுவரை நான் இவளை ஓரக்கண்ணால்கூட பார்த்ததில்லை. இன்று இவள் ரொம்ப அழகாய் தேவதை மாதிரி தெரிகிறாள். எனக்காகவே அவள் கண்ணுக்கு மைபோட்டு வந்திருக்கிறாள்போல என்றெல்லாம்கூட எண்ணத் தோன்றுகிறது. இதோ இந்த நீலச் சுரிதார்கூட எனக்குப் பிடிக்கும் என்று உடுத்தி வந்திருக்கிறாள். புருவங்களுக்கு மத்தியில் பாம்பு மாதிரி நெளிந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டை என் ரசனைக்குப் பொருத்தமாகத்தான் வாங்கி ஒட்டியிருக்கிறாள். நான் ரசிப்பேன் என்பதற்காகவே அவள் நீளமான கூந்தலை வெட்டாமல் வைத்திருக்கிறாள். இப்படியெல்லாம் நினைத்துக் கொள்வது எத்தனை சுகமாக இருக்கிறது. இதயத்துடிப்பின் எண்ணிக்கையை கூட்டுகிற இந்த நினைப்பின் சாரலில் முழுக்க நனையலாம் என்றால் அவளோ கடைக்கண் காட்டி திருவாய் மொழியக்காணோம்.

"சத்யா உங்க பைக்லயே போயிரலாமா? காலைல வரும்போது என்னோட ஸ்கூட்டில ப்ரேக் கட்டாயிருச்சு" என்றாள் தொடர்ந்து. சத்யா தலையாட்டினான்.

கிளம்பி ப்ளூ பேர்ல் நோக்கி வண்டியை விட்டான். மலர் அவன் மேல் பட்டும்படாமல் ஜாக்கிரதையாக உட்கார்ந்துவந்தாள்.

ப்ளூ பேர்ல்-ல் ஒரு மூலை இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டார்கள்.

"என்ன சாப்பிடற"

"ஃபார் எ சேஞ்ச் குல்ச்சா, ஃபுல்கான்னு ஏதாவது சாப்பிடலாமா? கவலைப்படாதீங்க நான் பே பண்றேன்" என்று அழகான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.

மலர்! ஃபார் எ சேஞ்ச் இன்னிக்கு ஒரு நாளாவது நீ என்னை லவ் பண்ணலாம். உனக்கு கோடி புண்ணியமாகப் போகும். இப்படி உன்னை மாதிரிப் பெண்களெல்லோரும் அழகாய் சிரித்தும் பேசியும் படுத்துகிறீர்கள். மனசு படக் படக் என்று அடித்துக்கொள்கிறது பார். எனக்கு பேச்சே வரவில்லை. உன் மனதில் எனக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? உன் மூலமாவது என் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் காத்திருக்கிறேன். பிருந்தாவும், ஸ்ரீயும் கபட நாடகமாடி என் நினைப்பைக் கவிழ்த்துவிட்டார்கள். நல்ல வேளை நான் மனதில் அதிகம் கோட்டைகளை கட்டுவதற்குள் அது கலைந்துவிட்டது. இப்போது நீ சொல்வாயானால் உனக்கான வசந்த மாளிகைக்கு இப்போதே அஸ்திவாரப் பணியை ஆரம்பித்துவிடுகிறேன். கிருஷ்ணாவுக்கு எங்க காலனி கிரவுண்டுக்குப் பக்கத்தில் சின்னதாய் ஒரு கோவில்.

"என்ன யோசிக்கறீங்க சத்யா?"

"ஒண்ணும் இல்ல.. உன் ஜிகிரி தோஸ்த் சுப்ரியா பத்தி. நீ எப்பவும் அவகூடயே இருப்ப. எங்க போனாலும் ஒண்ணா போவிங்க. லஞ்ச் ஷேர் பண்ணிக்குவீங்க. இன்னிக்கு அவளை தனியா விட்டுட்டு என்கூட வந்தது அதிசயமாயிருக்கு"

"ம். நீங்க யோசிக்கிறது கரெக்ட்தான். ஆனா இப்பல்லாம் அவகூட எனக்கு கொஞ்சம் ஒத்துப் போக மாட்டேங்குது. ஒரு சில விஷயங்கள்ள. அவ ஒரு லூசு. நேத்துகூட என்கூட சண்டை போட்டுட்டா. போடின்னுட்டேன். அதுவுமில்லாம இன்னிக்கு எனக்குப் பிடிக்காத கத்திரிக்காய் குழம்பு கொண்டு வந்திருக்கா. ஒரு தடவை குழம்புல இருக்கிற கத்திரிக்காயைப் பாத்துட்டு கிருஷ்ணா சொன்னானே வெந்த அட்டை பூச்சி மாதிரி இருக்குன்னு.. உவ்வே! அவன் சொன்னதுக்கப்புறம் எனக்கு கத்திரிக்கா சுத்தமா புடிக்காம போச்சு! அவன் எப்பவுமே இப்படித்தான் எதையாவது கேஷூவலா சொல்லிட்டுப் போயிடறான். நமக்குதான் அவஸ்தையாயிடுது."

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஆஹா! நான் உணர்ந்ததை அப்படியே சொல்கிறாள். வேண்டுமென்றே பேசுவதற்கு இந்தத் தலைப்பை எடுத்தாளா?

சத்யாவுக்கு மலர் என்கிற மலர்விழியை ஏன் பிடித்தது என்பதற்கு ஒரு சில காரணங்கள் வைத்திருந்தான். முதல் காரணம் கருமையான அடர்த்தியான அவளின் நீளக்கூந்தல். அவள் கொஞ்சம் கருப்புதான் என்றாலும் பளிச்சென்று ஒளிர்கிற கண்களும், பல்வரிசையுமாய் லட்சணம் பொருந்திய முகம். அளவான உயரம். சேலை, சுரிதார் என்று எந்த உடை அணிந்தாலும் மறைந்துவிடாத நளினம். எதிரில் வருகிற யாராயிருந்தாலும் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டே போவார்கள். அது எல்லாவற்றையும்விட அவள் குரல். மிக மெல்லிசாய் தனக்கேகூட கேட்காத குரலில்தான் பேசுவாள். கொஞ்சம் அழுத்திப்பேசினால் வலிக்கும் என்பது மாதிரியிருக்கும் அவள் பேசுவது. ரொம்ப எளிமையாகவும் இருப்பாள்.

இப்போது நேராய் உட்கார்ந்து உற்றுப் பார்க்கும்போது ஒரு சாயலில் பானு மாதிரிகூட தெரிவதாய் நினைத்தான். ஏன் தெரியாது? ஜெனிபர் லோபஸேகூடத் தெரியலாம். நான் ஏன் இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு என்ன வேண்டியிருக்கிறது? என்றெல்லாம் கேள்விகள் தொடர்ந்து ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்தன அவன் மனதில்.

"க்ரியேட்டிவ்வான ஆளுங்க எல்லாருமே இப்படித்தான் ரொம்ப அமைதியா எப்பவும் யோசனையாவே இருப்பாங்களோ?" என்றாள் மலர். சத்யா தலையைக் ஆட்டி சுயநினைவுக்கு வந்தான். மெல்ல புன்னகைத்தான்.

"அப்படின்னு யாரு சொன்னா? குறுந்தாடி வெச்சுக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள உக்காந்திருக்கானே பிரகாஷ் அவன் கூடத்தான் நல்ல கிரியேட்டிவிட்டி உள்ள ஆளு. ஆனா சரியான லொட லொட இல்லையா?" என்றான்.

"கரெக்ட்டுதான். நீங்க கொஞ்சம் ஜாஸ்தி அமைதி. ஆனா ஐ லைக் இட்". என்றாள். "எப்பவும் இப்படித்தான் இருப்பீங்களா? எப்படித்தான் முடியுதோ?"

உடம்பில் ரத்த ஓட்டம் ஒரு முறை வேகமெடுத்து அடங்கியது அவனுக்கு. மறுபடி சிரித்து வைத்தான். என்னவோ நடக்கப்போகிறதுடா சத்யா என்று அவனுக்குப் பட்சி சொல்கிறது. அவள் என்னை நிறைய கவனித்திருக்கிறாள்.

"ம். அப்புறம் உங்ககிட்ட இன்னொன்ணுகூட பிடிக்கும். உங்க குரல். நல்ல மேன்லி வாய்ஸ். நம்ம ஏஜென்ஸி கார்ப்பரேட் ஃபில்ம் வாய்ஸ் ஓவரெல்லாம் நீங்களே ஏன் பண்ணக்கூடாது?"

"அதுக்கெல்லாம் தனித் திறமை வேணும்மா! சாதாரண விஷயமில்லை"

"இல்லை சத்யா, நீங்க அன்னிக்கு சனிக்கிழமை மத்தியான மீட்டிங்ல வீடியோல ப்ளாக் புக் அட்வர்டைஸ்மெண்ட்ஸ் போட்டுக்காமிச்சு ஒரு லெக்ச்சர் குடுத்தீங்களே.. அப்ப கவனிச்சேன். நல்ல ப்ரசண்டேஷன் ஸ்ட்ரக்சரும், மாடுலேஷனும் இருக்கு உங்க வாய்ஸ்ல. தேவ்கிட்ட சொல்லி ட்ரை பண்ணிப் பாருங்களேன்."

"இன்னும் என்னெல்லாம் கவனிச்சு வெச்சிருக்க?" என்று சிரித்தான். அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. வேறு யாரும்கூட இத்தனை சொன்னதில்லை. இத்தனை கவனித்ததில்லை. இவளுக்கு என் மீது எதற்கு இத்தனை அக்கறை என்று யோசித்தான்.

ஆர்டர் பண்ணின அயிட்டங்கள் வந்தன. சாப்பிட ஆரம்பித்தார்கள்.

"மலர்.. நான் ஒண்ணு கேக்கட்டுமா?"

என்ன என்பதுபோல் பார்த்தாள். ப்ளூ பேர்ல் ரெஸ்டாரண்டின் இசை கலந்த சர்ரவுண்ட் சப்தங்கள் ஓரிரு விநாடிகள் நிசப்தமாகி மீண்டும் எழுந்தன.

"உன்னை எனக்கு ஒண்ணரை வருஷமா தெரியும். ஆனாலும் இப்பதான் நாம முதல்தடவை பேசற மாதிரி இருக்கு ஏன்?"

மலர்ந்த புன்னகையுடன் அவள் புருவங்கள் உயர்ந்தன. "ஹே! நான் யோசிச்சதையே நீங்களும் சொல்றீங்க..!" என்றாள்.

"ரியலி?"

"ம்ம்"

ஒரு நிமிடம் மெளனமாயிருந்தார்கள். அவள் உதட்டைக் கடித்து யோசித்தாள். அண்ணாந்து ஸாண்ட்லியர் விளக்குகளின் சோகையான வெளிச்சத்தில் கண்களை ஓட்டினாள். பிறகு சொன்னாள்.

"நான் நினைக்கிறேன் சத்யா. நம்ம ஆபிஸூல எத்தனையோ பேசியிருக்கோம். சிரிச்சிருக்கோம். மொத்தமா டூர், சினிமாவுக்கெல்லாம் போயிருக்கோம். அப்பல்லாம் கும்பலோட கும்பலா உக்காந்து அரட்டை அடிச்சதுதான். ஆனா நாம ரெண்டுபேரும் தனியா நேருக்கு நேர் இதுதான் முதல் முறை. இல்லை? அதனாலதான் உங்களுக்கு அப்படி தோணுதுன்னு நினைக்கிறேன். ஆம் ஐ கரெக்ட்?"

"யெஸ்! யார்கூடவும் நாம் தனியா உக்காந்து பேசும்போதுதான் அவங்களோட முழு பர்சனாலிட்டியையும் புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன். ஆனா ஒரு விஷயம். பொறுமையா எதிராளி பேசறதைக் காது குடுத்துக் கேக்கணும்."

சத்யாவுக்கு அவளிடம் அதைக் கேட்டுவிடவேண்டும் என்று தோன்றியது. கேட்டால் ஏதாவது தப்பாய் எடுத்துக்கொள்வாளோ என்று பயமாகவும் இருந்தது. ஆனால் இத்தனை ஜோவியலாகப் பேசுகிற அவளிடம் அதை சும்மா பேச்சுவாக்கில் கேட்கிற மாதிரி கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தான். கேட்கலாமா? கேட்கக் கூடாதா என்று மனதில் பட்டி மன்றம் நடந்தது. கடைசியில் கேட்டே விட்டான்.

"என்னைப் பத்தி நீ என்ன கணிப்பு வெச்சிருக்க மலர்? அதாவது ஒரு தீர்மானம் அல்லது என்ன சொல்றது? ஒரு கன்க்ளூஷன் இந்த மாதிரி ஏதாவது இருக்கா? சும்மா தெரிஞ்சுக்கறதுக்காக கேக்கறேன்."

"ஓ.. இருக்கே." என்றாள். "ஒரு வரில சொல்றதுன்னா.. யு ஆர் எ ஹார்ம்லெஸ் ஃபெல்லோ.. யாருக்கும் தொந்தரவில்லாத ஒரு அப்பாவிப் பூச்சி." சொல்லிவிட்டு ஹஹ்ஹா என்று சிரித்தாள். அவள் பதிலைக் கேட்டு அவனுக்கு வியப்பொன்றும் தோன்றவில்லை. எல்லாரும் சொல்வது மாதிரியேதான் சொல்கிறாள். தேவ் ஒரு முறை "யு ஆர் எ பர்ஸன் வித் சப்டியூடு நேச்சர்" என்று சொன்னது அவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது. எல்லோரும் சொல்வது சரிதான். சத்யா யாருக்கும் தொந்தரவில்லாமல் அவனுன்டு அவன் வேலையுண்டு என்று இருக்கிறவன்தான். யாரோடும் அவனாகவே வலிய வந்து பழகமாட்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாய் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கிறது.

"சுப்ரியாகூட ஏன் உனக்கு ஒத்துப் போக மாட்டேங்குது மலர்? எதுக்காக சண்டை போட்டே?"

லேசாய் அவள் முகம் மாறியது. அவள் உடனே யோசிக்க ஆரம்பித்ததும், தயக்கமாய் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்ததையும் கவனித்தான்.

"இட்ஸ் ஆல்ரைட். ஏதாவது பர்சனலாய் இருக்கும். நான் சும்மாதான் கேட்டேன். நோ நீட் டு ஆன்ஸர்"

"இல்லை அது வந்து.. சத்யா நான் அப்புறமாய் சொல்றேன். ஆனா கண்டிப்பா சொல்றேன். உங்கவிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஆனா இன்னும் சமயம் வரலைன்னு நினைக்கிறேன்".

"ஓ.. பெரிய சஸ்பென்ஸ்தான் போலிருக்கு!" என்று அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான். அவளும்கூட ஒரு விநாடி அதே மாதிரி பார்த்ததுபோலிருந்தது. அவள் கண்களிலும் உதடுகளில் லேசாய் வெட்க வரிகள் படர்ந்ததை உணர்ந்தான்.

சத்யா அடிக்கடி நினைத்துக் கொள்வான். வாழ்க்கையில் எல்லாமே ஒரு ப்ரீசெட் சமாச்சாரம்தான். நடக்கிற எல்லா விஷயங்களும் முன்பே திடமாய் தீர்மானிக்கப்பட்டதுதான். இழப்பு, வரவு, செலவு, இருப்பு, வெறுப்பு, துக்கம், ஜல்சா, பண விரயம், வாகன யோகம், முக்கியமான விஷயமாய் வெளியில் போகும்போது பலமாய் மழை வந்துவிடுவது, பாத்ரூமில் வழுக்கி விழுவது, லாட்டரி அடிப்பது, மலர் ஓட்டுகிற ஸ்கூட்டியில் இப்போது ப்ரேக் கட் ஆகிவிட்டது இதுமாதிரி எல்லாமே முன்பே வரிசைக்கிரமமாய் கோர்த்து வைக்கப்பட்டிருக்கிற பகுதிகள். அந்தந்த சமயம் வரும்பொழுது அது அது தானாக அரங்கேறி விடுகிறது. இன்னார் இன்னாரை இந்த நாளில் இந்த இடத்தில் சந்தித்து இன்னது நிகழும் என்பதெல்லாம் எப்போதோ விதி தீர்மானித்து ஒரு புள்ளியாய் குறித்துவைத்திருக்கிறது.

இன்னும் என்னென்னெல்லாம் நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று நினைத்தான். இவளிடத்தில் என்னவோ விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மறுபடி மறுபடி பட்சியும் அதைத்தான் சொல்கிறது. அவளைக் கொஞ்சம் க்ளோஸ் ஆக கவனிக்க வேண்டும். கிருஷ்ணாவின் புதிருக்கான விடையை இவள்தான் வைத்திருக்கிறமாதிரி ஏனோ உறுதியாய் தோன்றியது அவனுக்கு. அதை அப்படியே நம்பவும் விரும்பினான். அவனுக்கு மனதில் என்னென்னவோ குறுகுறுப்பான எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

ப்ளு பேர்ல்க்கு சாப்பிட வந்து வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்தான். ரொம்ப லேட் பண்ணினால் அப்புறம் அலிகேட்டர்காரன் அவனைக் கடித்துத் துப்பிவிடுவான். இவளுக்கு என்ன? ஆஃபிஸில் உட்கார்ந்து பொறுமையாய் அக்கெளண்ட்ஸ் பார்க்கிற வேலை. இருக்கிற கணக்கைக் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் பொழுது ஓடிவிடும். அவனுக்கு அப்படியில்லையே. போய் ஜட்டி விளம்பர டிசைனுக்கு மண்டையை உடைக்க வேண்டும்.

அவன் யோசிப்பதை உணர்ந்து அவளும் சீக்கிரமாய் முடித்துவிட்டு எழுந்தாள். பில்லுக்கு பணம் எடுக்க அவள் பர்ஸை எடுத்தபோது தடுத்துவிட்டு அவனே கொடுத்தான். அவள் தேங்க்ஸ் சத்யா என்றாள்.

இருவரும் ரெஸ்டாரண்டைவிட்டு வெளியே வரும்போது திடீரென்று அவள் சொன்னாள். "சத்யா ஒரு நாள் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்களேன். உங்கம்மாவை மறுபடி பாக்கணும் போல இருக்கு"

"மறுபடியும்னா? உனக்கு எங்கம்மாவை எப்படி தெரியும்?"

"மறந்துட்டீங்களா? அன்னிக்கு கிருஷ்ணா கிளம்பும்போது ரயில்வே ஷ்டேஷன்ல வெச்சுப் பாத்தேனே. என்கூட ரொம்ப நல்லா பேசிட்டிருந்தாங்க. உங்களை மாதிரியே ரொம்ப அமைதியான டைப் அவங்களும்"

"ம். ஒரு நாள் கூட்டிட்டுப் போறேன்" என்றான். அவனுக்கு ஏனோ சந்தோஷமாயிருந்தது. மனது கொஞ்சம் பரபரப்பாகவும் இருந்தது. ஒரு மாதிரி தவிப்பாக, இனிய அவஸ்தையாக.

ஆஃபிஸூக்குத் பைக்கில் திரும்பிப் போகும்போது மலர் பின்னாலிருந்து அவன் தோளை லேசாய் பற்றியிருந்ததை கவனித்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 5 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவுக்குப் பிடித்ததெல்லாம் பி.சுசீலா பாட்டுக்கள்தான். அதிலும் பிடித்தது அந்த காதல் சிறகை காற்றினில் விரித்தும், நெஞ்சம் மறப்பதில்லையும்தான். அம்மா குளிக்கிறபோதோ, துவைக்கிறபோதோ, சமைக்கிறபோதோ துணையாய் சன்னக் குரலில் அந்தப் பாட்டுக்கள்தான் கேட்டுக்கொண்டேயிருக்கும். நான் வந்தால் அம்மா பாடுவதை சட்டென்று நிறுத்திவிடுவாள். விரும்பிக் கேட்டால் அம்மாவிடமிருந்து பாட்டு வராது. வெட்கம்தான் வரும். என் பிறந்த நாள் வந்தது. வசமாய் அம்மா மாட்டிக்கொண்டாள். என்ன வேணுமென்றாள். ட்ரீட்டாய் உன் பாட்டு வேணும் என்றேன். அம்மாவால் மறுக்க முடியவில்லை. மெல்லிய வெட்கம் வந்து அதை மெதுவாய் உள்ளடக்கி எங்கோ பார்த்தபடி ஒரு பாட்டைப் பாடிக் காட்டினாள். நெஞ்சம் மறப்பதில்லை. நான் ரசித்துப் பாராட்டிக் கைதட்ட அம்மாவுக்கு மீண்டும் வெட்கம் வந்து உள்ளறைக்குள் ஓடிப்போனாள். பி.சுசீலா பாடின அந்தப் பாட்டுகூட எனக்கு மறந்துவிட்டது. ஆனால் அம்மா பாடினதைத்தான் இன்னும் என் நெஞ்சம் மறக்கவேயில்லை.


அலிகேட்டர் இண்டர்நேஷனல் டிசைன் கான்சப்டுகள் முடித்து அனுப்பிவிட்டு சத்யா வீட்டுக்கு கிளம்ப மணி பத்து ஆகிவிட்டது. திரும்பி பைக்கில் வரும்போது மலர் அவன் பின்னாலேயே உட்கார்ந்துகொண்டிருப்பது போலவும், அவள் கை அவன் தோளைப் பிடித்திருப்பது போலவும் பிரமை தொடர்ந்து இருந்தது அவனுக்கு. மத்தியானம் ரெஸ்டாரெண்டிலிருந்து ஆஃபிஸ் வந்து சேரும்வரை அவள் கையை அவன் தோளிலிருந்து எடுக்கவேயில்லை என்பதும் நினைவில் ஓடியது. மேலும் அதிக போக்குவரத்து குறுக்கிடும் இடங்களிலும், ஸ்பீட் பிரேக்கர்கள் வருகிற இடத்தலும் டீசண்டாய் வேகத்தைக் குறைத்த போதும் அவள் விரல்கள் சற்றே அதிகமாய் அவன் தோளை அழுத்தின உணர்வும் மறைந்துவிடாமல் அப்படியே தங்கியிருந்தது அவன் மனதில். அதே உணர்வில் இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே வண்டியில் போய்க்கொண்டேயிருக்கக்கூடாதா என்று அவனுக்குத் தோன்றியபோது வீடு வந்துவிட்டது.

அம்மா வாசற்படியிலேயே உட்கார்ந்திருந்தாள். சத்யாவைப் பா஡த்ததும் எழுந்து உள்ளே போனாள். அவனுக்காக தனியே தினசரி வாசற்படியில் காத்திருப்பது பழகிவிட்டிருந்தது அம்மாவுக்கு. எப்படியும் வீட்டுக்கு வர குறைந்தபட்சம் பத்து மணி ஆகிவிடுகிறது. ஒரு நாளாவது சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று அவனும் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறான். முடிந்தால்தானே?

அவன் பைக்கை நிறுத்தி ரெயின் கவரில் மூடிவிட்டு வந்தான். பிறகு உடை மாற்றுவதற்காக நேராய் அவன் அறைக்குப் போய்விட்டான்.

அவனுக்கு சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவதற்கே மனசு வரவில்லை. மலர் கைவைத்த சட்டையின் தோள் பட்டையை மெல்ல விரலால் வருடிப் பார்த்தான். முதன் முதலாய் ஒரு பெண்ணிடம் நெருங்கி அமர்ந்த சந்தர்ப்பம் அது. அவள் அவனுடன் சாப்பிட வந்தது எல்லாம் திட்டமிட்டுப் பண்ணின காரியமா? ஒருத்திக்கு ஒருத்தனைப் பிடித்துவிட்டால், அல்லது அவன் மேல் காதல் கீதல் எல்லாம் வந்துவிட்டால் பிறகு அவள் நடவடிக்கைகள் என்னென்ன? அவள் என்னெல்லாம் செய்வாள் என்பதெல்லாம் திட்டவட்டமாய்த் தெரியவில்லை.

முன்பு பானுவின் மேல் தனக்கு அப்படியொரு ஈர்ப்பு வந்தபோது தான் என்னெல்லாம் பண்ணினோம் என்று யோசித்துப் பார்த்தான். ஒரு தடவை காலேஜ் வைஸ் பிரின்ஸிபால் அறை முன்பு சுவற்றில் அவள் பேர் சுரண்டி எழுதினது, அவளைப் பார்க்க பஸ் ஸ்டாண்டில் தவம் கிடந்தது. ஒரு நோட்டு நிறைய அவளைக் கருவாகக் கொண்டு அபத்தக் கவிதைகள் எழுதினது. அவளது எலிமெண்டரி ஸ்கூல் குரூப் போட்டாவை லவட்டிக்கொண்டு வந்து அவளை மட்டும் கத்தரித்து வைத்துக்கொண்டது. ஒருமுறை அவள் வீட்டுக்கு எதற்கோ போயிருந்தபோது அவள் போட்டுக் கொடுத்த பூஸ்ட்டை குடித்துவிட்டு 'காபி ரொம்ப நல்லாருக்கு' என்று சொல்லிவிட்டுப் பின் அசடு வழிந்தது. இதெல்லாம் தவிர வேறெதுவும் குறிப்பிடும்படியாய் ஞாபகத்துக்கு வரவில்லை. பானு வேறு ஊருக்குப் போய்விட்ட கையோடு இதெல்லாம் வெறும் ஞாபகங்களாக மாறிவிட்டது. அவைகளை எப்போதாவது தோண்டி மூடுவதோடு சரி.

அம்மா அவனுக்கு சாப்பிட ரெடி பண்ண ஆரம்பித்திருந்தாள். ஆஃபிஸில் ரொம்ப லேட் ஆனதால் ஆபிஸ் பையன் வாங்கிவந்திருந்த ஸ்நாக்ஸ் மற்றும் இன்னபிற கொறிப்பு ஐட்டங்களையெல்லாம் உள்ளே தள்ளியிருந்ததால் இப்போது பசியில்லாமலிருந்தது. ஆனால் அம்மா அவன் வந்து சாப்பிட இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்திருக்கிறாள். டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்தும் வைத்தாயிற்று.

சரி கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். கைகழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

"உனக்கு தூக்கம் வந்தா நீ போய் படுத்துக்க. நான் சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கறேன்" என்றான்.

"தூக்கமெல்லாம் ஒண்ணும் வரலை. நீ சாப்பிடு" என்றாள். சத்யா அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அம்மா பொய் சொல்லுகிறாள். முகம் பூராவும் களைப்பு தாண்டவமாடுகிறது. கண் மூடினால் இன்னும் ஐந்தே நிமிடத்தில் தூங்கிவிடுவாள் போலிருந்தது.

"காலைல சாப்பிடாமயே போயிட்ட. மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டியோ என்னமோ?" என்றாள் கவலையுடன்.

"சாப்பிட்டேன். ஹோட்டல்ல. ஏம்மா நான் என்ன சின்ன கொழந்தையா? எனக்குப் பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா? எதுக்கு கவலப்படற?"

"காலைல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணியிருந்தா நானே லஞ்ச் பாக்ஸ்ல போட்டுக் குடுத்திருப்பன்ல. அவசரமா ஓடிட்ட! ஏன் ஹோட்டல்லயெல்லாம் சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்கணும்?"

"என்னிக்காவது ஒரு நாள்தானே. ஏம்மா புலம்பறே?" என்றான் லேசான எரிச்சலுடன். இந்த அம்மா எப்பவும் இப்படித்தான். சும்மா சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசு பண்ணிக்கொண்டு, எதையாவது கேட்டுக்கொண்டு.

"சரி அதைவிடு. கொஞ்சம் முன்னாடி கிருஷ்ணா போன் பண்ணியிருந்தான். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான்" என்றாள்.

"நான் வீட்ல இருக்கும்போது போன் பண்றதுக்கென்ன அவனுக்கு? இடியட்"

"பத்து மணிக்கு மேல மறுபடி கூப்பிடறேன்னு சொல்லியிருக்கான்."

அவனுக்கு அந்தச் செய்தி கிளர்வாய் இருந்தது. கிருஷ்ணா கூப்பிட்டால் அந்த சஸ்பென்ஸ் என்ன என்று கேட்டுவிட வேண்டும். ஆனால் கேட்டால் அந்தக் கடன்காரன் சொல்வானா என்று தெரியவில்லை. அவனை நறுக் நறுக்கென்று கேள்வி கேட்க வேண்டும். நீ பாட்டுக்கு ரயில் கூவுகிற நேரத்தில் திடுக் ரிப்போர்ட் வாசித்துவிட்டுப் போய்விடுவாய். இங்கே ஒருத்தன் தினசரி அல்லல்பட்டு நிர்கதியாய் நிற்கிறானே தெரியவில்லையா? ஒருத்தன் வாழ்க்கையோடு விளையாடுவதில் அவனுக்கு அப்படி என்னதான் கொண்டாட்டமோ என்று கேட்கவேண்டும்.

சத்யா மணி பார்த்தான். இப்போது இங்கே பத்தரை ஆகிவிட்டது. சிங்கப்பூரில் மணி எத்தனை? நடுராத்திரிக்கும் மேல் ஆகியிருக்குமே. இப்போது நன்றாக குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கலாம் அவன். ஆக இந்நேரத்துக்கும் மேல் கூப்பிடுவானா என்று தெரியவில்லை.

அவன் போன் பண்ணினால் நீ சொன்ன ஆள் மலர்தானா என்று நேரடியாய் கேட்டு வைத்தால் என்ன என்றும்கூட தோன்றியது அவனுக்கு. ஒரு வேளை அதுவே சரியாக இருப்பின் ஆச்சரியப்படுவான். எப்படிடா கண்டுபுடிச்ச? சொல்லிட்டாளா என்பான். அவன் என்னிடம் சஸ்பென்ஸ் வைத்து விளையாடுகிற மாதிரி நானும்கூட ஒரு கேம் விளையாடிப் பார்க்கலாம் அவனுடன். அவனை லேசாய் குழப்பிவிட்டால் அப்புறம் எல்லா உண்மைகளையும் கக்குவதைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்காது. ஆஹா! இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது.

திடீரென அவனுக்கு மலரின் ஞாபகம் அதிகமானதுபோல் இருந்தது. அவன் மன ராட்டினத்தில் உட்கார்ந்து கொண்டு கிர் கிர் என்று சுற்றுகிறாள். அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு அதிகமாகிவிட்டது. லேசான ஏற்பட்டிருக்கிற காதல் அழுத்தத்தில் அவனுக்குத்தான் தலை சுற்றுவது போலிருந்தது. என்னை எங்கோ ஒளிந்து கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது அவளுடைய கண்கள்தான் என்று தெரிந்துவிட்டது. அவளேதான். அவளேதான்.

அவன் தட்டிலேயே கைகழுவி விட்டு எழுந்தான். டயர்டா இருக்கு. தூங்கப் போறேன் என்றான். அவன் அறைக்கு நடந்தான். அம்மா மெளனமாய் பாத்திரம் கழுவ சமையலறைக்குப் போனாள். அவனுக்கு மலர் மத்தியானம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 'உங்கம்மாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.'

அவளை ஒரு தடவை வீட்டுக்குக் கூட்டிவர வேண்டும். அவளே ஆசைப்படும்போது பிறகு என்ன? கிருஷ்ணா, ரஞ்சனி தவிர அவன் வீட்டுக்கு இதுவரை யாரும் வந்ததும்கூட இல்லைதான். ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டிக்கொண்டு வரலாம்.

அம்மாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லவேண்டும். குளிர்ந்து போய் அவளை இன்னும் நன்றாக கவனித்து அனுப்புவாள். ரஞ்சனியையே அம்மா அப்படிக் கவனிக்கிறாள். அம்மாவுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் போதும். பிறகு கேட்கவே வேண்டாம். அம்மாவுக்கு கிருஷ்ணாவைப் பிடிக்கும். அவனைப் பிடிக்கும் என்பதாலேயே ரஞ்சனியையும் பிடிக்கிறது. அவளும்கூட அம்மாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவள் கொஞ்சம் கலகல டைப்தான். ஆனால் எதன்பொருட்டாவது சோகமாகிவிட்டால் பின் கேட்கவே வேண்டாம். ஒரு வாரத்துக்கு உம்மென்று இருப்பாள். அவளைப் பார்த்தே ரொம்ப நாள் ஆனமாதிரி இருக்கிறது. இங்கே வந்தாளா இல்லையா?

அம்மாவிடம் கேட்டான்.

"ம். வந்தாளே.. காலைல டான்ஸ் க்ளாஸ் போற வழியில எட்டிப் பார்த்துட்டு போவா. அப்ப நீ தூங்கிட்டு இருப்ப. நாளைக்கு மறுபடி வருவா இங்க. கிருஷ்ணா அவளுக்கு இந்த நம்பர்ல ஏழு மணிக்கு கூப்பிடறதா சொல்லியிருக்கான்."

எப்பவும் வேலை வேலையென்று இருந்துகொண்டேயிருப்பதால் நாட்டில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. ஹூம். சத்யா தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சோபாவில் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் டி.வி. பார்த்தான். ரொம்ப நேரம் காத்திருந்தும் கிருஷ்ணா போன் பண்ணினபாடில்லை. அதற்குமேல் முடியாமல் கண்கள் செருக ஆரம்பித்தது. இந்தக் கிருஷ்ணாவோடு பெரிய தொல்லையாய் போய்விட்டது. சத்யாவுக்கு கோபம் கோபமாக வந்தது. என்னை மட்டும் எல்லாவற்றிற்கும் காக்க வைத்துக்கொண்டிருக்கிறான். அலைக்கழிக்கிறான். போன் பண்ணுகிறேன் என்றால் பண்ண வேண்டியதுதானே.

படுக்கையில் வந்து விழுந்து கண்ணை மூடினான். சரசரவென்று ஏதேதோ நினைவுகள் மங்கலாய் ஓடின. அலிகேட்டர் இண்டர்நேஷனல்காரன் பெரிய மீசையுடன் அவன் முன்னால் நின்று ஏதோ சத்தம் போடுகிறான். பிரகாஷ் யுமேட்டிக் எடிட்டரில் கட்டக் கட்டக் என்று சப்தத்துடன் மாஸ்டர் காப்பி எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறான். கான்பரன்ஸில் உட்கார்ந்து எல்லாரும் கயமுய என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளாக் புக் வீடியோ ஓடுகிறது. டன்லப் டயர் விளம்பரங்கள் கிரீச் என்று பிரேக் அடித்துத் தேய்கின்றன. பெப்பராமி அசைவ உணவு விளம்பரக் கார்ட்டூன் அடிவாங்கிச் சாகிறது. மலர் ப்ரேக் கட்டான ஸ்கூட்டியை வைத்துக்கொண்டு பரிதாபமாய் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறாள். சிங்கப்பூரிலிருந்து டெலிபோன் மணி அடிக்கிறது. சத்யா ரிசீவரை எடுக்கக் கைநீட்டிக்கொண்டேயிருக்கிறான் டெலிபோன் கைக்கு எட்டாமல் விலகி விலகிப் போகிறது. ஃபேன் ஓடுகிற சப்தமும் கொசுவின் ரீங்காரமும் காதருகில் கேட்கிறது. தூக்கம் அவனை இழுத்துக்கொண்டுவிட்டது.

காலையில் கண்ணைத் திறப்பதற்கு அவன் ரொம்பப் பாடுபட வேண்டியதாகிவிட்டது. உடல் சோர்வும் களைப்பும் அழுந்த அப்படியே ஒரு பத்துநாளைக்குத் தூங்கிக் கொண்டேயிருந்தாலென்ன என்று நினைத்தான். மெதுவாய் ஒரு வழியாய் கண்ணைத் திறந்து படுத்தபடியே சோம்பல் முறித்துக் கொண்டிருந்தபோது அம்மா உள்ளே வந்தாள்.

"காலைல ரஞ்சனி வந்திருந்தா. கரெக்டா ஏழு மணிக்கு கிருஷ்ணா அவளுக்குப் போன் பண்ணினான். உன்னைக் கேட்டான். நான் உன்னை எழுப்பிப் பார்த்தேன். நீ எழுந்திரிக்கிற வழியைக் காணோம். சரி மறுபடி அப்பறமா பேசறேன்னுட்டு வெச்சுட்டான். ரஞ்சனி இப்பதான் போறா!"

சத்யா சுரத்தில்லாமல் 'ம்' என்றான்.

அம்மா மறுபடி சொன்னாள். "அப்றம் உங்க ஆஃபிஸ்ல ஒர்க் பண்றாளே மலர்ன்னு ஒரு பொண்ணு.

"ஆமா அவளுக்கென்ன?"

"ரஞ்சனிகூட அவளும் வந்திருந்தா"

அவனுக்கு தூக்கம் முழுமையாகக் கலைந்து எழுந்து உட்கார்ந்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 6 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவின் பொறுமைகளும் அதிசயமானதுதான்! அம்மாவுக்கும் பிரச்சனைகள் இல்லாமலில்லை. என்றாலும் பக்கத்துவீட்டு சாரதா மாமி - எதிர் வீட்டு காயத்ரி அக்கா என அடுத்தவர்கள், பிரச்சனையோடு அம்மாவைத் தேடி வந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள். கேட்டதோடு விடாமல் அந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வென முடிந்தவரை சொல்லவும் முயற்சிப்பாள். அத்தனை சம்பவங்களையும் அம்மா அரிசி புடைத்துக்கொண்டோ, வீடு கூட்டிக் கொண்டோ, சாமி விளக்கைத் துடைத்தபடியோ கேட்டுக்கொண்டேதான் இருப்பாள். ஒருநாள் நான்தான் சகிக்க முடியாமல் கேட்டேன். இதையெல்லாம் பொறுமையாய் உன்னால் எப்படியம்மா கேட்க முடிகிறது என்றேன். அம்மா சொன்னாள். நம்ம வசதிக்கு அவங்களுக்கு காசு கொடுத்து உதவமுடியுமா? காதுதானே கொடுக்கிறேன். கொட்டிவிட்டுப் போகட்டுமே! அம்மா சொன்ன அந்த அழகான உண்மையை நான் காது வணங்கிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.


சத்யா அன்றைக்கு சீக்கிரமே ஆ·பிஸ் வந்துவிட்டான். ரிஷப்ஷனுக்கு வந்து உட்கார்ந்து மணி பார்த்தான். மலர் எத்தனை மணிக்கு தினமும் ஆ·பிஸ் வருகிறாள் என்று கவனித்ததேயில்லை என்று நினைத்தான். அடிக்கடி தன் கண்கள் வாசல் பக்கம் போய் விழுவதை மறுபடி மறுபடி தவிர்க்க நினைத்தான். ரிஷப்ஷன் டெஸ்கிலிருந்து ஹிண்டு பேப்பர் எடுத்துப் புரட்டினான். மூன்றாம் பக்கத்தில் ட்ரூ ·ப்யூஷன் ரிலீஸ் பண்ணின 15x3 அலிகேட்டர் விளம்பரம் மற்றவைகளுக்கு நடுவில் ஜகஜோதியாய் தனித்துத் தெரிவதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். இந்த மாதிரி அவ்வளவு சீக்கிரம் அமையாது. கிளையண்டும் பார்த்தால் சந்தோஷப்படுவான். ஏற்கெனவே அவன் பிஸினஸ் நன்றாகத்தான் போகிறது. போகிற போக்கில் எப்படியும் வெவ்வேறு ஊர்களில் இன்னும் இரண்டொரு கிளைகள் திறந்துவிடுவான் போல இருக்கிறது. இந்த அக்கவுண்ட் கிடைப்பதற்கு தேவ் படாத பாடு பட்டது ஞாபகம் வந்தது.

ஏஜென்ஸி போட்டிகளுக்கு நடுவே ஜெயிக்க, குழுவாய் வேலை செய்ய வேண்டும். நல்ல கிரியேட்டிவ் கான்சப்ட் கொடுக்க வேண்டும். மக்களைக் கவர்கிற வாசகங்கள் யோசிக்க வேண்டும். கிளையண்ட்டின் வியாபாரத்தைத் தன் வியாபாரமாக நினைத்து விளம்பரப்படுத்த வேண்டும். என்றைக்கும் ஜெயிப்பதற்கு அக்கெளண்ட் குரூப் மற்றும் கிளையண்ட் சர்வீஸ¥க்கு இருக்கிற திறமை தவிர ஆர்ட் டைரக்டர், விஷ¥வலைசர், காபி ரைட்டரும் மூளையைக் குடைந்து யோசிக்க வேண்டும். யோசிக்கிற விஷயங்கள் வெரைட்டியாக புதுசாக இருக்கவேண்டும். இவையெல்லாவற்றைக்காட்டிலும், ஆ·பிஸ¤க்குள் வேலை செய்கிற அனைவரையும் ஒரு டீம் ஸ்பிரிட்டிலேயே வைத்திருக்க வேண்டும் உயிரோட்டமான சிந்தனைகளோடு.

சத்யா ரொம்ப விரும்பிதான் இந்தத் துறைக்கு வந்தான். இங்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தினசரி புதுப்புது வேலை. புதுப்புது டிசைன்கள். தேவ் அந்தக் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர். என்றாலும் எல்லோரிடமும் நட்பாய் நெருங்கி ஊக்கப்படுத்தும் அவர் குணம் எல்லாரையும் துடிப்பாய் வைத்திருந்தது. இறங்கி வந்து பழகுவார். வெளியே டீக்கடைக்குக் கூப்பிட்டாலும் வருவார். அவர் அடிக்கிற ஏ ஜோக்குகளுக்கு ஒரு ரசிக பட்டாளமே இருந்தது. யாரையும் வேலை முடிந்ததா என்று ஒரு போதும் கேட்கமாட்டார். எல்லா வேலைகளும் தானாகவே நடந்து கொண்டிருக்கும். அங்கே எல்லாருக்கும் சுதந்திரம் இருந்தது. சீனியர் காபிரைட்டராக இருக்கிற ஜே.ஸி எல்லாம் ஆ·பிஸிலேயே காலை நீட்டித் தூங்கிக் கொண்டிருப்பான். ஆனால் முடிக்க வேண்டிய வேலையை இரவு விழித்திருந்தாவது பண்ணிவிடுவான். அதுமாதிரி கிடைக்கிற சுதந்திரத்தை ஆக்கபூர்வமாக மாற்றும் வித்தை எப்படி என்பதை அங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரிந்தே இருந்தது.

இப்படி ஒரு குடும்பம் மாதிரியான சூழ்நிலைக்கு அங்கே வந்து சேர்ந்தவர்கள் பழகியும் விட்டார்கள். வந்து சேர்பவர்கள் அத்தனை சீக்கிரம் வேறு இடங்களுக்கு நகர்ந்துவிடக்கூட யோசிப்பார்கள். கிருஷ்ணா இங்கிருந்து கிளம்பும்போது கண்கலங்கி விட்டான். யாருக்கானாலும் அப்படித்தான் நடக்கும். திலகா போகும்போதுகூட அதேதான் நடந்தது. அவள் ரொம்ப எமோஷனலாகி ஆர்ட்டிஸ்ட் தாசப்பிரியன் டேபிளில் கவிழ்ந்து அழுதாள். இங்கே வந்து இரண்டு வருடமாகியும் வேறு வேலை தேடுவதைப் பற்றிய சிந்தனையில்லாமல்தான் இருக்கிறான் சத்யாவும்.

இன்றைக்கு ஸ்டுடியோவில் என்ன வேலை என்று யோசித்தான் சத்யா. அலிகேட்டர் இண்டர்நேஷனல் மறுபடி பட்ஜெட் ஒதுக்கி மீடியா ப்ளானிங்குக்கு வருகிற வரை நிம்மதியாய் இருக்கலாம். அதுவரை இருக்கவே இருக்கிறது வேறு வேலைகள். சரோஜா டெர்ரி டவல்ஸ் உற்பத்தியாளர்கள் பேக்கேஜ் டிசைன் கான்சப்ட்டுகள் கேட்டிருக்கிறார்கள். MCF பம்புகளுக்கு ஆண்டு அறிக்கை கவர் பேஜ் டிசைன், நீலமணி கேன்சர் பவுண்டேஷனுக்கு நாலு 15x2. வெஞ்சுரா ஹோம் அப்ளையன்சஸ் விழாக்காலத் தள்ளுபடிக்கு கொஞ்சம் தோரணம் கட்டி லே-அவுட் பண்ணவேண்டும். குமரா கோல்டுஹவுஸின் நூறாண்டுகாலத் தங்கப் பாரம்பரியத்தைப் பறை சாற்றவேண்டும். ஹிந்துஸ்தான் ஜீன்ஸ் பேலஸ்க்கு இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம். முந்துங்கள் இந்தச் சலுகை அக்-15 வரை மட்டுமே என்று நிறைய ஸ்டார் போட்டு வெடிக்கவேண்டும். அப்புறம் மஞ்சு மலாலாப் பொடி, பார்த்தி ரியல் எஸ்டேட், ஓபென்சாப்ட் டெக்னாலஜி என்று வரிசையாய் கிளையண்ட் பேரெழுதி பின்அப் போர்டில் லிஸ்ட் தொங்குகிறது. ஒவ்வொன்றாய் ஆரம்பித்து முடிக்கவேண்டும். ஸ்ரீ இருக்கிறான். பிரகாஷ் இருக்கிறான். அவ்வப்போது தேவ் வந்து கொஞ்சம் கைகொடுத்து உதவுவார். ஒன்றும் பிரச்சனையில்லை. முடித்துவிடலாம்.

கிருஷ்ணா அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டின் இன்சார்ஜாக இருந்தபோது அவனும்கூட வந்து கம்யூட்டரில் உட்கார்ந்து கலக்குவான். அவன் உருவாக்கின கான்சப்டுகள் ஹிண்டுவிலும், இண்டியன் எக்ஸ்பிரஸிலும் வந்திருக்கின்றன. கிளையண்ட் உச்சி குளிர்ந்து பாராட்டியிருக்கிறான். நீ அக்கெளண்ட்ஸ் பார்க்கறதை விட்டுட்டு பேசாம கிரியேட்டிவ் சைடுக்கு வந்துர்ரா என்று தேவ் கூட அடிக்கடி சொல்வார் அவனிடம். "எதுக்கு? எங்களுக்கெல்லாம் வேலை போறதுக்கா? என்பான் சத்யா.

ஆனால் கிருஷ்ணா போய்விட்டான். அவன் பெரியப்பா நச்சரித்ததில் அவர் கம்பெனியின் சிங்கப்பூர் கிளையைப் பார்த்துக்கொள்ளக் கிளம்பும்படி ஆயிற்று. அவன் போனதும் தேவ் உட்பட அனைவருக்கும் கையொடிந்தது போல் ஆகிவிட்டது. பேருக்குதான் அக்கெளண்ட்ஸ் பார்த்துக்கொண்டிருந்தானேயொழிய ஆல் இன் ஆல் அவன். எல்லா டிபார்ட்மெண்டிலேயும் அவன் கை இருக்கும்.

ஏதோ நிழலாட மலர்தான் வந்துவிட்டாளோ என்ற நப்பாசையில் சத்யா ஹிண்டுவை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்தான். ஜே.ஸி சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். ஜே.ஸி கொஞ்சம் லூசாக ஒரு ஜீன்ஸ், அதேபோல் தொள தொளவென்று காலரில்லாத பனியன், கலைந்த தலையுடன் இருந்தான். அவன் கண்களில் முதல் நாள் தண்ணியடித்ததின் ஹேங்க் ஓவர் தெரிந்தது. அவன் சிரிப்பைப் பார்த்தால் அவனிடம் என்னவோ சேதி இருப்பதுபோல் தெரிந்தது.

"என்ன நேத்து பார்ட்டியா" என்றான் சத்யா.

"அதையேன் கேக்கற? பேஜார் ஆயிடுச்சு."

என்னாச்சு என்று கேட்பதற்கு முன் அவனே சொன்னான். "நேத்து நம்ம பிரகாஷ் கணக்குல ட்ரிங்ஸ் பார்ட்டி. தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்பிப் போறப்ப அவன் ட்ரா·பிக் குச்சான்கிட்ட மாட்டிக்கிட்டான். ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ¥. பைக்கை புடுங்கி வெச்சட்டாங்க. இன்னிக்கு அவன் குதிர வண்டிக் கோர்டுக்குப் போய் அறுநூறு ரூபா கட்டிட்டு வந்தாதான் திரும்ப வண்டியை எடுக்கமுடியும். ஆக அவன் இன்னிக்கு ஆ·பிஸ் வரமாட்டான். அவன் லொட லொடல இருந்து தப்பிச்சோம்."

"அடப்பாவி!" என்றான் சத்யா. "அவன் இந்த மாதிரி மாட்டறது இது மூணாவது தடவையில்ல?"

ஜே.ஸி தொப்பை குலுங்க அதை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.

ஸ்ரீ வேறு இன்றைக்கு வந்தால்தான் வருவேன் என்று சொன்னதாக ஞாபகம். தேவ் வீட்டிலிருந்து நேராக MCF பம்ப்ஸ் ·பாக்டரிக்கு கார்ப்பரேட் ·பிலிம் ஷ¥ட்டிங்குக்கு போய்விடுவார். வருவதற்கு சாயங்காலம் ஆகிவிடும். அப்படியென்றால் ஸ்டுடியோவில் இன்றைக்கு அவன் மட்டும் தனியாய் சமாளித்தாகவேண்டும். அவனுக்கு மலைப்பாய் இருந்தது.

ஸ்டுடியோவுக்குப் போய் சரோஜா டெர்ரி டவல்கள் பேக்கேஜ் கான்சப்டை முதல் வேலையாய் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். திடீரென்று யாருமில்லாத தனிமை அவனுக்கு உறுத்தியது. கம்ப்யூட்டரின் எஸ்.எம்.பி.எஸ் பேன் ஓடுகிற சப்தம் அமானுஷ்யமாய் கேட்பது போலிருந்தது. அனூப் ஜலூடா ஸி.டி-யை தேடி எடுத்து ஓடவிட்டான். நிறைந்த இசையில் நிசப்தம் அடங்கியது.

ஒரு டெர்ரி டவலின்மேல் ஒரு பறவை இறகு இருக்கிற மாதிரி விஷ¥வல் வைத்துக்கொண்டு "இறகொத்த மென்மை" என்று கேப்ஷன் போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது டொக் டொக் என்று கதவு தட்டப்பட்டது. திரும்பிப் பார்க்காமலே அது மலர் என்று புரிந்து போயிற்று சத்யாவுக்கு. அந்தக் கம்பெனியிலேயே அவள் மட்டுமே அந்த மாதிரி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வருபவள். அவனுக்கு ஜிலீர் என்று ஒரு சந்தோஷ ஊற்று மனசுக்குள் எட்டிப்பார்த்தது.

"யெஸ்" என்றான் சத்யா. கதவின் கண்ணாடிச் சதுரத்திலிருந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த முகம் விலகி, கதவு திறந்தது. மலர் பளிச்சென்று வெளிப்பட்டாள்.

"அதான் Admission not restricted for gals! -ன்னு கதவுலயே போட்ருக்கே!" என்றான். அவள் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

"என்ன இன்னிக்கு தனிமைல இனிமையா?" என்றாள்.

"யாரும் வரலை என்ன பண்ணறது" என்றான். "ப்ரகாஷ் இருந்தா கொஞ்சம் அவனை ரகளையாவது பண்ணிட்டு இருப்போம். இன்னிக்குக் கொஞ்சம் போர்தான்னு நினைக்கிறேன்"

"நான் வேணா உன்கூட உக்காந்துக்கவா?" என்றாள்.

ஆஹா! பேஷாக உட்காரு. அதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

"ஏன் உனக்கு வேலையில்லையா?"

"இருக்கு சத்யா. ஆனா டாலி சா·ப்ட்வேர் தகறாறு பண்ணுது. கம்ப்யூசெர்வ்லேர்ந்து சர்வீஸ் என்ஜினியர் அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் என்ன பண்றது?"

சொல்லிவிட்டு மெதுவாய் ஸ்ரீயின் சேரை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரோஜா டெர்ரி டவல் சாம்பிளை எடுத்து கன்னத்தோடு வைத்துக் கொண்டு "ஸோ... ஸா·ப்ப்ப்ப்ப்ட்.. சத்யா!" என்றாள். அந்த டவல் நானாக இருக்கக் கூடாதா என்று ஆதங்கத்துடன் கூடிய எண்ணம் ஓடியது அவனுக்கு.

"காலைல ரஞ்சனிகூட வீட்டுக்கு வந்தியாமே.. எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருந்தது. என்னை ஏன் எழுப்பல மலர்?"

"ஆமா. என் தங்கச்சி டான்ஸ் க்ளாஸ் போறேன்னா. அது பத்தி விசாரிக்க ரஞ்சனிகூட அந்த வழியா வந்தேன். அப்படியே உங்க அம்மாவையும் பாத்த மாதிரியாச்சேன்னு உங்க வீட்டுக்கு ஒரு விஸிட். நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. உங்கம்மா எழுப்பறேன்னுதான் சொன்னாங்க. நான்தான் வேணாம்ணுட்டேன். அடுத்த தடவை கண்டிப்பா நீங்க முழிச்சுட்டு இருக்கும்போது வர்ரேன்." என்று சொல்லிச் சிரித்தாள். தொடர்ந்து "சரி ஸ்ரீ இன்னிக்கு ஆ·பிஸ் வரலைன்னு தெரியும் உங்களுக்கு. பிருந்தாவும் வரலை. தெரியுமோ?" என்றாள்.

"ஓ. அப்படியா?"

"யெஸ். இந்நேரம் அம்பாலிகா-ல காலைக் காட்சி டிக்கெட் வாங்கிட்டு யாரும் இல்லாத மூலையில உட்கார்ந்துட்டிருப்பாங்க"

"ம். எல்லாரும் விவரமாத்தான் ப்ளான் பண்றாங்க." என்றான் சத்யா. ஸ்ரீயின் மேல் லேசாய் பொறாமையாய் வந்தது அவனுக்கு. சரி அதெல்லாம் நமக்கெதற்கு. நம் வேலையைக் கவனிப்போம். இந்த மலர் மனசில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாளோ தெரியலையே. அது வேறு தெரியாமல் ரொம்ப அவஸ்தை.

மறுபடி டெர்ரி டவலுக்குள் கவனத்தைத் திருப்பப் பார்த்தான். முடியாது என்று தோன்றிவிட்டது. அவள் எழுந்து போனால் ஒழிய வேலை ஓடாது. ஆனால் அவள் போகக்கூடாது என்பதிலேயே அவன் மனதின் விருப்பங்கள் இருந்தன. வேலையை நிறுத்திவிட்டு சாயங்காலம் வரை அவளுடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமென்று ஆசையாயிருந்தது அவனுக்கு. ஒன்றும் பேசாவிட்டால்கூட பரவாயில்லை. சும்மா அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாலே போதாதா?

மலர் ஏதோ பலமாய் யோசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுக் கேட்டான் சத்யா.

"என்ன யோசிக்கற மலர்?"

மலர் சட்டென கவனம் கலைந்து "ஒண்ணுமில்ல.. சும்மா உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமான்னுதான்"

"கேளு."

"சத்யா நீங்க யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?" என்றாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 7 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

மீன் தொட்டியில் தங்க மீன்களுக்கு அம்மா நேரத்திற்கு உணவிடுவாள். வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் அதற்கு தண்ணீரும் மாற்றுவாள். அதுகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பது அம்மாவுக்கு நன்றி சொல்கிற மாதிரி இருக்கும். அம்மாவின் காலைச் சுற்றும் அந்த வெள்ளைப் பூனைக்கு பாலை ஊற்றுவாள். அது வாலை நிமிர்த்தி எல்லாம் குடித்துவிட்டு மீண்டும் அம்மாவின் காலையே சுற்றிச் சுற்றி வரும். இன்னும் என்ன வேண்டுமோ அதுக்கு? பிறகு பின்புற வாசலில் அழைக்கும் கூண்டு குருவிகளுக்கும் தனிப்பட்ட கவனிப்புகள் தொடரும். தானிய தூவலுக்கும் அம்மாவின் குரலுக்கும் பிறகே அது தன் சத்தங்களை அடக்கி வாசிக்கும். அப்புறம் தவறாமல் வருகிற அந்த அழுக்கு மூட்டை பிச்சைக்காரன். அவனுக்கும் இருப்பதை தந்து அம்மா தினந்தோறும் கவனிப்பாள். இவைகளுக்கே ராஜ உபசாரம் நடக்கிறது என்றால் என் மீதான அம்மாவின் கவனிப்பை என்ன சொல்வது? நான் நினைத்துக் கொள்வேன். அம்மாவின் ராஜ்ஜியத்தில் வாழப் பிறந்த அத்தனை உயிர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைதான்!சத்யா திடீரென்று மலரிடமிருந்து அப்படியொரு கேள்வியை அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. கொஞ்சம் வியப்பாகப் பார்த்தான். பதில் சொல்ல யோசித்தான். இதை திடீரென்னு அவனிடம் அவள் கேட்பதற்கான அவசியம் என்னவாக இருக்கும் என்று நினைத்தான். அதுவும் காலங்காத்தாலே.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்துவிட்டது. அவள் ஒரு நிலையில் இல்லை. என்னை மாதிரியே ஏதோ ஒரு பரிதவிப்பில் இருக்கிறாள். அவனுக்கும் அவளுக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத இழைப் பின்னல் நிகழ ஆரம்பித்துவிட்டது. அது என்ன என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அதையும் அவள் வாயாலேயே கேட்பதும்கூட சுகம்தான்.

"சத்யா" என்ற குரலில் அவன் யோசனைகளிலிருந்து கலைந்தான்.

"எனக்கு ஒண்ணு புரியலை சத்யா. எந்தக் கேள்வி கேட்டாலும் எது பேசினாலும் உடனே யோசனையில மூழ்கிடறீங்க. ஏன்?"

"யோசிக்கிற மாதிரியான கேள்விதானே நீ கேட்டிருக்கிறது." என்றான்.

"இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? ஆமா. இல்லை. இந்த ரெண்டுல ஒரு பதில்.. ஓ. சரி என்கிட்ட சொல்ல வேணாம்னு யோசிக்கறீங்க. ஓகே. சிரமப்பட வேணாம். விட்ருங்க."

ஒரு விவரிக்க முடியாத ஆவலுடன் அவள் அவன் முகத்தை எதிர்நோக்கிக் காத்திருந்ததை சத்யா உணர்ந்தான். அவன் சொல்லப் போகிற பதில் எந்தவிதத்தில் அவள் வாழ்க்கையை அல்லது குறைந்த பட்சம் இந்தக் கணத்தையாவது மாற்றப்போகிறது என்று தெரியவில்லை.

மலர் இன்னும் அந்த டவலைக் கையிலேயே வைத்துக்கொண்டு அதன் மென்மையையே விரல்களால் வருடி வருடி ஸ்பரிசித்துக்கொண்டிருந்தாள்.

"எனக்கும் இருக்கு லவ் அனுபவம்" என்றான். சொல்லிவிட்டு மெல்லிய சிரிப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான்.

மலர் சிறிது தயங்கி "இருக்கா? இல்ல இருந்ததா?" என்றாள்.

"இருந்தது."

"ஓ" என்றாள். கொஞ்சம் திருப்தியடைந்தமாதிரி ஒரு புன்னகையை முகத்தில் தவழவிட்டாள்.

அது சரி. அவளுக்கு ஏதோ ஒன்று என்னிடமிருந்து நிச்சயமாய் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அது மட்டும் தெரிந்துவிட்டது. சொல்லப் போனால் எல்லாமே புரிந்துவிட்டாற்போல் உணர்ந்தான். அவள் இனிமேல் எதுவுமே சொல்ல வேண்டாம். அவள் அப்படி இப்படி சுற்றி வளைத்து இத்தனை கேட்காமல் நேராகச் சொல்லலாம். அதற்காகத்தானே அவன் பதினொரு ஜென்மங்களாய்க் காத்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணா விளையாட்டாகச் சொன்னானா இல்லை சீரியஸாகவா என்றெல்லாம் தெரியாது. யார் யார் என்று யோசித்துத் தேடிக் கடைசியில் மலர் வந்து மனசுக்குள் அழிக்க முடியாமல் டெண்ட் போட்டு உட்கார்ந்துவிட்டாள். அவனுக்கு அதை அழித்துவிடவும் மனசில்லை. சத்யாவுக்கு முதலிலேயே அவளைப் பிடிக்கும் என்கிற விஷயம் மெல்லக் கனிந்து இப்போது மனசுக்கு றெக்கை முளைத்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அவள்தான் என்று தீர்மானித்தும்விட்டான். அவளுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது. மலர் மலர் என்று மனசு அரற்றுகிறது. சர்வநாடிகளும் அவள் பெயரைச் சொல்லித்தான் துடிக்கிற மாதிரியிருக்கிறது. கேட்கிற டூயட் பாட்டுக்களிலெல்லாம் தவறாமல் அவள் வந்து அவனுடன் மரத்தைச்சுற்றி ஆட ஆரம்பித்துவிட்டாள். இந்தக் கணம்தான் வாழ்வின் உன்னதம் என்று தோன்றியது. தனிமை. மலரின் அருகாமை. யாரின் தொந்தரவும் இல்லாமல் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்க வாய்த்திருக்கிறது. எல்லாமே உண்மையாயிருக்கிறது. எல்லாமே பிரமை என்று எண்ணம் வருகிறது. இந்த உணர்வுகள் சந்தோஷமாக இருக்கின்றன. தவிப்பாக இருக்கின்றன. மலர் நீ கிடைத்துவிட்டால் போன ஜென்மத்தில் யாரோ காதலர்களை நான் இக்கட்டிலிருந்து காப்பாற்றி சேர்த்துவைத்திருக்கிறேன் என்பது உறுதிப்பட்டுவிடும் என்று நினைத்தான்.

"மறுபடி யோசனை. சரி நான் போறேன்பா!" என்று டர்க்கி டவலை அதனிடத்தில் வைக்கப் போனாள்.

"மலர் இரு. சொல்றேன். பெரிசா ஒண்ணும் விஷயமில்லை. எனக்கு ஒரு பொண்ணை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒரு ரெண்டு வருஷம் முன்னால. லவ்வுன்னுகூட வெச்சுக்கலாம். அதுவும் ஒன் சைடுதான். ஆனா இப்ப அதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ் ஆயிருச்சு. அவ்வளவுதான். இப்ப ஒண்ணும் இல்ல." என்றான் அவசரமாய்.

"ம். என்ன பேரு?"

"பானு.. பானுப்ரியா"

மலர் அந்தப் பேரை உதட்டுக்குள்ளேயே ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

"ஒரு வேளை எல்லாம் சரியா வந்திருந்தா 'மிஸஸ். பானுப்ரியா சத்யமூர்த்தி' ன்னு ஆயிருக்குமா?" என்றாள்.

"சே.. ச்சே.. நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிச்சதில்லை மலர். அது ஒரு அனுபவம் அவ்வளவுதான். சரி இதெல்லாம் ஏன் கேட்டிட்டிருக்கிற?"

"ஒண்ணுமில்லை. சும்மாதான் கேட்டேன். நீங்க சொல்றமாதிரி அது ஒரு... என்ன சொல்றது... ஒரு மாதிரி சுகமான அனுபவம்தான்" என்றாள். சொல்லும்போது அவள் கண்கள் பளபளத்ததைப் பார்த்தான் சத்யா. கைவிரல்கள் இன்னும் அந்த டர்க்கி டவலை விடவில்லை. அதை லேசாய் தடவி மென்மையை உணரும் விரல் நகத்தின் பிங்க் நிற பாலிஷின்மேல் பார்வை ஓடியது. அவளின் லேசான கருப்பு நிறத்துக்கு அது எடுப்பாகத்தான் இருக்கிறது. அழகான நீளமான விரல்கள்.

அதை அப்படியே மெதுவாய்க் கோர்த்துக்கொண்டு மெதுவாய் அவள் மையிட்ட கண்களைப் பார்த்து எனக்கு நீ வேண்டுமென சொல்லிவிடலாமா என்று யோசித்தான். அவள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மறுகணம் அவளை மன அறைக்குள் வைத்துப் பூட்டி சாவியை ஏழுகடல் ஏழு மலை தாண்டி எனக்கே எட்டாத தொலைவுக்கு வீசிவிடலாம். வாழ்க்கை பூராவுக்கும் சேர்த்தி மொத்தமாய் என்னை பத்திரமெழுதி பத்திரமாக அவளிடத்தில் கொடுத்துவிடலாம்.

இன்றைக்கு வேலை ஓடாது என்று தோன்றிவிட்டது அவனுக்கு. காலையில் வந்ததிலிருந்து ஒரே டெர்ரிடவல் போட்டோவை நாலுதடவை திரும்பத் திரும்ப ஸ்கேன் பண்ணிவிட்டான். கைகள் அனிச்சையாய் மெளசை அதுபாட்டுக்குக் கிளிக்கிக் கொண்டிருக்கிறது. போட்டிருக்கிற ஏஸியில் அவள் பெர்·ப்யூம் கரைந்து படுத்துகிறது.

லேசாய் யோசித்துவிட்டு கொஞ்சம் தயக்கத்துடன் சத்யா கேட்டான். "மலர்.. நீ கேட்ட அதே கேள்வியை நான் கேட்டா?"

"என்ன கேள்வி?"

"ஹே! தெரியாத மாதிரி நடிக்க வேணாம். நீ யாரையாவது...."

கேட்டுவிட்டு சட்டென்று திரும்பி அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். இதோ இப்போது தெரிந்துவிடும் என் மன அவஸ்தைகளுக்கான பதில். அவள் என்ன சொல்கிறாள் பார்க்கலாம். அவளுக்கு அவனிடம் எதையோ சொல்கிற விருப்பத்தின் பேரில்தான் இப்போது வந்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இன்றைக்கு ஸ்டுடியோவில் யாருமில்லை என்கிற சந்தர்ப்பத்தை அவள் தேர்ந்தெடுத்திருக்கிறாள். எப்படியோ எனக்குத் தெரிய வேண்டியது தெரிந்தால் சரி.

அவள் முகத்தில் அவனிடம் வசமாய் மாட்டிக்கொண்ட கலவரம் படர்ந்து பின்னர் அதே லேசான வெட்கமாய் உருமாறியது. அவள் தயக்கத்துடன் ஒரு சிரிப்பு சிரித்து பின்னர் என்னவோ சொல்ல வருவதற்குள் இன்டர்காம் அடித்தது.

"ஒரு நிமிஷம் இரு" என்று அவளிடம் சொல்லிவிட்டு, சத்யா எடுத்துப் பேசினான். மறுமுனையில் தேவின் குரல் கேட்டது.

தேவ் MCF பம்ப்ஸ் ·பாக்டரியிலிருந்து பேசினார். கார்ப்பரேட் ·பிலிமுக்கான ஸ்டோரி போர்ட் பிரிண்ட்அவுட்ஸ் அவர் டேபிளில் மறந்துவிட்டுப் போனதாகவும், அதை உடனே பிரகாஷிடம் எடுத்துக் கொடுத்து அவனை MCF ·பேக்டரிக்கு அனுப்பு என்றார்.

"ஸார். பிரகாஷ் வரலை இன்னிக்கு"

"ஓ.. வாட் ஹேப்பண்ட்? சரி. ஸ்ரீ இருக்கானா?"

"அவனும் இன்னைக்கு லீவு.."

"என்னாச்சு எல்லாருக்கும் இன்னைக்கு?" என்று கேட்டுவிட்டு மறுமுனையில் ஒரு சில விநாடிகள் யோசித்தார். சத்யா அவர் சொல்லக் காத்திருந்தான்.

கொஞ்ச நேரம் மெளனத்துக்குப் பிறகு தேவின் குரல் மீண்டு வந்தது. "சரி சத்யா உனக்கு அர்ஜண்ட் ஒர்க், ப்ரியாரிட்டீஸ், டெட்லைன்ஸ் எதுவும் இல்லாட்டி நீ கிளம்பி வா. ஐ நீட் யுவர் அசிஸ்டன்ஸ். MCF தெரியுமில்லையா? பி.என் பாளையம் பஸ் ஸ்டாப் தாண்டி நேரா.."

"தெரியும். தெரியும். ஐ வில் பி தேர் இன் அனதர் ·பிப்டீன் மினிட்ஸ் ஸார். ஓகே?" என்று வைத்தான்.

மலர் புரிந்து கொண்டவளாக எழுந்துவிட்டிருந்தாள். உரையாடல் பாதியில் நின்றுவிட்ட வருத்தம் இருவர் முகத்திலும் இருக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்துக்கொண்டனர்.

"சரி சத்யா. நீங்க கிளம்புங்க" என்றாள்.

அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. எல்லாம் கனிந்து வரும்போது இதென்ன இடர்ப்பாடு? அவள் தன் கதையை சொல்ல வருவதற்குள் தேவ் நடுவில் புகுந்து கெடுத்துவிட்டார். அவன் இப்போது ஸ்டோரி போர்டை எடுத்துக்கொண்டு கிளம்பியாகவேண்டும். இந்த அவசரத்தில் பேசினால் எதுவும் சரிவராது. பொறுமையாய் இன்னொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அவனுக்குப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கியது.

மலர் கதவை மெதுவாய் சாத்திவிட்டு கிளம்பிப் போவதைப் ஒரு சில நொடிகள் மெளனமாய்ப் பார்த்தான். உலகத்திலேயே மிகச் சுவாரஸ்யமான விஷயம் காதல் கதைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுதான். அதுவும் ஒரு பெண்ணிடம் என்றால் இன்னும் சுவாரஸ்யம். அது முழுசாய் அரங்கேறாமல் கெட்டுவிட்டது. ஒரு வேளை நிறையப் பேச வாய்ப்பு அமைந்திருந்தால் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்திருக்குமோ என்னவோ. அந்த வாய்ப்பு தள்ளிப் போய்விட்டது. சரி அதுகூட நல்லதுக்குத்தான். இந்த தவிப்பு இருக்கிறதே தவிப்பு! அது நன்றாகத்தான் இருக்கிறது. அதை அப்படியே இன்னும் கொஞ்ச நாள்கூட அனுபவித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

தேவின் அறைக்குப் போய் அவர் டேபிளில் இருந்து அந்த ஸ்டோரி போர்ட் மற்றும் ஸ்கிரிப்ட் ·பைலை எடுத்துக்கொண்டான். திரும்பும்போது அவர் டேபிளில் இருந்த இன்டர்காம் அடித்தது. எடுத்தான். மறுமுனையில் ஹலோ என்றது மலரின் குரல் மாதிரியிருந்தது.

"நீ தேவ் ரூம்ல இருப்பேன்னு தெரிஞ்சுதான் கூப்பிட்டேன். ஒண்ணுமில்ல சும்மாதான்.  நம்ம டாபிக் பாதில நின்னுபோனது என்னவோ மாதிரி இருந்தது."

"அது பரவாயில்லை." என்றான்.

"ம்ம்ம். ஓகே!. அப்றம்.. சத்யா..." என்று தயக்கத்துடன் இழுத்தது அவள் குரல்.

"சொல்லு என்ன?"

"அது வந்து... சத்யா! நீங்க ·ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் தனியா பேசணும்."

"ம்.. ஷ்யூர்"

மறுமுனை டொக் என்று வைக்கப்பட்டது. சத்யா ரிஸீவரை நெஞ்சோடு வைத்துக்கொண்டு சில நொடிகள் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 8 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

சுந்தரி மாமி. அம்மா பயப்படுகிற ஒரே நபர். பயப்படுவது என்றால் பேசவும் முடியாமல் கேட்கவும் முடியாமல் ஒருவித அவஸ்தை அது. காரணம் சுந்தரி மாமி சொல்லும் மகன் பற்றிய அமெரிக்க புராணங்கள்தான். அங்கே அவனுக்கான வேலை - சம்பளம் - மற்றும் அவனுக்குக் கிடைக்கும் அளவு கடந்த வசதிகள் என்பதே மாமியின் பிரசங்கத்தில் முக்கிய பகுதிகள். இதை ஒரு நாள் கேட்கலாம். ஒவ்வொருநாளும் கேட்க முடியுமா ? அதுவும் நான் இருக்கிறபோது மகனைப் பற்றிய பெருமைகள் மாமியிடம் தாங்க முடியாது. தாங்க முடியாமல்தான் அம்மா அதையும் கேட்டாள். 'எனக்கு ஒண்ணுன்னா என் பையன் உடனே வந்து நிற்பான். நீ செத்தாக்கூட உன் பையன் வருவானான்னு தெரியாது' என்றாள். அம்மா சொன்னதில் இருந்த உண்மை மாமியை அதிர வைக்க உடனடியாய் அழுதுவிட்டது. அம்மா மாமியின் தலையைத் தடவி 'நொந்து போய் சொல்லிட்டேன். உங்களை நோகடிக்கணும்னு சொல்லலே' என்றாள். அதன் பிறகே மாமியின் அழுகையும் மகனின் புராணமும் நின்றது. நான் அம்மாவிடம் கேட்டேன். உன்னால் மட்டும் எப்படியம்மா சண்டையும் போடமுடிகிறது. உடனே சமாதானமும் செய்ய முடிகிறது?MCF-க்குப் போகிற வழியெல்லாம் ட்ராஃபிக்கிலும், சிக்னல்களிலும் சத்யாவின் கவனம் செல்லவில்லை. மனசு பூரா மலர் இன்டர்காமில் சொன்ன விஷயத்தின்மீதே இருந்தது. அவனோடு அவள் பேசவேண்டும் என்று சொன்னது எதைப்பற்றி என்று திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தான். என்ன விஷயமாக இருந்தாலும் அதை முன்னறிவித்துவிட்டு என்னைத் தயார்பண்ணிவிட்டாள். இனி சொல்ல வேண்டியதுதான் பாக்கி. அதற்கான சந்தர்ப்பம் தானாக அமையாவிட்டாலும் நாமாக உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். நிச்சயமாய் அவள் சொல்லப்போவது ஒரு முக்கியமான விஷயம்தான். அதைச் அவள் சொல்வதற்கும் நான் கேட்பதற்கும் உரிய ஒரு அழகான சூழல் மட்டும் உருவாகிவிட்டால் ஆஹா.. பின் வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் என்று தோன்றியது அவனுக்கு.

கிருஷ்ணா தவிர வேறு யாருக்கேனும் இந்த விஷயம் தெரியுமா என்றும் தெரியவில்லை. நான்கூட ஏன் இது குறித்து யாரிடத்திலும் கலந்தாலோசிக்கவில்லை? ஸ்ரீயோ, பிரகாஷோ இதைக் கேள்விப்பட நேர்ந்தால் என்ன ஆகும் என்றும் கூட அவனுக்கு எண்ணம் ஓடியது. அப்புறம் ஒன்றும் சொல்லவே வேண்டாம். பயங்கரமாய் கலாட்டா பண்ணிவிடுவார்கள். அடக்கி வாசிப்பதே நல்லது.

எப்படியோ மலருடன் உரையாடல் இதுவரை வந்தாயிற்று. அவள் கண்களின் பளபளப்பிலேயே அவள் மனது புரிகிறது. அவள் அடிக்கடி நகம் கடிப்பதில் அவள் நெர்வஸாய் இருப்பது தெரிகிறது. அவனுடன் அவள் இண்டர்காமில் பேசும்போது லேசான வார்த்தைத் தடுமாற்றம் தெரிந்ததை அவன் கவனித்திருந்தான். கிருஷ்ணா பொய் சொல்லவில்லை. சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போயிருந்தாலும் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறான்.

அவனுக்கு மனதில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதோ இந்த உணர்வுகள் இனி திரும்பக் கிடைக்காது. இதை அப்படியே அனுபவித்துவிடவேண்டும் என்று அவன் மனதில் நினைப்புத் தோன்றியது. மலர்ர்ர்ர்ர்ர் என்று உடம்பின் நரம்புகள் சந்தோஷக்கூச்சலிட்டு பைக்கின் ஆக்ஸிலரேட்டரை நன்றாய் ஒரு முறுக்கு முறுக்குவதற்குள் MCF வந்துவிட்டது.

ரிசப்ஷனில் சோபாவில் அந்தப் பெண் சத்யாவுக்காகக் காத்திருந்தாள். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். பெயர் மதுளா, MCF-ன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் என்றாள். தேவ் உட்பட எல்லோரும் அவன் கொண்டுவருகிற ஸ்டோரி போர்டுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். தனக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்றாள். சத்யாவைப் பற்றி லேசாய்க் கேட்டறிந்து கொண்டாள்.

அவளுடன் முன்பே ஓரிரு முறைகள் தொலைபேசியிருக்கிறான்தான். நேரில் முதன் முறை பார்க்கிறான். குதிரைவால் கொண்டையுடன் தலையை ஆட்டி ஆட்டி அவள் பேசுவது நன்றாகத்தான் இருந்தது. டெலிபோனில் பேசும்போதும் இப்படித்தான் பேசுவாளா என்று சந்தேகம் வந்தது. லேசாய் உறுத்தாத மாதிரி லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். நீலச்சாம்பல் நிறத்தில் புடவை கட்டியிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள்.

பம்ப் உதிரி பாகங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த கிரவுண்டு எல்லாம் தாண்டி ஒர்க்ஷாப்புக்கு கூட்டிச் சென்றாள். மதுளாவைப் பின் தொடர்ந்து அவன் நடந்தான். அவள் நடையில் தன்னம்பிக்கை கலந்திருந்தது. காற்றில் கலந்திருந்த எஃகு வாசனையைச் சுவாசித்துக்கொண்டே அவளுடன் ஒர்க்ஷாப் தளத்துக்குப் போனான்.

"ஹாய் தேவ், உங்காளு வந்தாச்சு" என்றாள் சிரித்துக்கொண்டே.

தேவ் சிலிண்ட்ரிகல் கிரைண்டிங் மெஷினின் அருகில் கேமரா செட்டிங்கை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார். சத்யாவைப் பார்த்ததும் புன்னகைத்தார். அவனிடமிருந்து ஃபைலை வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் அ லாட் என்றார். "நீ எங்கூட இன்னிக்கு இங்க இருக்க வேண்டி வரும். காலைல வந்து இங்க ஃபெளண்டரி ஷாட்ஸ் எடுத்து முடிச்சிட்டேன். இங்க ஒர்க்ஷாப் ஷூட் பண்ணிட்டு அப்றம் கார்ப்ரேட் ஆஃபிஸ், CEO ஸ்பீச், ஸ்டாஃப், ஒர்க்கர்ஸ் இதை முடிக்கணும். கஸ்டமர் டெஸ்டிமோனியலும், ப்ராடக்ட்ஸூம் நாளைக்குதான். எப்படியும் நாளைக்கு முடிச்சாகணும். இல்லைன்னா கேமராமேன் டீம் பட்ஜெட் இடிக்கும். நீ கொஞ்சம் கேமராமேனுக்கு அஸிஸ்ட் பண்ணு. இதுக்கு முன்னாடி ஸ்க்ரூ கம்ப்ரஸர் டிவிஷன் ஃபிலிம் பண்ணினப்ப நீ இருந்தியா?"

"இல்ல சார். இதான் ஃபர்ஸ்ட் டைம்"

"ஓகே. நோ ப்ராப்ளம்! இதான் சான்ஸ். கத்துக்கோ! பாரு அந்தப் பொண்ணு மதுளாதான் இந்த கார்ப்பரேட் ஃபிலிம் கோ-ஆர்டினேஷன் எல்லாம் பாத்துக்கறது. எதுன்னாலும் அதுகூட இண்டராக்ட் பண்ணிக்கோ. ஸோ உனக்கும் போரடிக்காம இருக்கும்." என்றார் தேவ் அவளுக்குக் கேட்காதமாதிரி. பின் அவனருகில் வந்து மேலும் குரலைத் தழைத்துக்கொண்டு "என்ன பிஜுரு ஓகேவா?" என்றார் கடைக்கண்ணால் அவளைக் காட்டி.

சத்யா மழுப்பலாய் சிரித்தான்.

"சிரிக்காத மேன். சீக்கிரம் எதையாவது கரெக்ட் பண்ணிட்டு கல்யாணம் கில்யாணம் பண்ணி செட்டிலாயிடு. என்ன புரியுதா?" என்றார். பின்னர் கேமராமேன் மணிவாசகத்தை அறிமுகம் செய்து வைத்துவிட்டு அந்தப்பக்கம் நகர்ந்துவிட்டார்.

சத்யா அவளைப் பார்த்தான். மலரைவிடவும் இரண்டு சதவிகிதம் அழகாகத்தான் இருந்தாள். உதட்டிலேயே பசைபோட்டு ஒட்டியதுபோல் ஒரு புன்னகையை நிரந்தரமாய் முகத்தில் வைத்திருந்தாள். எதற்கெடுத்தாலும் தலையாட்டிப் பேசினாள். சுற்றிலும் நடப்பவைகளை நல்ல உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். சி.கி. மெஷினை ஆபரேட்டர் இயக்க சுற்றிலும் இரண்டாயிரம் வாட்ஸ் விளக்குகளை ஒளிரவிட்டு குட்டி ட்ராலியில் லேசாய் கேமரா நகர்ந்தது.

இதுமாதிரி நிறைய எடுக்கவேண்டும் என்று புரிந்தது அவனுக்கு. அப்படியானால் இன்றைக்கும் சாயங்காலம் ரொம்ப நேரம் இருக்க வேண்டிவரும் என்று தோன்றியது. இங்கே சீக்கிரம் வேலை முடிந்துவிட்டால் உடனே ஓடிப்போய் மலர் ஆஃபிஸிலிருந்து கிளம்புவதற்குள் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஒருவேளை அவன் சீக்கிரம் வந்துவிடுவான் என்று அவள்கூட காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைத்தான்.

அவனை இப்போது விட்டால் ட்ரு ஃப்யூஷனுக்கு ஓடிப்போய் உட்கார்ந்துகொள்ளலாம் போல் இருந்தது. சரி இன்றைக்கு சமாளிப்போம். நாளைக்கு ஸ்ரீ வந்துவிட்டால் அவனை இங்கே அனுப்பி விடலாம். ஸ்க்ரூ கம்ப்ரஸர் ஃபிலிமுக்குக்கூட அவன்தான் வந்தான் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது மதுளா அருகில் வந்தாள்.

"கிருஷ்ணா இப்ப எங்க இருக்கார்?" என்றாள். சத்யா சொன்னான். மதுளா கிருஷ்ணாவைப் பற்றி மேலும் ஒருசில விவரங்கள் கேட்டுவிட்டு திடீரென்று "கிருஷ்ணா ஆளு இன்னும் இக்னிஷன் அட்வர்டைசிங்லதான் இருக்காளா?" என்றாள்.

"யாரு ரஞ்சனியா? ஆமா அவ அங்கதான் இருக்கா! அவளை உங்களுக்குத் தெரியுமா?" என்றான் ஆச்சரியத்துடன்.

"முன்னெல்லாம் ப்ரெஸ் ரிலீஸ்க்கு அங்கதானே குடுத்துட்டிருந்தோம். அப்படித்தான் தெரியும் அவளை. சரி அவங்க ரெண்டுபேரும் எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறாங்க?"

"யாருக்குத் தெரியும்?" என்று சிரித்தான்.

மதுளா இதுமாதிரி எதையாவது கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். தேவ் சொன்னமாதிரி போரடிக்காமல் பொழுது ஓடிவிடும் போலிருக்கிறது. மணிவாசகம் கிரைண்டிங்கை விட்டுவிட்டு ஸிஎன்ஸி மெஷினுக்கு நகர்ந்துவிட்டார். இது மாதிரி எல்லாம் ஷாட் ஷாட்டாக முடித்து எடிட் பண்ணி, ம்யூசிக் சேர்த்து, K.C. மெய்யப்பன் வாய்ஸ் ஓவர் சேர்த்துவிட்டால் அட்டகாசமான பதினைந்து நிமிட கார்ப்பரேட் ஃபிலிம் ரெடி. தேவின் ஸ்டோ ரிபோர்டுக்கு ஒரு சபாஷ் போடவேண்டும். இதுபோல படங்களுக்கு நல்ல கிரியேட்டிவ் கான்செப்டுடன் அழகான ஆங்கிலத்தில் அவரெழுதுகிற ஸ்கிரிப்ட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

"எனக்கு இந்த மாதிரி கிரியேட்டிவ் ஒர்க்ஸ்ல எல்லாம் ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. CEO-க்கே இது தெரிஞ்சுதானோ என்னவோ கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ல வெச்சிருக்கார். பேசாம நான் தேவ்கிட்ட சொல்லி உங்க கம்பெனில வேலை கேட்டு வந்துரலாம்னு பாக்கறேன்" என்று சிரித்தாள் மதுளா. மேலும் நிறுத்தாமல் அவளே பேசினாள். "என்னோட ஒண்ணுவிட்ட அண்ணா ஒருத்தன் ஆர்ட்டிஸ்ட். கே.ஜி பக்கத்துல ஒரு ஆர்ட் காலரில அவன் பெயிண்டிங்க்ஸ் எக்ஸிபிஷன் வெச்சிருக்கான். போய் பாக்கணும்னு கொள்ளை ஆசை. ஆனா முடியாம இந்த ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். நாளைக்குத்தான் அது கடைசி. நான்கூட பெயிண்டிங் எல்லாம் பண்ணுவேன். கம்ப்யூட்டர்ல கோரல்ட்ரா, இல்லஸ்ட்ரேட்டர் எல்லாம்கூட தெரியும்"

"ஓ கிரேட்" என்று சத்யா கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொண்டான்.

மதுளா இது மாதிரி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் அட்வர்டைசிங் ஏஜென்ஸியில் வேலை செய்வதற்கு லாயக்கான ஆள்தான். அப்படி இப்படி ஒர்க்ஷாப் தளத்தின் ஷூட்டிங் எல்லாம் முடித்து கேமரா உபகரணங்களைத் தூக்கிக்கொண்டு யூனிட் கார்ப்பரேட் ஆஃபிஸ் பில்டிங்குக்கு நகர்ந்தது. தேவ் நடுநடுவே வருவதும் கொஞ்ச நேரம் கேமராமேனுடன் கலந்தாலோசனை நடத்திவிட்டு பின் எங்கோ மறைவதுமாக இருந்தார். சத்யாவுக்கு சொல்லப்போனால் பெரிதாய் வேலை ஒன்றும் இருக்கவில்லை அங்கே. எல்லாவற்றையும் கேமரா மணிவாசகமே சமர்த்தாகப் பார்த்துக்கொள்கிறார். ஒரு கையில் நோட் பேடும், மறுகையில் ஒரு பால்பாயிண்ட் பேனாவுமாக மதுளாகூட சும்மா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அவனுக்கு மத்தியானத்துக்கு மேல் அங்கே இருக்கக்கொள்ளவில்லை. பேசாமல் தேவிடம் சொல்லிவிட்டு ஆஃபிஸூக்குக் கிளம்பிவிடலாமா என்றுகூட யோசித்தான். சரி. எப்படியிருந்தாலும் ஒரு ஆறு மணிக்கெல்லாம் பேக்அப் பண்ணிவிடுவார்கள். இருந்ததே இருந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாகிலும் சமாளித்துவிடுவோம் என்று மனசை சமாதானப்படுத்திக்கொண்டான்.

குறைந்தபட்சம் ஆஃபிஸூக்காவது ஒரு போன் பண்ணினாலென்ன என்று தோன்றியது அவனுக்கு. மதுளாவிடம் கேட்டபோது அவளே இண்டர்காமில் ரிசப்ஷனுக்குப் பேசி லைன் வாங்கிக்கொடுத்தாள்.

மறுமுனையில் ஜே.ஸி குரல் கேட்டது. "ஹே! ஷூட்டிங் எப்டி போகுது?" என்றான்.

"2 KVA லைட் பாத்து பாத்து கண்ணு போச்சு. சரி. சும்மாதான் கூப்பிட்டேன். அங்க என்ன சேதி?" என்றான் சத்யா பொதுவாய். எதைக் கேட்பது என்ன பேசுவது என்று அவனுக்கே குழப்பமாய்த்தான் இருந்தது. மலர் ஒரு வேளை ட்ரு ஃப்யூஷன் ரிசப்ஷன் டெஸ்கில் இருந்திருந்திருந்தால் எவ்வனவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தான். இந்த சுபாஷிணிகூட எங்கே போனாள்? ஜே.ஸி எதற்கு போனை எடுத்துத் தொலைத்தான் என்று என்னென்னவோ எண்ணம் ஓடியது. இந்த மதுளா வேறு தள்ளி நின்று போன் பேசுகிற என்னை மூக்குக் கண்ணாடி வழியே எக்ஸிபிஷன் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

"நியூஸா.. ஹாங்! இருக்கு. கிருஷ்ணா நாளைக்கு சிங்கப்பூர்லேர்ந்து வரானாம். அவன் பெரியம்மாக்கு பி.எஸ்.ஜி ஹாஸ்பிடல்ல ஏதோ க்ரிடிகல் ஆபரேஷனாம். அதனால ஒரு அர்ஜண்ட் விசிட் டு இண்டியா" என்றான் ஜே.ஸி.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 9 ]


கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மா எல்லோருடனும் எளிதில் பழகுகிற ஆள்தான். இருந்தாலும் பக்கத்து வீட்டுப் பெண்கள் வேலைகள் முடித்து அடிக்கிற அரட்டையில் அம்மா கலந்துகொள்வதில்லை. அந்த சமயத்தில் அம்மா அவர்களைக் கடந்து பங்கஜா மாமியிடம் ஹிந்தியில் சந்தேகம் கேட்கப் போவாள். பிறகு டிவியில் தொடர்களைத் தவிர்த்து தையல் மிஷினைத் துடைத்து பழைய துணிகளையும் புதிய ஜாக்கெட்டுகளையும் தைக்கத் தொடங்குவாள். மதிய தூக்கத்தையும் விடுத்து அந்த நேரத்தில் முடிக்க வேண்டிய புத்தகத்தைப் படிக்க அமர்வாள். எப்பொழுதாவது கோயில் - போடுகிற நகைகளில் எளிமை - ஜவுளிக்கடையில் பிடித்த புடவையை உடனடியாய் எடுத்து திரும்புகிற வேகம் என எல்லா விஷயங்களிலும் அவர்களிலிருந்து அம்மா விலகித்தான் இருப்பாள். அதனால்தான் என்னவோ அம்மாவைப் பற்றி - 'அலட்டிக்கொள்வாள்' என வீதியில் ஒரு விமர்சனம் உண்டு. அதையும் ஒரு நாள் அம்மாவிடம் கேட்டுப் பார்த்தேன். அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை. சிரித்துவிட்டுப் போனாள் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல்!கிருஷ்ணா வருகிறான் என்று செய்தி கேள்விப்பட்டது சத்யாவுக்கு உற்சாகமாயிருந்தது. அவன் வருகிறான் என்பதும் அவன் பெரியம்மா ஆஸ்பத்திரியில் இருப்பதும் ஆன தகவல்கள் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

இரவு வீட்டுக்குத் திரும்பி அம்மாவிடம் இதைச் சொன்ன போது தனக்கு முன்பே அந்த விஷயம் தெரியுமென்றாள். கிருஷ்ணா வந்தால் எத்தனை நாள் இருப்பானென்று தெரியவில்லை. அவன் வீட்டுக்குப் போன் பண்ணிப் பார்த்தான். ஒரு வேளை இன்றைக்கு இரவு வந்தாலும் வருவான் என்றார்கள். நல்லது. எல்லாமே ஏதோ ஒரு நேர்கோட்டில்தான் போய்க்கொண்டிருக்கிறது. அவன் வரட்டும். இப்போது எல்லாமே கொஞ்சம் தெளிவாய்த் தெரிகிறதுபோலத்தான் இருக்கிறது. அவன் வந்தால், அவனுடன் கொஞ்சம் பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவாகக்கூடும். சத்யாவுக்கு யாருடனாவது உட்கார்ந்து பேசியே ரொம்ப நாளாகிவிட்டதுபோல் தோன்றியது. இப்போதெல்லாம் மனதிற்குள் அடிக்கடி என்னவோ பிசைகிறது. யாருடனும் சகஜமாய் இருக்கமுடியவில்லை. சகஜமாய்ப் பேசமுடியவில்லை. முன்பு மாதிரி வேலையில் கவனம் ஒட்ட மறுக்கிறது. தினமும் தூக்கம் பிடிக்க நடுநிசி தாண்டிவிடுகிறது. காலையில் எழுந்த கணம் முதல் ஏதாவது ஒன்றைச் சுற்றி எண்ணங்கள் வலைபின்ன ஆரம்பித்துவிடுகின்றன. தானாகவே பேசிக்கொள்கிறோமோ என்றுகூட ஒரு சில நேரம் அவனுக்கு சந்தேகம் வந்து போனது. சாப்பிட உட்கார்ந்திருக்கும்போது அம்மாகூட ஒரு தடவை கேட்டாள். 'ஏன் சாதத்தை வெறுமனே பிசைஞ்சிட்டிருக்க?' என்று. இது நல்லதுக்கல்ல என்று தோன்றிவிட்டது. ஒழுங்காய்ப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையை முதலில் கிருஷ்ணாவும் பிறகு மலரும் வந்து கெடுத்துவிட்டார்கள்.

அம்மாவிடம் கிருஷ்ணாவின் பெரியம்மா பற்றி விசாரித்தான். அவன் பெரியம்மாவுக்கு மூளையில் ஒரு சின்ன கட்டியிருப்பதாகவும் கொஞ்சம் சிக்கலான ஒரு ஆபரேஷன் பண்ணி அதை அகற்ற வேண்டியிருப்பதாகவும் சொன்னாள்.

"ஸ்கேன் மத்த டெஸ்ட் எல்லாம் எடுத்து கன்·பர்ம் பண்ணிட்டாங்க. அப்பப்ப நினைவு தப்பி என்னென்னமோ சம்பந்தமில்லாம பேசிட்டும், கேட்டுட்டும் இருக்காங்களாம். அவங்களுக்கு குழந்தைகள் வேற இல்ல. கிருஷ்ணாதான் எல்லாமே. ஆபரேஷன் முடியறவரை கூட இருந்து பார்த்துக்கலாமேன்னு அவன் சிங்கப்பூர்ல இருந்து கிளம்பி வர்ரான். இப்பதான் போனான். அதுக்குள்ள திரும்பி வர்றான். கொஞ்சம் கஷ்டம்தான். சரி! வந்தா அவன் பெரியப்பாவுக்கு கொஞ்சம் ஆறுதலாச்சு! இல்லையா? ஆனா போறதுக்கும் வர்ரதுக்கும்தான் எத்தனை செலவு!" என்றாள்.

"ஓ.. ஆமா" என்றான். "வயசான காலத்தில எதாச்சும் வந்துட்டாலே பிரச்சினைதான். உடம்பை ஜாக்கிரதையா கவனிச்சுக்கணும். இல்லைன்னா கஷ்டம்தான்."

இதைச் சொல்லும்போது அவனுக்கு திடீரென்று அம்மா கேட்ட B-காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை இன்னும் அவன் வாங்கிவந்து கொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. காலையிலிருந்து நினைவுகள் ஓரிடத்தில் நிற்காமல் அலைபாய்ந்ததில் இந்த விஷயம் சுத்தமாய் மறந்தேவிட்டது. அம்மா அவனிடம் இந்த மாதிரி வேலைகள் சொல்வது ரொம்பக் குறைவுதான். அப்படியே சொல்வதானாலும் ரொம்ப யோசித்தே சொல்வாள். காலையில்கூட அதை தயக்கமாய்த்தான் கேட்டாள்.

"டேப்லட்ஸ் வாங்கிட்டு வர மறந்துட்டேன்" என்றான் லேசான குற்ற உணர்ச்சியுடன்.

"அது பரவாயில்லை." என்றாள். "நீயே டெய்லி டயர்டா ஆ·பிஸிலிருந்து திரும்பி வர்ரே. இதுல இது எப்படி ஞாபகமிருக்கும்?" என்றாள். அம்மா சொன்னது குற்றம் சாட்டுகிற குரலாக இல்லாமல் இயல்பாகவே இருந்ததை சத்யா கவனித்தான். நாளைக்கு கண்டிப்பாக மறக்காமல் வாங்கி வந்துவிடவேண்டும் என்று நினைத்தான். வர வர வீட்டில் இருக்கிற நேரம் குறைந்துவிட்டதோ என்றுகூட தோன்றியது அவனுக்கு. காலையில் போனால் திரும்பிவர இப்போதெல்லாம் எப்படியும் குறைந்தது ஒன்பது மணியாவது ஆகிவிடுகிறது. 'பல்வலியா இருக்கு. டென்டிஸ்ட்-டிடம் கூட்டிப்போ' என்றுகூட ரொம்ப நாளாய் அம்மா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள். நாளைக்கு நாளைக்கு என்று சொல்லி ரொம்ப நாள் கடந்தும்விட்டது. இப்போது அம்மாவிடமிருந்து பல்வலி பற்றிய புகாரைக்கூட காணோம். ஒரு வேளை சரியாகிவிட்டதுபோலும் என்று நினைத்தான்.

மறுநாள் தேவிடம் போனில் பேசினபோது அன்றைக்கு ஸ்ரீ வந்து ஷ¥ட்டிங்கை கவனித்துக்கொள்வான் என்றும் நீ வரவேண்டியதில்லை என்றும் சொன்னார். நல்லது என்று நினைத்துக்கொண்டான். சத்யா அவரிடம் காலை ஒரு இரண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டுவிட்டு விஸிட்டர் நேரத்துக்கு பி.எஸ்.ஜி ஹாஸ்பிடலுக்கு அம்மாவைக் கூட்டிக்கொண்டு போனான். இன்றைக்கு மலரை கொஞ்சம் லேட்டாகத்தான் பார்க்க முடியும் என்கிற விஷயம் உறுத்தியது. பரவாயில்லை. அதற்குமுன் கிருஷ்ணாவை பார்த்துவிடுதல் நலம். சொன்னபடி நேற்று அவன் இந்தியாவுக்கு வந்திறங்கியிருந்தால் இன்றைக்கு அவனைப் பார்த்துவிட முடியும். தனியாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை ஓரங்கட்டி அவன் கழுத்தில் துண்டு போட்டு கேட்டுவிடலாம். "மவனே என்னை லவ் பண்றது யாரு? சொல்லித் தொலை".

தனி அறையில் கண்கள் மூடி கிருஷ்ணாவின் பெரியம்மா படுத்திருக்க, ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருந்தது. மிக அமைதியாய் மூச்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவன் பெரியப்பா மிதமான சோகம் கலந்த புன்னகையில் அவர்களை வரவேற்றுவிட்டு உட்காரச் சொன்னார்.

"தூங்கறா!" என்றார்.

அந்த அம்மாள் ஒரு குழந்தைபோல் தூங்குவதை இருவரும் மெளனமாய்ப் பார்த்தார்கள். ஒரு சில விநாடிகள் பேன் ஓடுகிற ஓசை மட்டும் துல்லியமாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. சத்யாவுக்கு கிருஷ்ணா உடனே வர மாட்டானா என்றிருந்தது. அமைதியை கலைத்துவிட்டு சத்யா மெல்லிய குரலில் பேசினான். சத்யா முதலிலேயே ஒரு தடவை அவரை சந்தித்திருக்கிறான் என்றாலும் மறுபடி ஒரு தடவை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"கிருஷ்ணாவோட அம்மா அப்பா ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தாங்க. போயிட்டு மத்யானம் மறுபடியும் வர்ரேன்னு போயிருக்காங்க. கிருஷ்ணா இப்ப வந்தாலும் வருவான்."

அதன்பிறகு ஆபரேஷன் விவரங்களைப் பற்றி யாரும் கேட்காமலேயே தெளிவாய் சொல்லத் தொடங்கினார்.

"எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. இன்னைக்கு மத்யானம் ரெண்டு மணிக்கு ஆபரேஷன் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. முதல்ல கொஞ்சம் கிரிட்டிகல்னு சொன்னாங்க. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்லதான் பண்ணனும்னாங்க. அப்றம் அப்ஷர்வேஷன்ஸ் பாத்துட்டு பேனல் ஆ·ப் டாக்டர்ஸ் டிஸ்கஸ் பண்ணிட்டு இங்கயே மேனேஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. ஆபரேஷன் முடிஞ்சு ஒரு மூணு நாள் ஐ.சி.யு-ல வெச்சிருக்கணுமாம். என்னவோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. திருப்பதிக்கு வேண்டியிருக்கேன். ஏம்மா.. நீங்க என் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வந்திருந்தீங்கல்ல?"

"ஆமாங்க!" என்றாள் அம்மா. "நீங்க கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்."

பிறகு அம்மா மெதுவாய் தன் பர்ஸைத் திறந்து சின்ன பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்தாள். "நான் எப்பவும் ஹாஸ்பிடல்ல யாரையாச்சும் பார்க்கப் போகும்போது கோவிலுக்கு போயிட்டு அவங்க நல்லபடியா குணமடைய வேண்டிக்கிட்டு பிரசாதத்தோடதான் போவேன். இது பிரசன்னவிநாயகர் கோவில்ல வேண்டிக்கிட்டது."

அவர் லேசாய் நெகிழ்ந்துவிட்டார் என்று அவரின் பார்வை சொல்லிவிட்டது. "நல்ல மனசுக்காரங்க நீங்கல்லாம் இருக்கீங்க. திறமையான டாக்டர்ஸ் இருக்காங்க. அதிலேயும் அருள்பிரகாசம்னு ஒருத்தர். இதுல ஸ்பெஷலிஸ்ட்னு பேசிக்கிறாங்க. அப்றம் எனக்கென்ன கவலை?" என்றார்.

அப்புறம் கொஞ்ச நேரம் என்னென்னவோ பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வரவே வெளியே வந்து ஒதுங்கி நின்றார்கள். சத்யா மணி பார்த்தான். வந்து ரொம்ப நேரமாகிவிட்டது. கிருஷ்ணா வருகிறானா என்று அமைதியாய்க் கிடந்த நீண்ட காரிடாரில் பார்வையை ஓட்டினான். எப்போது வருவான் என்று எந்த நிச்சயமும் இல்லாதபோது அவனுக்காக காத்துக்கொண்டிருப்பதும்கூட உசிதமாய்த் தோன்றவில்லை. மேலும் அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு ஆபிஸ் கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்தான்.

அம்மா ஜன்னலோரம் நின்று வெளியில் தெரிகிற சிறு சிறு கட்டிடங்களின் மேல் பார்வையைப் பதித்து என்னவோ தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தாள். சத்யா பார்ப்பதை உணர்ந்து திரும்பினாள். அம்மாவும்கூட லேசாய் சோகமாயிருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஒரு வேளை கிருஷ்ணாவின் பெரியம்மாவை இப்படியொரு கோலத்தில் பார்த்ததனால்கூட இருக்கலாம். இந்த மாதிரி பார்க்கும்போது யாருக்குமே ஒரு பயம் வரத்தான் செய்யும். ஆஸ்பத்திரி என்பது யாரும் வரக்கூடாத இடம். தைரியசாலிகளின் மனத்தைக்கூட பலவீனப்படுத்துகிற இடம். அவர்களுக்கெல்லாம் முதல் தாக்கம் டெட்டாலும் மருந்தும் கலந்த இந்த வாசனை. ஆங்கிலத்தில் மருந்துப்பெயர்கள். ஆங்கிலத்தில் நோய்கள். யாருக்கும் புரியாத வேதியியல் கலவைகளில் மருந்துகள். எக்ஸ்ரே கதிர்கள் பதித்து எடுத்த மெல்லிய கருநீலப் புகைப்படத்தில் நமக்கெல்லாம் புகை மட்டுமே தெரிய டாக்டர்களுக்கு கட்டிகளும், சதை வளர்ச்சியும், எலும்பு முறிவும் தெரிகின்றன.

"என்ன யோசிக்கிற" என்றான் அம்மாவிடம்.

"ஒண்ணுமில்லடா... கிருஷ்ணாவோட பெரியப்பா பேசினதை நினைச்சுப் பாத்துட்டு இருந்தேன். அவர் நம்மகிட்ட நார்மலா சிரிச்சுப் பேசிட்டிருந்தாலும் அவருக்கு மனசு கலங்கியிருக்கறது நல்லா புரியுது. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சாதான் எல்லாருக்கும் பழைய சந்தோஷம் திரும்பி வரும். இல்ல?" என்றாள்.

சத்யா ஒன்றும் பேசாமல் மெளனமாய் இருந்தான். அம்மா சொன்னதை அவன்கூட உணர்ந்திருந்தான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"கிருஷ்ணா பெரியப்பா அந்தக் காலத்திலயே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவர் தெரியுமாடா?" என்றாள்.

சத்யா வியப்பு மேலிட "அப்படியா" என்றான். அம்மா என்னென்னவோ தெரிந்து வைத்திருக்கிறாள் என்கிற வியப்பின் சதவிகிதம்தான் அதிகம் வெளிப்பட்டது அவனிடமிருந்து. அப்படியென்றால் இத்தனை வருட காலம் வாழ்ந்த காதல் துணையை இப்படி ஆஸ்பத்திரி படுக்கையில் கிடப்பதைப் பார்க்க அவருக்கு எப்படியிருக்கும் என்று யோசனை ஓடியது. அவனுக்கு ஏனோ மலரின் ஞாபகம் மின்னலிட்டு மறைந்தது.

டாக்டர் படை வெளியில் வந்தபிறகு அம்மாவுடன் அறைக்குள் போய் விடைபெற்றுக் கொண்டான். இன்னும் கிருஷ்ணா வரவில்லை. சரி அவன் சிங்கப்பூர் திரும்பிப் போவதற்குள் ஒரு முறையாவது அவனைப் பார்க்காமலா போய்விடுவோம் என்று நினைத்துக்கொண்டான். முடிந்தால் இரவு வீட்டுக்கே போய் பார்த்துவிடலாம். அல்லது அவன் ·ப்ரீயாக இருந்தால் நிச்சயம் தன்னைப் பார்க்க வராமலா போய்விடுவான் என்றும் தோன்றியது.

அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு ஆ·பிஸ் போனான். ரிசப்ஷனில் சுபாஷிணி வழக்கம்போல் போனில் மூழ்கியிருந்தவள் அவனைப் பார்த்ததும் மறுமுனைக்கு "ஜஸ்ட் எ மொமெண்ட். ஹோல்ட் ஆன் ப்ளீஸ்!" என்று ரிஸீவரைப் பொத்திவிட்டு சத்யாவிடம் திரும்பினாள்.

"கிருஷ்ணா இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தான். நீ எங்கேன்னு கேட்டான். இப்பதான் ஆஸ்பிடலுக்குக் கிளம்பிப் போறான். நீ இப்ப அங்க போனா அவனைப் பாக்கலாம்." என்றாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 10 ]


கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மா எவ்வளவு அவசரத் தேவையின்போதும் நிலா தெரிகிற கிணற்று நீரை இறைக்க யோசிப்பாள். துவைக்கிறபோது வருகிற நுரையை சுற்றிலும் பார்த்துவிட்டு அதில் மொட்டு ஊதுவாள். அது போகிற திசையையே ரசித்துவிட்டு அது உடைகிற நேரம் பார்வையைத் திருப்பிக்கொள்வாள். வீட்டிலேயே பிடித்த இடம் எதுவென்று கேட்டால் அம்மாவிடமிருந்து மொட்டை மாடி என்றுதான் பதில் வரும். வாளி நீரில் பரவும் சொட்டு நீலத்தை ரசிப்பது, சிந்திய நீரில் நீர்க்கோலங்கள் போடுவது, குளிரில் தூங்குகிற பூனைக்கு போர்வையைப் போர்த்துவது, உணவிடும் காக்கை ஒரு நாள் வராவிட்டாலும் வருத்தப்படுவதென அம்மாவை கவனித்தால் கிடைக்கும் அழகான சம்பவங்கள் ஏராளம்! நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் எழுதாமல் நிறைய கவிதைகள் இருக்கிறது!சத்யா திடீரென்று ரொம்ப ஆயாசமாக உணர்ந்தான். எல்லோரும் கூடவே இருந்தாலும் தனிமையாய் உணர்ந்தான். அல்லது அவனுக்கு தனிமையாய் இருக்கவேண்டும் என்று தோன்றியது. யாரிடமும் நெருங்கத் தோன்றாமல், பேசத் தோன்றாமல் கொஞ்சம் விலகியிருக்கலாமா என்றுகூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் அதுவும் முடியவில்லை. யோசனைகளின் அடர்த்தி அதிகமாகி அவைகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு அவனைத் துரத்துவதுபோல் ஒரு உணர்வு. எல்லாவற்றிற்கும் கொஞ்சம் இடைவெளி விட்டால் என்ன என்றும்கூட யோசித்தான். ஒரு சின்ன பிரேக் வேணும் என்று தேவிடம் சொல்லிவிட்டு எங்காவது காணாமல் போகலாம். அட்டகட்டி குவார்டர்ஸ்க்கு போய் சந்துரு அண்ணனுடன் ரெண்டு நாள் இருக்கலாம். அங்கே ஐ.பி பங்களாவைச் சுற்றியுள்ள பசுமை மலைச்சரிவுகளில் கொஞ்சம் ஆசுவாசம் பெறலாம். அல்லது உள்ளூரிலேயே இருந்து கொண்டு தனியே எங்காவது சினிமா, லைப்ரரி என்று சுற்றலாம். இல்லையென்றால் வீட்டிலேயே இருந்துகொண்டு எல்லோரின் தொந்தரவிலிருந்தும் விடுபட்டு கொஞ்சம் கவிதைகள் எழுதலாம் என்று கூட நினைத்தான். ஆனால் எல்லாக் கவிதைகளிலும் மலர் வந்து நிறைந்து மனசில் அனல் பரப்பிவிடும் அபாயம் இருக்கிறது. அப்புறம் தனிமை இன்னும் கொழுந்துவிட்டெரியத் துவங்கிவிடும்.

காதல் உனக்கொரு அவசியத் தேவையா என்று தன்னையே மனசுக்குள் உரக்கக் கேட்டுக்கொண்டான். அந்தக் கேள்வி மனப்பிரதேசமெங்கும் எதிரொலிப்பதை உணர்வால் அனுபவித்துவிட்டு 'ஆமாம்' என்றான் பதிலாய். கேள்வியைவிட அதிக அதிர்வுகளுடன் அது எதிரொலிப்பதை தீர்க்கமாய் உணர்ந்தான். அவனுக்கு அவளில்லாமல் முடியாது என்று தோன்றிவிட்டது. வாழ்கிற கணங்களும் மனதில் ஓடுகிற நினைவுகளும், இரவில் கனவுகளும் இப்போதெல்லாம் மலரைச் சார்ந்தே இருக்கின்றன என்பதை தெளிவாக அவன் உணர்ந்தே இருந்தான். இப்போது என்ன செய்யவேண்டுமென்பது மட்டும் அவனுக்குப் புரியாமல் பூச்சாண்டி காட்டியது. மலரை பார்க்க வாய்க்கிற பொழுதுகள் அதிகமாய் கிட்டவேண்டுமென்றும் அதைவிட அவள் எப்போதும் அவன் எதிரிலேயே இருக்கவேண்டும் என்றும் தவிப்பு நிறைந்த மனத்தோடேயே அலைவது நரம்புகளில் பரபரப்பைக் கிளர்வதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கொஞ்சநாளாய் மனம் ஒரு நிலையில் நில்லாமல் எதையெதையோ பிராண்டிக்கொண்டேயிருக்கிறது. கிருஷ்ணாவை பார்க்க முடியாத சலிப்பும் அதனுடன் சேர்ந்துகொண்டு அவனை வாட்ட ஆரம்பித்தது. கிருஷ்ணா வந்ததிலிருந்து மிக பிஸியாக இருக்கிறான். மறுபடியொருமுறை அவனைப் பார்க்க ஆஸ்பத்திரி போனபோதும் அவனைப் பார்க்க முடியவில்லை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது விஷயமாய் இனி கிருஷ்ணாவிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை லவ் பண்ணுகிற அந்தப் பெண் இவள்தான் என இனி கிருஷ்ணா யாரையும் கைநீட்டி அடையாளம் காட்டுவதற்கான அவசியத்தைத் தாண்டிவிட்டதுபோல் தோன்றியது. மலர்தான் என்று சத்யா முடிவு செய்துவிட்டான். கிருஷ்ணா சொன்ன பெண் அவளாக இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. எதற்காகவும் அவளை இழத்தல் என்பதை இனி நினைத்துப் பார்க்க முடியாதென்று தோன்றியது. கிருஷ்ணாவிடம் கேட்டால் இன்னும் மொத்தமாய் குழம்பிப் போகிறபடி வேறெதையாவது சொல்லிவிட்டானென்றால்? அவன் சொன்னது வேறு யாராவதாகவோ இருப்பதற்குகூட நிறைய வாய்ப்பிருக்கிறதுதான். அப்படிப் பார்த்தால் பார்க்கிற பெண்கள் எல்லோரையும் சத்யா சந்தேகப்படவேண்டும். அவர்களின் கண்களை ஊடுருவி ஊடுருவி காதலைத் தேடவேண்டும். என்னதான் மலரையே நினைத்துக்கொண்டிருந்தாலும் அப்படியொரு சந்தேகமும் அவனுக்கு அவ்வப்பொழுது வந்துபோய்க்கொண்டுதான் இருந்தது. இன்று மதியம்கூட அந்தப் போன் கால் வந்தபோது அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. அவன் ஹலோ என்றவுடன் மறுமுனையில் தான் யாரென்று சொல்லாமல் புதிர்போட்ட ஒரு பெண்குரல்.

"நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது. ஆனா உங்களை எனக்குத் தெரியும். யார்னு கண்டுபிடிச்சா ரிவார்டு குடுப்பேன்".

இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்று சத்யா சில நொடிகள் குழப்பமாய் யோசித்துவிட்டுப் பின் சட்டென்று சொன்னான்.

"மதுளா! சொல்லுங்க. என்ன சர்ப்பரைஸா? எப்படியிருக்கீங்க?"

"அடப்பாவி. கண்டுபிடிச்சிட்டீங்க. ம்ம். நீங்க கொஞ்சம் பிரில்லியண்ட்தான் போல.. ஐம் ·பைன். ஹெள ஆர் யூ" என்றாள் ஏமாந்த குரலில்.

இவள் எதுக்கு தன்னைக் கூப்பிடுகிறாள் என்று ஆச்சரியப்பட்டான் சத்யா. மதுளா ஆ·பிஸ் விஷயமாய் அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டைப் கூப்பிட்டாளாம். 'அப்படியே உங்ககிட்டயும் பேசணும்னு தோணிச்சு. சரி.. கொஞ்சம் விளையாட்டுக் காட்டிப் பாக்கலாம்னு பாத்தேன். ம். தப்பிச்சிட்டீங்க.' என்றாள். அவள் அண்ணனின் ஆர்ட் காலரிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டாள். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. நாம் எப்போது வருகிறோம் என்று சொன்னோம் என்று யோசித்தான். அவனுக்குத் தெரிந்தவரையில் அப்படிச் சொன்னதாய் நினைவில்லை. எக்ஸிபிஷன் இன்னும் ஒரு வாரத்துக்கு நீடித்திருக்குமென்றும், இன்றைக்கு அவன் வந்தால் சந்தோஷப்படுவதாகவும் சொன்னாள். கட்டாயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தான்.

ஒரு நாள் பார்த்த நட்பிலேயே இத்தனை உரிமை எடுத்துக்கொள்ள முடியுமா என்கிற வியப்பு தோன்றியது அவனுக்கு. அவள் மேலும்கூட லேசாய் சந்தேகம் படரத்தான் செய்தது. ஒரு வேளை அந்தக் காதல்பெண் மதுளாவாக இருக்குமோ? வலிய வந்து போன் பண்ணுகிறாளே என்று யோசனையுடன் போனை வைத்தபோது ஸ்ரீயும், பிரகாஷ¥ம், ஜே.ஸியும் அவனையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தான்.

"ரொம்ப வழிஞ்சிட்டிருந்தே! யார் போன்ல?. ·பிகரா?" என்றான் ஜே.ஸி.

"அட.. சும்மாயிருங்கப்பா. பேஜார் பண்ணாதீங்க" என்றான். கொஞ்சம் விட்டால் ஏதாவது கதை கட்டிவிட்டு அப்புறம் லஞ்ச் டைமில் அவனை ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஆனாலும் அவர்கள் விட்டபாடில்லை. ரொம்ப நேரம் துருவித் துருவி கலாட்டா பண்ணிவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்குள் சத்யா ஒரு வழியாகிவிட்டான்.

அதற்கப்புறம் அன்றைக்கு முழுவதும் ஆ·பிஸில் ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கலகலப்பான சூழ்நிலை இருந்தது. பிரகாஷ் குடித்துவிட்டு பைக் ஓட்டி, குதிரை வண்டிக் கோர்டில் ·பைன் கட்டின கதைகளை பெருமையாய் அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான். 'அப்படியா' என்று எல்லாரும் விழிவிரிய ஆச்சரியமாய் கேட்கிற மாதிரி நடித்துவிட்டு அப்புறம் அவனை எல்லோரும் நக்கலடித்து ஓட்ட ஆரம்பித்தார்கள். ஜே.ஸி தொந்தி குலுங்க விழுந்து விழுந்து சிரித்தான். அவனை அப்படி சிரிக்க வைத்துப் பார்ப்பதற்காகவே ஜோக்கடிக்கிற பேர்வழிகள் ஆ·பிஸில் இருந்தார்கள். போதாதற்கு தேவ் வேறு இடையே வந்து பாராசூட்டுக்கு எப்படி அந்தப் பேர் வந்தது தெரியுமா என்று அசைவம் தெளித்துவிட்டுப் போனார். சத்யாவுக்கும் சிரித்துச் சிரித்து கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. ஸ்டுடியோவின் கண்ணாடிக் கதவையும் மீறிக் கேட்ட சிரிப்புச் சத்தத்தின் எதிரொலிப்பில் சுப்ரியாவும் சுபாஷிணியும் கதவின் கண்ணாடிச் சதுரத்தில் எட்டிப் பார்த்து புரியாமல் சிரித்துவிட்டுப் போனார்கள்.

திடீரென்று அவனுக்கு மலரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். கால்கள் தானாகவே அக்கெளண்ட்ஸ் அறைக்குப் போனது. அவன் எதிர்பார்த்தது பொய்க்காமல் மலர் அங்கே இருந்தாள். காலையில் குட்மார்னிங் சொன்னதற்கப்புறம் அவளுடன் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. அவளும்கூட ஸ்டுடியோவுக்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை.

மும்முரமாய் எதையோ எழுதிக்கொண்டிருந்தவள் அவன் வந்ததும் நிமிர்ந்து சிரித்தாள். பர்கண்டி கலர் சுரிதாரில் என்றைக்கும்விடவும் இன்றைக்கு அவள் அழகாய் இருப்பதாய் நினைத்தான்.

"சும்மாதான் வந்தேன். ஏன் அந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கறதில்லை? நாங்கல்லாம் போர் அடிக்கறமா?" என்றான்.

"காலைல வந்தேன். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்."

'ஏற்கனவே மனசில் புகுந்து டிஸ்டர்ப் பண்ணியாச்சே. இனியென்ன' என்று நினைத்துக்கொண்டான்.

"ரொம்ப நல்ல பொண்ணா இருக்க. கீப் இட் அப்"

"அப்புறம்? சொல்லுங்க சத்யா. என்ன விசேஷங்கள்?"

அவன் ஒன்றுமில்லை என்பதாய் தோள்களைக் குலுக்கினான். "நீதான் சொல்லணும்"

என்னடா இது பேச்சு இத்தனை சம்பிரதாயமாகப் போய்விட்டதே என்று அவன் யோசித்துக்கொண்டே அவள் இதழ்கடையோரம் மலர்கிற புன்முறுவலைப் பார்த்தான். அதுதான் எத்தனை அழகாயிருக்கிறது.

"மலர்.. நாம பேச வேண்டியது நிறைய இருக்குன்னு எனக்கு அப்பப்ப தோணிட்டே இருக்கு." என்றான்.

"எனக்கும்" என்றாள் மலர். "உங்ககிட்ட பேசணும் சத்யா. அன்னிக்கே சொன்னேனே. எப்ப? எப்படி? தெரியலை. அதுக்கான சான்ஸ் அமையமாட்டேங்குது."

"இப்பக்கூட பேசலாம். இங்க யாருமில்லை" என்றான். திடீரென இதயம் தன் துடிப்பை அதிகரித்துக்கொண்டதை உணர்ந்தான்.

"இல்ல சத்யா.. இங்க இல்லை. அதுக்கான இடம் இது இல்லைன்னு தோணுது. எங்கயாவது அமைதியான இடமா, சாயங்கால நேரமா, நடந்துகிட்டே சொல்லணும்." கண்களின் கனவு தெரிய அவள் மெல்லிய குரலில் சொன்னது அவனுக்குள் எதையோ பற்ற வைத்தது.

இன்றைக்கு இதற்கொரு முடிவு தெரிந்து கொண்டுவிடலாம். இன்றைக்கே... இன்றைக்கே. இதுக்குமேல் மனசு தாங்காது.

"இன்னிக்கு சாயங்காலம்? ரேஸ் கோர்ஸ்ல ஒரு வாக் போலாமா?" சத்யா அவசரமாய்க் கேட்டான்.

"ஒய் நாட்?" என்று அவள் அவனை அர்த்தமாய்ப் பார்த்தாள். அவனும் அவளை முதல் முறையாய் கண்ணுக்கு நேராய்ப் பார்த்தான். நிச்சயம் காதல் மிதக்கிற கண்கள். அவன் அப்படிப் பார்த்தது அவளுக்கு லேசாய் வெட்கம் வந்ததையும், அதை மறைக்க அவள் பிரயத்தனப்படுவதையும் உதடுகளில் சிரிப்பு காட்டிக்கொடுத்துவிட்டது. ஹ¤ர்ரே என்று மனசு கூச்சல் போட்டதை வெளித்தெரியாமல் அடக்கிக் கொண்டான்.

அப்போதுதான் அதைப் பார்த்தான். அவள் டேபிளில் ஒரு கிரீட்டிங் கார்டு. அவன் பார்ப்பதை உணர்ந்து அதை எடுத்து அவனிடம் கொடுத்தாள். வழ வழ அட்டையில் பெரிய ரோஜாப்பூக்கள் போட்ட "டு மை டியரெஸ்ட்" என்று அச்சடிக்கப்பட்ட கார்டு. "என் செலக்ஷன் நல்லா இருக்கான்னு பாத்து சொல்லுங்க." என்றாள்.

"நல்லாதான் இருக்கு. யாருக்கு?"

"சும்மா பிடிச்சவங்களுக்குக் குடுக்கறதுக்கு" என்றாள். பிறகு மெதுவாய் தயக்கத்துடன். "ஏன் உங்களுக்கேகூட தரலாம். பிடிச்சிருக்கா?"

சட்டென்று அவள் கண்களை மறுபடி பார்த்தான். "ம்" என்றான். "ரொம்ப!"

"அப்ப நீங்களே வெச்சுக்கோங்களேன்" என்று சொல்லிவிட்டு அவள் ஆர்வமாய் அவன் முகத்தை அவள் பார்த்தது அவனுக்கு என்னவோ பண்ணியது.

"இருக்கட்டும். பரவாயில்லை. நீ சொன்னதே போதும். தேங்க்ஸ்." என்று அதை அவளிடமே கொடுக்க மனசில்லாமல் திருப்பிக் கொடுத்தான். சரி இதெல்லாம் எங்கே போய்விடப் போகிறது. அப்புறமாய் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

அவன் அங்கிருந்து கிளம்பலாம் என்று யோசிக்கும்போது சுப்ரியா உள்ளே வந்தாள். புன்னகைத்தாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ திரும்பிப் போய் விட்டாள். அவள் பார்வையின் அர்த்தத்தையும் அவள் ஏன் வந்தவுடன் திரும்பிப் போனாள் என்பதையும் புரியாமல் ஒரு சில விநாடிகள் சத்யா குழப்பமாய் யோசித்தான். மலர் கூட அதைக் கவனித்தாள் போலும். அவளிடமிருந்து ஒரு சின்ன பெருமூச்சொன்று எழுந்து அடங்கியது.

"என்ன உன் தோஸ்த் வந்த வேகத்துல திரும்பிப் போறா? ஏதோ பிரச்சனை போலருக்கு?" என்றான்.

"ஆமாமா.. வரவர இவ டார்ச்சர் தாங்க முடியல சத்யா" என்றாள் மெதுவான குரலில். ஒரு முறை உட்கார்ந்த இடத்திலிருந்தே கதவை எட்டிப் பார்த்தாள்.

என்ன பிரச்சனை என்று அவனுக்குப் புரியவில்லை. சரி சாயங்காலம் பேசும்போது இதையும் சொல்லாமலா போய்விடுவாள் என்று தோன்றியது.

"சரி. ரேஸ்கோர்ஸ். மறந்துராத"  என்று அவன் அங்கிருந்து நகரும்போது மலர் அந்த கிரீட்டிங் கார்டை கையில் வைத்துக்கொண்டு கண்கள் மூடி மல்டி கலர் ரோஜாக்களை முகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

தன் இருக்கைக்கு வந்தபோது மறுபடி போன் வந்தது. கிருஷ்ணா பேசினான். சத்யா குரலில் ஆச்சரியத்தைத் தொட்டுக்கொண்டு "மச்சி எப்படி இருக்க? உன்னைப் பிடிக்கவே முடியலை" என்றான்.

ஆஹா! ரொம்ப நாள் கழித்து கிருஷ்ணா சத்யாவின் வாழ்வுக் கோட்டுக்குள் டெலிபோன் மூலம் வந்திருக்கிறான். சத்யாவுக்கு சந்தோஷமாயிருந்தது. "சொல்லு மச்சி. வாட்ஸ் அப் தேர்?"

கிருஷ்ணா சத்யாவை சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வர முடியுமாவென்றான். அவன் அவனுக்காகக் காத்திருப்பதாகவும், வந்தால் நிறையப் பேசலாம் என்றும் சொன்னான். சத்யா ஓரிரு விநாடிகள் யோசித்தான்.

"வர்ரேன். ஆனா.. ரேஸ் கோர்ஸ் ரோட்ல ஒரு முக்கியமான வேலை இருக்குது. அதை முடிச்சிட்டு வர்ரேன்."

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 11 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவின் கிராமம் அழகானது. அம்மாவுடன் ஒரு நாள் அங்கே போனேன். போகிற வழியில் படித்த பள்ளி, குளித்த ஆறு, ஊஞ்சல் ஆடின ஆலமரம் என ஒவ்வொன்றாய்க் காட்டினாள். அதையெல்லாம் விடவும் அம்மா வாழ்ந்த அந்த வீடு அற்புதமாயிருந்தது! ஓடு வேய்ந்த கூரை, விசாலமாய் நான்கைந்து அறைகள் - வெளிச்சமான முற்றம். வேலைப்பாடுகளில் அசத்திய கதவு. புழுக்கமே தெரியாத அந்தச் சமையலறை. வேப்பமர நிழலில் பரந்து கிடந்த பின்புற வாசல். வீடென்றால் இது தான் வீடு!  தான் விளையாடின இடம் - படிக்க அமரும் அந்த பின்புற மரத்தடி - பெரிய பெண் ஆன அந்த கிணற்றடி - பிறகு தன் திருமணம் கூட இதே வீட்டில்தான் நடந்ததாகச் சொன்னாள். அம்மா ஒவ்வொன்றாய் என்னிடம் சொல்லச் சொல்ல கண்ணீரில் மிதந்தது அவள் பரவசம். எல்லாம் சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து 'இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா' என்றாள். எனக்கென்னவோ அன்றைக்கு அந்த வீடுதான் அம்மாவைப் பார்த்து சந்தோஷப்பட்ட மாதிரி இருந்தது!


திடுதிப்பென்று கிருஷ்ணா கூப்பிட்டு சாயங்காலம் வா என்கிறான். மலருடன் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாக் போகும் திட்டம் வேறு இருக்கிறது. போதாதற்கு மதுளா வேறு கூப்பிட்டு ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு வரச்சொல்லிக் கூப்பிடுகிறாள். சத்யாவுக்குச் சிரிப்பாயிருந்தது. எல்லாமே ஒரே நாளில் அடுத்தடுத்து அல்லது ஒரே சமயத்தில் நடக்கிறது. அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பதை அவன் முன்பே தீர்மானித்துவிட்டான். கிருஷ்ணாவுடன் பேசவேண்டும். அது முக்கியம். அவன் அவ்விஷயத்தைப்பற்றிய பேச்சை இன்றைக்கு ஆரம்பிப்பான் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. அல்லது ஒரு வேளை புதுசாய் எதாவது குண்டைத் தூக்கிப் போட்டாலும் போடுவான். அவனுக்குத்தான் இப்படி யாரோடாவது விளையாடிக்கொண்டிருப்பது பிடிக்கிறது. ஆனால் கிருஷ்ணாவைப் பார்ப்பதற்கு முன் மலர். ஆம். அவள் முக்கியம். ரொம்ப முக்கியம். இந்தச் சந்தர்ப்பத்தை அவன் நழுவவிடத் தயாரில்லை. அது முதலில். பிறகு வேண்டுமானால் கிருஷ்ணாவைப் பார்க்கப் போகலாம். அவனைச் சந்திக்கும்போது அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் நிறைய விஷயங்களோடு போகலாம்.

சாயங்காலம் வரை அவனுக்கு இருப்புக்கொள்ளவேயில்லை. ஒரு ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டும் என்று இருக்கிற வேலைகளையெல்லாம் அவசரமாய் முடித்தான். ஐந்து மணிக்கு தேவ் சத்யாவிடம் வந்து ராசி கிராபிக்ஸ் போய் சரோஜா டெர்ரி டவல்ஸ் ப்ரெளச்சருக்கு CMYK கலர் செப்பரேஷன் பண்ணி ·பிலிம் எடுத்து வரச் சொல்லி அனுப்பினபோதுகூட பறந்து போய் பறந்து வந்தான்.

ஸ்டுடியோ மக்களின் பார்வைக்குத் தப்பி மலரை எப்படிக் கூட்டிக்கொண்டுபோவது என்றும் கவலையாயிருந்தது. ரிஷப்ஷனில் சுபாஷிணி கண்ணில் எல்லாம் பட்டால் அவ்வளவுதான். போச்சு!. மத்யானம் மெதுவாய் அக்கெளண்ட்ஸ் அறைக்குப் போய் மலரிடம் அவன் கவலையைச் சொன்னபோது அவள், சுபாஷிணியின் கண்ணில் பட்டால்கூட பரவாயில்லை, சுப்ரியாவின் கண்ணில்படாமல் இருந்தாலே போதும் என்று சொன்னது சத்யாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. எப்படி உற்ற தோழிகளாய் வளைய வந்தவர்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் எலியும் பூனையுமாக ஆகி விட்டார்கள் என்று தெரியவில்லை.

ஆறு மணிக்கு கொஞ்சம் அவசர வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பெருமாள் கோவிலருகே மலர் காத்துக்கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். முன்பே அவளிடம் பேசி வைத்தபடி அவள் அவனுக்கு இரண்டு நிமிடம் முன்னாலேயே கிளம்பி நடந்து அங்கே நின்றிருந்தாள். அவன் பைக்கை நிறுத்தினதும் ஏறிக்கொண்டு அவன் தோளை மெதுவாய் பிடித்துக்கொண்டபோது அவனுக்கு பெரிய வியப்பு ஒன்றும் ஏற்படவில்லை. அது இதமாகவே இருந்தது.

"சத்யா இன்னிக்கு செவ்வானம் பூத்திருக்கு பாத்தீங்களா?"

முகத்தில் காற்று அலைய வேகமாய் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த சத்யா நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மேகங்கள் அடர்ந்த வானத்தில் சிவப்பும் ஆரஞ்சும், மஞ்சளுமான கலவை நீலத்தை முழுக்க சாப்பிட்டிருந்தது. அந்தியின் வெளிச்சம்பட்ட இடங்களும் பொருட்களும் பொன்னிறத்தில் மின்னின. இந்த மாதிரியான ஒரு வானத்தைப் பார்ப்பது வருடத்துக்கு ஒரு முறை இருக்குமா என்று நினைத்தான். அதை கடைசியாய் பார்த்த பொழுது மறந்தேவிட்டது. என்றாலும் இன்றைக்கு அவனுக்குக்காகவே ஸ்பெஷலாகக் கிடைத்த பொன்மாலைப் பொழுதாக அவன் அதை உணர்ந்தபோது அவனுக்கு உற்சாகம் தாளவில்லை.

"ஏன் இவ்வளவு ·பாஸ்டா போறிங்க சத்யா?" என்று அவள் குரல் பின்னாலிருந்து கேட்டபோதுதான் நினைப்பு ஒரு நிதானத்துக்கு வந்து ஆக்ஸிலரேட்டரைக் குறைத்தான்.

ரேஸ்கோர்ஸில் மக்கள் வாக்கிங் போகிற இடத்தில் சத்யா வண்டியைப் பார்க் பண்ணினான். இங்கிருந்து மில்கிவே வரை மெதுவாய் நடந்து போய்விட்டு மறுபடி திரும்பி இங்கேயே வரலாம் என்றாள் மலர். செவ்வானம் பூத்ததில் அவள் பர்கண்டிக் கலர் உடை நிறம் மாறி ப்ரெளன் கலராகத் தெரிந்ததைப் பார்த்தான்.

இருவருக்கும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் மெதுவாய் மெளனமாய் நடந்தார்கள். என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு நெஞ்சம் படபடப்பதை சத்யா உணர்ந்தான். அவளுக்கும் அப்படித்தான் இருந்தது என்பதை அவள் அடிக்கடி எச்சில் விழுங்குவதிலிருந்தும், சுரிதார் துப்பட்டாவை விரல்களால் திருகித் திருகி விடுவதிலிருந்தும் புரிந்துகொண்டான். அவனுக்கு பொறுமை கெட்டுவிடும் போலிருந்தது.

"சரி சொல்லு. சுப்ரியா கூட என்ன தகறாறு?" என்று கேட்டான் மெளனத்தை உடைக்கும் வகையில். அவளும் அதற்காகவே காத்திருந்ததுபோல் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் எப்போதும் இருப்பதுபோல் இல்லாமல் தயக்கங்கள் கலந்த பிசிறாக வெளிப்பட்டது.

"அன்னைக்கு ப்ளு பேர்ல்-ல சாப்பிடப் போனபோதுகூட இதைக் கேட்டிங்க. எனக்கு ஞாபகமிருக்கு. நான்கூட சமயம் வரும்போது சொல்றேன்னு சொன்னேன்."

"ஆமா."

"ஒண்ணுமில்லை சத்யா. அவ இப்பெல்லாம் ஆ ஊன்னா எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறா. அது எனக்குப் பிடிக்கலை. ஒருநாள் அவகூட எனக்கு வாக்குவாதம் வந்திருச்சு. அன்னிலேர்ந்து புகைச்சல்."

"எந்த விஷயத்துல"

அவள் சிறிது தயங்கிவிட்டு "லவ்" என்றாள்.

"ஓ.."

மேலும் என்ன கேட்பது என்று யோசித்தான். இல்லை நான் கேட்காமலேயே எல்லாம் சொல்லத்தானே வந்திருக்கிறாள். மெளனமாய் உம் கொட்டிக்கொண்டிருந்தாலே போதும் என்று பிறகு தோன்றியது.

"ஏன் சத்யா.. நான் என்ன சின்னக் குழந்தையா? நல்லது கெட்டது எனக்குத் தெரியாதா? இவ யாரு எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு?" என்றாள்.

தலையும் காலும் புரியாமல் இந்த விஷயத்தில் என்ன கருத்து சொல்வதென்று புரியவில்லை. இருக்கிற டென்ஷனில் வார்த்தைகள் தடுமாறி தொடர்பின்றிப் பேசுகிறாள். சரி. இருக்கட்டும். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இது மாதிரி எதுவும் ஏற்படாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

சத்யா மெதுவாய்த் தொண்டையைச் செருமிவிட்டுக் கேட்டான்.

"யு ஆர் இன் லவ். ரைட்?"

மலர் லேசாய்க் கிளர்ந்த வெட்கத்தை உள்ளே சமனப்படுத்திக்கொண்டு சட்டென்று அவனைப் பார்த்தாள். மெதுவான தலையாட்டலில் ஆமாம் என்றாள். பிறகு ஓரிரு நிமிடங்கள் அவள் ஒன்றும் பேசாமல் உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையை தேக்கி வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டே வந்தாள்.

"ம். சொல்லு. அப்புறம்"

"என்ன சொல்லணும்? எனக்கு கொஞ்சம் நெர்வஸா இருக்கு சத்யா. பேச முடியல."

"எதுக்கு நெர்வஸ்? ரிலாக்ஸ்" என்றான் அவனது படபடப்பை மறைத்துக்கொண்டு. அவனுக்கு ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டால் தேவலை எனப் பட்டது.

"நீங்க என்னைத் தப்பா நினைச்சிக்குவீங்களோன்னு எனக்கு ரொம்ப பயம்"

"சே.. இதுல தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? என்ன விஷயமானாலும் தயங்காம சொல்லு"

அவன் அவள் முழுசாய்ச் சொல்வதற்காகக் காத்திருந்தான். உடம்பெங்கும் இத்தனை பரபரப்பாக வாழ்வின் எந்தக் கணத்திலும் உணர்ந்தது கிடையாது என்று நினைத்தான். எங்கோ மிதப்பதுபோலத்தான் கால்கள் பின்னி நடந்தன.

படர்ந்திருந்த செவ்வானம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு கருமைக்குள் கரையத் தொடங்கியிருந்தது. சீக்கிரம் இருட்டிவிடும்போல் இருந்தது. ரேஸ் கோர்ஸின் ஸோடியம் வேப்பர் விளக்குகளைக்கூட போட்டுவிட்டார்கள்.

வார்த்தைகளைத் தேடி அவள் உதடுகள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

"நான் லவ் பண்ற ஆள். அவர் பத்தி சொல்லட்டுமா?" என்றாள்.

"ம்." என்றான் அவனும் புன்னகைத்தபடி. அவள் கண்களில் ஒரு குறும்பு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். எத்தனை சுற்றி வளைக்கிறாள்? ஏன் நேரடியாகப் பட்டென்று போட்டு உடைத்துவிடத் தெரியவில்லை இவளுக்கு என்றெல்லாம் யோசனை ஓடியது சத்யாவுக்கு. ச்சேச்சே.. இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றா சொல்ல முடியும்? இத்தனை நாள் பொறுத்தாயிற்று. இன்னும் ஒரு பத்து நிமிடம் பொறுத்தால் என்ன?.

தயக்கமும், மெல்லிய சிரிப்பும் இழையோடுகிற குரலில் அவள் சொல்லத் தொடங்கினாள்.

"அவர் கொஞ்சம் மாநிறம். கண்ணாடி போட்டிருப்பார். கண்ணாடிக்கு உள்ள சாந்தமா ரெண்டு கண்ணு"

சத்யாவுக்கு சிரிப்பு வந்ததை அடக்கிக்கொண்டான். அவள் அவன் பக்கம் திரும்பாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டுதான் இதைச் சொன்னாள். அவள் பார்க்காதபோது ஆள் காட்டி விரலால் அனிச்சையாய் அவன் கண்ணாடியை சரி பண்ணிக்கொண்டான்.

"அப்புறம் கருகருன்னு தாடி. தாடிதான் அவரோட தனி அடையாளம். அவரை ஷேவ் பண்ணின முகத்தோட ஒரு தடவைகூட நான் பாத்ததே இல்லை. ம்ம். அதுகூட நல்லாதான் இருக்கு. அது ஒரு இண்டலக்சுவல் லுக் குடுக்குது அவருக்கு. ரொம்ப அமைதியான டைப். கொஞ்சம் கிரியேட்டிவ்வான ஆளுன்னுகூட சொல்லலாம்."

"ஓஹோ. அப்படியா?" என்றான் பெரிதாய் ஆச்சரியப் படுகிறமாதிரி.

தாடியை ஒரு முறைத் தடவிப்பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கைகள் விரும்பியதை மிகச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டான். காதலை நேராகச் சொல்வதைவிட சுற்றி வளைத்துச் சொல்வதும் கேட்பதும் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சட்டென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு 'போதும் மலர். இனி எதுவும் சொல்ல வேண்டாம். சொல்லித்தான் புரியணும்னு இல்ல. இத்தனை தூரம் வந்தாச்சு. இதுக்கு மேலயும் நாம எதையும் பேசணுங்கற அவசியமில்லை.' என்று சொல்லிவிடவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லிவிட அவனுக்கு தைரியமெல்லாம் இல்லை. அவன் ஒரு சில விநாடிகள் ஒன்றும் பேசாமல் மெளனமாய் அவளுடன் நடந்து வந்துகொண்டிருந்தான். உள்ளே நிரம்பி வழிகிற உணர்ச்சிகளை தடுக்காமல் அனுமதித்து சிறிது நேரம் அப்படியே அதே நிலையில் இருக்கவேண்டுமென்றிருந்தது.

"யார்னு கேக்க மாட்டீங்கறீங்களே சத்யா.. ரொம்ப அமைதியா வர்ரீங்களே." என்றாள். அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டு. இப்போது ஒட்டு மொத்த வெட்கத்தையும் அவள் முகத்திலேயே கொட்டி வைத்ததைப் போல் சிவந்து போயிருப்பதை சத்யா கவனித்தான். அவளின் பரவசத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள்ளும் ஒரு பரவசப் பேரருவி பொங்கி வழிந்தோட ஆரம்பித்தது.

"எனக்கு தெரியும் மலர்." என்றான் ஒற்றை வாக்கியத்தில். அவள் சொல்ல வந்ததும் அவன் சொல்ல வந்ததும் ஆக அத்தனையையும் உள்ளடக்கிய வாக்கியமாக அதை அவன் சொன்னான்.

அவள் முகம் மலர்ந்து வியப்பின் வரிகள் தெரிந்தன. சட்டென்று அவள் தன் நடையை நிறுத்திவிட்டு மிகப் பெரிய படபடப்பின் விளிம்பில் நின்றுகொண்டு விரிந்த கண்களுடன் கேட்டாள்.

"ஹே... நிஜமாவா? அர்விந்தை உங்களுக்கெப்படி தெரியும்?"

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 12 ]


கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

உனக்கு என்னென்ன ஆசைகள் இருக்கிறதென அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன். ஒவ்வொரு ஆசையாய் அம்மா அடுக்க ஆரம்பித்தாள். வழக்கமான கத்திரிக்காய், வெண்டைக்காய் குழம்பிலிருந்து விடுபட்டு புதியதாய் ஒரு குழம்பையாவது கண்டுபிடிக்க வேண்டுமாம் அம்மாவுக்கு! அடுப்படிக்குள் அடங்கிப்போன தன் அறிவியலில் வேறென்ன செய்ய முடியும் என்றாள். அப்றம் டீச்சர் ஆகிற ஆசை. அதுவும் ஒன்று முதல் ஐந்து வரை படிக்கிற குழந்தைகளுக்கு மட்டும் டீச்சர் ஆகிற ஆசை. பிறகு சேரியில் இருக்கிற அழுக்குக் குழந்தையை எடுத்து வந்து சுத்தப்படுத்தி அழகு பார்க்க வேண்டுமாம். மற்றும் சொந்த வீடாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கிற வீட்டில் சுதந்திரமாய் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு சேர்ந்து மொட்டைமாடியில் பட்டம் விட வேண்டும். பிரபஞ்ச வெளியில் அப்படியே பறக்க வேண்டும். அங்கிருந்து பூமியை மொத்தமாய் ரசிக்க வேண்டும். வாழ்ந்ததற்கு அடையாளமாய் ஏதாவது விட்டுவிட்டுப் போக வேண்டும். அதற்கு ஒரு மரமாவது நட்டுவிட்டுச் செல்ல வேண்டும். இதையெல்லாம் விடவும் பழைய வயதிற்கே போக முடிந்தால் அங்கிருந்து மீண்டும் தன் தவறுகள் திருத்தி இன்னும் அழகாய்த் தன் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்றாள். எல்லாம் சொல்லிவிட்டு 'உனக்கென்ன ஆசைகள்?' என்றாள் என்னிடம். ஒன்று மட்டும் சொன்னேன். 'அம்மா உன் மனசு மட்டும் வேண்டும்'.சத்யாவுக்கு ஒரு விநாடி திடுக்கென்று மனசு தடுமாறிப் புரண்டது. மலர் தன்னிடம் என்ன கேட்டாள் என்று புரியாமல் குழப்பமாய் லேசாய்த் திரும்பி அவளைப் பார்த்தான். விரிந்த விழிகளும் ஆச்சரியமும் அவள் கண்களில் மாறாமல் அப்படியே இருந்தன. சத்யாவின் குழப்பம் புரியாமல் அவனது முகத்தின் முன் விரல்களை ஆட்டி சொடக்குப் போட்டாள்.

"ஹலோ.. என்ன பதிலையே காணோம்?" என்றாள்.

"என்ன பதில்?"

"அர்விந்தை உங்களுக்கெப்படித் தெரியும்னு கேட்டேனே!"

மை காட்! இவள் என்ன சொல்கிறாள்? அர்விந்தா! அது யார்? சட்டென்று ஏதோ புரிந்த மாதிரி இருக்க, பேச வார்த்தைகள் வராமல் தொண்டைக்குழி ஒரு முறை ஏறி இறங்கியது. நெஞ்சுக்குள் ஒரு அழுத்தம் சுழன்று இறங்கியது. யாரோ மண்டையில் விறகுக் கட்டையால் பிளந்தார்ப்போல் ஒரு அடியை மானசீகமாய் உணர்ந்தான். உயிரைப் பிடுங்கி, சக்கையாய் பிழிந்து வீசிவிட்டாற்போல் திடீரென்று ஒரு நடுக்கம் புறப்பட்டு உடம்பு முழுக்க நரம்புகள் அதிர்ந்து அடங்கின. அவள் கேட்டதற்கு பதில் சொல்ல வராமல் உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. கால்கள் தளர்ந்து அவனுக்கு எங்கேயாவது உட்கார வேண்டும்போல் இருந்தது.

அவன் முகம் சட்டென்று மாறி இருண்டு விட்டதை மலர் கவனித்துவிட்டாள்.

"ஹே.. என்னாச்சு சத்யா?" என்று தழைந்த குரலில் அவன் முன்னால் வந்து அவன் முகத்தை கூர்ந்துபார்த்து அவன் கண்களில் தேடினாள்.

"ஒண்ணுமில்ல. யாரு அரவிந்த்?" என்றான் பிசிறடித்த குரலில்.

"என்ன சத்யா இது! இப்படியொரு கேள்வி கேட்டுட்டீங்களே.. அப்ப உங்களுக்குத் தெரியும்னு பொய் சொன்னீங்களா?" என்று நிறுத்தினாள்.

ஓரிரு விநாடிகள் மெளன இடைவெளிவிட்டு "சரி. நானே சொல்றேன். அர்விந்த். க்ரியாரூட்ஸ் அட்வர்டைஸிங்ல இருக்கார். அவரும் உங்களை மாதிரி க்ரியேட்டிவ் டிபார்ட்மெண்ட்தான். ஒண்ணு ரெண்டுவாட்டி நம்ம ஆபிஸ¥க்குகூட வந்திருக்காரே. நீங்க பாத்திருக்கலாம்."

அந்த தாடியும், கண்ணாடியும் தானல்ல என்ற உண்மையை அவன் மனம் நம்ப விரும்பமில்லை. ஒரு வேளை அவள் விளையாடுகிறாளோ என்றுகூட தோன்றியது.

"சத்யா! ஏன் எமோஷனலாயிட்டீங்க? உங்ககிட்ட இந்த விஷயத்தை ·ப்ரீயா சொல்ல முடியும்னு ஏனோ தோணினதாலதான் வந்தேன். சுப்ரியா மாதிரியே உங்களுக்கும் பிடிக்கலை போலிருக்கு"

அவன் சமாளித்துச் சிரிக்க முற்பட, முடியாமல் அவனையும் மீறி கண்களில் நீர் கோர்த்துவிட்டது. தேம்பலின் தொடக்கமாய் நெஞ்சு ஒரு முறை விம்மித் தணிந்ததை சிரமப்பட்டு அடக்கி இயல்பாயிருக்கப் பார்த்தான்.

அவளை இப்போது நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. ஏமாற்றத்தின் கனம் இதயத்தில் சுமையாய் நெருக்கியது. அவன் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு சட்டென்று கிருஷ்ணாவின் நினைவு வந்தது. அப்படியென்றால் கிருஷ்ணா சொன்ன பெண் இவளல்ல என்றும் தெளிவாய் தெரிந்துவிட்டது. மேலும் இவள்தான் என்று கிருஷ்ணா சொல்லவும் இல்லையே.

சத்யாவுக்கு சட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டுமென்று தோன்றியது. இத்தனை காலம் அவன் நினைத்துக்கொண்டிருந்தெல்லாம் தப்பு என்று ஒரு நொடியில் அறிவித்துவிட்டாள். அரவிந்த்! அவன் எங்கிருந்து வந்தான் என் வாழ்க்கையில் திடீரென்று? மலரோடு இத்தனை நாள் ஓடிக்கொண்டிருந்த சம்பாஷணைகளிலிருந்தும், நிகழ்வுகளிலிருந்தும் ஒரு துளிகூட யூகிக்க முடியவில்லை இப்படியொரு விஷயமிருப்பதை. அவள் அவனுடன் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அவனைப் பற்றிச் சொல்லத்தானா? அதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தாள்? எதற்காக என்னிடம் அவள் சொல்ல ஆசைப்பட்டாள்?

அவனுக்கு இன்னுங்கூட அதை நம்பமுடியாமல் மனதில் ஓரிடத்தில் ஒரு சின்ன நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் சத்யா என்று சிரிக்கப்போகிறாள். அந்த தாடியும் கண்ணாடியும் நீங்கதான் என்று என் கண்ணைப் பார்த்து மறுபடி சொல்லப் போகிறாள் என்று அவனுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

இல்லை. எல்லாம் இந்த செவ்வானம் பூத்த பொழுதில் நிராசையாகிவிட்டது. மனதில் பொங்கி வழிந்த உற்சாகத்தை மொத்தமாய் உறிஞ்சிப் போய்விட்டது அவள் சொன்ன செய்தியின் சாரம். நான் எதற்கு இங்கே வந்தேன்?

"சத்யா வாட் ஹாப்பண்ட்? என்ன இருந்தாலும் தயங்காம சொல்லுங்க. நீங்க மெளனமா வர்ரது எனக்கு உறுத்துது"

அவன் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு "ஒண்ணுமில்ல மலர். சும்மா ஏதேதோ யோசனைகள் வந்தது. நீ சொல்லு."

அவள் கொஞ்சம் தயங்கிவிட்டு "சத்யா! அர்விந்த் கூட ஒரு ரெண்டு மாசமாதான் பழக்கம். முதல்ல அவர்தான் ப்ரபோஸ் பண்ணினார். போன்லதான் நிறைய பேசறோம். ஏன் பிடிச்சதுன்னு இன்னும் தெரியலை. நேர்ல அதிகம் சந்திக்கலை. ரொம்ப அளவாதான் போயிட்டிருக்கு. இன்னும் கொஞ்சம் தயக்கமா இருக்கு"

"ம்"

"ஆனா அவர் ரொம்ப நல்ல டைப். நீங்க ஒரு தடவை அவரை மீட் பண்ணணும்."

"கண்டிப்பா" என்றான் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு.

மில்கிவே வந்திருந்தது. உள்ளே போய் ரெண்டு ஸ்ட்ராபெரி சொல்லிவிட்டு வட்ட மேஜையில் எதிரெதிரே உட்கார்ந்தார்கள். அவனுக்கு அப்படி உட்காருவதற்கு மிகத் தயக்கமாயிருந்தது. அவளை முகத்துக்கு நேராக பார்த்துப் புன்னகைக்கக்கூட முடியாத நிலைமையில் இருந்தான். இங்கே கிளம்பி வரும்போது இருந்த மனநிலையெல்லாம் அடித்துப்போய்விட்டது. அவனுக்கு எதிலும் மனது ஒட்டாமல் யோசனைகளில் மிதந்துகொண்டிருக்கும்போது அவளின் கதைகள் எதுவும் அவன் காதுகளில் ஏறாது என்று தோன்றியது. ஏன் இப்படிப் பண்ணினாள்? இப்படி முழுதாய் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாள். எதையெதையோ கற்பனை பண்ணிக்கொண்டு... கடைசியில் எல்லாமே கண்ணாடிபோல சிலீரென்று உடைந்து நொறுங்கிவிட்டது.

"இந்த சுப்ரியா இருக்காளே. அவளுக்கு நான் லவ் பண்றது புடிக்கலை. இதெல்லாம் நல்லதுக்கில்லை அப்படீன்னு சதா ஒரே புலம்பல். ஏகப்பட்ட அட்வைஸ். இதெல்லாம் ரியல் லை·புக்கு ஒத்து வராதாம். ஒரு நாள் நான் ·பீல் பண்ணுவேனாம். என்னை ப்ரெயின்வாஷ் பண்ற மாதிரியே எப்பவும் பேசிட்டு இருந்தா. எனக்கு அது புடிக்கல. அதனாலதான் அவகூட கொஞ்சம் சண்டை போட்டுட்டேன். உன் வேலையைப் பாத்துட்டுப் போடின்னுட்டேன். அதுக்கப்புறம் வேற யார்கிட்டயும் இதுபத்தி பேசக்கூட தோணலை. அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுருவாங்களோன்னு பயம் சத்யா! குறிப்பா பொண்ணுங்ககிட்ட இதைச் சொல்லத் தயக்கம். சுபாஷணி, ப்ருந்தா எல்லாரும்கூட சுப்ரியா மாதிரியே பேசினா என்ன பண்றது? ஆனா யார்கிட்டயாவது சொல்லணும்னு தோணிட்டே இருந்தது. யாரோட சப்போர்ட்டாவது வேணும்னு இருந்தது. எனக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பப் புதுசு சத்யா. உங்களைப் பார்த்தப்போ உங்கிட்ட சொன்னா என்னன்னு நினைச்சேன். உங்ககிட்ட ஏன் இவ்வளவு ஒட்டிக்கிட்டேன்கிறதுக்கும் காரணம் தெரியல"

மூச்சு விடாமல் அவள் பேசிக்கொண்டிருந்ததை மெளனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்குள் துக்கம் கரைபுரண்டு எழுந்து கொண்டிருந்தது.

"இதில தப்பொண்ணும் இல்ல மலர். உனக்குப் பிடிச்சதை செய்!" என்றான்.

"ஹே.. என்ன இது மேம்போக்கா என்னவோ சொல்றீங்க. எனக்கு அட்வைஸ் எதுவும் கிடையாதா?"

"ச்சேச்சே! என் அட்வைஸ் எல்லாம் எதுக்கு? இது உன் பர்சனல் விஷயம்.!" திடீரென்று தன் குரல் மாறி அவளிடம் ரொம்ப விட்டேத்தியாய் பேசுகிறோம் என்று அவனுக்கும் தோன்றியது. அவள் மேல் ஏனென்றே தெரியாமல் மிகக் கோபமாக வந்தது.

பிறகு அவள் அர்விந்தை முதன் முதலில் சந்தித்த தினத்திலிருந்து இன்றுவரை நடந்த சம்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்லி முடித்தாள். அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ தெரிந்தால் அவர்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கவலைப்பட்டாள். கொஞ்சம் பயமாக இருக்கிறதென்றாள். கல்யாணம் என்று ஏதாவது நடந்தால் அது அர்விந்தோடுதான் என்றும் சத்யா போன்ற உற்ற நண்பர்களின் உதவியும், துணையும் எப்போதும் தேவை என்றும் சொல்லி முடித்தாள். சத்யா நிறைய கவனச்சிதறல்களோடே எல்லாவற்றையும் கேட்டான். அவள் சொல்லச் சொல்ல அவன் மனதின் கனம் ஏறி ஏறி வெடித்துவிடுவதுபோல் உணர்ந்தான்.

"ஸோ.. யு ஆர் இன் லவ்!" என்று உயிர்ப்பேயில்லாமல் சிரித்தான்.

"யெஸ்" என்று சந்தோஷமும் வெட்கமும் கலந்த சிரிப்புடன் அவள் தலையாட்டினாள். அவனை நேராய்ப் பார்த்தாள். இதை இந்த வெட்கத்தையும் அவளின் அர்த்தம் கலந்த பார்வைகளையும் தப்பாய் எடுத்துக்கொண்டுதானே இத்தனை தூரம் வந்தேன். எவ்வளவு மடையன் நான். பேசாமல் கிருஷ்ணாவை முதலில் போய்ப் பார்த்திருந்தால் இந்த சாயங்காலச் சந்திப்பில் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தின் அடர்த்தியை கொஞ்சமேனும் குறைத்திருக்கலாமோ என்று நினைத்தான்.

என்னவோ சொல்ல உதடுகளில் வார்த்தைகள் தவித்து கடைசியில் "ஆல் தி பெஸ்ட் மலர்" என்றான்.

"தேங்ஸ் சத்யா"

பிறகு இருவரும் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று கிளம்பலாம் என்று சத்யா எழுந்து கொண்டான். மெளனமாகவே நடந்து அவன் பைக் நிறுத்திவைத்திருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவனிடம் இன்றைக்கு எல்லாம் பேசினது சந்தோஷமாக இருக்கிறதென்றாள். தன் ஸ்கூட்டி ஆபிஸில் இருக்கிறதென்றும், நாளைக்கு வந்து எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துவிட்டு ஏதாவது பஸ் ஸடாப்பில் இறக்கிவிடச் சொன்னாள். அவன் பைக்கைக் கிளப்பினதும் ஏறி அமர்ந்து இயல்பாய் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். "நோ" என்று உரக்கக் கத்தவேண்டும்போல் இருந்தது. அந்தக் கை இப்போது அவன் தோள்களில் மிக பாரமாக இருப்பதுபோலத் தோன்றியது. அவள் அதை எடுத்தால் பரவாயில்லை என்று நினைத்தான்.

அவளை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடும்போது நன்றாய் இருட்டியிருந்தது. சாலையில் எரிந்த வெளிச்சத்தின் ஒளிர்வில் அவளை ஒருமுறை ஆழமாய்ப் பார்த்தான் சத்யா. எடுப்பான பர்கண்டி சுரிதார். அழகான புருவங்களுக்கு மத்தியில் நடுவே பாம்பு மாதிரி வளைந்த ஸ்டிக்கர் பொட்டு. நீண்ட கூந்தல். ரம்யமான புன்னகை. இது எல்லாமே அவனுக்காகத்தான் என்று முன்பு ஒரு முறை நினைத்துக்கொண்டது ஞாபகத்துக்கு வந்தது. அவனிடமிருந்து பலத்த பெருமூச்சொன்று புறப்பட்டு ஓய்ந்தது.

அவளின் பஸ் வரும் வரை நெருப்பை மிதித்துக்கொண்டிருப்பவன்போலக் காத்திருந்தான். வந்தது. அவள் தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். அவனுக்கு திரும்பிப் பார்க்கத் தோன்றவில்லை. சர்ரென்று அசுர வேகத்தில் பைக்கைக் கிளப்பிக்கொண்டு வீட்டை நோக்கி விரட்டினான். உடனே உடனே அவனுக்கு ஒரு தனிமை வேண்டும்போல் இருந்தது.

கேட்டைத் திறந்துவிட்ட அம்மாவை நிமிர்ந்து பார்க்காமல், வண்டியை நிறுத்திவிட்டு சர்ரென்று வீட்டுக்குள் புகுந்தான். அவன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தித் தாளிட்டான். படுக்கையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் வெடித்து அழுதான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 13 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

இருவேறு கெட்டப்புகளில் அவ்வப்போது அம்மா என்னை மிரட்டுவதும் உண்டு. ஒரு நாள் திருட்டுத்தனமாய் பால் குடித்து விட்டது எங்கள் வீட்டுப் பூனை. வந்த கோபத்தில் அம்மா உடனே அதை வெளியில் எங்காவது விட்டு வரச் சொன்னாள். அதை தொலை தூரமாய் விட்டு விட்டு வீடு திரும்ப அம்மா சொன்னாள். 'நான்தான் சொன்னேன்னா நீயும் கொண்டு போய் அதை விட்டுர்றதா? பாவம் அது எங்கே போய் என்ன பாடுபடுதோ? பழகின பூனைதானே வீடு திரும்பிடுமில்லையா?' என்றாள். இன்னொரு நாள் அம்மாவுக்கும் எதிர்த்த வீட்டு கோவிந்தம்மாவுக்கும் எதற்கோ சண்டை வந்தது. இனிமேல் இவர்கள் நட்பு அவ்வளவுதான் என்று நினைத்தோம். ஆனால் அடுத்த நாளே அந்தம்மாவுக்கு ஏதோ அடிபட்டு விட முதல் ஆளாய் அங்கே அலறிக் கொண்டு ஓடினது அம்மாதான்! இதுமட்டுமல்ல ஏதோ ஒரு நிகழ்வைக் குறித்த நேற்றைய சந்தோஷம் இன்று வேறொரு கோணத்தில் வருத்தத்தை தருவதாகச் சொல்வாள். எப்படி யோசித்தாள் என்று நாம் யோசித்தால் அவ்வளவுதான். எந்த திசையில் திரும்புவாள் என்று தெரியாத நிலையில் என் நிலை எப்போதும் குழப்பந்தான். அம்மாவின் மனசை ஓரளவு புரிந்து கொள்ளலாம். அம்மாவின் மனசின் மனசை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.சத்யா எத்தனை நேரம் அழுதுகொண்டிருந்தான் என்று தெரியவில்லை. லேசான கேவலுடன் குலுங்கிக் குலுங்கி மனசின் அத்தனை துக்கமும் கரையும்வரை அழுதான். அவனால் தாங்க முடியவில்லை. இடையே டேபிள் லேம்ப்புக்கு பக்கத்தில் அவன் பிறந்த நாளுக்கு மலரும், சுப்ரியாவும் பரிசளித்த டேபிள் டாப்பை எடுத்துப்பார்த்தான். 'யு ஆர் ஸோ ஸ்பெஷல்' என்றெழுதின, பின்னால் ஸ்டிக்கரில் அவள் கையெழுத்துப் போட்ட டேபிள் டாப். எரிச்சலில் அதை சுவரை நோக்கி விசிறி எறிந்தான். அம்மா ஒரு தடவை சந்தேகமாய்க் கதவைத் தட்டிப் பார்த்தாள். "என்னாச்சு?" என்று பதட்டமாய் கதவுக்குப் பின்னிருந்து குரல் வந்தது. அவன் திறக்கவில்லை.

ஒரு குறுகிய காலகட்டத்துக்குள் என்னென்னவோ நடந்துவிட்டது. கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் இப்படியொரு திருப்பம் நிகழ்ந்ததை மனசு ஏற்கவில்லை.

ஒரு இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். மெதுவாய் ஒரு நிலைக்கு வந்து லேசாய் மனது சமாதானமானது. மலரை தான் முதலில் கவனிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொன்றாய் நினைவுபடுத்திப் பார்த்தான். ப்ளு பேர்ல் ரெஸ்டாரண்ட்தான் முதல் தொடக்கம். அங்கிருந்துதான் ஆரம்பித்தது அது. மில்கிவேயில் வந்து முடிந்துவிட்டது. அரவிந்தை பார்த்திருக்கிறோமா என்று யோசித்துப் பா¡ர்த்தான். சத்யாவை மாதிரியே கண்ணாடி போட்டு, தாடிவைத்து, அட்வர்டைஸிங்கில் வேலை செய்கிறவன். ஹா! என்ன ஒற்றுமை.

ஒரு பெண்ணை இத்தனை நேசித்துவிட்டதும் அவள் கிடைக்காத ஏமாற்றத்தில் இத்தனை அழுதோம் என்பதும் அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. தப்பு பூராவும் என்மேல்தான். ரொம்ப அவசரப்பட்டுவிட்டேன். அவள் மேல் தப்பில்லை. நான் மனசில் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன் என்று அவளுக்கு எப்படித் தெரியும். அவள் என்ன பண்ணுவாள்? பாவம்.

ஆனாலும் அவள் மேல் கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்தது. அவள் பேசின விதங்களும், அவனிடம் நடந்துகொண்ட விதங்களும் வேறு மாதிரியல்லவா இருந்தன. அது சரியல்ல என்று தோன்றியது. அவள் நினைப்பதை எப்படிப் பேசுவதென்றும், எப்படி வெளிப்படுத்துவதென்பதும் தெரியாத வெகுளியாக இருந்தது ரொம்ப அனர்த்தமாகப் போய்விட்டது. அவள் இன்று ஒரு கிரீட்டிங் கார்டை நீட்டி பிடிச்சவங்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு, பிடிச்சிருந்தா நீங்களே வெச்சுக்கங்க என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இப்படியெல்லாம் நடந்துகொண்டால் ஒரு மனுஷன் என்னதான் நினைப்பான். நான் தப்பாக நினைத்துவிட்டேன். ஏதோ அவள் என் மேல் ரொம்ப ஈர்ப்பாக இருப்பவள் போலல்லவா தோற்றம் இருந்தது. அந்தக் கனவு மிதக்கிற கண்களில் இருக்கிற காதல் அவனுக்கே அவனுக்கானது என்று நினைக்கும்படி ஆகிவிட்டது.

எல்லாத் தீர்மானங்களும் தப்பு. கொஞ்சம் நிதானமாய் யோசித்திருந்தால் இந்நிகழ்வைத் தடுத்திருக்கலாம். இதையெல்லாம் கேள்விப்பட நேரும்போது கிருஷ்ணா என்ன சொல்வான் என்று கவலையாய் இருந்தது. அவனிடம் இதையெல்லாம் சொன்னால் கேட்டுவிட்டு சிரிப்பானா என்று யோசனையாயிருந்தது. அவன் இன்றைக்குப் பேசலாம் என்று கூப்பிட்டான். அவனைப் போய் பார்க்கவில்லை. போயிருந்தால் எல்லாமே தெளிவாகியிருக்கக்கூடும். அவன் ஒருவேளை இப்போதுகூட அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கக்கூடும். அவன் மறுபடியும் ட்ரு ·ப்யூஷனுக்கு போன் பண்ணிக்கூட சத்யாவைக் கேட்டிருக்கலாம். ஆனால் இப்போது இந்த நிலைமையில் அவனைப் போய் பார்க்கத் தோன்றவில்லை. காலையில் அவனைத் தொடர்புகொள்ளலாம். முடிந்தால் மறுபடி லீவு போட்டுவிட்டு அவனுடனேயே முழுநாளும் இருக்கலாம். தேவைப் பட்டால் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசலாம்.

அம்மா மறுபடியும் கதவைத் தட்டினபோது கண்ணாடியைக் கழற்றி முகத்தைத் துடைத்துக்கொண்டு லேசாய்த் திறந்து "என்னம்மா?" என்று கோபமாய்க் கேட்டான்.

"என்னடா ஆச்சு?" என்றாள். அவள் முகம் மிகக் கவலையாயிருந்தது.

"ஒண்ணுமில்ல"

"ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல"

"என்னமோ நடந்திருக்கு. எங்கிட்ட சொல்றதுக்கு என்னடா?"

"ஒண்ணுமில்லன்னு சொல்றனில்ல.." என்று முகத்துக்கு நேரே மறுபடி கதவைப் பட்டென்று சாத்தினான். மறுபடி படுக்கைக்கு வந்து உட்கார்ந்தான். எல்லோர் மேலும் கோபமாக வந்தது. நான் என்ன எல்லாருக்கும் விளையாட்டுப் பிள்ளை ஆகிவிட்டேனா? கிருஷ்ணா விளையாடுகிறான். மலர் பெரிய விளையாட்டாய் விளையாடிப் போய்விட்டாள். அந்த மதுளாகூட அப்படித்தான் போன் பண்ணி நான் யாருன்னு கண்டுபுடிங்க என்று விளையாடுகிறாள். எதுவுமே தெரியாதமாதிரிப் பேசி பிருந்தா விளையாடுகிறாள். அவனுக்கு எல்லாப் பெண்களின் மீதும் ஒட்டுமொத்தமாய் கோபம் வந்தது.

எதற்கு இத்தனை உணர்ச்சிவசப்படுகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். ஏன் இதை இயல்பாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதற்கு இத்தனை சென்ஸிடிவாக இருக்கிறோம். ஏன் உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாமல் இத்தனை ஆட்டம். அம்மா கதவைத் தட்டி என்னவென்று கேட்கிறாள். அவன் நார்மலுக்கு வந்து அறைக்குள்ளிருந்து வெளியே வரும்போது மறுபடி கேட்காமலிருக்கமாட்டாள். என்ன பதில் சொல்வதென்று யோசனையாய் இருந்தது.

எழுந்து கண்ணாடிக்குமுன் நின்று பார்த்தான். முகம் லேசாய் வீங்கி கண்கள் சிவந்திருந்தன. அவனைப் பார்க்க இப்போது அவனுக்கே பிடிக்காமல் இருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முகம் கழுவ வேண்டும்போல் இருந்தது. மெதுவாய் கதவு திறந்து வெளியே வந்தான். அம்மா கண்ணாடி அணிந்து என்னவோ படித்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் மெல்ல நிமிர்ந்து ஊடுறுவிப் பார்த்தாள். சத்யா அந்தப் பார்வையைத் தவிர்த்துக் குனிந்து நடந்தான்.

"பசிக்குதாடா? சாப்பிடறயா?"

சத்யா வெறுமனே தலையாட்டிவிட்டு பாத்ரூமுக்குப் போனான். பக்கெட்டிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து பளார் என்று முகத்தில் அறைந்துகொண்டான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அழுததின் எரிச்சல் இன்னும் கண்களில் இருந்தது. துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

அவன் நினைத்தமாதிரி அம்மா அவனை எதுவும் கேட்கவில்லை. மெளனமாகவே சாப்பாடு பரிமாறினாள். மெளனமாகவே அவன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டாள். அந்த அமைதி அவனுக்கு கொஞ்சம் உறுத்தலாயிருந்தது. ஏதாவது பேசினாலோ கேட்டாலோகூட பரவாயில்லை என்று தோன்றியது. எதுவும் கேட்காமலிருந்ததும் நல்லதுதான் என்று தோன்றியது அவனுக்கு. இந்த மாதிரி ரெண்டுங்கெட்டான் அவஸ்தைகளெல்லாம் சில நேரங்களில் நிகழத்தான் செய்கிறது.

அப்படியே அம்மா கேட்டாலும் பதிலாக எதையும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் என்கிற அவசியங்களில்லை என்று நினைத்தான். அம்மாவிடம் சொல்கிற விஷயமும் இல்லை இது.

அவன் நிமிர்ந்து பார்க்காமல் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்தான். கைகழுவப்போகும்போது ஷெல்பின் மூலையில் பி. காம்ப்ளெக்ஸ் மாத்திரைப் பட்டையைப் பார்த்தான். ஓ! அம்மாவே வாங்கிக்கொண்டாள்போல. இந்த விஷயத்தில் அவன் உதவியை எதிர்நோக்கி இருப்பது உசிதமல்ல என்று தெரிந்துகொண்டுவிட்டாள் போலும். யாரிடம் சொல்லியனுப்பி வாங்கினாள் என்று தெரியவில்லை. என்னவோ தனக்கு ஒரு வேலை மிச்சமாகிவிட்டது.

அவனுக்கு மொட்டை மாடிக்குப் போய் சிறிது நேரம் இருட்டில் உட்கார்ந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. உடனடியாக ஒன்றிரண்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தான். மெதுவாய் படியேறி மேலே வந்தான். ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான். புகைகை ஆழமாய் இழுத்து நெஞ்சு முழுக்க நிறைத்துக்கொண்டான். அது மூச்சில் கலந்து நுரையீரலின் சுவர்களில் சுழன்று இறங்குகிற கிறக்கம் நன்றாயிருந்தது. அதுதான் இப்போதைக்கு ஒரே ஆறுதல் போல இருந்தது. அம்மா மாடிக்கு வருவாளோ என்று யோசித்தான். அவன் மொட்டைமாடியில் இருந்தால் அம்மா எந்தக் காரணத்தைக்கொண்டும் பின்தொடர்ந்து வரமாட்டாள். அவன் சிகரெட் பிடிப்பான் என்று அவளுக்குத் தெரியும். ஒரு முறை எதேச்சையாக வந்தாள். அப்போது அவன் சட்டென்று சிகரெட்டை மறைக்க முற்பட்டதும், அம்மா சிரித்துவிட்டு 'நடத்து நடத்து' என்று சொல்லிவிட்டு உடனே கீழிறங்கிவிட்டதும் அவனுக்கு ரொம்ப நாளைக்கு உறுத்தலாயிருந்தது.

நிற்பதற்கு மிகக் களைப்பாய் இருந்தது. அப்படியே தரையில் மல்லாக்கக் கிடந்தான். திடீரென்று அவனுக்கு பானுவின் ஞாபகம் வந்தது. பானு! அவனை பாதித்த முதல் பெண். அது மனசுக்குள்ளேயே பூட்டி வைத்த சொல்லாத காதல். இதோ அவளிருந்த வீடு இங்கிருந்து பார்த்தால் முன்பெல்லாம் தெரியும். பி.டபிள்யூ.டி. பாலசுப்ரமணியம் பெரிதாய் நடுவில் அவர் வீட்டில் மாடி வைத்துக்கட்டி அதை இப்போது மறைத்துவிட்டார். அது பரவாயில்லை. அவள் வீடிருந்த திசையை ஏக்கத்துடன் பார்க்கிறதெல்லாம் எப்போதோ நின்று போய்விட்டது. பானுவைக் கீழே தள்ளிவிட்டு மலர் மனதின் மேலடுக்கில் ஏறி உட்கார்ந்தபோது பானுவின் நினைவுகள் லேசாய் தேய்ந்தும் போய்விட்டதாய் தோன்றியது.

இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று யோசனைகளைப் பிராண்டினான். அவளையும் இறக்கி வைத்துவிடுவதா? அது உடனடியாக முடியுமா? இனியும் சுமந்துகொண்டு திரிவதில் ஒரு காரணகாரியமும் கிடையாது. அர்விந்த் ரொம்ப ரகசியமாய் வந்து தட்டிக்கொண்டு போய்விட்டான். அவனுக்கு மச்சம். இது முதலிலேயே தெரிந்திருந்தால் இத்தனை ஆசைகளையும் கனவுக்கோட்டைகளையும் வளர்த்தியிருக்கவேண்டியதில்லை என்று தோன்றியது. இருந்தாலும் இனி மலரை மொத்தமாய் மறப்பது என்பது முடியாத காரியம். என்ன முயற்சித்தாலும் எங்கேயாவது மூலையில் ஒட்டிக்கொண்டுதான் இருப்பாள். இருந்துவிட்டு போகட்டும். பானு மாதிரியே வாழ்வின் சமவெளிப் பரப்பில் இவளும் அழுத்தமாய் தடம்பதித்துவிட்டுப் போய்விட்டாள்.

கிருஷ்ணா சொல்லிவிட்டுப்போனதின் மேலிருந்த பிடிப்பு முழுவதுமாய் அகன்று கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்தான். என் தேடல் இதோடு முடிவடைந்துவிட்டது. இனி நான் யாரையும் தேடப்போவதில்லை. இதயத்தின் ஜீவனைத் தோண்டி வெளியே எடுத்துப்போடுகிற விளையாட்டாய் இருக்கிறது இது. இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. இனி யாரும் என்னைச் சீண்டிப்பார்க்க அனுமதிக்கக்கூடாது. இனி கொஞ்சநாளைக்கு தானுன்டு தன் வேலையுண்டு என்றிருக்கலாம். கிருஷ்ணாவிடம் இனி எந்தக் காரணத்தைக்கொண்டும் இது விஷயமாய்க் கேட்கப்போவதில்லை. மலரை அவள் ஸீட்டுக்கேபோய் பார்ப்பதை இனித் தவிர்த்துவிடவேண்டும். அவளுடன் பேச வேறு ஏதாவது சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அவைகளை தவிர்த்துவிடல் நலம். அவளை அவ்வப்போது பார்க்கும்போது மட்டும் இந்த விஷயத்தின் தர்மசங்கடம் நிச்சயம் இல்லாமலிருக்காது. சீக்கிரம் அதுவும் பழகி மனது சகஜ நிலைமைக்கு வந்துவிடத்தான் போகிறது.

கையைச் சுட்ட சிகரெட்டின் மீதியை விசிறிவிட்டு அயர்வு நிலையில் கண்களை மூடினான். அப்படியே தூக்கம் இழுத்துக்கொண்டு போய்விட்டது. திடீரென்று யாரோ எழுப்புவதுபோல் தோன்ற கண்களைத் திறந்தபோது மொட்டை மாடி இருட்டில் அம்மா நின்றிருப்பதைப் பார்த்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 14 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவுக்குப் பிடித்த மொட்டை மாடி. அரிசி வத்தல்களும் காற்றில் எச்சிலை ஊற வைக்கிற மாவடுவையும் அம்மா காய வைக்கிற இடம். அங்கே ஏதோ சத்தம் வர அம்மாதான் அதை என்னவென்று பார்க்கச் சொன்னாள். நான் படியேறி மேலே போக மொட்டை மாடியில் அம்மா காய வைத்திருந்த கோதுமையை புறாக்கள் கொத்திக் கொண்டிருந்தன. மொத்தமாய் முப்பது புறாக்கள் இருக்கலாம். பழுப்பில் கொஞ்சமும் வெளுப்பில் கொஞ்சமும் இரண்டும் கலந்த நிறத்தில் சிலதுமாய் புறாக்கள். எல்லாமே புதியதாய் மெருகேற்றின பளபளப்பில் மின்னின. நான் விரட்டிப் பார்த்தும் அதுகள் கோதுமையை விட்டுப் போவதாய் இல்லை. அதற்குப் பிறகுதான் நான் அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மா வேகவேகமாய் மேலே வந்தாள். என்னை அமைதியாய் இருக்கச் சொன்னாள். பிறகு அப்படியே அமர்ந்து அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். எங்கிருந்து வந்ததடா இத்தனை புறாக்களும்! கொழு கொழுவென எவ்வளவு அழகாய் இருக்கிறதென்றாள். அரைக்கிலோ கோதுமைக்கு எத்தனை அற்புதக் காட்சி. ஒன்றைப் பிடித்து அதை ஒரு நிமிடமேனும் கொஞ்சவேண்டும் என்றாள். நான் ஆச்சரியமாகி அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்வது? குழந்தைத்தனமாய் இருப்பது வேறு. குழந்தையாய் இருப்பது வேறு. இதில் அம்மா இரண்டாவது ரகம்!


சத்யா சடக்கென்று எழுந்து உட்கார்ந்துகொண்டான். அரையிருட்டில் கம்பிகளில் உலர்ந்திருந்த துணிகளை அம்மா சேகரித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கண்களைக் கசக்கிக் கொண்டான். எப்படி இப்படி வெறுந்தரையிலேயே உணர்வற்றுத் தூங்கிப்போனோம் என்று ஆச்சரியப்பட்டான். ஒரு அரை மணி நேரமாகவாவது இப்படித் தூங்கியிருப்போம்போல என்று கண்களின் எரிச்சலில் உணர்ந்தான். சட்டென்று அவனால் எழ முடியாமல் உடம்பு நடுங்கியது.

"வீட்டுக்குள்ள போய் தூங்குடா. இங்க பனி விழுது பார். நாளைக்கு உடம்புக்கு ஏதாவது வந்துரப்போகுது" என்று அம்மாவின் குரல் இருட்டுக்குள்ளிருந்து வந்தது.

சத்யா கஷ்டப்பட்டு எழுந்துகொண்டான். காலில் சிகரெட் பாக்கெட் தட்டுப்பட்டதை எடுத்து சட்டைக்குள் மறைத்தான். மெதுவாய் நகர முற்பட்டவனை அம்மாவின் குரல் தடுத்தது.

"உனக்கு என்னடா ஆச்சு இன்னிக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்கே" கொடியின் கடைசி துணியை உருவி எல்லாவற்றையும் இடக்கையில் மொத்தமாய்த் தொங்கவிட்டுத் மறுகையால் அவற்றை அணைத்தபடி நின்று அம்மா கேட்டாள்.

அவன் நின்றான். அம்மாவுக்கு அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலையே வெடித்தும்போலப் திரும்பத் திரும்பக் கேட்கிறாள்.

"இன்னைக்கு மட்டும் என்ன? நான் எப்பவும் ஒரு மாதிரிதான் இருக்கேன். போதுமா?" என்றான் குரலைக் கடுமையாக்கிக் கொண்டு.

'இதென்ன பதில்' என்பது மாதிரி அம்மாவின் புருவம் உயர்வது இருட்டிலும் தெரிந்தது.

"நான் கேட்கிற கேள்வி எதுக்குமே நீ இப்பல்லாம் ஒழுங்கா பதில் சொல்றதில்ல. இப்பக்கூட உங்கிட்ட இருந்து வர்ர பதிலப் பாத்தியா?. என்கூடப் பேச உனக்கு அப்படி என்ன வெறுப்பு?" என்றாள்.

"வெறுப்புன்னு நான் சொன்னனா? ஏம்மா நீயே கற்பனை பண்ணிக்கிற? எப்படி பதில் சொல்லணும்னு நீ வேணும்னா சொல்லிக்குடு. அதே மாதிரி சொல்றேன்." என்றான் வெறுப்பு மிகுந்த குரலில்.

அவனுக்கு தொண்டை வரண்டு தண்ணீர் குடிக்கவேண்டும்போல இருந்தது.

"நான் என்ன ரோட்ல போறவன்கிட்டயா கேக்கறேன்? உன்கிட்டத்தானே கேக்கறேன். அதுவும் உன் மேல இருக்கிற அக்கறையில. எனக்கு பதில் சொல்லக்கூட உனக்கு சலிப்பா இருக்கு. இல்ல"

லேசாய் குரலை உயர்த்திக்கொண்டு விறுக்கென்றுதான் கேட்டாள் அம்மா. சத்யா திரும்பி அம்மாவை உற்றுப் பார்த்தான். அவள் கண்கள் லேசாய் ஈரமாயிருந்திருக்க வேண்டும். இருட்டில் தெரு விளக்கு உபய வெளிச்சத்தில் அம்மாவின் கண்கள் பளபளப்பதைப் பார்த்தான். கொஞ்சம் விட்டால் அழுதுவிடுகிற நிலைமை.

"இங்க பாரும்மா. உனக்கு கேக்கறதுக்கு ஆயிரம் இருக்கும். எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்கிற பொறுமை எனக்கு இல்ல. சொல்றதுக்கு மூடும் இல்ல. நான் ஒண்ணும் சின்னப் புள்ளை கிடையாது. நீ இன்னும் அப்படியே நினைச்சிட்டிருக்காத. உன் தொணதொணப்பைக் கொஞ்சம் குறைச்சுக்க. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நான் நடந்துகிட்டிருக்க முடியாது. எனக்கு ஆயிரம் டென்ஷன். ஆ·பிஸ்ல, வெளில எல்லா இடத்திலயும். அதைப் புரிஞ்சுக்கோ முதல்ல. மனுஷனை கொஞ்சமாச்சும் ரிலாக்ஸ்டா இருக்க விடு."

அம்மா ஸ்தம்பித்து நின்றுவிட்டதைப் பார்த்தான். என்ன பண்ணுவது? இப்படி எதாவது சொல்லி நிறுத்தினால்தான் மேற்கொண்டு இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தொண தொணக்காமல் இருப்பாள். சமீபமாய் எப்போது பார்த்தாலும் இதே மாதிரிதான் எதையாவது கேட்டுக்கொண்டும், செய்துகொண்டும்தான் இருக்கிறாள். மனசில் இருக்கிற வலி போதாதென்று இது வேறு.

"ஓ! அப்ப நீ பெரிய மனுஷன் ஆயிட்ட. சரிடா! பரவாயில்ல. ஆனா நான் உன்னோட அம்மாங்கறதாவது உனக்கு ஞாபகமிக்கா? உனக்காக நான் தினமும் வாசப்படில காத்துக்கிடக்கறன் பாரு. எனக்கு இது தேவைதான்."

அவனும் திடீரென்று குரலை உயர்த்தினான். "அதுதாம்மா வேண்டாங்கறேன். உன்னை யாராச்சும் அப்படி உக்காந்திருக்கச் சொன்னாங்களா? போம்மா உன்கூட இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுட்டு இருக்க முடியாது."

அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறவன் மாதிரி சொல்லிவிட்டு நகர்ந்தான். அம்மா அவனை நிலையாய் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

அதற்குமேல் அவனுக்கு நிற்கப் பிடிக்கவில்லை. அம்மாவையும் திரும்பிப் பார்க்கவில்லை. சரசரவென்று படிகளில் கீழிறங்கி வந்தான். இன்றைக்கு எதுவுமே சரியில்லை. துக்கம், தூக்கம் ரெண்டுமே மனசையும் கண்களையும் அழுத்துகிறது. சூழ்நிலை எரிகிறது. தேவையில்லாமல் அம்மாவுடன் வாக்குவாதம். எப்போது எதைப் பேச வேண்டும், கேட்கவேண்டும் என்று அம்மாவுக்கும் தெரியவில்லை. நான் எப்போதும் அவள் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஏதோ வீட்டுக்குள்தான் கொஞ்சம் சுதந்திரமாக இருந்தமாதிரி தோன்றியது.. இப்போது அம்மாவின் நச்சரிப்பில் அதுவும் போய் விடும்போல இருந்தது.

அவன் அறைக்கு வந்து லைட்டைப் போட்டான். கோபத்தில் விசிறி அடித்த டேபிள் டாப்பின் துண்டுகளைக் தேடினான். காணவில்லை. திக்கென்றது. அம்மா சுத்தம் செய்திருக்க வேண்டும். உடனே சமையலறைக்கு ஓடிப்போய் குப்பைக்கூடையை இழுத்து அதனுள் பார்த்தான். நிறைந்த குப்பைகளின் மேலாக அந்தத் துண்டுகள் கிடந்தன. அதில் பெரிய துண்டு ஒன்றில் "..ஸோ ஸ்பெஷல்.." அதைத் திருப்பிப் பார்த்தால் நேர் பின்னால் மலரின் கையெழுத்து. அம்மா பெருக்கும்போது அதைப் பார்த்தாளா என்று தெரியவில்லை. எதற்கு விசிறி எறிந்தேன் என்றுகூட யோசித்திருப்பாள். ஏதாவது யூகித்திருக்கவும்கூடும். வீட்டுக்குள் வந்ததும் உள்ளறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு அழுதுகொண்டிருந்ததும், இந்த டேபிள் டாப்பை சுவரில் மடேரென்று விட்டெறிந்த சப்தமும் கேட்டு அம்மா ஒரு முறை கதவைத் தட்டிப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும் நமக்கென்ன என்று நினைத்தான். அவனுக்கு இப்போது யார்மீதும் கவலையில்லாததுபோல் இருந்தது. அந்தத் துண்டை குப்பையிலேயே மறுபடி போட மனம் வராமல் அதை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு வந்தான். திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு மேஜை இழுப்பறைக்குள் அதைப் வைத்து மூடினான். டேய் சத்யா உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சுடா என்று மனசுக்குள் உரக்க ஒரு முறை சொல்லிக்கொண்டான். தான் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோம் என்று யோசித்தான். அவனுக்குப் புரியவில்லை. எல்லா உணர்ச்சிகளின் பின்னிருந்தும் இன்னும் மலர் இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.

சுவர்க் கடிகாரம் பதினொன்று அடித்து ஓய்ந்தது. இவ்வளவு நேரமாகியும் அம்மா கீழிறங்கி வரவில்லை. லேசாய் அவனுக்கு உறுத்தியது. போய்ப் பார்க்கலாமா என்று யோசித்தபோது முன் கதவு தாளிடும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அம்மா முன்னறையைக் கடந்து துணிகளுடன் மெளனமாய் நடந்து போனாள்.

அன்றிரவு அவனுக்குச் சுத்தமாய் தூக்கம் வரவில்லை. ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு வாசல் மரத்தை வெறித்துக்கொண்டே படுக்கையில் உட்கார்ந்துகொண்டேயிருந்தான்.

ஓரிரு நாட்களுக்கு முன்கூட அவன் இதே மாதிரிதான் உட்கார்ந்துகொண்டிருந்தான். அப்போது ஜன்னல் வழியே குளுமையாய் முகத்தில் சிலுசிலுத்த காற்றோடு மலரின் நினைவுகளும் சேர்ந்துகொண்டு அவன் எண்ணங்களை வருடிக்கொண்டிருந்தன. அவள் நிற்பதும், பேசுவதும், சிரிப்பதும், வெட்கப்படுவதும், நிறைய அர்த்தங்களுடன் அவன் கண்களில் ஊடுறுவிப் பார்ப்பதும் ஆன தோற்றங்கள் ஒரு ஓசைகளற்ற சலனப்படம் மாதிரி அவன் மனத்தில் வலம்வந்து கொண்டிருந்தன. அப்படியே கண்களை மூடி அவள் ஞாபகங்களின் லயிப்பில் ஆழ்கிற சுகம் அவனுக்கு போதையாய் இருந்தது. போதாதற்கு டூ-இன்-ஒன்னில் அவனுக்குப் பிடித்த, அவளை பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்தும் சில சினிமாப் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதைக் கேட்டுக்கொண்டே கண்களை மூடினால், நிறைய மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரமாய் அவளின் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடந்து கொண்டிருக்கிற மாதிரி கற்பனையெல்லாம் ஓடும். ஜில்லென்று இருக்கும். அந்நேரத்தில் கொஞ்சமாவது மழை வந்து மனதை நனைத்தால் நன்றாக இருக்குமே என்று விருப்பமாயிருக்கும் அவனுக்கு. இருட்டும், அடிக்கிற காற்றில் அசைகிற இலைகளும், நிசப்தத்தை நிரடுகிற லேசான சில்வண்டுச் சத்தம் இவையெல்லாமே அவனுக்குள் பொங்கி வழிகிற உணர்ச்சிப் பிரவாகத்துக்கு சாட்சி மாதிரி இருக்கும். ஜன்னல் வழியே அவள் வீடிருக்கும் திசைநோக்கி உரக்க அவள் பேர் சொல்லிக் கத்துவான் மனதுக்குள்.

இப்போதும் அதே மாதிரிதான் உட்கார்ந்துகொண்டிருந்தான். எல்லாமே வெறிச்சென்றிருந்தது. முன்பு எப்போதுமிருக்கிற ரம்மியமான சூழல் இப்போதும்கூட இருந்தது. ஆனால் எதுவும் ஒட்டாமல், எதுவும் பாதிக்காமல் வெறுமனே கிடந்தன எல்லாமே. எரிச்சலுற்ற கண்களுடன் ஜன்னலுக்கு வெளியே வெறித்து ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். நினைப்பதற்கும், கவலைப்படுவதற்கும் இனி மேல் ஒன்றுமில்லை என்பது மாதிரி இருந்தது அவனுக்கு. ஆனால் எதுவோ ஒன்று முடியாமல் பாக்கி இருக்கிற மாதிரியும் இருந்தது. அது என்ன என்பது மட்டும் புரியவில்லை. விரல்களால் நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டு திரும்ப திரும்ப யோசித்தான். விடிய விடிய தூங்காமல் நிறைய யோசித்துக்கொண்டேயிருந்தான். நடுநிசியில் மீண்டும் துக்கம் கரைபுரள மறுபடி அழுதான். மிக நரகமாய் இரவு கடந்தது.

விடிந்ததும் கொஞ்சம் தெளிவானதுபோல் இருந்தது. முதல் வேலையாய் கிருஷ்ணாவைத் தொடர்பு கொள்ளவேண்டுமென்று தோன்றியது. டெலிபோனை எடுத்து எப்போதும் நினைவிலிருக்கிற அவன் வீட்டு நம்பரை கூப்பிட்டு கிருஷ்ணாவைக் கேட்டான்.

"அடடா!.. இப்பதான் ஆறரை மணி ட்ரெயினுக்கு சென்னைக்கு வழியனுப்பிட்டு வர்ரேன். அவன் அங்கிருந்து அப்படியே சிங்கப்பூர் கிளம்பறான். நேத்து உனக்காக ரொம்பநேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தான். ஏன் நீ வர்ல?" என்றார் கிருஷ்ணாவின் அப்பா.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 15 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

எங்கள் வீட்டின் முன்பிருக்கும் அந்த வேப்பமரம் அம்மா வைத்ததுதான்! எல்லோர் வீட்டின் முன்பும் மரம் நட்டபோது அம்மா அதை வாங்கி தன் கையால்தான் நட்டாள். அதன் பிறகு காலை மாலை வாசல் தெளிக்கும் முன் அதற்குத்தான் தண்ணீர் ஊற்றுவாள். அந்தத் தெருவில் நட்ட மற்ற மரங்களின் வாழ்க்கை செடியோடு முடிந்திருக்க - அயராத கவனிப்பால் இன்னும் வளர்ந்து கொண்டிருப்பது அம்மா வைத்த மரம் மட்டும் தான். அதன் பரந்த நிழலில் வெயிலில் களைத்தவர்கள் நின்றுவிட்டுத்தான் போவார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் வண்டிகளை நிறுத்த அதன் நிழலைத்தான் நாடுவார்கள். அப்புறம் எறும்புகளுக்கும் பூச்சிகளுக்கும் கூடு கட்டி வாழும் காக்கைகளுக்கும் அந்த மரம் வீடாக இருப்பதைப் பார்க்கிற போது அம்மாவின் முகத்தில் தெரிகிற சந்தோசம் வாழ்கிற திருப்தியைச் சொல்லும். அநாவசியமாய் அதில் இலை பறிக்க அனுமதித்ததில்லை அம்மா. மற்றும் அந்த மரத்தில் ஏறி விளையாட எந்த குழந்தைகளையும் விட்டதில்லை. அடுத்த தலைமுறையிலும் அந்த வேப்பமரத்தின் காற்று வீசிக் கொண்டேயிருக்கும். அப்போது எல்லோரும் அம்மாவை மறந்திருக்கக்கூடும். ஆனால் - இருக்கும் வரை நிச்சயம் அம்மாவை அந்த மரம் மறக்காது!சத்யாவுக்குக் காலம் மிக மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி வாட்ச் பார்த்தான். நிறைய நேரமிருப்பது போலவும் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாதது போலவும் சில நேரம் தோன்றியது. மனதின் வெறுப்பில் இருக்கிற வேலையிலும் கவனம் செல்லாமல் பல சமயம் சுவரை வெறித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தான். யாருடனும் அதிகம் பேசத் தோன்றவில்லை. எப்போதும் கம்ப்யூட்டர் திரையில் கண்கள் வெறிக்க நினைவுகளை அலையவிட்டுக் கிடந்தான். ஒரு சில நாட்களுக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டுவராமல் தவிர்த்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டான். என்னாச்சு என்று கேட்டவர்களுக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொன்னான். எல்லோரும் மதிய சாப்பாட்டை லஞ்ச் ரூமில் பரஸ்பரம் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம். அந்த கும்பலில் மலரும் இருப்பாளே என்பதுதான் காரணம்.

அவளைப் பார்க்காமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்தான். ஆ·பிஸில் வேலை செய்கிற இடத்தில் அது முடியாத காரியமாயிருந்தது. மலர் அவ்வப்போது கண்ணில் படாமலில்லை. அவனுடன் பேசுவதற்கு தோதான சமயம் தேடி அவளும் குறுக்கும் நெடுக்குமாய் ஆ·பிஸ¥க்குள் அலைபாய்ந்து கொண்டுதானிருந்தாள். அவன் தனியாய் மாட்டினால் மறுபடி அர்விந்த் பற்றி சிலாகிக்கவும், சுப்ரியா பற்றி பொருமவும் கூடும். எல்லாவற்றையும் தேமே என்று யார் கேட்டுக்கொண்டிருப்பது? அவன் வேலை செய்கிற அறைக்கு ஒரு கண்ணாடிக் கதவு இருப்பது எவ்வளவு ஆறுதல். அங்கிருந்து பார்த்தால் அவள் தெரியமாட்டாள் என்பது ஒரு சின்ன நிம்மதி.

அவன் காதல் அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது. அது துளிர்விட்டுக் கிளர்ந்து வேர்கள் படர்ந்த நேரம் குற்றுயிராய் பட்டுப்போய்விட்டதின் சுவடை அவள் உணரவில்லை. எந்த ஒரு கணத்திலும் அவள் அதை யூகிக்கக்கூட இல்லை. அப்படியே இருக்கட்டும். அவளுக்கு மட்டுமல்ல யாருக்குமே இது தெரியாது. அம்மா ஒரு வேளை ஏதாவது புரிந்துகொண்டாளா என்று தெரியவில்லை. புரிந்துகொண்டாலும் அது பற்றி அவனுக்குக் கவலையில்லை. அவனும் அர்விந்த் மாதிரியே தாடிவைத்துக் கொண்டு கண்ணாடி போட்டிருக்கிறான் என்கிற சின்ன ஒற்றுமைகூடத் தெரியாத வெகுளியாய் அவள் இருப்பதை நினைத்தால் இப்போது விரக்தியாய் சிரிப்பு வந்தது. மேற்கொண்டு அவளுடன் பேசுகிற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடுதல் இருவருக்குமே நல்லதென்று மறுபடி மறுபடி நினைத்துக்கொண்டான்.

'என்னடா ஒரு மாதிரி இருக்க? நீயும் ப்ரகாஷ் மாதிரி குச்சான்கிட்ட மாட்டிட்டியா?' என்று ஜே.ஸி ஒரு முறை கேட்டதற்கு 'அதெல்லாம் ஒண்ணுமில்ல' என்று சமாளித்தான். மலர் ஓரிரு முறை ஸ்டுடியோவுக்கு அவனைப் பார்ப்பதற்கு வந்தபோதுகூட சத்யா பிஸியாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு அல்லது ஸீரியசாய் யாரிடமாவது பேசுவதுபோல் நடித்துக்கொண்டு அவளுடன் பேசுவதைத் தவிர்த்தான்.

ஆ·பிஸில் வேலை அதிகம் இல்லாததால் ஸ்ரீயும் பிரகாஷ¥ம் கதையளந்துகொண்டு ரிலாக்ஸ்டாக இருந்தார்கள். தேவ்கூட ஏஜென்ஸி கவலைகளை அவர் அறையிலிலேயே விட்டுவிட்டு இங்கே வந்து அவ்வப்போது ஏதாவது பேசிக்கொண்டிருந்தார். சத்யாவால் அப்படியிருக்க முடியவில்லை. இந்தச் சமயத்திலா இப்படியிருக்கவேண்டும் என்று நினைத்தான். லீவு போட்டுவிட்டு வெளியூர் எங்காவது போகிற எண்ணம் அடிக்கடி வந்தது. அம்மா வேறு அவள் அக்காள் ஊருக்குக் கூட்டிப் போகுமாறு இதோடு பல தடவை கேட்டுவிட்டாள். ஒரு மாற்றம் வேண்டுமென்றால் அங்கே கூட போகலாம். ஆனால் போவதற்கு அத்தனை விருப்பமில்லாமலும் இருந்தது அவனுக்கு.

மலர் ஒரு தடவை இன்டர்காமில் கூப்பிட்டு "ரொம்ப பிஸியாயிருக்கீங்க சத்யா. என்கூட ரெண்டு வார்த்தை பேசக்கூட உங்களுக்கு டைம் இல்ல. இல்லையா?" என்றாள்.

"அப்படியெல்லாம் இல்ல மலர்! கொஞ்சம் வேல ஜாஸ்தி." என்றான். அவனுக்கு அவளுடன் அதிகம் பேச்சு வளர்க்கவும் பிடிக்கவில்லை.

"சும்மா கத! அங்க அப்படியொண்ணும் ஒர்க் லோடு இல்லைன்னு ப்ரகாஷ் சொன்னான். அன்னைக்கு ரேஸ்கோர்ஸிலிருந்தே நீங்க என்னமோ சரியில்லை. நான் அர்விந்த் பத்தி சொன்னதிலிருந்து உங்களுக்கு என்னை புடிக்காம போயிருச்சு?"

மனசில் இருப்பதை அப்படியே சொல்கிறாள். சத்யா சுதாரித்துக்கொண்டு அவசரமாய் "ச்சேச்சே! ஏன் வீணா கண்டதையும் கற்பனை பண்ற மலர்?" என்றான்.

"அப்ப இன்னிக்கு சாயந்திரம் வாங்க. அவரை நான் அறிமுகப்படுத்தறேன்."

அவனுக்கு நிஜமாய் போகப் பிடிக்கவில்லை. போகாவிட்டாலும் மலர் விடமாட்டாள் போலிருக்கிறது. யாரை நினைத்து நினைத்து இத்தனை உருகினேனோ அவள் அவளுடைய ஆளை அறிமுகப்படுத்தக் கூப்பிடுகிறாள். நெஞ்சில் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு நான் அவனுடன் கைகுலுக்க வேண்டுமாம். அது ஒன்றுதான் பாக்கி. சரி.. இருக்கட்டும். மயிரிழையில் அவளை என்னிடமிருந்து அபகரித்துக்கொண்டு போன அவனை ஒரு தடவை பார்த்துவிடலாம். பார்த்து மானசீகமாய் வாழ்த்திவிட்டு நடையைக் கட்டலாம். எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை. ரெண்டு பேரும் எங்கிருந்தாலும் நன்றாயிருக்கட்டும்.

"வருவீங்களா, மாட்டீங்களா?"

"வர்ரேன்" என்றான்.

அன்று மாலையே சாயிபாபா காலனி அன்னபூர்ணா போய் ஒரு பெரிய வட்ட மேஜையில் மலருடன் உட்கார்ந்திருந்த அர்விந்தைச் சந்தித்தான்.

அர்விந்த் "நைஸ் டு மீட் யூ. மலர் உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கா." என்று மென்மையாய் கைகுலுக்கிவிட்டு "ஓ! நீங்களும் தாடி, கண்ணாடி.. க்ரியேட்டிவ்... க்ரேட்" என்று தோழமையாய் சிரித்தான்.

அவனுடைய சிரிப்பில் சத்யாவுக்கு இறுக்க உணர்வுகள் தளர்ந்து மனசு லேசாகிவிட்டது. கிருஷ்ணாகூட இப்படித்தான் சிரிப்பான். தோள் மேல் கைபோட்டுக்கொண்டு ஸ்நேகம் தேடுகிற சிரிப்பு. சத்யா அவனை உற்றுக் கவனித்தான். கொஞ்சம் ஹேண்ட்ஸம் ஆகத்தான் இருக்கிறான். மலருக்கு சரியாக இருப்பான் என்று தோன்றியது. பிறகு ஏஜென்ஸி, அட்வர்டைஸிங், டி.வி கமர்ஸியல் என்று சம்பந்தமில்லாமல் பொதுவாய் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பதை லேசான காதல் பெருமிதமும், வெட்கமும் கலந்த பார்வையுடன் மலர் கவனித்துக்கொண்டிருந்ததை சத்யா கவனித்தான். அவனை இவனுக்கு அறிமுகப்படுத்தினதோடு அவள் வேலை முடிந்துவிட்ட மாதிரி ஏனோ அதிகம் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அப்புறம் அவர்களுடன் ஒரு மசால் தோசை சாப்பிட்டுவிட்டு "ஆல் தி பெஸ்ட்! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான். அங்கிருந்து கிளம்பும் முன் மலரை ஒரு முறை முழுசாகப் பார்த்தான். அவனுக்கு என்னமோ அவளை கடைசி தடவையாகப் பார்ப்பது மாதிரி இருந்தது. அவ்வளவுதான். இனி இத்தோடு அவனுக்கும் அவளுக்கும் இடையே மெல்லிய கயிறு அறுந்துவிட்டதாய் உணர்ந்தான். இனி திரும்பிப் பார்க்கவேண்டாம். அவளுடைய பாதையில் இனி குறுக்கே போவது அபத்தம். அங்கே அவளுடன் சேர்ந்து கைகோர்த்துப் போக அரவிந்த் இருக்கிறான். அன்று திரும்பி வரும்போது மனதின் பாரம் குறைந்த நிம்மதியில் வழக்கத்துக்கு மாறாக வண்டியை ரொம்ப மெதுவாய் ஓட்டினான். லேசாய் விசிலடித்தான். அடுத்த நாளிலிருந்து மறுபடி லஞ்ச் பாக்ஸ் எடுத்துவந்து மதியம் சாப்பாட்டு மேஜை கும்பலில் சகஜமாய் கலந்து கொண்டான். மலருடன் எப்போதும் போல் பேசினான்.

கொஞ்ச நாளிலேயே எல்லாமே பழகிப்போய் எல்லாவற்றையும் கொஞ்சம் மறந்திருந்தான். ஒரு நாள் மதியப் பொழுதில் தேவ் அவசரமாய் வந்து அட்வர்டைசிங் க்ளப்பில் ஏட் ரேட்டிங் (Ad Rating) காம்பெடிஷன் இருக்கிறதென்றும், நம் ஏஜென்ஸி சார்பில் யாராவது கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டார். இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி என்றார். எல்லாரும் முகத்தை முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினபோது சத்யா சட்டென்று நான் போகிறேன் என்றான். இந்த மாதிரி எதிலாவது மனத்தை திருப்ப முயற்சித்தாலொழிய தினசரி இயல்பு வாழ்க்கை கடைத்தேறாது என்று தோன்றியது. ஜே.ஸியின் முகத்திலும் ஆர்வம் இருந்தது. இரண்டு பேரும் கை உயர்த்தினார்கள்.

"கூல்.. தட்ஸ் த ஸ்பிரிட். ஐ வில் ரிஜிஸ்டர் யுர் நேம்ஸ்.. என் ரூமுக்கு வந்தா இன்விடேஷன் தர்ரேன். ஆல் த பெஸ்ட் கைஸ்." என்று தேவும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு அவர் அறைக்குப் போனார்.

சத்யா பின் தொடர்ந்து போய் இன்விடேஷனை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தபோது தேவ் "அப்றம்.. உன் ஆளு இன்னைக்கு இங்க வர்ரா! ரெடியா இரு" என்றார்.

"என்னோட ஆளா.. யாரு?"

"அதான் அன்னிக்கு MCF கார்ப்பரேட் ·பிலிம் ஷ¥ட்டிங்ல கொஞ்சிட்டிருந்தியே.. அந்த அம்மணி"

சத்யாவுக்குப் புரிந்துவிட்டது. "மதுளாவ சொல்றீங்களா?" என்றான்.

"ஓ அவ பேரு மதுளாவா? அது எனக்குத் தெரியாது."

"சும்மா புளுகாதீங்க தேவ். உங்களுக்குத் தெரியாமயா? இங்க எதுக்கு வர்ரா??"

"ப்ராடக்ட் ப்ரெளச்சர் கரெக்ஷன் பாக்க வர்ரா.. அத நீதான பண்ணின?"

"ஆமா! ஆனா அவ எதுக்கு அதை கரெக்ஷன் பாக்க.... ஓ! அவ கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் இல்ல? மறந்துட்டேன்."

தேவ் புன்னகைத்தான். சத்யா அவனிருக்கைக்குப் போய் கோரல்ட்ராவில் அந்த ப்ரெளச்சர் டிசைனை திறந்து வைத்துக்கொண்டான். மதுளா வரக் காத்திருந்தான். அவள் முகம் முழுசாய் ஞாபகம் வரவில்லை. ஒரே ஒரு முறை பார்த்தது. அவள் அண்ணன்காரன் காலரிக்கு வேறு அத்தனை கூப்பிட்டும் அவன் போகாததும் நினைவுக்கு வந்தது. அவள் இங்கு வரும்போது அதைப்பற்றி கேட்கக்கூட செய்யலாம்.

ஜந்தரை மணிக்கு சுபாஷிணி இண்டர்காமில் கூப்பிட்டு "சத்யா உனக்கு இங்க ரிஷப்ஷன்ல ஒரு கெஸ்ட் வெயிட்டிங். யாருன்னு கேட்டேன். சொல்ல மாட்டேங்கிறாங்க" என்றாள் எரிச்சலான குரலில். மதுளாவாகத்தான் இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவன் ரிசப்ஷனுக்குப் போனபோது அங்கே யாரும் இருக்கவில்லை. கேள்விக்குறியுடன் சுபாஷிணியைப் பார்த்தபோது அவள் முகத்தை ஸீரியஸாய் வைத்துக்கொண்டு அசுவாரஸ்யமாய் கான்பரன்ஸ் ரூமை நோக்கிக் கைகாட்டினாள்.

கான்பரன்ஸ் ஹாலின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு சத்யா உள்ளே எட்டிப் பார்த்தபோது ப்ராண்ட் ஈக்யூடி சப்ளிமெண்டை டேபிளில் மடித்து வைத்து அவள் நிமிர்ந்தாள். மதுளாதான். ஹாய் என்றாள்.

"சர்ப்ரைஸா இருக்கா?" என்று உதட்டுச்சாய உபயத்தில் இன்னும் பளீரென சிரித்தாள். ஸாரி உடுத்தி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டிருந்தாள். கான்·பரன்ஸ் அறை அவள் பெர்·ப்யூமால் நிரம்பியிருந்தது. அன்றைக்குப் பார்த்ததைவிட கொஞ்சம் உயரமாய்த் தெரிந்தாள். மறந்துபோயிருந்த அவள் முகத்தின் மிச்சத்தை அவன் உள்வாங்கி ஞாபகத்தில் நிரப்பிக்கொண்டான். அவள் முகத்தில் ஏதோ கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. அதாவது அவள் அன்றைக்குப் பார்த்ததைவிட கொஞ்சம் அழகு கூடினாற்போல் இருந்தாள்.

சத்யா "வெல்கம் டு ட்ரு ·ப்யூஷன். நீங்க இங்க வர்ரது முதல் தடவைன்னு நினைக்கிறேன்." என்றான்.

"ஆமா சத்யா! இன்னொரு சர்ப்ரைஸ் நியூஸ் கேளுங்க! நான் உங்க கம்பெனியில க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ்வா சேர்ந்துட்டேன். தேவ் எனக்கு வேலை போட்டுக் குடுத்துட்டார்"

"அப்படியா? நல்லது! புளுகு மூட்டையை அவுத்துவிட்டது போதும். உங்களுக்கு நடிப்பு சரியா வர்ல. ப்ரெளச்சர் கரெக்ஷன் பாக்கறதுக்கு நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு தேவ் ஏற்கெனவே சொல்லிட்டார்."

அவள் உடனே முகம் வாடி சிரிப்பை நிறுத்தி.. "ச்சே.. ஒரு சுவாரசியமே இல்லாம போச்சுப்பா வாழ்க்கைல. சரி போகட்டும். என் அண்ணாவோட ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு நீங்க ஏன் வரவே இல்ல. அக்கறையா போன்கூட பண்ணிக் கூப்பிட்டனே! வேஸ்ட்டுப்பா" என்றாள்.

"நோ ப்ராப்ளம். இன்னிக்கேகூட வரட்டுமா. கூட்டிட்டுப் போறீங்களா?" என்றான் யோசிக்காமல்.

"தாராளமா" என்றாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 16 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அதிகாலையில் பரந்த வாசலில் புள்ளிகள் வைத்து நுணுக்கி நுணுக்கி அழகாய் கோலம் போடுவாள் அம்மா. வீதியில் கடந்து போகிற பெண்கள் வாசலில் நின்று அந்தக் கோலத்தை கவனித்துவிட்டுத்தான் போவார்கள். காய்கறிக்காரன் வாசலுக்கே வண்டியோடு வருகிறான் என்றாலும் அம்மா வீட்டின் பின்புற இடத்தில் சின்னதாய் தோட்டம் போட்டிருந்தாள். அதன் இரண்டு பாத்திகளில் கத்திரிக்காயும், வெண்டைக்காயும் காய்த்திருக்க இன்னும் இரண்டு பாத்திகளில் மஞ்சளும், கீரையும் முளைத்திருக்கும். அந்தத் தோட்டம் பார்க்கவும் ஒரு கூட்டம் வந்து போகும். புதியதாய்ப் படிக்கிற சமையல் குறிப்புக்களை படிப்பதோடு நிறுத்தாமல் அம்மா அதை செய்தும் பார்ப்பாள். அதில் வந்த மணத்தைக் கொண்டு வனஜாக்கா இன்றைக்கு என்ன ஸ்பெஷல் என்று தவறாமல் வீட்டிற்குள் வந்து கேட்கும். முன்புறம் வாசலில் விழும் தென்னை மட்டையையும் அம்மா விட்டுவைப்பதில்லை. அதன் ஓலையை உருவிப் போட்டு ஓரமாய் அமர்ந்து வெகு வேகமாய் அதை ஒரு துடைப்பம் ஆக்குவாள். பார்வதி மாமி வந்து அதை ஆர்வமாய்ப் பார்க்கும். சின்னச் சின்ன விஷயங்களிலும் அம்மா எடுத்துக் கொள்கிற சிரத்தையை நானும் ஆச்சரியமாய்ப் பார்ப்பேன். யாரும் கவனிப்பதற்காக அம்மா எதையும் செய்வதில்லை. அம்மா எதை செய்தாலும் கவனிக்கப்படுகிறது. அவ்வளவுதான்!MCF ப்ரெளச்சர் கரெக்ஷன்கள் பார்த்துவிட்டு மதுளா கிளம்பும்போது சத்யாவும் அவளுடனேயே கிளம்பினான். அவள் நம்பாமல் நிஜமாவே வர்ரீங்களா சத்யா என்று நான்கு தடவை கேட்டுவிட்டாள். அவள் அண்ணனின் ஆர்ட் காலரிக்கு அவன் வருகிறான் என்பதில் ஏன் அவள் அத்தனை ஆச்சரியமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறாள் என்று சத்யாவுக்குப் புரியவில்லை.

ஆ·பிஸை விட்டு அவளுடன் வெளியே வந்தபோது ஜே.ஸி கையில் சிகரெட்டுடன் வானத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். மதுளாவையும் சத்யாவையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு "எங்க?" என்றான் பார்வையிலேயே. ஆயிரம் அனர்த்தங்களோடு கூடிய அந்த பார்வைக்கு சத்யா பதில் தேடிக்கொண்டிருந்தபோது "நடத்து நடத்து" என்று சத்யாவுக்கு மட்டும் கேட்கிற குரலில் சொல்லிவிட்டு மிச்ச சிகரெட்டைக் கடாசி காலில் நசுக்கிவிட்டு உள்ளே போனான்.

"நான் கம்பெனி கார்லதான் வந்தேன். அதோ நிக்கிற அம்பாசடர். அதை அனுப்பிச்சிட்டு உங்க கூட பைக்ல வந்துர்ரேன்?" என்றாள் மதுளா.

சத்யா ஒரு விநாடிகூட யோசிக்காமல் "இல்ல மதுளா.. நீ கார்லயே வா! என் பைக்ல டயர் ரொம்ப வாபிள் ஆகுது. டபுள்ஸ் போறது சிரமம்." என்றான்.

அவள் சிறிது ஏமாற்றத்துடன் "ஓ. இட்ஸ் ஓ.கே.." என்று சிரித்துவிட்டு அரைவட்டம் அடித்துத் திரும்பி நின்ற காரில் ஏறிக் கொண்டாள். எதற்கு அப்படி பொய் சொன்னோம் என்று பிறகு வருத்தமாயிருந்தது அவனுக்கு. ஏதோ ஒரு ஜாக்கிரதை உணர்வு அப்படி சொல்ல வைத்துவிட்டது. ஏற்கெனவே அடிபட்டவன் கையாள்கிற அனிச்சையான தடுப்பு நடவடிக்கை மாதிரி அது அமைந்துவிட்டது. அவள் என் வண்டியில் வருவதால் ஏதாவது நடந்துவிடும் என்று பயந்தேனா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அம்பாசடரைப் பின் தொடர்ந்தான்.

சிட்டி டவர்ஸ் சமீபமாய் ஒரு காம்ப்ளக்ஸ் அருகில் நிறுத்தி இறங்கி மதுளா காரை அவள் கம்பெனிக்கு திருப்பி அனுப்பிவிட்டாள். அவன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரக் காத்திருந்தாள். சத்யா அவளை தூரத்திலிருந்து ஒரு முறை பார்த்தான். இவள் எப்படி சட்டென்று தன்னுடன் ரொம்ப உரிமையாய் பழக ஆரம்பித்துவிட்டாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. நானும்கூடகூட அப்படித்தானே என்று நினைத்துக்கொண்டான். இரண்டாம் சந்திப்பிலேயே அவள் கூப்பிட்டாள் என்று இத்தனை தூரம் வந்திருக்கிறான். இவள் மலர் மாதிரியான டைப் இல்லை. கலகலவென்று அவள் பேசுவது என்னவோ ரொம்ப வெகுளி மாதிரி தோற்றம் தந்தாலும் அவள் அப்படி இல்லை என்று தோன்றியது. மூக்குக் கண்ணாடியிலிருந்து அவள் பார்க்கிற பார்வை அவள் கொஞ்சம் விவரமானவள்தான் என்பதை சொல்கிறது.

இருவரும் காலரிக்கு இட்டுச் செல்லும் மாடிப் படிகளில் மெதுவாக ஏறும்போது சத்யா கேட்டான். "உன் மூஞ்சி அன்னைக்குப் பாத்ததைவிட வித்தியாசமா இருக்கு."

"அப்படியா!... நல்லாருக்குங்கிறியா? நல்லால்லைங்கறியா?" திடீரென்று இயல்பாய் இருவரும் ஒருமையில் விளித்துப் பேச ஆரம்பித்தது அவனுக்கு இன்னொரு ஆச்சரியம்.

"அதில்லை. ஏதோ கொஞ்சம் சேஞ்ஜ் தெரியுது."

அவள் அவனை திரும்பிப் பார்த்து "இதை நிறைய பேரு கேட்டுட்டாங்க. ஒண்ணுமில்ல! கண்ணாடி மாத்தியிருக்கேன். முதல்ல ப்ரேம் கொஞ்சம் பெருசா இருக்கும். இப்ப சின்னதாயிருச்சு. நல்லால்லையா?"

"நல்லாருக்கு"

"உன்கிட்டயும் சேன்ஜ் தெரியுது." என்றாள். எப்படி என்பதுபோல் அவன் புருவம் உயர்த்த அவள் சொன்னாள். "அன்னைக்கு ஷ¥ட்டிங்ல பாத்தப்ப முகம் ப்ரைட்டா இருந்தது. இப்ப வாட்டமா இருக்கு. என்ன லவ் பெய்லியரா?"

அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அவன் பதில் சொல்ல யோசிப்பதற்குள். "சும்மா கேட்டேன். ஸீரியஸ் ஆய்டாத" என்றாள்.

காலரி முகப்பில் ஒரு பெரிய போஸ்டரில் தாடியும், பாகவதர் மாதிரி நிறைய முடியுமாக காதில் கடுக்கனுடன் சிரித்துக்கொண்டிருந்ததுதான் அவள் அண்ணனாக இருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டான். உள்ளே போனதும் அதே மாதிரி ஒரு உருவத்தை எதிர்பார்க்க, எதிர்ப்பட்டவன் வேறு மாதிரியிருந்தான். அதாவது இன்னும் அதிக தாடி. தலையில் அத்தனை முடியையும் அழுந்த வாரி முடிந்திருந்த குடுமியுடன் ஜீன்ஸ், கார்ட்ராய் உடையில் இருந்தான். "பரத்.. நான் சொன்னேன்ல... இது சத்யா" என்று மதுளா அறிமுகப்படுத்தி கைகுலுக்கும்போது அவன் விரல்கள் ஒரு பெண்ணினுடையது போல் மென்மையாயிருந்ததை உணர்ந்தான் சத்யா.

"உங்க காலரி கே.ஜி பக்கத்துல இருக்கறதா சொன்னாங்களே"

"மொதல்ல அங்க இருந்தது.. என் ·ப்ரெண்ட்கூட கம்பைன் பண்ணி வெச்சிருந்தேன். அவர் ஒரு பெரிய ஆர்டிஸ்ட். இப்ப இங்க தனியா.. இன்னும் ஒரு வாரம் இருக்கும். மது.. சாரை கூட்டிட்டுப் போய் காமி. ஐ வில் ஜாயின் யு."

அவர்களுடன் இன்னும் ஓரிருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. அந்தக் கூடத்தில் பளீர் வெண்மையில் விளக்குகள் ஒளிர அழகான ·ப்ரேம்களில் சிறிதும் பெரிதுமாக நிறைய ஓவியங்கள். சத்யா மெல்ல அவைகளை நோக்கி நகர்ந்தான். பரத் பெரிய ஓவியன்தான் போலும் என்று நினைத்துக்கொண்டான். அவன் அந்த ஓவியங்களைப் பிரமிப்புடன் பார்ப்பது மதுளாவுக்கு சந்தோஷமாயிருந்திருக்க வேண்டும். அவள் முகத்தில் புன்னகை ஒன்று அரும்பி நிலைத்து நின்றிருந்தது. மதுளா விளக்க ஆரம்பித்தாள். "இது ஆயில் பெயிண்டிங். இது வாட்டர் கலர். இது முழுக்க பேலட் னை·ப்ல. இது ம்யூரல்ஸ். அப்றம் இது பாருங்க.. சார்க்கோல்.. பரத் எல்லா மீடியாவிலேயும் புகுந்து விளையாடுவான். பொதுவா அண்ணாவோட ·பேவரைட் மீடியா பேலட் னை·ப்தான். சின்ன வயசிலயே அடுப்புக்கரி எடுத்து சமையல் ரூம் பூரா கிறுக்கிட்டுத் திரிவான். அந்த டேலண்ட்தான் இப்ப காலரியா மாறிருக்கு."

அவள் ஒவ்வொன்றாய் காட்டி சொல்லிக்கொண்டே வர சத்யா அருகில் போய் உற்று உற்றுப் பார்த்தான். சிலது பார்த்ததும் புரிந்தது. சிலது ஒன்றுமே புரியவில்லை. கேட்டால் அதுபற்றி பரத் ஒரு அரைமணி நேரம் அர்த்தம் சொல்லக்கூடும். புரியாவிட்டாலும் சிலது நன்றாகத்தானிருந்தது. ஒரு சில கணங்கள் அவன் ஓவியங்களிலிருந்து பார்வையை விலக்கி அவளைப் பார்த்தபோது அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. கார்ப்பரேட் ·பிலிம் ஷ¥ட்டிங்கில் கூட இப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பது ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஹாலின் வெண்மையான வெளிச்சத்தில் மதுளாவின் முகம் இன்னும் ஒளிர்ந்து நேர்த்தியாய் அழகாய்த் தெரிந்தாள்.

"ஆர்ட் பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்க மதுளா.." என்றான்.

"அதெல்லாம் இல்ல.. சின்ன வயசிலிருந்தே அண்ணாகூட இருந்ததால அவன் புண்ணியத்துல ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இந்த ஆர்ட் பாருங்க.. இது நான் பண்ணினது. போனாப் போகட்டும்னு பரத் இதையும் இங்க மாட்டி வெச்சிருக்கான்." அவள் ஹாலின் கடைசியில் இருந்த ஒரு ஓவியத்தைக் காட்டினாள்.

அவன் ஆச்சரியமாய் அதைப் பார்த்தான். கொஞ்சம் பெரிய சைஸ் ஓவியம்தான். அதில் நிறங்களின் கலவையில் ஒரு அசாதாரண கோணத்தில் ஒரு கிணறு. தூண்களுடன் கூடிய ஒரு மாடம். சில்அவுட்டில் தென்னை மரங்கள். வெள்ளைத் தீற்றலில் ஒரு நிலவு. ஒரு ஆண் பெண் உருவம்.

"பாரதியோட காணி நிலம் வேண்டும் பாட்டுதான் இதோட தீம்" என்றாள்.

"ரொம்ப நல்லாருக்கு மதுளா. நீ இவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட்னு சொல்லவே இல்லை."

அவள் சிரித்தாள். "அண்ணா காலரில எல்லாம் அப்பப்ப கூட இருந்து உதவி பண்ணுவேன். அதுல கத்துக்கிட்டது. நான் அன்னைக்கே சொன்னேனே எனக்கு இதிலெல்லாம் ரொம்ப இண்ட்ரஸ்ட்டுன்னு." என்றாள். என்னைக்கே என்று சத்யா யோசித்துக்கொண்டிருந்தபோது பரத் அருகில் வந்தான். "என் ஒர்க்ஸ் எப்படியிருக்கு?" என்றான்.

"அருமையா இருக்கு. அதிலும் அந்த "கோரல் ரீ·ப்"-ன்னு டைட்டில் போட்டது ·பண்டாஸ்டிக்."

"தேங்க்யூ. அது பேலட் னை·ப் ஒர்க். கலர் மிக்ஸிங் கொஞ்சம் டார்க்கா இருக்கணும்னு ப்ளான் பண்ணி செஞ்சேன். நல்லா வந்திருக்கு." பரத் லேசாய் கருந்தாடியை நீவி விட்டுக் கொண்டான். அவன் கண்கள் பளபளப்புடன் கூர்மையாய் இருந்தன.

சத்யாவுக்கு அன்றைக்கு அங்கே வந்தது ஏனோ நிறைவாயிருந்தது. மறுபடி ஒருதரம் காலரியை வலம் வந்துவிட்டு அவன் கிளம்ப எத்தனிக்கும்போது.. "பரத்.. வெய்ட் பண்ணு. நான் இவரோட ஒரு கா·பி சாப்டுட்டு வந்துர்ரேன். ஓ.கே?" என்று கதவை நோக்கி நடந்தாள்.

அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. பரத்திடம் சொல்லிவிட்டு செலுத்தப்பட்டவன் போல் அவள் பின்னால் படியிறங்கினான். "இவ்ளோ தூரம் எனக்காக வந்ததுக்கு நான் ஒரு கா·பிகூட வாங்கித்தரலைன்னா எப்படி? ஒரு பத்து நிமிஷம். சின்ன வாக் போயி கீர்த்தில சாப்பிட்டுட்டு வந்துரலாம்." என்று நடந்தாள்.

அவனுக்கு மறுப்பதற்கு ஒன்றும் இல்லாமலிருந்தது. சொல்லப் போனால் அவளுடன் அப்படி தனியாய் கூட நடப்பதே நன்றாயிருந்தது. அவனுக்கு சட்டென்று மலரும் அவளுடன் ரேஸ் கோர்ஸில் நடந்ததும் ஞாபகம் வந்து போனது. வேறெந்த பெண் பிள்ளை சகவாசமும் வேண்டாம் என்று மனதில் எடுத்திருந்த சபதம் இளகுவதாய் உணர்ந்தான். மிகக் குறுகிய காலத்திலேயே இன்னொரு பெண். இது இயல்பாய் நடக்கிறதா என்று ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. சரி நட்பாய் இருந்துவிட்டுப் போவதில் என்ன கெட்டுப் போய்விடும்? அதைத் தாண்டிப் போகிறபோதுதானே குழப்பங்களும், பாதிப்புகளும் என்று நினைத்தான். வெளியே நன்றாக இருட்டியிருந்தது. ரோட்டின் இடதுபுறமாய் ஆட்டோக்களையும் மனிதர்களையும் தாண்டி நடந்தார்கள். நிறைய ஆண்களின் பார்வை அவள் ஸ்லீவ்லெஸ்ஸில் படர்ந்து கடப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் எந்த உறுத்தலுமில்லாமல் நடந்து வந்துகொண்டிருந்தாள். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு நெரிசலில் புகுந்து கீர்த்திக்குள் நுழைந்தார்கள்.

"லேசா ஏதாவது டின்னர் முடிச்சிட்டே போலாமே." என்றாள் திடீரென்று. சத்யா தலையசைத்தான். அவனுக்கும் பசிக்கிறமாதிரிதான் இருந்தது. ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கும்போது "உன்னை ரெண்டு தடவையும் ஸாரிலதான் பாத்திருக்கேன். எப்பவும் இதுதானா?" என்றான்.

"அப்படியெல்லாம் இல்ல.. சுரிதார், டி சர்ட், ஜீன்ஸ் எல்லாம் போடுவேன். ட்ரெஸ் விஷயத்துல அப்பா அத்தனை கண்டிப்பெல்லாம் பண்ணமாட்டார். அம்மாவும், அக்காவும் அப்பப்ப திட்டுவாங்க. நான் கண்டுக்கமாட்டேன்." என்று சிரித்தாள். "அப்றம் நீ இப்பவும் கவிதையெல்லாம் எழுதறியா?" என்றாள்.

சத்யா வியப்பு மேலிட அவளைப் பார்த்தான். அவன் கவிதையெழுதுவது அவனுக்கும் கிருஷ்ணாவுக்கும் இன்னும் ஓரிரு பேர்கள் தவிர அதிகம் யாருக்கும் தெரியாது. இரண்டு தடவை மட்டுமே பார்த்துப் பழக நேரிட்ட இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியமாயிருந்தது.

"நான் கவிதையெழுதுவேன்னு யாரு சொன்னா..?"

"தெரியும். நான் படிச்சிருக்கேனே! உன்னைப் பத்தி வேற என்னல்லாம் தெரியும்னு சொல்லட்டுமா? நீ ஒரு பி.எஸ்.ஜி ப்ராடக்ட். அப்றம் ஜி.ஸி.டி காலேஜில பார்ட்டைம் பி.ஈ முடிச்சிட்டு, சிட்கோல ஒரு என்ஜினீயரிங் கம்பெனில வேலை பாத்துட்டு, அது புடிக்காம அட்வர்டைஸிங் பக்கம் தாவிட்ட. என்ஜியரிங் பேக்ரவுண்ட் இருக்கறதாலதான் எங்க ப்ராடக்ட் கேட்டலாக் வேலையை தேவ் உன் கிட்ட விட்டிருக்கார். நீ வீட்டுல ஒரே பையன். நியூஸ் பேப்பர் மேகஸின்ல வர்ர அலிகேட்டர் இண்டர்நேஷனல் டிசைன்ஸ் வழக்கமா நீதான் பண்ணுவ. பைக் வாங்கறதுக்கு முன்னாடி டி.வி.எஸ் சேம்ப் வெச்சிருந்த. அப்றம்.. உன் வீடு கவுண்டம்பாளையம் ஈஸ்வர் நகர் பிள்ளையார் கோவில் பக்கத்துல முதல்ல இருந்துச்சு. அதுக்கப்புறம் சோழன் நகர்ல சொந்தமா வீடு கட்டி குடிபோனீங்க. ரெண்டு பெட்ரூம். ஒரு ஹால். கிச்சன். காம்பெளண்டுக்குள்ள ரெண்டு தென்னை மரம்... 27A, C ப்ளாக். சோழன் நகர், கோவை-34. முக்கியமா.. வீட்டுக்குப் பக்கத்துல பானு-ன்னு ஒரு பொண்ணை உருகி வழிஞ்சு லவ் பண்ணீங்க. சரியா?" என்று கண் சிமிட்டினாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 17 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மா ஒருநாள் டீச்சர் ஆனாள். ஆனால் அது பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு அல்ல. அது பக்கத்துவீட்டு சாரதாக்காவுக்கு. முப்பத்தைந்து வயது சாரதாக்கா! எழுத்து வாசனை எதுவும் நுகர்ந்ததில்லை அவள். ஊரில் மாடு மேய்க்கப் போனபோது மட்டும் இருந்த பள்ளியைக் கடந்து போனதாய் சொல்வாள். சாரதாக்கா ஒரு நாள் ஊருக்குப் போய்விட்டு ரயிலில் வீடு திரும்ப - இறங்க வேண்டிய ஸ்டேஷனின் பெயரைப் படிக்கத் தெரியாமல் வேறொரு ஸ்டேஷனில் இறங்கி அங்கேயிங்கே விசாரித்து வீடு திரும்ப அதற்குள் அவளது கணவன் பெண்டாட்டியைக் காணவில்லையென போலீஸ் வரை போய்விட்டார். அப்றம் அம்மாதான் சொன்னாள். சாரதா எப்படியாவது எழுதப்படிக்கக் கற்றுக்கொள்! இனியெப்படி பள்ளிக்கூடம் போறது என்றாள் சாரதாக்கா. பள்ளிக்கூடம் எதுக்கு? நான் சொல்லித் தர்றேன். அம்மா டீச்சர் ஆனாள். அம்மாவே நோட்டும் வாங்கினாள். பேனாவும் பென்சிலும் வந்தது. அடுத்த நாள் மாலையே அம்மாவின் கல்வி ஒலிபரப்பு ஆரம்பமானது. அம்மா சொல்லிக் கொடுத்த முறையும் - சாரதாக்காவுக்கு இருந்த வெறியிலும் குறைந்த நாளிலேயே படிக்கக் கற்றுக் கொண்டாள். அடுத்த முறை ஊருக்குப் போய் குழப்பமின்றி வீடு திரும்பி சந்தோசமாய் அம்மாவுக்கு நன்றி சொல்ல சாரதாக்கா ஓடிவர, முந்திக்கொண்டு அம்மாதான் சொன்னாள். 'என்னை ஒரு நல்ல டீச்சர் ஆக்கினதுக்கு நன்றி சாரதா'!.சத்யாவுக்கு அதிர்ச்சியாயிருந்தது. மதுளா அவனைப் பற்றிய விவரங்களை கொட்ட ஆரம்பித்ததில் திகைத்துப்போய் கொஞ்ச நேரம் சிலையாய் உறைந்திருந்தான். எல்லாவற்றையும் விட திகைப்பு அவனைப்பற்றி எதற்கு இத்தனை தெரிந்து வைத்திருக்கிறாள் என்கிற விஷயம். எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்தான். எப்படி என்னைப் பற்றி இத்தனை விவரங்கள் தெரிஞ்சு வெச்சுருக்கே என்று கேட்க வந்தவன் "உன் பேரு மதுளாங்கறத தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது" என்றான்.

"அது போதுமே.." என்று மந்தகாசமாய் சிரித்துவிட்டு "ஸாரி சத்யா.. பானு விஷயம் எல்லாம் ரொம்ப பர்சனலாச்சே.. இவளுக்கு எப்படி தெரியும்னு யோசிக்காதீங்க. தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம். தெரிஞ்சுக்கிட்டேன்."

"சரி எப்படி தெரியும்னு நான் கேக்கலை. எதுக்கு தெரிஞ்சுகிட்டேன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"அதான் சொன்னனே.. சும்மா தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம்"

"அந்த ஆர்வம் ஏன் வந்துச்சுன்னு கேக்கறேன்"

உடனே பதில் சொல்லாமல் அவள் ஓரிரு நொடிகள் மெளனமாய் இருந்தது அவனுக்கு அசெளகரியமாய் இருந்தது. அவள் முகம் சட்டென்று மாறிவிட்டதை சத்யா கவனித்தான்.

"சும்மாதான்." என்று சிரித்தாள்.

மேற்கொண்டு எதுவும் குடைந்து கேட்பதற்கு அவனுக்குத் தயக்கமாயிருந்தது. ஏன் இந்த மாதிரி சட்டென்று அவளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன் என்று யோசனை வந்தது. மனதில் சில விஷயங்கள் ரீவைண்ட் பண்ணி ஓட்டிப் பார்த்தான். அன்றொரு நாள் கிருஷ்ணா ரயில்வே ஸ்டேஷனில் சொல்லிவிட்டுப்போன விஷயத்தில் வந்து நின்றது யோசனைகள். உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றா என்று ஒரு டீ சாப்பிடுவது மாதிரி கிருஷ்ணா அன்றைக்கு சுலபமாய் அறிவித்துவிட்டுப் போய்விட்டான். அது யார் என்பதற்கான விடை இன்றுவரை கிருஷ்ணா மூலமும் கிடைக்கவில்லை. நான்தான் என்று வேறு யாரும் முன்னால் வந்து நிற்கவும் இல்லை. சத்யாவாகவே தேடிக்கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஏதோ ஒரு சவாலில் தோற்றுப் போனமாதிரி தொய்ந்துபோய்க் கிடந்தன உணர்வுகள். இதற்கிடையே கிளைப் பாதை பிரிந்து மலரோடு போன பயணம் நடுவழியில் அகாலமாய் மடிந்ததும், அவள் பேசினதையும், பண்ணினதையும் வைத்துக்கொண்டு அவனாகக் கற்பனை செய்துகொண்டதெல்லாம் அபத்தமாய் முடிந்துவிட்டது. அந்தக் கசப்பு அனுபவம் இன்னும் கசடு மாதிரி அவன் மனதில் தேங்கி இருந்தது. அதுதான் மதுளாவிடம் இந்த மாதிரி சட் சட்டென்று கேள்வி கேட்கச் சொல்லுகிறதென்று நினைத்தான். ஏதோ ஒரு ஜாக்கிரதை உணர்வு. மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை உடனடியாய் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கு இருக்கிறதாய் அவன் நம்பவில்லை. எதுவானாலும் கேட்டுத் தெளிந்துவிடுதல் நல்லது.

இப்போது மதுளா விஷயத்தில் பழைய குறுகுறுப்பு மறுபடி வந்து மனதில் ஒட்டிக்கொண்டுவிட்ட மாதிரி இருக்கிறது. இவளும் என்னை கவனித்திருக்கிறாள். இன்றைக்கு வீட்டுக்குப் போனதும் கண்ணாடி முன் உட்கார்ந்து என் முகத்தில் ஏதாவது விஷேசமான ஈர்ப்பு இருக்கிறதாவெனப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். பெண்களுக்கு என்னைப் பிடிக்கிறது. பெண்கள் என்னைக் கவனிக்கிறார்கள். இதற்குமுன் இந்த விஷயத்தை அவன் இத்தனை அழுத்தமாய் உணர்ந்ததில்லை. என்னையெல்லாம் யார் லவ் பண்ணுவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்தது. பானுவின் மேல் ஆதிகாலத்தில் ஏற்பட்ட காதலை அவளிடம் சொல்லாமலே மறைத்துவிட்டதற்குக் காரணம்கூட அந்த தாழ்வு மனப்பான்மையால்தான். அவனுடைய தோற்றம், லட்சணம், நடத்தை என்பதின் மீதெல்லாம் அவனுக்கே தீர்மானமாய் ஒரு நம்பிக்கையில்லாமலிருந்தது. காதல் என்கிற விஷயத்தில் ஏதோ பயத்திரை அவனைச்சுற்றி எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் படர்ந்திருந்தது. அதற்காகவே பெண்களுடன் பேசுவதையெல்லாம் நிறையத் தவிர்த்திருக்கிறான். அப்புறம் அவன் கவனம் மலரின் மேல் மையம் கொண்டபோதுகூட அந்தத் திரை இருந்ததாய் உணர்ந்திருந்தான். அது இருந்ததும் நல்லதாகப் போயிற்று. மலரிடம் அவளை விரும்புகிறேன் என்று அவனாகச் சொல்லியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும்.

இப்போது மதுளா நெருங்கி வருகிறாள். இல்லை பிரமையா? தெரியவில்லை. எப்படியாகினும் மெல்ல அவனுக்குள் இருந்த அந்த பயத்திரை விலகி லேசான கர்வத்தில் நெஞ்சு நிமிர்ந்திருந்தது. மலரில்லாவிட்டால் இன்னொருவள். இதோ என்னோடு எனக்கு எப்பவும் பிடிக்கிற மசால் தோசை சாப்பிட்டுக்கொண்டு. ரஞ்சனியை தனக்குத் தெரியும் என்று முன்பு அவள் அவனிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அன்று கிருஷ்ணா பற்றிக்கூட விசாரித்தாள். தன்னைப் பற்றிய விவரங்களை அவள் அவர்களிடமிருந்துதான் அறிந்துகொண்டிருக்கக்கூடும் என்று நினைத்தான். இருந்தாலும் அவள் சொன்ன விவரங்கள் கொஞ்சம் அதிகம்தான். எந்த விஷயமானாலும் ஒரு அதீதமான ஈடுபாடோ ஆர்வமோ இல்லாமல் இத்தனை தெரிந்து கொள்ள முடியாது. எதற்கு என்று கேட்டால் சும்மா என்கிறாள்.

"அண்ணா வெயிட் பண்ணிட்டிருப்பான். கிளம்புவோமா?" என்றாள்.

வெளியே வந்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. சின்னத் தூற்றலையே புயல் மழை மாதிரி பாவித்து தலைக்குமேல் எதையாவது பிடித்துக்கொண்டு ஜனங்கள் ஒதுங்க இடம் தேடி சிதறி ஓடினார்கள். மதுளா மழை பற்றிய கவலையின்றி ரோட்டில் இறங்கினாள்.

அவனுக்கு ஒரு சிகரெட் புகைக்கவேண்டும்போல் இருந்தது. "இ·ப் யூ டோன்ட் மைண்ட்.. ஒரு அஞ்சு நிமிஷம்" என்று அவளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு கீர்த்திக்குக் பக்கத்தில் இருந்த பான்கடையில் ஒரு கிங்க்ஸ் வாங்கிக்கொண்டான். மெழுகு பூசின தீக்குச்சியால் பற்ற வைத்து முதல் புகையை சன்னமாய் வெளிவிட்டு அவளருகே வந்தான். மதுளா அவனையே கவனித்துக்கொண்டிருந்தாள். தூறல் பட்டுக் கிளர்ந்த சிலிர்ப்பை உள்ளடக்கும் பொருட்டு கைகளை மார்புக்குக் குறுக்காக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அவள் வெண்மையான ஸ்லீவ்லெஸ் கைகளில் மழைத்துளிகள் விழுந்து ஒரு மெல்லிய கோடாய் வழிவதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

விரல்களிடையே புகைகிற சிகரெட்டுடன் காலரி நோக்கி நடக்கும்போது "ரஞ்சனி உனக்கு ஜிகிரி தோஸ்த்தா?" என்றான்.

"ம். முதல்ல அவ்வளவா கிடையாது. இப்ப அவ எனக்கு நல்ல ·ப்ரெண்ட். எல்லா விஷயமும் பேசுவோம். இன்·பேக்ட் உன்னப்பத்தி கிருஷ்ணாவைவிட அதிகம் சொன்னது ரஞ்சனிதான்னு வெச்சுக்கயேன். ரொம்ப சா·ப்ட்-ஆன ஆள் நீன்னு அடிக்கடி சொல்லுவா. ஆனா பாத்தா அப்படி தெரியலை. தாடியெல்லாம் விட்டுட்டு முரடு மாதிரி இருக்கே. நீ கார்ப்பரேட் பிலிம் ஷ¥ட்டிங்குக்கு வர்ரதுக்கு முன்னாடியே உன்னைப் பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சிருந்தேன் தெரியுமா?."

"அதான் ஏன்னு கேட்டேன்"

"சொன்னேனே.. சும்மான்னு.." என்று சிரித்தாள். அவன் அதற்குமேல் எதுவும் பேசாமல் நிறுத்திக்கொண்டான். மழை வலுக்கும் என்று நினைத்து இருவரும் கொஞ்சம் வேகமாகவே காலரி வாசலுக்கு நடந்து வந்துவிட்டார்கள். அது இன்னும் தூறலாகவேதான் நீடித்திருந்தது. ஸ்ஸ்ஸ் என்ற காற்றில் அங்குமிங்கும் அலைகிற சுகமான தூறல். அவன் பைக் ஸீட் நனைந்திருந்ததை ஒரு டேங்க் கவரிலிருந்து துணியெடுத்துத் துடைத்தான். மீண்டும் துளிகள் வந்து விழுந்து மீண்டும் ஸீட் நனைய மழையிடம் தோற்றுவிட்டு துணியை எடுத்த இடத்தில் வைத்தான்.

"சரி.. கிளம்பறேன். குட்நைட். அப்றம் ஒரு சின்ன உதவி.. உங்கண்ணங்கிட்ட வாட்டர் கலர் டெக்னிக்ஸ் மட்டும் எனக்குக் கத்துத்தர முடியுமான்னு அப்புறமா கேட்டு சொல்லு.?" அவளை மாதிரியே அவனும் கண்ணாடியை கழற்றி மழைத்துளிகளை துடைத்துப் போட்டுக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். "யா.. ஷ்யூர். குட்நைட்! என்றாள் மதுளா.

என்ஜின் வெறுமனே உறுமிக்கொண்டிருந்ததே தவிர அவன் வண்டியை நகர்த்தவில்லை. அவளும் குட்நைட் சொன்னாளே தவிர அவனை வழியனுப்புவதற்ககான எந்த முஸ்தீபுகளுமின்றிதான் நின்றிருந்தாள். இதற்குமுன் எப்போதும் உணர்ந்தறியாத நிலையாய் இருந்தது அவனுக்கு. கிளம்புகிறேன் என்று கிளம்பாமலிருப்பதும், ஸீ.யூ சொன்னபிறகும் அவள் திரும்பி காலரிக்குள் போகாமல் இருப்பதும். விட்டகுறை தொட்டகுறையாய் இன்னும் ஏதோ பாக்கி இருப்பதுபோல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தார்கள். சத்யா பெருமூச்சு விட்டுவிடக்கூடாதென்று எத்தனை கட்டுப்படுத்தியும் வந்துவிட்டது.

"ரெண்டு பேரும் எங்காவது ·பிலிம் போகலாமா?" என்றாள் திடீரென்று.

"·பிலிமா?" ஜிலீரென்ற இன்ப அதிர்ச்சியில் அவன் கொஞ்சம் தயங்கி யோசித்துவிட்டு.. "போகலாம்.. ஆனா.." என்றான்.

"என்ன ஆனா.!"

"ஒண்ணுமில்லை. சரி எப்ப?"

"நாளான்னிக்கு மேட்டினி.. கே.ஜில ஏதாச்சும் புதுப்படம்!"

"நோ ப்ராப்ளம்"

அப்புறம் சட்டென்று அவளிடம் விடைபெற்றுவிட்டு அவளுடன் கீர்த்தியில் சாப்பிட்டதை நினைத்துக்கொண்டே மறுபடி ஆ·பிஸ¥க்கு வந்தான். கேட்டருகே வண்டியை நிறுத்தும்போது மின்சாரம் நின்று போய்விட்டது. கும்மென்ற இருட்டில் படியில் தடுமாறி ஏறி முதல் தளத்துக்கு வந்தபோது எல்லோரும் கிளம்பிப் போயிருந்தார்கள். ஜே.ஸி மட்டும் இருட்டுக்குள் இரண்டு காலையும் டேபிளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அமானுஷ்யமாய் உட்கார்ந்திருந்தான். வலது கையில் சிகரெட் லைட்டரை உயிர்ப்பித்து அணைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

இவனைப் பார்த்ததும் "வா.. தலைவா! உன் ஆளு என்ன சொல்லுது?" என்றான். சும்மா இர்ரா என்று சொல்லிவிட்டு சத்யா பால்கனிக்கு வந்து நின்று கொண்டான்.

பக்கத்தில் இருக்கிற ஒரு சில பில்டிங் ஜன்னல்களில் எமர்ஜென்ஸி விளக்கின் வெளிச்சங்கள் தெரிந்தன. சூழ்நிலையின் அமைதியில் நிறைய பேச்சுக்குரல்கள் கேட்டன. முக்கியமாய் குழந்தைகளினுடைய குரல்கள். அப்படியே பார்வையை உயர்த்தி மேலே பார்த்தான். மின்சாரம் போகும்போது காணக்கிடைக்கும் ஆகாயம் மிக அழகானது. வெளிச்சத்தின் எதிர்ப்புகளற்ற இருளில், ஒளிர்கிற நட்சத்திரங்கள் மிகப் பிரகாசமாகத் தெரியும் அப்போது.

லேசாய் மழை பெய்திருந்ததில் காற்று குளிர்ந்திருந்தது. குளிர்காற்றும் மழைத்தூறலும் மறுபடி மதுளாவை நினைவுபடுத்தின. அவனுக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது. வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைத்தான். மணி எட்டரைக்கும் மேல் ஆகியிருந்தது. இருட்டிலிருந்து ஜே.ஸியின் குரல் வந்தது. "நாளான்னிக்கு மத்தியானம் ஏட் ரேட்டிங் காம்பெடிஷன். ஞாபகம் இருக்கா? நாம ரெண்டு பேரும் போறோம்"

"நாளன்னிக்கா?" சத்யா லேசாய் திகைத்தான். அன்றைக்குத்தான் மதுளாவுடன் சினிமாவுக்குப் போகலாமென்று ப்ளான். என்ன பண்ணலாம் என்று ஒருசில விநாடிகள் குழப்பமாய் யோசித்துவிட்டு இருட்டில் ஜே.ஸி உட்கார்ந்திருந்த திசைக்குக் குரல் அனுப்பினான்.

"நான் அந்த காம்பெடிஷனுக்கு வரல ஜே.ஸி. அன்னைக்கு எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. தேவ் கிட்ட நான் சொல்லிக்கறேன்"

சத்யா உள்ளே வந்தான். ஜே.ஸி அவனை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வை இவனைத் துளைத்து என்னவோ விளக்கம் கேட்பதுபோலிருந்தது.

ஜே.ஸி கொஞ்ச நேரம் மெளனமாயிருந்துவிட்டு "சரி.. நடத்து நடத்து" என்றான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 18 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

என் எந்த பிரச்சினையையும் அம்மாவிடம் மறைக்க முடிந்ததில்லை. என் பிரச்சனை தெரிந்துவிடக் கூடாது என்று நான் சகஜமாய் இருக்க எவ்வளவு முயன்றாலும் அம்மா தெரிந்து கொண்டுவிடுவாள். நான் பேசும் விதமோ, சாப்பிடும் அளவில் தெரியும் மாற்றமோ, நான் போடும் உடைகளில் செலுத்தாத கவனமோ அம்மாவிடம் என்னைக் காட்டிக் கொடுத்துவிடும். பிறகு நான் நடந்ததைச் சொல்லிவிடுவேன். அம்மா சிரித்துக் கொண்டு சொல்லும் ஒற்றை வார்த்தை என் இரண்டு நாள் அவஸ்தைகளை நொடியில் தீர்த்துவிடும். அப்படித் தான் ஒரு நாள் என்னுடன் படித்த நண்பன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர - அவனைப் பார்க்க நான் அவன் வீட்டிற்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அவனிடம் ஒரு புன்னகை கூட வரவில்லை. என்னை வாசலில் நிறுத்தியே பேசினான். அதுவும் சுருக்கமாய் பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தான். நான் விடைபெற்று வீட்டிற்கு வந்தேன். அந்த அவமானம் என்னை முழுவதுமாய் ஆக்ரமித்திருந்தது. அம்மா அதைக் கண்டுபிடித்து எல்லாம் கேட்டுவிட்டு, அவனைப் பார்க்க எவ்வளவு செலவு பண்ணின என்றாள். நான் சொன்னேன். பிறகு அம்மா சொன்னாள். 'இரண்டு மணி நேரம். ஏழு ரூபாய்! இவ்வளவு சீப்பா ஒரு அனுபவம் கிடைப்பது பெரிய விஷயமில்லயா' என்றாள். நான் முதல் முதலில் அம்மாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன் அனுபவம் என்றால் என்னவென்று புரிந்து கொண்ட அனுபவத்தை!


சரியாய் சொன்ன நேரத்துக்கு மதுளா கே.ஜி வாசலுக்கு வந்துவிட்டாள். அவளை சத்யா முதன் முறையாய் சுரிதாரில் பார்க்கிறான். லிப்ஸ்டிக் இல்லாத உதடுகளையும்தான். ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா என்று கேட்டுக்கொண்டே படிகளில் அவனருகில் உட்கார்ந்தாள். உடம்பு சரியில்லை வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன் என்றாள்.

சத்யா கூட அப்படியொரு காரணத்தைச் சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தான். நல்லவேளையாக மதியம் ஆ·பிஸிலிருந்து கிளம்புகிற வேளையில் ஜே.ஸி சாப்பிடப் போயிருந்தான். திரும்பி வந்துவிட்டு அவன் தனியே அட்வர்டைஸிங் க்ளப்புக்குப் போகக்கூடும். சத்யா ஜே.ஸியுடன் போகவில்லை என்று சொன்னது தேவுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். 'நோ ப்ராப்ளம். யு கேரியான். உனக்கு பதில் நான் போறேன்' என்றார்.

தியேட்டரில் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. புதிதாய் போட்டிருந்த ஷாருக்கான் படம் பார்க்கலாம் என்றாள் மதுளா. அவள் விருப்பத்துக்கு மாறாய் அவனுக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை. ஏதோ ஒரு படம். அவளுடன் பார்க்கிறேன் என்பது முக்கியம். மதுளா தியேட்டருக்குள் பிரம்மாண்ட வினைல் போர்டில் ஷாருக்கானை பார்த்து 'க்யூட்டா இருக்கான் பாரு'. என்றாள்.

பேசாமல் ரிசர்வ் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. அவன் கூட்டத்தை பார்த்து யோசிப்பதைக் கலைத்து 'ஒண்ணும் பிரச்சினையில்ல. லேடீஸ் க்யூவில நின்னு நான் வாங்கித்தர்ரேன்' என்று மதுளா போனாள். போன வேகத்தில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு திரும்பி வந்தாள். "கெளன்டர் மூடிட்டான்"

"அதனாலென்ன? வெளில ப்ளாக்ல கிடைக்கும் வாங்கிக்கலாம்." என்று சத்யா கண்களால் துளாவிக் கொண்டு நகர மதுளா தடுத்தாள். "வேண்டாம் சத்யா. ப்ளாக்ல வாங்கி இந்தப் படத்தைப் பார்க்கணும்னு அவசியமில்லை. வந்ததுக்கு வேற எதையாவது பார்க்கலாம்" என்றாள்.

வேறு வழியில்லாமல் பல்லவியில் போட்டிருந்த ஒரு சுமாரான தமிழ்ப் படத்துக்கு பால்கனி டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே போனார்கள். நியூஸ் ரீல் முடிந்து ஓனிடா மற்றும் இன்னபிற டிடெர்ஜெண்ட், ஜூவல்லரி விளம்பரங்கள் வீசின வெளிச்சத்தில் இருட்டி பழகினபோது, பால்கனியில் இன்னொரு குடும்பத்தைத் தவிர வேறு யாருமில்லை. மதுளாவும் சத்யாவும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.

"ஆ·பிஸ்ல வேலை ரொம்ப போர் சத்யா. ஒரு ப்ரேக் வேணும். ரிலாக்ஸ்டா எங்கயாவது போகணும்னு தோணிட்டே இருந்தது. ரொம்ப தூரமா.. யார்கூடயாவது நிறைய பேசிட்டே. ரயில்லயோ பஸ்லயோ.. எதிலயாவது. எங்க முடியுது? அதனாலதான் சினிமா போகலாம்னு சொன்னேன். ஈஸியா பண்ண முடியறது இது ஒண்ணுதான்." என்றாள்.

"ம்"

"ஆனா உன்னையும் என்னையும் யாராவது இங்க பாத்தா ஆயிரம் கதை கட்டுவாங்க. இல்ல? ஆனா அதுக்கெல்லாம் நான் கவலைப்படல. சத்யா! நான் உன்னை ரொம்ப கம்பெல் பண்றதா நீ நினைக்கிறியா?"

"இல்ல"

"தேங்க்ஸ்டா" என்றாள்.

டா-வா?. அவனுக்குப் பிரமிப்பாய் இருந்தது. அவள் எத்தகைய பெண் என்று புரியவில்லை. அவளுக்குக் கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான் என்று நினைத்தான். இரண்டு தடவை சந்தித்துப் பழகினதிலேயே தயக்கமில்லாமல் தியேட்டருக்கு வந்திருக்கிறாள். அது அவளுக்கு தன்மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறதென்று தோன்றியது அவனுக்கு. இன்று இப்படி இவளுடன் உட்கார்ந்து சினிமா பார்ப்பேன் என்பது விதியின் புத்தகத்தில் முன்பே எழுதப்பட்டிருக்கவேண்டும். மதுளா அவனை ரொம்ப நாளாக கவனித்து வருபவள். சில சிநேகங்கள் இப்படித்தான் தடாலடியாகத் தொடங்குகின்றன. நான் எல்லோருக்கும் பழகுவதற்கு இனிமையானவனாக இருக்கிறேனென்று நினைக்கிறேன். கிருஷ்ணா ஒரே நாளிலேயே எனக்கு உற்ற நண்பனாகிப் போனது ஞாபகம் வருகிறது. அலைவரிசை ஒத்துப் போகும்போது பழகுவது சுலபம். ஆரம்பம் சரியில்லையெனில் அவ்வளவுதான். அவளுக்கு அவனைப் பிடித்திருப்பது தெரிகிறது. எவ்வளவு அல்லது எதுவரை என்பது தெரியவில்லை. அவனுக்கும் அப்படியே. மலர் மாதிரி கனவு மிதக்கிற கண்களில்லை இவளுடையது. அவைகள் மிக இயல்பாயிருக்கின்றன. ஆனால் அவள் நடவடிக்கைகள் புதிராய்த்தான் இருக்கின்றன. தன்னை ஏன் இத்தனை கவனிக்கிறாள் என்பதே பிரபஞ்சப் புதிர். தன்னைப் பற்றி கிருஷ்ணாவிடமும் ரஞ்சனியிடமும் கேட்டறிந்த விஷயங்கள் குறித்து அவளுக்குத் தன்மேல் அபிமானமோ காதலோ ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் கிருஷ்ணா சொன்னானா என்றும் தெரியவில்லை.

மதுளா தன்னை எந்த அளவு பாதிக்கிறாள் என்று அவன் யோசித்துப் பார்த்தான். நேற்று இரவு உறக்கம் வரும் வரை அவள் ஞாபகமாகவே இருந்தது. அதை அவளிடம் சொல்லவேண்டும் போலவும் இருந்தது. அவளை நினைக்கிறேன் என்று அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்கிற துடிப்பு ஒரு நெருப்பாக அவனிடம் கனன்று கொண்டிருந்தது.

மெயின் பிக்சர் ஆரம்பித்து திரையில் டைட்டில் தீப்ப்¢ழம்புடன் வெடித்து வந்தது. வழக்கம்போல் கோவிலில் அர்ச்சகர் தீபாராதனை காட்டுகிற காட்சியோடு படம் தொடங்க இருவரும் மெளனமாக கொஞ்ச நேரம் பார்த்தார்கள். இடுப்பு ஆட்டல்களோடு ஒரு பாட்டு முடிந்த கையோடு கனல் பறக்கிற சண்டை ஆரம்பித்தது. ஹீரோ உதைத்த உதையில் ஒரு கடை ஷட்டரும், அடுத்ததாய் ஒரு மாட்டுவண்டியும் காற்றில் எகிறிப் பறந்தது. அடியாள் அந்தரத்தில் பதிமூன்று தடவை சுழன்று புழுதிபறக்க தரையில் விழ ஹீரோவின் ஆவேச முகத்தை ஸ்ஸ்ஸ¥ம்ம் என்ற டி.டி.எஸ் ஒலியோடு டைட் க்ளோசப்பில் காட்ட மதுளா அடக்கமாட்டாமல் சிரித்தாள். "சூப்பர் காமெடிப்படம் போலிருக்கு"

"எங்கயோ 'ஸேவிங் ப்ரைவேட் ர்யான்' மறுபடி போட்டிருந்தான். அதுக்குப் போயிருக்கலாம்." என்றான் சத்யா.

இருக்கையில் அவன் கைவைத்திருந்த இடத்திலேயே அவள் கையும் இருந்தது. அவளின் ஒற்றை வளையல் அவன் கையை உரசிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு கையை எடுக்க மனசு வராமல் ஒரு குறுகுறுப்புடன் அப்படியே வைத்திருந்தான். கண்கள் திரையிலிருந்தாலும் அவனுக்கு கவனம் நழுவிவிட்டது இப்போது. மனசுக்குள் தடக்தடக் என்று எக்ஸ்பிரஸ் ஓடியது. இதயத் துடிப்பு வேகமெடுத்தது. பிறகு வளையல் தவிர அவள் மென்மையான கையின் ஸ்பரிசமும் லேசாய் அவன் மணிக்கட்டில் உரசினயோது அவன் காதுமடல்கள் சூடாகிவிட்டன. உடம்பில் மயிர்கால்கள் சிலிர்த்து அடங்குவதை உணர்ந்தான். வேண்டாம் என்று உணர்வுகளைத் தடுக்கமுடியாத அவஸ்தையில் மனது தடுமாறிக் கொண்டிருந்தது.

பக்கா கிராமத்துக்காரியான ஹீரோயின் உலக அழகியின் பளபளப்புடன் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தாள். தியேட்டரில் யாரோ உய்ங்ங் என்று உச்ச ஸ்தாயியில் விசிலடித்தார்கள். படம் போட்டதற்கப்புறம் ரகசியமாய் ஏஸியை அணைத்திருந்தார்கள். அவனுக்கு வியர்த்தது. அவன் கை அவள் கைமேல் பட்டுக்கொண்டிருந்ததை அவளும் நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். அவள் எடுக்காமலிருந்ததிலிருந்து அவளுக்கும் விருப்பமாயிருந்ததை புரிந்துகொண்டான். அவன் கைகள் கொஞ்சம் தைரியம் பெற்று அவள் விரல்களை வருடினபோதும் அவன் நினைத்த மாதிரியே அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. சட்டென்று ஒரு கணத்தின் வேகத்தில் அவள் விரல்கள் புரண்டு அவன் விரல்களோடு கோர்த்துக்கொண்டபோது அவன் உடலின் சகல பாகங்களிலும் இரண்டாயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பி அடங்கியது. அவள் விரல்களை இன்னும் இறுக்கிக் கொண்டான். கோர்த்து இறுக்கியும், பிரித்துத் தளர்த்தியுமாக கொஞ்ச நேரம். அவர்களுக்கு உலகம் அப்படியே அசையாமல் ஸ்தம்பித்து நின்றிருந்தது.

அவள் மெல்ல அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவனுக்குச் சிலிர்த்தது. அவன் அவள் கையை எடுத்து மடியில் வைத்து அவனின் இரண்டு கைகளுக்குள் பொதிந்து கொண்டான். லேசாய் அவள் பக்கம் திரும்பினபோது கேசக் கற்றை தழுவின அவள் நெற்றியின் பெளடர் வாசனை மனத்தைக் கிறங்க வைத்தது. இந்தக் கணம். இந்தக் கணம்தான் வாழ்வின் உன்னதம். மதுளாஆஆ! அவள் மேல் திடீரென்று இறுகிவிட்ட காதலின் நிஜம் அவனுக்குள் ஒரு சூறாவளி மாதிரி சுழன்று இறங்கி அவனை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அவள் தனக்கு வேண்டும் என்று தோன்றிவிட்டது. அவன் கைகளைப் பிணைத்திருக்கிற அவளது கை, வாழ்க்கை பூராவும் கூடவே வேண்டும். அந்த இறுக்கமும் நெருக்கமும் எந்தக் கணத்திலும் தளர்ந்துவிடக்கூடாதென்று தோன்றியது. சத்யா உடம்பின் நரம்புகளில் புகுந்து விரைந்த கோடானுகோடி உணர்ச்சிகளின் பிரவாகத்தில் அவள் விரல்களை நொறுங்கிவிடுமளவு இறுக்கிக் கோர்த்துக்கொண்டு அவள் காது மடல்களில் உதடுகளை அழுத்தி "ஐ லவ் யூ" என்றான் சூடான குரலில்.

மதுளா விருக்கென்று அவள் கையை அவனது கைகளிலிருந்து உருவினாள். பதட்டமாய் அவனை விலக்கிவிட்டு அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சத்யா ஒரு சின்ன திடுக்கிடலோடு அவளைப் பார்த்தான். அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள். ஸில்லவுட்டில் அவள் உதடுகள் துடிப்பது தெரிந்தது. பிறகு அவனிடம் திரும்பி பிசிறான குரலில் "ஸாரி.. சத்யா.. ரியலி ஸாரி.." என்றாள்.

சத்யா சர்வ நரம்புகளும் அடங்கி நிதானத்துக்கு வந்து குழப்பமாய் அவளைப் பார்த்தான். அவள் நெற்றியோரம் கேசக் கற்றையைச் சரிசெய்து கொண்டு அவனை மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாய் ஒருசில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தொண்டையை மெதுவாய் கணைத்துக்கொண்டு உறைந்து போயிருந்த குரலை மெதுவாய் உயிர்ப்பித்து என்னாச்சு மதுளா என்று இவன்
கேட்பதற்கு முன் மெல்லிய குரலில் அவளே சொன்னாள்.

"ஸாரி சத்யா நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன். என்னை என்னாலலயே தடுக்க முடியல. ஏன்னு தெரியல. திடீர்னு தப்புன்னு தோணிச்சு. அதான் விலகிட்டேன்.  நீ ஐ லவ் யூன்னு சொன்னதும் பகீர்னு ஆயிருச்சு. எது வேண்டாம்னு இருந்தனோ அது. எனக்கு இந்த லவ் கிவ் எல்லாம் சுத்தமா பிடிக்காத விஷயம் சத்யா. இத்தனை நாள் அப்படித்தான் இருந்தேன். கல்யாணம்ங்கிற விஷயத்துலயெல்லாம்கூட எனக்கு உடன்பாடு, நம்பிக்கை, இண்டரஸ்டு எதுவும் கிடையாது. என்னுடைய சிந்தனைகள் வேற. அபிப்ராயங்கள் வேற. என்னோட செல்·ப் கண்ட்ரோல் மேல எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. இன்னிக்கு லேசா உடைஞ்சிருச்சு. பரவாயில்ல. இருக்கட்டும். ஆனா இந்த லவ் கிவ் இதெல்லாம் வேண்டாமே. அது எனக்குப் பிடிக்கலை. இன்னிக்கு எனக்கு என்னாச்சுன்னு தெரியல. என்னை தப்பா நினைச்சுக்காத. ப்ளீஸ் சத்யா.."

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை. குழம்பிப்போய் உட்கார்ந்திருந்தான். அவனைவிட அவள் அதிக குழப்பத்திலிருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்து பேசாமலிருந்தான். மர்ம இசைப் பின்னணியுடன் கோடவுனுக்குள் டார்ச் அடித்து ஹீரோ வில்லனைத் தேடிக்கொண்டிருந்தான். அவன் தோள் தடுக்கி அரிசி மூட்டைக் கதிர் அரிவாள் டணங் என்று விழ தியேட்டர் திடுக்கிட்டது. சத்யா அதில் மனம் லயிக்காமல் மதுளா ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்பது பற்றி தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு லேசாய் குற்ற உணர்வு எழுந்தது.

திடீரென மதுளா "சத்யா என் தியரியெல்லாம் நான் இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன். இப்ப ஐ நீட் சம் லோன்லிநெஸ். எனக்கு ஒரு மாதிரி இருக்கு! கிளம்பலாமா சத்யா. ஸாரி!" என்று எழுந்து கொண்டாள். விடுபடாத குழப்பத்துடன் அவள் பின்னாலேயே வெளிவந்தபோது கதவு இடைவெளி வழியே ஸ்பீக்கர்கள் அதிர அடுத்த பாட்டு தொடங்கியிருந்தது.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 19 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அப்பாவின் பிறந்தநாளை இன்னும் அம்மா மறந்திருக்கவில்லை. அவர் போட்டோ முன்பு விளக்கை ஏற்றி நினைவு கொள்ளத்தான் செய்கிறாள். அப்பா எடுத்துத் தந்த சேலையை உடுத்திக் கொள்கிறபோது அம்மாவின் முகம் அந்த நைலக்ஸை விட அதிகம் பளபளக்கும். அவருக்குப் பிடித்த அதே ஊதுவத்தியைத்தான் அம்மா இன்னும் கொளுத்துகிறாள். அதில் வரும் வாசனையை விட அதில் அப்பாவின் ஞாபகங்கள்தான் அதிகம் மணக்கும். அப்பாவுடன் பார்த்த அந்த முதல் சினிமா - அந்த படத்தின் கதையை விட அந்த நாளைப் பற்றித் தான் அம்மா ஒவ்வொரு ·பிரேமாய் அவ்வளவு அழகாய்ச் சொல்வாள். அப்பாவுக்குப் பிடித்த குழம்பை செய்கிற போதோ - அவருக்குப் பிடித்த பாடலைக் கேட்கிறபோதோ அதிலும் அப்பாவின் நினைவுகளின் சுவையைத்தான் அம்மா தேடுவாள். அப்பா இப்போது இல்லை. இறந்து நாளாயிற்று. ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்தவரை அப்பா இன்னும் இருக்கிற மாதிரியே இருக்கிறது.


சத்யாவுக்கு உடனே கிருஷ்ணாவைப் பார்க்கவேண்டும்போல இருந்தது. அவனை நேரில் பார்த்து பளார் என்று கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். எல்லாம் அவனால்தான். நான் பாட்டுக்கு தேமே என்று நானுண்டு என் வேலையுண்டு என்றுதான் இத்தனை நாள் இருந்திருக்கிறேன். இப்போது சிண்டைப் பிய்த்துக்கொள்கிற நிலைக்கு என்னைக் கொண்டுவந்து விட்டான். அன்றைக்கு அவனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகாமல் இருந்திருந்தால் இத்தனை பாடு கிடையாது. இப்படி ஒவ்வொருத்தி பின்னாலேயும் அலைந்துகொண்டு பித்துப் பிடித்திருக்கவேண்டியதில்லை. இத்தனை நாள் நான் எப்படி ஒழுங்காக இருந்திருக்கிறேன். எனக்கென ஒரு வேலி இருந்தது. நான் உருவாக்காமலேயே என்னைச் சுற்றி இருந்த வேலி. பானு தவிர எந்தப் பெண்ணின் மேலும் சுவாரஸ்யமற்றிருந்த பருவத்திலிருந்து அது படர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. அந்தச் சுய கவசம் ஓட்டையாகிவிட்டது. கிருஷ்ணா என்னமோ சொன்னான் என்று என் வேலியை பிய்த்தெறிந்து விட்டேன். கடைசியில் எதுவும் கிடைக்கவில்லை. மனசு தளர்ச்சியாகிவிட்டது. வாழ்க்கை சதா பெருமூச்சு விட்டுக்கொண்டு திரியும் அவல நிலைக்கு வந்துவிட்டது.

அன்றைக்கு பஸ் ஏறிப் போனதற்கப்புறம் மதுளாவைப் பார்க்க முடியவில்லை. நாலைந்து நாட்களாய் ஜடம் மாதிரி அதையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தான். அவள் இருப்பாள் என்று ஒரு நாள் அவள் அண்ணனின் ஆர்ட் காலரிக்குப் போனபோது அவள் அண்ணன் ஓவியங்களை அப்புறப்படுத்தி கூடத்தைக் காலி செய்து கொண்டிருந்தான். மதுளா ஒரு வாரமாவே இந்தப்பக்கம் வரலை என்றான். சத்யாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. மதுளாவின் பாரதியார் கவிதை ஓவியம் இன்னும் கழற்றப் படாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்புறம் நடுவில் திடீரென்று ஒரு தடவை அவள் போன் பண்ணி சாதாரணமாய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது தியேட்டர் சம்பவத்தின் சுவடுகள் எதுவுமில்லாமல் அவள் குரல் இயல்பாகத்தான் இருந்தது. தயக்கத்தின் அழுத்தத்தில் இவனுக்குத்தான் குரல் பிசிறிப் பிசிறி வந்தது. காதல் குறித்த அவளது சிந்தனைகளும் அபிப்பிராயங்களும் என்னவென்று அவள் இதுகாறும் எந்த விளக்கவுரையும் அளிக்காதது அவன் குழப்பத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை அவளிடம் சொல்ல நினைத்து முடியவில்லை. அதைப் பற்றி அவள் எதுவும் பேச்செடுக்கவில்லை. அவனுடைய உணர்வுகளை அவள் பொருட்படுத்தியதாகக்கூட தெரியவில்லை. அவள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. அவளாகச் சொல்லட்டும். காதல் பிடிக்காது. வேண்டாம் என்கிறாள். என்னுடன் சுற்றவும் என் தோளில் சாய்ந்து கொள்ளவும் பிடித்திருக்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வ¦ன்று ஒரு தெளிவுக்கு வரமுடியவில்லை. மனுஷன் குழம்புவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்? என்ன மாதிரி பெண் இவள்? ஏற்கெனவே இரண்டாவது தடவையாக ஏற்பட்ட ஏமாற்றத்தின் சுவடுகள் அவன் மேல் பதியத் தொடங்கிவிட்டன. மலர் அவனுக்கு இல்லை என்பதுபோலவே மதுளாவும் இல்லை என்று கிட்டத்தட்ட தீர்மானித்தும் விட்டான். தனக்கு எங்கேயோ ஒரு மச்சம் சரியாக வேலை செய்யவில்லை என்று தோன்றியது.

மன அழுத்தத்தின் நெருக்கடி அதிகமாகிப் போய் வேறெதுவும் செய்யத் தோன்றாமல் ஒரு நாள் சாயங்காலம் சட்டென்று முடிவெடுத்து ஒரு எஸ்.டி.டி பூத்துக்குப் போனான். சிங்கப்பூரில் இப்போது என்ன நேரமிருக்கும் என்று யோசித்தவாறே கிருஷ்ணாவின் நம்பரை டயல் பண்ணினான். மறுமுனையில் நீண்ட நேரம் யாரும் எடுக்காமல் கிர் கிர் என்று அடித்துக் கொண்டேயிருந்தது. அன்றொரு நாள் முயற்சித்தபோது கூட இப்படித்தான் ஆனது. சத்யா சலிப்புடன் ரிஸீவரை வைக்கப் போனபோது மறுமுனைக்கு உயிர் வந்தது. கிருஷ்ணாதான் பேசினான். சத்யாவின் குரலை திடீரென்று கேட்டதில் ஆச்சரியப்பட்டு 'டே மச்சீ' என்றான் உச்சஸ்தாயியில். "அதிசயமா போன் பண்ணியிருக்க. இன்னக்கி சிங்கப்பூர்ல மழதான்." என்று ஆரம்பித்தவனை சத்யா இடை மறித்தான்.

"கிருஷ்ணா.. நீ உடனடியா கிளம்பி இங்க வர்ர.. இல்லன்னா உன்ன கொன்னுருவேன்.." என்றான் கோபமாய். அவனுக்கு வேறெதுவும் வார்த்தைகள் வரவில்லை. கிருஷ்ணா ஒரு சில விநாடிகள் குழம்பிவிட்டு "என்னடா ஆச்சு.. எனி ப்ராப்ளம்? சரி! நீ போனை வை. உனக்கு பில் எகிறும்.. உனக்கு ஒன்பது மணிக்கு நானே வீட்டுக்குப் போன் பண்றேன். எதானாலும் விளக்கமா பேசலாம் சரியா" என்றான்.

"சரி. ஆனா என் வீட்டுக்குப் போன் பண்ணாத. ஜே.ஸி வீட்டுக்குப் பண்ணு" என்று சொல்லிவிட்டு வைத்தான். வீட்டில் அம்மா இருக்கும்போது இந்த மாதிரி விஷயங்களை எப்படி பேசுவது? அவள் சமையலறையில் இருந்தால்கூட அவளின் காது ஹாலில்தான் இருக்கும். அப்புறம் அம்மா எதையாவது கேட்டுத் தொலைத்துவிட்டு அவனிடம் என்ன விஷயமென்று கிளறிக் கேட்க ஆரம்பித்தால் அது போதும். வேறு வம்பே வேண்டாம்.

எட்டே முக்கால் மணிக்கு பைக்கை எடுத்துக்கொண்டு ஜே.ஸியின் வீட்டுக்குப்போய் அவனிடம் ஒன்பது மணிக்கு கிருஷ்ணா போன் பண்ணுவான் என்கிற விஷயத்தைச் சொல்லிவிட்டு மேலே படியேறிப் போனான். ஜே.ஸியின் அறை அங்கேதான் இருந்தது. ஜே.ஸி கதவைத் திறந்துவிட்டு, போர்ட்டபிள் டி.வியை ஆன் பண்ணிவிட்டு பாத்துட்டிரு வர்ரேன் என்று கீழே போய் அவன் தங்கையிடம் டீ போடச்சொல்லிவிட்டு வந்தான். ஜே.ஸி எப்படி அவனறையை இத்தனை அதிகபட்ச அலங்கோலமாக வைத்திருக்கிறான் என்று வியப்பாக இருந்தது.

"போன் வரும்போது நீ கீழ போய்ட்டேன்னா ரொம்ப நல்லது. அதுக்காக உனக்கு அப்பறமா ஒரு ·புல் ரம் வாங்கித் தருவேன். நான் கிருஷ்ணாகூட கொஞ்சம் தனியா பேசணும்" என்றான் சத்யா ஜே.ஸியிடம்.

"போகலைன்னா?" என்றான் ஜே.ஸி.

"நீ தண்ணியடிச்சு வண்டியோட்டி மூணு தடவை போலீஸ் கிட்ட மாட்டியிருக்கேன்னு உங்கப்பா கிட்ட போட்டுக் குடுத்துருவேன்" என்றான் சத்யா.

"அடப்பாவி. சரி... போறேன்." என்று தொப்பை குலுங்க படிகளில் இறங்கிப் போனான். இவனும் கிருஷ்ணா மாதிரியேதான். பழகுவதற்கு ரொம்ப நல்ல பையன். பெரிதாய் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டான். அதனால்தான் இத்தனை உரிமையாக அவன் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துகொண்டு அவனையே அதட்ட முடிகிறது.

கிருஷ்ணா சொன்னபடிக்கு சரியாக ஒன்பது மணிக்கு போன் வரவில்லை. சத்யா வெறுப்பாய் மறுபடி ஒரு பதினைந்து நிமிடம் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருந்து பார்த்தான். ஒன்பது இருபதுக்கு கீழே ஹாலில் டெலிபோன் மணியடிப்பது கேட்டது. தொடர்ந்து வலது கையில் டீ க்ளாசும் இடது கையில் கார்ட்லெஸ் போனின் ஹேண்ட் செட்டுமாக வந்து இரண்டையும் கொடுத்துவிட்டுப் மறுபடி கீழே போனான் ஜே.ஸி. மறுமுனையில் கிருஷ்ணா இருந்தான்.

"ஸாரி மச்சி.. வெய்ட் பண்ணிட்டிருந்தியா? லைன் கிடைக்கலை. சரி சொல்லு சத்யா.. என்ன விஷயம்?"

அறை ஜன்னலருகே வந்து நின்று கொண்டு வெளியே இருளில் மாமரத்தைப் பார்த்தபடி சத்யா விரக்தியாகச் சொன்னான். "நான் என்ன சொல்றது கிருஷ்ணா? நீதான் சொல்லணும்."

கிருஷ்ணா ஒரு சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு "உன்னை லவ் பண்ற பொண்ணுபத்தின மேட்டர். அதானே?" என்றான்.

ஜன்னலிருந்து குளுமையாய் காற்று அடித்தது. சத்யா அறைக்குள் மெதுவாய் உலவினான். "கிருஷ்ணா.. இங்க பாரு நீ விளையாட்டா என்னமோ சொல்லிட்டுப் போயிட்ட.. எனக்கு இங்க தூக்கம், நிம்மதி எல்லாம் போச்சு. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சுடா"

"என்னடா ஆச்சு?" என்று கேட்டுவிட்டு ஹாஹா என்று சிரித்தான் கிருஷ்ணா.

"சிரிக்காத கிருஷ்ணா.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. நீ உடனடியா கிளம்பி இங்க வந்தாகணும். நீ போட்ட முடிச்ச நீயே அவுத்துரு. எனக்கு இங்க சொல்லிப் புலம்பறதுக்குக்கூட ஆளில்லை. எல்லாம் உன்னாலதான். நீ என்னைத் தூண்டிவிட்டதுனால. சும்மா இருந்தவனை நீ இப்ப கிறுக்கனாக்கிட்ட. ஜே.ஸிகூட என்னைப் பார்த்தாலே நமட்டு சிரிப்பு சிரிக்கறான். பிரகாஷ் சிரிக்கறான். சுபாஷிணி சிரிக்கிறா. எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறமாதிரி இருக்கு. என் மூஞ்சில ஏமாளின்னு எழுதி ஒட்டியிருக்குன்னு நினைக்கிறேன். எவ எவளோ பின்னாடியெல்லாம் நாய் மாதிரி அலைஞ்சு.. கடைசில ச்சே!"

"வெயிட் மச்சி.. டென்ஷனாகாத! நீ பேசறது தலையும் புரியல, வாலும் புரியல. நான் சொன்னது யாரைன்னு கண்டு புடிச்சியா?"

"இல்லடா.. கத வேற மாதிரி போயிருச்சு.."

"வேற மாதிரின்னா? நீ யாரையாச்சும் லவ் பண்ணியா?"

"ஒண்ணில்ல. ரெண்டு பேர்"

"க்ரேட்ரா! ஒரே சமயத்திலயா? எப்படிடா?"

"டேய்.. மவனே நீ மட்டும் இப்ப என் கையில கிடைச்சா பொளந்துருவேன். எங்கிட்ட இந்த மாதிரி விளையாடலாம்னு உனக்கு எப்படித் தோணிச்சு? நான் உனக்கு என்னடா கெடுதல் பண்ணினேன்? ஒரு மனுஷனை இந்த மாதிரி அலைய விடலாமா? இடியட்!" சத்யா வெடித்த கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.

கிருஷ்ணா மறுபடி சற்று அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னான். "சத்யா ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ.. உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றான்னு மட்டும்தான் சொன்னேன். அது யாருன்னு சொல்லலை உங்கிட்ட. ஆனா நான் உன்னை யாரையும் லவ் பண்ணச் சொன்னேனா? அது நீயா தேடிக்கிட்டதுதானே? அதுக்கு என்மேல எதுக்குப் பழி போடற? சொல்லு!"

சத்யா ஒரு விநாடி திகைத்து நின்றான். அவன் இந்த மாதிரி மடக்கிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ரீசீவரைக் காதில் பொத்திக் கொண்டு ஒன்றும் பேசாமல் நின்றான்.

அப்புறம் கிருஷ்ணாவே தொடர்ந்தான்.

"சத்யா.. நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேண்டாம். அமைதியா இரு. நான் இங்க இருந்தாலும் நீ என்ன பண்ணிட்டு இருக்க எங்க போற எல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். மலர்.. அப்புறம் மதுளா... கரெக்டா நான் சொல்றது? எல்லாம் ரஞ்சனி போன்ல சொல்வா! எனிவே நான் இன்னும் ஒரு வாரத்துல அங்க வரவேண்டிய வேலை இருக்கு. ஒரு பதினைஞ்சு நாள் கோயமுத்தூர்ல இருப்பேன். நாம ஒண்ணு பண்ணுவோமா? ஒரு ரெண்டு நாள் காரெடுத்துக்கிட்டு அட்டகட்டி போகலாம். போய் சந்துரு அண்ணன் வீட்ல தங்குலாம். அவர் க்வார்டர்ஸ் பக்கத்து ஹேர்பின் பெண்ட்-ல நம்ம சிமெண்டு திட்டு இருக்கு பாரு. அங்க உக்காந்துகிட்டு எல்லா விஷயமும் பொறுமையா பேசுவோம் என்ன? இத்தனை நாள் வெயிட் பண்ணியே.. இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. அதுவரை புலம்பாம ஒழுங்கா ஆ·பிஸ் வேலையை கவனி.. இதோங்கறதுக்குள்ள வந்துருவேன். அம்மாவக் கேட்டதாச் சொல்லு"
 
(அடுத்த இதழில் முடியும்)

oooOOooo
[ பாகம் : 20 ]

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவைப் பற்றி நான் எழுதின டைரி முழுவதையும் படித்து முடித்ததும் ரஞ்சனி கேட்டாள். இப்படியெல்லாம் வாழ சாத்தியமா கிருஷ்ணா என்றாள். இதிலென்ன மிகை? வானவில்லில் நமக்கு பிடித்த நிறத்தை தேடுவதும் - பட்டாம்பூச்சியை துரத்தி பிடித்து அதை மிக அருகில் ரசித்துவிட்டு பிறகு பறக்க விடுவதும் - முழு நிலாவை விட வானத்தில் தேடிப் பார்த்து பிறை நிலவை ரசிப்பதும் - பழைய ஊரையும் படித்த பள்ளியையும் மனசு மீண்டும் போய் பார்க்கத் துடிப்பதும் மனித இயல்பு தானே? தினமும் மிகச் சரியாக ஆ·பீஸ் வரும் இயல்பைக் கூட இங்கே நாம் வித்தியாச குணமாகத்தானே நினைக்கிறோம்! சாதாரண மனிதர்களிடமும் அசாதாரண விஷயங்கள் இருக்கின்றன. அது நாம் அவர்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பாள் அம்மா. அதை நான் அம்மாவிடமிருந்துதான் தேடத் தொடங்கினேன். அதன் தொகுப்புதான் இது என்றேன். அம்மா மாதிரியே அழகாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது என்றாள் ரஞ்சனி. கேட்க எனக்கு சந்தோசமாய் இருந்தது. இதை ஒரு புத்தகமாய் தொகுத்தால் என் இதே உணர்வு படிக்கிற நிறையப் பெண்களுக்கும் தோன்றும் என்றாள். நல்ல யோசனையாய்ப் பட்டது. அம்மாவைப் பற்றிய என் டைரி குறிப்பை மொத்தமாய் ஒரு புத்தகமாய் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அது புத்தகமாய் வந்தால் அதன் இரண்டாம் பக்கத்தில் இப்படித்தான் எழுதுவேன். 'சமர்ப்பணம்! உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்!'அட்டகட்டி மின்சார வாரிய க்வார்டர்ஸ் மெயின் கேட்டைத் தாண்டி சரிவான சாலையில் ரொம்ப தூரம் நடந்து ஒரு ஹேர்பின் பெண்டில் இருந்த சிமெண்ட் திட்டில் உட்கார்ந்து கொண்டார்கள் கிருஷ்ணாவும், சத்யாவும். எப்போது இங்கே வந்தாலும் வழக்கமாய் உட்கார்ந்து பேசுகிற இடம். சரிந்து இறங்குகிற பச்சை மலைச்சரிவுகளில் பார்வையை ஓட்டியவாறு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான் கிருஷ்ணா. அவன் நீட்டிய 555 சிகரெட் டப்பாவிலிருந்து சத்யாவும் ஒன்றை எடுத்துக்கொண்டான். கிருஷ்ணா சிங்கப்பூரிலிருந்து ஐந்து நாட்களுக்குமுன் வந்தான். ஆனாலும் இன்றைக்குத்தான் அவன் பெரியப்பாவின் காரை எடுத்துக்கொண்டு சத்யாவின் வீட்டுக்கு வந்தான். "அட்டகட்டில சந்துரு அண்ணன் இல்ல. லீவுக்கு குடும்பத்தோட கிளம்பி மாமனார் வீட்டுக்குப் போயிருக்காரு. பக்கத்துவீட்ல சாவி குடுத்துட்டுப் போறேன்னிருக்கார்." என்றான். ரெண்டு நாள் வெளியூர் போகிறோம் என்றதும் 'என்ன திடீர்னு' என்று கேட்டு வழக்கம்போல் அம்மா கவவரமாய்ப் பார்த்தாள். பாத்துப் போயிட்டு வாங்க என்றாள்.

தேவிடம் இரண்டு நாள் லீவு சொல்லிவிட்டு மத்தியானம் இரண்டு மணி வாக்கில் இருவரும் காரில் கிளம்பி நேரே இங்கு வந்து சேர்ந்த கையோடு வெந்நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு வழக்கமான ஹேர்பின் பெண்டுக்கு வந்துவிட்டார்கள். சத்யாவும் அவனும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசின இடம் அது. கிருஷ்ணா ஆழமாய் புகையை இழுத்துவிட்டான். "இந்த க்ளைமேட்டுக்கு சிகரெட் பிடிக்கறது நல்லாருக்கு" என்றான். நிறைய பாக்கெட்டுகள் வைத்த பேண்ட் போட்டிருந்தான். வழக்கம்போல் வட்டக் கழுத்தோடு ஒரு பனியன். அவனுடன் கோயமுத்தூரிலிருந்து காரில் வரும்போது இருவரும் பொதுவான விஷயங்கள் தவிர வேறெதையும் பேசவில்லை. இப்போது அவனுடன் இந்த மலைப் பாதையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை யோசிக்கும்போது கிருஷ்ணாவை போன நிமிடம்தான் சந்தித்தமாதிரியும், அவனுடன் பேசுவதற்கான விஷயங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதுபோலவும் சத்யாவுக்குத் தோன்றியது. சந்துரு அண்ணன் இல்லாததும் கொஞ்சம் நல்லதாகப் போயிற்று. அவர் இருந்தால் ஆ·பிஸ¤க்கு லீவு போட்டுவிட்டு கூடவே சுற்றிக்கொண்டிருப்பார். இப்படியொரு தனிமை கிடைப்பது கஷ்டம்.

புளிமூட்டை மாதிரி மனிதர்களை அடைத்துக்கொண்டு ஒரு பஸ் உறுமிக் கொண்டு வளைவில் மேலேறிக் கடந்து போனது. கிருஷ்ணா சத்யாவின் பக்கம் திரும்பி அவனை ஒரு சில செகண்டுகள் பார்த்தான்.

"சொல்ரா"

சத்யா ஒரு மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்தான். "என்ன சொல்லணும்?"

"உன்னோட காதல் அனுபவங்கள் பத்தி. இண்டரஸ்டிங்கா நிறைய நடந்தது போல!!"

சத்யா அவனை முறைத்தான். "டேய்.. போதும் வெறுப்பேத்தாத."

கிருஷ்ணா சத்தமாக மலையில் எதிரொலிக்கிற மாதிரி சிரித்தான். "ரொம்ப பாதிப்போ?!!.." என்றான். பிறகு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான். தீர்ந்து போன சிகரெட்டை வீசிவிட்டு இன்னொன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். "நான் எல்லாமே சொல்றேன்... அதுக்கு முன்னாடி... இந்தா இதை நீ படிக்கணும்னு கொண்டு வந்தேன். கொஞ்சம் டைம் எடுக்கும். பரவால்ல.. படிச்சு முடி." அத்தனை நேரம் சிமெண்ட் திட்டில் தன் அருகிலேயே வைத்திருந்த டைரியை சத்யாவின் பக்கம் தள்ளினான். சத்யா கிருஷ்ணாவைப் புதிராய்ப் பார்த்துக்கொண்டு அந்த டைரியை தயக்கத்துடன் எடுத்து மெதுவாய் புரட்டினான்.

அதன் முதல் பக்கத்தில் "சமர்ப்பணம்! உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்!" என்று எழுதியிருந்தது. சத்யா தொடர்ந்து டைரியைப் புரட்டினான். படிக்கப் படிக்க அவனுள்ளே ஓடுகிற கேள்விகளின் விளைவாய் அவன் புருவங்கள் உயர்ந்தன.

 .... என் அம்மாவே மொத்தமாய் ஒரு கவிதைத் தொகுப்புதான்....

 .... அநாவசிய கோபமோ அர்த்தமுள்ள கோபமோ எதுவானாலும் அதை ஆக்கபூர்வமாக மாற்றும் குணத்தை நான் அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.....

 .... நான் நினைத்துக் கொள்வேன். அம்மாவின் ராஜ்ஜியத்தில் வாழப் பிறந்த அத்தனை உயிர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைதான்!....

 .... நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் எழுதாமல் நிறைய கவிதைகள் இருக்கிறது!....

 .... அம்மாவின் மனசை ஓரளவு புரிந்து கொள்ளலாம். அம்மாவின் மனசின் மனசை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.....

 .... குழந்தைத்தனமாய் இருப்பது வேறு. குழந்தையாய் இருப்பது வேறு. இதில் அம்மா இரண்டாவது ரகம்! ....

 .... யாரும் கவனிப்பதற்காக அம்மா எதையும் செய்வதில்லை. அம்மா எதை செய்தாலும் கவனிக்கப்படுகிறது அவ்வளவுதான்!....

 .... நான் முதல் முதலில் அம்மாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன் அனுபவம் என்றால் என்னவென்று புரிந்து கொண்ட அனுபவத்தை!....

விரல்களும் கண்களும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தன. இடையிடையே ஆச்சரியமாய் நிறைந்த விழிகளோடு கிருஷ்ணாவை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் சத்யா. கிருஷ்ணா அமைதியாய் நாலாவது சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். டைரி முழுக்கப் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆயிருக்கும். முடித்துவிட்டு டைரியை நம்பாமல் பார்த்துக்கொண்டு மறுபடி மறுபடி புரட்டிக்கொண்டிருந்தான் சத்யா.

"கிருஷ்ணா!! இதில வர்ர அம்மா...." மனது நெகிழ்ந்திருந்ததில் சத்யாவுக்கு வார்த்தை தொண்டைக்கு வரவில்லை.

கிருஷ்ணா மெதுவாய் தலையை மேலும் கீழும் ஆட்டினான். "உன் அம்மாதான்டா"

"ரியலி சர்ப்ரைஸிங்டா!"

"சத்யா.. இது ஏதோ நான் கற்பனையா எழுதி வெச்சிருக்கேன்னு நீ நினைச்சுக்காத! முழுக்க முழுக்க நிஜம். இதெல்லாம் உனக்கு எப்படிரா தெரியும்?. உனக்குத்தான் உங்கம்மாகூட பத்து நிமிஷம் பேசக்கூட நேரம் கிடையாதே. அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னாக்கூட ரஞ்சனி வந்துதானே மருந்து வாங்கித் தரவேண்டியிருக்கு!"

சத்யா லேசாய் அடிபட்டவன் மாதிரி உணர்ந்தான். ஆச்சரியத்தின் விளிம்பில் கூடவே கொஞ்சம் குழப்பமும் சேர்ந்துகொண்டது. அவன் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

"யோசிச்சுப் பாருடா! நீ எப்படியெல்லாம் உன் அம்மாகிட்ட மோசமா நடந்துக்கறேன்னு. ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு ரெண்டு பேருக்கும் சம்பந்தமில்லாதமாதிரி நடந்துக்கற! அடிக்கடி சண்டை போடற! எரிச்சலா பேசற! ஏன் அந்த மாதிரி அம்மாகிட்ட நடந்துக்கறேன்னு நான் கேட்டிருந்தா அதை அட்வைஸ¥ன்னு நினைச்சிட்டு நீ அப்பவே மறந்திருப்பே. உன் அம்மா உம்மேல எவ்வளவு பாசமா இருக்காங்கறதை உங்கிட்ட சொல்ல நினைச்சேன். சொல்லியிருந்தாலும் அது உனக்கு சாதாரண விஷயமாத்தான் இருந்திருக்கும். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றான்னு சும்மா பொதுவா சொல்லிட்டுப்போனேன். பொண்ணுன்னு சொன்னதும் நீ யாரைத் தேடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் எதிர்பார்த்தபடியே எல்லாமே நடந்துச்சு. ஒருத்தரால நேசிக்கப்படறோம்கிற விஷயம் உனக்குள்ள ஆழமாப் பதியணும். அப்றம் அது கிடைக்காமப் போறப்ப ஏற்படற துயரம்தான், அன்புன்னா என்ன நேசிப்புன்னா என்னன்னு உனக்கு என்னைவிட அழகா கத்துத் தரும். ஏன்னா இப்ப நீ இருக்கிற உன்னோட இதே நிலைமைலதான் உங்கம்மா இருக்காங்க. அவங்களுக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்காங்க சொல்லு! அவங்க உன் மேல வெச்சிருக்கிற அன்புக்கு முன்னாடி உன்னோட இந்தக் காதல், கத்தரிக்காய் இதெலெல்லாம் ரொம்ப சாதாரணம்டா. சொல்றது புரியுதா?

சத்யாவிடமிருந்து ஒரு தலையசைப்பு ஆமோதிப்பாய் வந்தது. கிருஷ்ணா தொடர்ந்தான்.

"அவங்க அறிவுக்கும், அனுபவத்திற்கும் வாழ்க்கையை அவங்க பார்க்கிற பார்வைக்கும் முன்னாடி இந்தப் பிரச்சினையொண்ணும் பெரிய விஷயம் கிடையாது. உங்க அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கிறபோதும் அவங்ககிட்ட எப்பவும் தென்படற வருத்தம் என்ன தெரியுமா? நீ அவங்க கிட்ட அன்பா நெருங்கிப் பேசறதில்லை. பழகறதில்லைங்கறதுதான். உங்கப்பா மாதிரியே நீயும் அவங்களைப் புரிஞ்சுக்காமயே போயிடுவியோன்னு நினைக்கிறாங்க. நீ உன் அம்மாவைக் கவனிச்சதைக் காட்டிலும் ரஞ்சனி கவனிச்சுக்கிட்டதுதான் அதிகம். அது உனக்குத் தெரியுமா? நான் எங்கம்மாவைவிட உங்கம்மாகிட்டதான்டா அதிகம் பழகியிருக்கேன், பேசியிருக்கேன். அவ்வளவு ஒட்டுதல். அவங்க கேரக்டர் - ஜஸ்ட் ·பில்டு வித் ஒன்டர்ஸ். தெரியுமா உனக்கு? அற்புதமான, ஆச்சரியமான, அதிசயங்கள் நிறைஞ்ச கேரக்டர்டா!. இந்த டைரில எழுதினது கொஞ்சம்தான். உங்கம்மாவைக் கவனிக்க கவனிக்க இன்னும் எனக்கு விஷயங்கள் கிடைச்சுட்டுத்தான் இருக்கு. எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சா ஒரு டைரியெல்லாம் பத்தாதுன்னு தோணுது. நான் நினைச்சுக்குவேன். உங்க அம்மா வருத்தப்படறதில எந்த நியாயமும் இல்ல. இவ்வளவு அற்புதமான மனுஷி உனக்கு அம்மாவா கிடைச்சும் அதை புரிஞ்சுக்காம நீ எப்பவும் பட்டும் படாம விலகியிருக்கிறதுக்கு நீதான்டா வருத்தப்படணும். ரொம்பப் பக்கத்திலயே இருந்தாலோ, சுலபமா கிடைச்சாலோ எந்தப் பொருளுக்கும் மதிப்பு இருக்காதுன்னு சொல்வாங்க. குற்றாலத்தில இருக்கிறவன் டெய்லி அருவில குளிப்பானான்னு தெரியாது. ஆக்ரால இருக்கிறவன் நம்மளவுக்கு தாஜ்மஹாலை ரசிக்கமாட்டான். அது உண்மைதான் போலிருக்கு. கரெக்டா இல்லையா?"

"ம்" என்றான் சத்யா இறுக்கமான முகத்துடன். தலைமுடிக்குள் இரு கைவிரல்களையும் செலுத்தி அளைந்து கொண்டு வானத்தைப் பார்த்தான்.

"சரி! போகற வரைக்கும் போகட்டும்னு இருந்தேன்! அப்றமென்ன? மலர், மதுளான்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டு அலைஞ்சே! அதெல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லைன்னு சொல்லலை! அதிலெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஒரு நாள் திரும்பி வருவேன்னு எனக்குத் தெரியும். வந்துட்ட! இப்ப சொல்றேன். முதல்ல நீ உன் பக்கத்துல இருக்கறவங்களை நேசிடா. உன் மேல நிஜமா அக்கறைப்படறவங்க மேல முதல்ல அக்கறைப்படு. எங்கயோ இருக்கிற உன் லவ்வர் பொண்ணுங்களை விடு. உன்மேல நட்பு வெச்சிருக்கிற என்னை விடு. உங்கப்பா சின்ன வயசில உன்னை விட்டுப்போன அந்தக் குறை தெரியாம வளர்த்த உங்கம்மா உனக்கு முக்கியமில்லையா? அவங்ககிட்ட முதல்ல அன்பா பேசு! பாசமா நடந்துக்க. அவங்க மேல எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறதை நிறுத்து! சண்டை போடறதை நிறுத்து! அவங்களப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்ன நான் சொல்றது? இதுக்கு மேலயும் இதுதான் என் கேரக்டர்னு உனக்குப் புடிச்ச வழியில போயிட்டிருந்தீன்னா அப்படியே போ! எனக்கொன்னும் இல்ல. உனக்கு இதைப் புரிய வைக்கிறதுக்காக நான் பண்ணின யுத்தி உன்னை வேதனைப் படுத்தியிருந்தா.. மன்னிச்சுக்கடா!"

அவ்வளவுதான் என்பது மாதிரி கிருஷ்ணா பேச்சை நிறுத்திவிட்டு கைவிரல்களை நெட்டி முறித்து டப்பாவில் சிகரெட் தேடினான். தீர்ந்து போயிருந்தது. காலி பாக்கெட்டை சரிவில் வீசியெறிந்தான். சத்யா ஒன்றும் பேசாமல் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். காற்றில் உடம்பை உறுத்தாத குளிர் இருந்தது. சத்யா அந்த டைரியை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தான். அவன் நெகிழ்வை வெளிக்காட்டிக்கொள்ளமலிருக்க ரொம்ப பிரயத்தனப்படுவது தெரிந்தது. இருக்கட்டும் என்று கிருஷ்ணாவும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. யோசனைகளுக்காக விடப்படும் இடைவெளிகள் சில புரிதல்களைத் தரும். தெளிவுகளைத் தரும். மெளனம் நல்லது.

அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து இன்று இங்கே வந்ததுவரை நடந்தவையெல்லாம் கோர்வையற்று நிழல்படம்போல் ஓடிக்கொண்டிருந்தது சத்யாவின் மனத்தில். குளிர் காற்று நிரம்பியிருந்த இடத்தில் இருளும் நிரம்ப ஆரம்பித்தது. அடுத்த ஹேர்பின் பெண்டில் வளைந்து திரும்பும் பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. க்வார்டர்ஸ¤க்குத் திரும்பிப் போகலாமென்ற எண்ணத்தில் கிருஷ்ணா திட்டிலிருந்து இறங்கி ஸ்லிப்பர்களை அணிந்து கொண்டான். சத்யாவும் எழுந்து கொண்டு அவனுடன் அமைதியாகவே நடந்து வந்தான். க்வார்டர்ஸ் கேட்டின் அருகில் வந்தபோது கிருஷ்ணா மெளனத்தை உடைத்தான். சத்யாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு மெதுவாய்க் கேட்டான். "என்னடா ஒரே யோசனை? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா.. சரி அதையே யோசிச்சிட்டிருக்காத. நாளைக்கு வால்பாறை எங்கயாவது போலாமா? சொல்லு!"

சத்யா இல்லை என்பதுபோல் மெல்லத் தலையாட்டினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான். "இல்லடா! ஊருக்குப் போலாம். எனக்கு உடனே எங்கம்மாவைப் பாக்கணும்போல இருக்கு!"

(முற்றும்)


என் குறிப்பு

வணக்கம்! கோடிட்ட இடங்கள் தொடர் இத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. உங்களிடமிருந்து விடைபெறுமுன் ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடரின் பிரதான ஜீவ நாடியாய் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்திலும் வந்துகொண்டிருந்த "கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து" பகுதியை முழுக்க முழுக்க எழுதினது என் நண்பர் சரசுராம். இத்தொடருக்குத் தேவைப்படுகிறது என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு டைரிக் குறிப்பையும் மிக அருமையாகயும் மிகுந்த ரசனை வெளிப்பாட்டுடனும் எழுதி கொடுத்தார். அவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தன என்பதும் எனக்கு மகிழ்வைத் தருகிறது. சரசுராமுக்கு என் நன்றிகள் உரித்தாகுகின்றன. சரசுராம் ஒரு நல்ல சிறுகதையாளர். அழகான மன உணர்வுகளுடன், நெகிழ்வுகளுடன், ரசனைகளுடனும் சிறுகதைகள் படைப்பதில் தேர்ந்தவர். இப்போது இணை இயக்குநராக சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இத் தொடரை நிச்சயம் விரும்பிப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இத்தொடர் எழுதும் வாய்ப்பைத் தந்த தமிழோவியம்.காம் மின் இதழுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் பிறிதொரு நாள் சந்திப்போம்.

அன்புடன்
சித்ரன்

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors