தமிழோவியம்
தராசு : புத்தாண்டு கொண்டாட்டங்கள்
- மீனா

புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டை ஒவ்வொருவரும் வரவேற்கும் விதம் தனி.. கோவில் சென்று வழிபாடு செய்து புத்தாண்டை வரவேற்பவர்கள் ஒருவிதம். நண்பர்களுடன் அடுத்தவருக்கு தொல்லை தராதபடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு  வரவேற்பவர்கள் இன்னொருவிதம். ஆனால் சமீபகாலமாக புத்தாண்டை நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நள்ளிரவு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. ஆயிரக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மக்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்சிகளில் சிலநாட்களாகவே ஆபாசமும் கலாச்சார சீரழிவுகளும் அதிகமாகி வருவதாக பொதுமக்களில் சிலர் மட்டுமல்லாமல் காவல் துறை அதிகாரிகளே குறைபட்டு கொள்கின்றனர்.

புத்தாண்டை ஒட்டி ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நடனநிகழ்சியில் ஒருவர் குடிபோதையில் தண்ணீரில் தவறி விழுந்து இறந்துள்ளார். அதனால் நடைபெற்றுவந்த நடன நிகழ்சி பாதியில் தடைபட்டுவிட - அங்கிருந்தவர்களில் பாதிபேர் நடன நிகழ்சி பாதியில் தடைபட்டதால் ஆத்திரமடைந்து ஓட்டல் நிர்வாகிகளிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்துள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல்துறையினரிடமும் அவர்கள் தகராறு செய்ய முற்பட - கலவரத்தை அடக்க தடியடி நடத்தியுள்ளார்கள் மாநகர காவல்துறை அதிகாரிகள்.

இந்த உயிரிழப்பு சம்பவம் மட்டுமல்லாமல் பீகார், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் பல பெண்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் கும்பலாக சேர்ந்துகொண்டு பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை போலீசார் அடித்து விரட்டினர் என்று செய்திகள் கூறுகின்றன.

வருடத்தின் முதல் நாளை நல்ல - இனிய நினைவுகளோடு துவங்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் குடும்பத்தினரோடும் நெருங்கிய நண்பர்களோடும் மட்டும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் எப்போது உணரப்போகிறார்களோ தெரியவில்லை. மேலை நாட்டில் நடைபெறுவதைப் போல வாரவிடுமுறை கேளிக்கைகள் எல்லாம் நமக்கும் தேவை என்று மட்டும் வாதிடும் இவர்கள் அந்த மேலை நாட்டவர்களே நமது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளினால் கவரப்பட்டு நம்மவர்களாக மாறத் துடித்துக்கொண்டிருப்பதை மறந்தது ஏன்?

என்னுடன் இருந்த ஆண் நண்பர்களுடன் வெறும் நட்பாகத்தான் பழகினேன்.. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை என்று சமீபத்தில் நண்பர்களாலேயே கற்பழிக்கப்பட்ட 3 பெண்கள் கதறியது நம்மில் பலருக்கும் மறந்திருக்காது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணரவேண்டும். அளவிற்கு மீறி ஆண் பெண் நட்புணர்வு எல்லாம் வேண்டாம் - குடித்துவிட்டு கொண்டாடுகிறோம் என்று கும்மாளம் போடாதீர்கள் என்று காவல்துறையினர் வலியுறுத்துவதால் மட்டும் பயன் இல்லை. வரம்பு மீறப்படும் இடங்களில் எல்லாம் வக்கிரங்களும் அரங்கேறும் என்பதை இவர்கள் உணராதவரை இவர்களைக் காப்பாற்ற யாராலும் முடியாது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors