தமிழோவியம்
திரைவிமர்சனம் : ரெண்டு
- மீனா

சொந்த ஊரில் உருப்படியாக ஒரு வேலையும் இல்லாததால் வேலை தேடி சென்னைக்கு வரும் மாதவன், பொருட்காட்சியில் மேஜிக் ஷோ நடத்தும் மாமன் வடிவேலுவோடு ஒட்டிக்கொள்கிறார். வடிவேலுவின் மேஜிக் ஸ்டாலுக்கு முன்பாக கடற்கன்னி ஷோ நடத்தும் ரீமாசென்னால் வடிவேலுவின் மேஜிக்கைப் பார்க்க ஒருவரும் முன்வராத நிலையில் ஷோவை சூப்பராக்கிக் காட்டுகிறேன் பேர்வழி என்று மாதவன் கொடுக்கும் ஒரு சில ஐடியாக்களால் வடிவேலுவின் நிலை மேலும் மோசமாகிறது. இதற்கிடையே ரீமாவின் ஷோவை ஒரு வழி பண்ணுகிறேன் என்று மாதவன் செய்யும் அலும்பல்களினால் அவருக்கும் ரீமாவிற்கும் இடையே காதல் மலர்கிறது.

Madhavan, Reemaஇதற்கிடையே மாநிலத்தில் வரிசையாக தொடர் கொலைகள் நடக்கின்றன. அதுவும் நாள் நேரம் குறித்து போலீசுக்குத் தெரிவித்துவிட்டு கொலைகள் நடக்க ஆரம்பித்தவுடன் உஷாராகிறது போலீஸ்.  சப் ரிஜிஊட்ரார், தியேட்டர்காரர் என எந்த விதத்திலும் சம்மந்தமே இல்லாத இருவர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டு பிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம்  ஒப்படைக்கப்படுகிறது. அடுத்ததாக நிகழப்போகும் கொலையைத் தடுத்து நிறுத்த முயலும் பாக்யராஜ் ஒருகட்டத்தில் கொலைகளைச் செய்தது மாதவன் தான் என்று அவரை கைது செய்கிறார்.

ஆனால் அடுத்த காட்சியில் மற்றொரு மாதவன் வந்து நிற்க... அனைவருக்கும் குழப்பம் ஏற்படுகிறது.

கல்யாண காண்டிராக்டராக இருப்பவர் மாதவனின் தந்தை ராஜசேகர். தன் பால்ய நண்பனின் மகள் திருமணத்தை நடத்திக் கொடுப்பதற்காக தன் இரண்டு பிள்ளைகள் சகிதம் நண்பர் வீட்டிற்கு வருகிறார். அங்கே ஏற்படும் திடீர் திருப்பத்தால் தனது முதல் மகனை மணமகனாக்குகிறார் ராஜசேகர். மேலும் மாதவன் கல்யாணப் பெண்ணின் தங்கை அனுஷ்காவிடம் தன் மனதை பறிகொடுக்கிறார்.

இந்த மகிழ்சியான சூழ்நிலையில் கோவில் சொத்தை அபகரிக்க நினைக்கும் ஒரு கும்பல் தங்கள் திட்டத்திற்குAnushka, Madhavan கல்யாணப் பெண்ணின் தந்தை தடையாக இருப்பதை தெரிந்து கொண்டு மொத்த குடும்பத்தையும் அழிக்கிறார்கள். இதில் தப்பிப்பிழைப்பவர்கள் மாதவனும் அவரது நண்பரான சந்தானமும் மட்டுமே. இவ்விபத்தில் மாதவன் தனது கண்பார்வையைத் தொலைக்கிறார்.

தன் குடும்பம் மொத்தத்தையும் அழித்த கயவர்கள் ஒவ்வொருவரையும் தேதி - நேரம் சொல்லிப் போட்டுத்தள்ளுகிறார் மாதவன். தங்கள் குடும்பத்தை அழித்த நால்வரில் மூன்று பேரை சொன்ன நேரத்தில் கொலை செய்யும் மாதவன் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழில் அதிபராக விளங்கும் அந்த கடைசி வில்லனையும் கொன்றாரா? நிரபராதியான அப்பாவி மாதவனின் கதி என்ன? இது தான் ரெண்டு படத்தின் கிளைமாக்ஸ்.

காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் என எல்லாவற்றிலும் கலக்குகிறார் மாதவன். தான் ஏறிவந்த ஆட்டோகாரனுக்கு பணம் தராமல் அவனிடமே காசு வாங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது மாதவனின் காமெடி கலக்கல். வடிவேலுவுடன் சேர்ந்துகொண்டு இவர் அடிக்கும் லூட்டிகளால் வயிறு புண்ணாகிறது. அதிலும் வடிவேலுவுக்கு பெண்களைக் கவர்வது எப்படி என்று கிளாஸ் எடுக்கும் காட்சி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகளில் உருக்குகிறார். அதிலும் தன் கண்முன்னேயே மொத்த குடும்பத்தையும் தொலைத்த கதையைச் சொல்லும் போது பண்பட்ட நடிப்பால் உச் கொட்ட வைக்கிறார்.

மேஜிஷியன் கிரிகாலனாக வடிவேலு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இடம் பெறும். தாரிகாவின் மனசில் இடம்பெற மாதவன் கொடுத்த ஐடியாவை செய்து பார்ப்பதும் அதுவே அவருக்கு ரிவிட் அடிப்பதுமான காட்சிகளில் பின்னுகிறார். வடிவேலு முதல் பாதியில் என்றால் சந்தானம் இரண்டாவது பாதியில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

ரீமாசென், அனுஷ்கா இருவருமே சும்மா வந்து போகும் பொம்மைகள் தான். இருந்தாலும் நடிப்பில் கொஞ்சூண்டு திறமை காட்டுகிறார் அனுஷ்கா. கொலையாளியை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் ஆபிசராக பாக்யராஜ். பிரமாதமாய் ஏதோ சாதிக்கப்போகிறார் என்று நினைத்தால் புஸ்ஸென்று போகிறது அவரது பாத்திரப்படைப்பு.

இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓக்கே ரகம். தளபதி தினேஷின் சண்டைக்காட்சிகளும் பிரசாத்தின் ஒளிப்பதிவும் அருமை. கதையில் ஏகப்பட்ட லாஜிக் கோளாறுகள் என்றாலும் இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து ஜாலியாக ஒரு படம் பார்த்த திருப்தியைத் தந்ததற்காகவே இயக்குனர் சுந்தர்.சி க்கு பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors