தமிழோவியம்
சிறுகதை : வெள்ள நிவாரணம்
- மதியழகன் சுப்பையா

இந்தியில்: நரேந்திர கோஹலி

நான் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தேன். அங்கிருந்து ரிசிவரை எடுத்தவர் '' சொல்லுங்க'' என்றார்.

''யமுனையில் வெள்ளம் வந்துள்ளது'' நான் கூறினேன்.

''தெரியுமே'' என்று அந்த நபர் பதிலளித்தார் மேலும் ''நாங்களும் காலையில் செய்தித்தாளில் படித்தோமே '' என்றார்.

''இங்கு வெள்ளத்தில் விழுந்துள்ள மரத்தில் தொங்கியபடி இரண்டு பேர் கத்திக் கொண்டிருக்கின்றனர்'' என்றேன் நான்.

'' எவரெஸ்ட்டிலா ஏறியிருக்கிறார்கள், மரத்தில்தானே ஏறியிருக்கிறார்கள், இதில் கத்துவதற்கு என்ன இருக்கிறது?'' என்றார் அந்த நபர்.

'' அவர்கள் வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்கள், மேலும் உதவிக்காக கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றேன் நான்.

'' அப்படியா? நாங்கள் இதோ உடனடியாக ஏற்பாடு செய்கிறோம்'' என்றபடி ரிசிவரை வைத்து விட்டார்.

கொஞ்ச நேரத்தில் அங்கு போலீஸ்சின் பறக்கும் படை வந்து சேர்ந்தது. அவர்களின் வண்டி நின்றதும்  ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு மூன்று சிப்பாய்கள்

வண்டியிலிருந்து உற்சாகமாக குதித்தார்கள்.

'' யார் டெலிபோன் செய்தது?'' கூட்டத்தை நோக்கி சப் இன்ஸ்பெக்டர் கத்தினார்.

'' நான்தான் செய்தேன்'' என்றபடி நான் முன்னால் நகர்ந்து வந்து '' சீக்கிரம் அந்த ஆட்களை மரத்திலிருந்து இறக்குங்கள், இல்லையென்றால் அவர்கள் நீரில் மூழ்கி விடுவார்கள், வெள்ள நீர்

அதிகரித்துக் கொண்டே வருகிறது'' என்றேன்.

'' என்ன கேட்கிறோமோ அதுக்கு மட்டும் பதில சொல்லு, தன்னைத்தானே பெரிய புத்திசாலின்னு நினைக்கிறியா?'' என்று சப் இன்ஸ்பெக்டர் என்னை அதட்டினார்.

'ஃபோன் பண்ணினது நீயா? சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

'' ஆம்'' என்றேன்.

'' உனது விருப்பப்படி பண்ணினாயா இல்லை யாராவது பண்ணச் சொன்னார்களா'' அவர் கேட்டார்.

'' நான் எனது விருப்பப்படிதான் பண்ணினேன்''

'' யாருடையவாவது வீட்டிலிருந்து பண்ணினாயா, இல்லை பப்ளிக் பூத்திலிருந்து பண்ணினாயா?

'' பப்ளிக் பூத்திலிருந்து பண்ணினேன்''

'' சரி'' என்றார். மேலும் '' அவர்கள் மரத்தில் ஏறுவதை நீயே பார்த்தாயா இல்லை யாராவது முட்டாள்பையன் வந்து சொன்னானா?'' என்று தொடர்ந்து கேட்டார்.

'' நானேதான் பார்த்தேன்'' என்றேன் நான்.

'' மரத்தில் அவர்கள் தங்கள் விருப்பப்படி ஏறினார்களா? இல்லை யாறாவது ஏற்றி விட்டார்களா?'' என்றபடி அவர் என்னைப் பார்த்து முறைத்தார்.

''எனக்குத் தெரியாது'' என்றேன் நான். '' அவர்கள் மரத்தில் ஏறும் போது நான் பார்க்கவில்லை, ஏறியபின்தான் பார்த்தேன்'' என்றேன்.

'' உனது அபிப்ராயம் என்ன? '' என்று மேலும் என்னை முறைத்தார்.

'' என் அபிப்ராயப்படி, வெள்ள நீரிலிருந்து தப்பிக்க அவர்களாகவே ஏறியிருக்கலாம்'' என்றேன்.

'' யோவ்! வாங்கையா'' என்று தனது சிப்பாய்களை நோக்கி சப் இன்ஸ்பெக்டர் திரும்பினார். '' இதெல்லாம் ஒரு போலீஸ் கேஸா? அவங்க விருப்பப்படி மரத்துமேல ஏறி இருக்காங்க, எப்ப

தோணுதோ அப்ப இறங்கி வந்திடுவாங்க. என்னடா காலமிது மரத்தில ஏறுனவங்கள இறக்கி விடுறது போலீஸ்காரன் வேலையாப் போச்சு'' என்றபடி வண்டியிலேறி சென்று விட்டார்கள்.
நான் மறுபடியும் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு டெலிபோன் செய்து போலீசார் வந்து விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டார்கள் என்றும் மரத்தில் அந்த

இருவரும் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வெள்ள நீர் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தெரிவித்தேன்.

'நீங்கள் பயப்பட வேண்டாம். போலீசார் வந்து ஆரம்பக் கட்ட விசாரணையை முடித்துவிட்டு திரும்பி விட்டார்கள், நாங்கள் தீயணைப்பு படையினரை அனுப்புகிறோம். தீயணைப்பு படை வீரர்கள் அவர்களை மரத்திலிருந்து கீழே இறக்கி விடுவார்கள்'' என்று அங்கிருந்து பதில் கிடைத்தது.

ooOoo

நான் கூட்டத்தினரோடு நின்று காத்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் தீயணைப்பு படையின் வண்டி மணியடித்துக் கொண்டே விரைந்து வந்தது.

'' யார் போன் பண்ணினது?'' தீயணைப்பு படையின் கேப்டன் கேட்டார்.

''நான்தான்'' என்றேன்.

'' என்ன விஷயம் ?'' என்றார் கேப்டன்.

'' இரண்டு பேர் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கீழே இறக்க வேண்டும் '' என்று நான் படபடப்புடன் தெரிவித்தேன்.

'' மரத்தில் தானே தொங்கிக்கிட்டு இருக்காங்க, என்னமோ நிலாவுல தொங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி பதருறீங்க. இறக்கிடலாம். உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்'' என்றார் மிகப்

பொறுமையாக.

'' தண்ணீர் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அவர்களை உடனடியாக கீழே இறக்கவில்லையென்றால் நீரில் மூழ்கி விடுவார்கள்'' என்று நான் விளக்கினேன்.

'' ஏணியை வைங்கப்பா'' என்று தன்னுடன் வந்த வீரர்களைப் பார்த்து கேப்டன் உத்தரவிட்டார். மேலும் ''அங்க ரஷ்யா அமெரிக்கா நாட்டுக்காரனுங்க நிலாவுல இருந்து தானே இறங்கி வந்திடுறானுங்க, ஆனா இந்தியாவுல இவனுங்க இறங்க முடியாத இடத்திலயெல்லாம் ஏன்தான் ஏறுதானுங்களோ தெரியல?'' என முனுமுனுத்தார்.

' அதுவரை ஏணி போகாதுங்க. அந்த மரம் சாலையில் இல்லை. அது யமுனை வெள்ள நீரில் விழுந்து கிடக்கிறது. தண்ணீரில் அரை மையில் தூரத்தில் மரம் கிடக்கிறது.'' என்று நான்

கேப்டனிடம் விளக்கிக் கூறினேன்.

'' ஏணி அதுவரை போகாதா?'' கேப்டன் மீண்டும் முனுமுனுத்தார். '' சரி! கயிறு வீசுங்கப்பா'' என உத்தரவிட்டார்.

'' அரை மையில் நீள கயிறு நம்மிடம் இல்லை'' வீரன் ஒருவன் பதிலளித்தான்.

'' சின்னதாக உள்ளதா, இல்லை பெரியதாக உள்ளதா?'' கேப்டன் கேட்டார்.

''சின்னதாக உள்ளது'' பதில் கிடைத்தது.

'' அப்படின்னா ஒன்னும் நடக்காது'' என்று தலையசைத்தார். '' அப்ப, அந்த நீர் மூழ்கிய கூப்பிட்டு முங்கச் சொல்லுங்கப்பா'' என்றான் கேப்டன் இறுதியாக.

தனது பாடை பரிவாரங்களை மாட்டிக் கொண்டு நீர் மூழ்கி வந்து நின்றான் '' ஐயா, எங்க முங்கனும்?'' என்றான் பணிவுடன். 

'' அந்த மரத்துக்கிட்ட'' என்று கேப்டன் உத்தரவிட்டார்.

'' ஐயா, அவங்க இன்னும் மூழ்கலியே?'' என்றேன் நான். மேலும்

''அவர்கள் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து உள்ளார்கள். மரத்தின் மேல் உள்ளவர்களை காப்பாற்றுவது நீர் மூழ்கிகளின் வேலை இல்லையே'' என்றேன் விபரமாக.

'' பாருங்கப்பா'' என்று கேப்டன் கோபமடைந்து விட்டார். மேலும் '' நீ எங்களின் எல்லா வேலைகளிலும் கால் நுழைக்கிறாய். எங்களிடம் ஏணி, கயிறு மற்றும் நீர் மூழ்கி ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே உள்ளது. அதனால் அந்த இரண்டு பேரையும் மரத்திலிருது இறக்க வேண்டுமானால் மரம் வரைக்கும் சாலை போட்டுத் தரும்படி சொல்லுங்கள் அல்லது தண்ணீர் வற்றிக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் எங்கள் வண்டி மரம் வரை செல்ல இயலும் அவர்களையும் நாங்கள் எங்கள் ஏணி மூலம் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் அந்த இரண்டு பேரையும் எங்களிடம் உள்ள கயிறு எவ்வளவு நீளம் உள்ளதோ அதுவரை தண்ணீரில் நீந்தி வரச் சொல்லுங்கள். நாங்கள் கயிற்றை வீசி அவர்களை காப்பாற்றி விடுவோம் அல்லது அவர்களை  நீரில் மூழ்கி வெள்ள நீர்க்கரையோமாக ஒதுங்கச் சொல்லுங்கள், எங்கள் நீர் மூழ்கி அவர்களின் சடலங்களை உடனடியாக எடுத்து விடுவான்'' என்றார் கேப்டன் தீர்மானமாக.

'' இதில் எதுவுமே நடக்காதுங்களே'' என்றேன் நான் பரிதாபமாக.

'' நடக்கலைன்னா போகட்டும், நாங்க போறோம். கிளம்புங்கப்பா. பொதுமக்கள் கொஞ்சம் கூட உதவி செய்யாத இந்த இடத்தில நாம என்ன செய்ய முடியும்?'' என்று கேப்டன் தனது வீரர்கள் சகிதம் கிளம்பினார்.
எப்படி மணியடித்தபடி வந்தார்களோ, அப்படியே மணியடித்தபடி போய் விட்டார்கள்.

ooOoo

நான் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு மீண்டும் போன் செய்தேன்.

'' தீயணைப்பு படையினரும் கிளம்பிப் போய்விட்டார்கள்'' என்றேன் நான்.

'' அப்புறம்???'' என்றான் எதிர் முனைக்காரன் மிக பொறுமையாக.

'' அப்படின்னா எதாவது மோட்டர் போட் அனுப்புங்களேன்'' நான் சொன்னேன்.

'' மோட்டர் போட் இருக்கு, ஆனா சின்ன மோட்டர் போட் வேகமான வெள்ள நீர்ல எதிர்த்துப் போகாது, பெரிய மோட்டர் போட் பாலத்துக்கு அந்தப் பக்கம் இருக்கு, தண்ணீர் அதிகமா

இருக்கிறதனால அது இந்தப் பக்கம் தாண்டி வர முடியாது, மீடியம் சயிஜ் மோட்டர் போட் இன்னும் வாங்கப் படல. அடுத்த வெள்ளப் பெருக்குக்குள்ள நாங்க வாங்கிடுவோம். அதுவரைக்கும் அந்த இரண்டு பேரும் அங்கேயே தொங்கிக்கிட்டு இருந்தாங்கன்னா, நான் நிச்சயம் மீடியம் சயிஜ் மோட்டர் போட் அனுப்பி வைப்பேன். வேணுமுன்னா நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்''

என்றான். கொஞ்சம் இடைவெளி விட்டு '' இன்னொரு முக்கியமான விஷயம், இனிமேல் இங்க டெலிபோன் பண்ணாதீங்க. எனக்கு வேலை முடியிற நேரமாயிடுச்சி. இனி இங்க டெலிபோன் எடுக்க யாரும் இருக்க மாட்டாங்க. சரியா! ஏங்க அந்த மரத்தில் ஏறியிருக்கிற குரங்குங்க உங்க சொந்தக்காரங்களா?'' என்ற கேள்வியோடு முடித்தான்.

'' இல்லை'' நான் பதிலளித்தேன்.

'' அப்ப, போய் படுத்துத் தூங்குயா.'' என்றபடி ரிசிவரை வைத்து விட்டான்.

அன்று இரவு நான் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். '' யமுனையில் வெள்ளத்தைக் கட்டுப் படுத்த அரசு மிகத் தீவிரமாக உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை

வந்தத் தகவலின்படி வெள்ளத்தில் விழுந்த அனைத்து ஜீவராசிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன'' என ஆகாஷ்வாணியில் உரக்க அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டிருந்தது.


narendra_kohliநரேந்திர கொஹலி: ( 1940) இந்தி இலக்கிய உலகின் பிரபலமான நரேந்திர கொஹலி தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தார். இவர் தனது இளங்கலைப் பட்டத்தை ஜாம்செட்பூரிலிரில் (ராஞ்சி பல்கலைக் கழகம்) முடித்தார். டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் மற்றும் பி எச்டி பட்டம் பெற்றார்.

இவர் முதலில் டெல்லியின் பிஜி தவ் கல்லூரியில் இந்தி மற்றும் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின் மோதிலால் நேரு கல்லூரியில் பணியாற்றினார். நவம்பர் 1995ல்

விருப்ப ஓய்வு பெற்றார். இவர் தனது நகைச்சுவை உணர்வுடனர் கூடிய விமர்சனத்தனமான எழுத்தால் இந்தி இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தவர். சிறுவர்களுக்கான நகைச்சுவை கதைகள் தொடங்கி அரசியல் விமர்சனம் வரை சிறப்பாக செய்தவர். புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். பல பரிசுகள் மற்றும் விருதுகள் பெற்ற இவர். சுமார் 84 புத்தகங்கள் எழுதி உள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், மட்டுமல்லாமல் நாவல்களும், நாடகங்களும் எழுதியுள்ளார்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors