தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - 5
- ர. பார்த்தசாரதி

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

முதல் நாள் நடந்த சொக்கட்டான் போட்டியில், அரசகுமாரர்கள் அத்து மீறிய செயல்கள் எல்லாம் பலருக்கும் பலவிதமாக பரவி, அவையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருதராஷ்டிரன் கண்ணால் இதைப் பார்த்திருந்தால் அவன் மனம் வேறு விதமாய் கூட சிந்தித்திருக்கும். ஆனால் கண்ணில்லாத மன்னன் தான் தனியாக சிந்தித்த, அதே பாதையில் நடக்க தீர்மானித்துவிட்டான்.

திருதராஷ்டிரன்: "சபையோர்களே! நேற்று இந்த துருவம்ச சபையில் நடந்த நிகழ்ச்சிகள் எவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கவில்லை. துரியோதனனும், தன் மனம் வருந்தி சில காலம் வனவாசம் செய்து மன அமைதி பெற வேண்டி என்னிடம் அனுமதி கோரி வந்தான். சொக்கட்டான் விளையாட்டை, சந்தோஷத்துடன் ஆடி மகிழ்வது போக, வினையாக்கி, வீண் விபரீதமாய் யுதிஷ்டிரன் நாடு நகரங்களோடு எல்லாவற்றையும் இழந்த தனி மனிதனாகி விட்டான். நேற்றே நான் எடுத்துக்கொண்ட சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. நடந்தவற்றிற்கு துரியோதனன் பங்கு என்ன? யுதிஷ்டிரன் பங்கு என்ன? யார் இந்த விளையாட்டை வினையாக மாற்றியது? என்று பல வினாக்கள் என் மனத்தில் இரவு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்ற வார்த்தைகள் போல நேற்று விளையாடிய சொக்கட்டான் ஆட்டத்தைப் போல இன்றும் ஒரு முறை சகோதரர்கள் இருவரும் ஆடி, இதில் தோற்றவரே குற்றவாளி என தீர்மானிப்பது என்ற யோசனையும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனையாக பன்னிரண்டு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை ஒரு விதத்தில் எனக்கு ஏற்படும் பெரிய பொறுப்பிலிருந்து விடுதலை தரும். ஏனென்றால் அரச குமாரர்களை விஜாரிக்கும் போது இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து, குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படலாம். சொக்கட்டான் ஆடுவது என்பதின் மூலம் விதியின் வழிப்படி நடக்க விட்டுவிடலாம். அப்படி சொக்கட்டான் ஆடுவது என்றால் தூய உலோகத்தில் தான் காய்கள் செய்து விளையாட வேண்டும் என முடிவும் செய்துவிட்டேன். மந்திரி விதுரரே! காய்களை சரிபார்த்துவிட்டு, யுதிஷ்டிரன் இதற்கு உட்படுகிறானா என்பதையும் கேட்டு, சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

விதுரர்: "ஹஸ்தினாபுரத்து மன்னரே! வணக்கம். தங்கள் மந்திரி என்ற முறையில் என்னை ஏற்பாடு செய்யும்படி பணித்துள்ளீர்கள். இப்போது காய்களைப் பார்ப்பதற்கு முன், காரண காரியங்களைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக தவறு செய்தவர்களாய்க் கருதப்படும் இந்த அரச வம்சத்தை சேர்ந்த இரு சகோதரர்களுடைய பூரண ஒத்துழைப்பயும் நான் கோர வேண்டும். அதற்கும் முன்பாக துரியோதனன் தான் தவறு செய்து விட்டோமா என்று எண்ணுவது போல யுதிஷ்டிரனும் எண்ணுகிறானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, நான் ஏதும் தொடர்வதற்கு முன்பாக ஹஸ்தினாபுரத்து அரசரான தாங்கள், யுதிஷ்டிரன் நேற்று நடந்த நிகழ்ச்சிகளுக்கும் தானும் பொறுப்பு ஏற்கிறானா? தன்பக்கமும் தவறு இருக்கிறது என ஒப்புக் கொள்கிறானா? தவறு அல்லது குற்றம் யாருடையது என்பதற்கு சொக்கட்டான் ஆடி தோல்வியின் அடிப்படையில் தண்டனையை தீர்மானிப்பதை ஏற்கிறானா? கடைசியாக பன்னிரண்டு ஆண்டு வனவாசம், ஒரு வருடம் மறைந்து வாழ்வது என்ற தண்டனையையும் ஒப்புக் கொள்கிறானா? என்பதை நேரிடையாக யுதிஷ்டிரனிடம் கேட்டு அவன் இந்த சோதனைக்கு உட்படுகிறான் என்றும் சபை அறிய செய்ய வேண்டும். அத்துடன் துரியோதனனும், தானும் இந்த சோதனைக்கு உட்படுவதாக சபையில் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்."

திருதராஷ்டிரன்: "விதுரா! நீ கூறிய வார்த்தைகள் அப்பழுக்கில்லாதவைகள். யுதிஷ்டிரா! துரியோதனா! இருவரும் விதுரர் கூறியவற்றை கேட்டீர்கள் அல்லவா? இந்த சோதனைக்கு உட்பட தயார் என்பதை சபையில் தெரிவியுங்கள்."

துரியோதனன்: "நான் சொக்கட்டான் ஆட சம்மதிக்கிறேன். தோற்றவர் வனவாசம் போக் வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்".

யுதிஷ்டிரன் முகம் மிகவும் பிரகாசமாய் மலர்கிறது.

யுதிஷ்டிரன்: "தங்கள் உத்தரவு பெரியப்பா".

சபையில் கூடியிருந்தவர்கள் பலர் முகத்திலும் கேள்விக்குறி. எந்த அரச குமாரர் காட்டில் வசிக்க வனவாசம் போகப் போகிறார் என்ற கேள்வி.

பீஷ்மர் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. அவர் மனத்துள் எண்ண ஓட்டம்: ‘இந்த அரச வம்சத்தில் எந்த கிளையை வெட்டினால் என்ன? ஆனால் துரியோதனன் ஒரு புரையோடிய கையோ? சகுனி, துரியோதனன் மனத்தில் களங்கத்தை உண்டாக்கிவிட்டான். குல ஆச்சார்யர்களும், மற்ற சான்றோர்களும் எவ்வகையான நல்ல பழக்க வழக்கங்களை கற்பித்த போதும்,  சகுனி ஒரு துளி விஷத்தை துரியோதனன் மனத்தில் விதையாக விதைத்து விட்டான். முடிவு? நிச்சயம் அழிவுதான். வெளியில் வளரும் விஷவிதையை முளையிலேயே அழித்து விடலாம்.

ஆனால் அது துரியோதனன் மனத்தில் அல்லவா வளர்கிறது? இப்போது துரியோதனனைக் காப்பது என்பது 'அரசைக் காப்பேன்' என்று தந்தைக்கு கொடுத்த சத்திய வாக்கின் படி கடமையாகிறது. தெரிந்தே விஷவிருக்ஷத்தை வளர்ப்பது தர்மமாகுமா? துரியோதனைக் காப்பது கடமையாகிறது; ஆனால் விஷவிருக்ஷத்தை அழிப்பது தர்மம். அந்த தர்மத்தை யாராவது செய்யட்டும். அதைச் செய்வதற்கு பீமன் ஒரு கருவியாக நேற்றே ஆகிவிட்டானோ?'

விதுரர்: "மன்னரே! துரியோதனன் தன் சம்மதத்தை தெரிவித்து விட்டான். யுதிஷ்டிரனோ 'தங்கள் உத்திரவு' என்ற ஒரு வாக்கியத்தில் கூறிவிட்டான். ஆனால் தாங்கள் இந்த சொக்கட்டான் ஆட்டத்தில் தோல்வி பெற்றவர் பெற வேண்டிய தண்டனையைப் பற்றி கூறி விட்டீர்கள். அதே சமயம் வெற்றி பெற்றவர் என்ன பெறுவார்கள் என்பதைப் பற்றி ஏதும் கூறவில்லையே?"

துரியோதனன்: "சித்தப்பா! அவையில் தங்களுக்கு மன்னரால் இடப்பட்ட கட்டளையை மட்டும் நிறைவேற்றுங்கள். பகடைக்காய் சுத்த செம்பினால்தான் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை மட்டும் சரி பார்த்துவிட்டு, ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விதுரர்: "துரியோதனா! அவையடக்கத்துடன் இருக்க பழகிக்கொள். சொக்கட்டான் ஆட வேண்டும், தோற்றவர் வனவாசம் போக வேண்டும் என்பது மட்டும் புரிந்தால் போதாது. யுதிஷ்டிரன் கூறிய பதிலையும் சற்று கவனி. 'தங்கள் உத்திரவு பெரியப்பா' - பெரியப்பாவின் உத்திரவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அவையடக்கத்தையும் பார்த்தாவது கற்றுக்கொள்."

துரியோதனன் கோபத்துடன் எழுந்து பேச வார்த்தைகள் தேடுகிறான்.

விதுரர்: "துரியோதனா! இப்போது குற்றம் சாட்டப்பட்ட இரு அரசகுமாரர்களில் ஒருவன் நீ; நான் இந்த அரசின் அமைச்சர். அரசின் ஆணைபடி நடப்பதற்கு அரசர் உத்திரவு எனக்கு முன்பு உள்ளது. நீ குற்றவாளியா அல்லவா என்று இந்த அவை இன்னம் தீர்மானிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் குறுக்கிட உனக்கு அனுமதியில்லை."

துரியோதனன் மறுமொழி பேச வாய் எழாது அமர்கிறான். சகுனி சற்று யோசனையுடன் எழுந்து, "மகா மந்திரி விதுரரே! துரியோதனன் சார்பில் சில விபரங்களை சபையில் எடுத்து சொல்ல எனக்கு அனுமதி உண்டா?"

விதுரர்: "விபரங்கள் வரவேற்கப்பட வேண்டியது தான். அது எந்த அளவிற்கு பிரச்சனையை தீர்க்க உதவியாக இருக்கும் அல்லது இருக்காது என்பதை அரசரும் அவையும் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கள் கருத்து எதுவானாலும் அவையில் கூறலாம்."

சகுனி: "நன்றி. துரியோதனன் வனவாசம் என்று ஆரம்பித்தது முதல் எனக்குத் தெரியும். இப்போது தோற்றவர் குற்றவாளி என்ற முடிவுடன் வனவாசம் போக வேண்டும் என்பது தண்டனை. நேற்றே இரண்டாய் இருந்த நாடு, இன்று ஒன்றாய் மாமன்னர் திருதராஷ்டிரர் கொடையின் கீழ், சூரியன் உதிக்கும் முன்பே வந்துவிட்டது. ஆக ஆட்டத்தில் யுதிஷ்டிரன் ஜெயமடைந்தால் இந்திரப்பிரஸ்தம் திரும்ப கொடுப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏதும் இல்லை. தவிர, குற்றம் சாட்டப்பட்ட இருவரில் குற்றமற்றவர் என தீர்மானிக்கப் படுபவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளி காடு செல்ல வேண்டும். விடுவிக்கப்படுபவர்களுக்கு சன்மானம் ஏதும் மன்னர் தர முடியாது. இது தங்களுக்கு தெரியாததில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இப்போது வந்ததால் சொல்கிறேன்."

விதுரர்: "காந்தார இளவரசர், குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுபவருக்கு சன்மானம் ஏதும் தரமுடியாது என்றார். எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். நேற்று சபையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி தான் இன்றைய நடவடிக்கைகள். நடந்தவைகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையது என்றாலும், நீதியின் பொருட்டு, பிரித்துப் பார்க்கையில் சில தவறுகளும், சில குற்றங்களும் தெரியும். யுதிஷ்டிரனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த சொக்கட்டான் ஆட்டத்தில் சில தவறுகளும் சில குற்றங்களும் நடந்துவிட்டன. அதற்கான பொறுப்பு முழுவதும் அவ்விருவர் மீது மட்டும் சார்ந்ததாய் நினைத்து இருக்கிறோம். அதே சமயம், இந்த சபையில் கூடியிருக்கும் பொறுப்பான பலருக்கும் எவ்வித பொறுப்போ, கடமையோ இல்லை என்று நினைக்க முடியுமா? நிச்சயம் அவ்வாறு இல்லை தான். பின்? அதற்கான விலையை, தண்டனையை சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் கொடுத்தோ அல்லது அடைந்தோதான் தீர வேண்டும். எப்போது? காலம் தான் பதில் சொல்லும்.

மற்ற குற்றம் திரௌபதிக்கு இழைக்கப்பட்டது. திரௌபதியின் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை. யாரும் பதில் கூறவில்லை என்பதால் பதிலே இல்லை என்று பொருளல்ல. திரௌபதி தன் சபதத்தின் மூலம் பதிலும் தானே கூறிவிட்டாள். அதை யாரும் ஆட்சேபிக்கவும் இல்லை. தற்போது காந்தார இளவரசர் சகுனி, இந்திரபிரஸ்தம் மன்னர் திருதராஷ்டிரர் ஆளுகைக்கு உட்பட்டதாக நேற்றே வந்துவிட்டது என்றார். ஆனால் அரசரோ, 'நேற்று நடந்த விளையாட்டை வினையாக்கியது யார்?' என்ற வினாவிற்கு இன்று மறுமுறையும் காய் ஆடி தீர்மானிக்க முயலுவதிலிருந்து, நேற்று நடந்தது நேற்றே முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வரவில்லை என உணர்த்துகிறது. ஆக தற்போது துரியோதனன், ஆட்டத்தில் தோற்றால் பதிமூன்று வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்ற தண்டனையின் மூலம், இளவரச பட்டத்தையும் இழக்க வேண்டியதாகிறது.

அப்படியானால், யாருக்கு இளவரசு பட்டம் சூட்டுவது என்பதையும் இப்போது, அதாவது இந்த ஆட்டத்திற்கு முன்பே தீர்மானிக்க வேண்டியதாகிறது. மேலும், சகுனி கூறுவது போல இரு நாடுகளும் ஒன்றாக நேற்றே ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டால், இந்த அரச குடும்பத்தின் மூத்தவனான யுதிஷ்டிரன் தான் இளவரசன் ஆக பட்டம் சூட்டப்பட வேண்டியவனாகிறான்.  இது ஒரு வழி".

துரியோதனன் இதைக் கேட்டதும் மிகவும் பதட்டமடைகிறான். சகுனி "சற்று பொறு. 'இது ஒரு வழி' என்று விதுரர் சொன்ன போதே, இரண்டாவது வழி ஏதோ சொல்லப் போகிறார் என்றாகிறது. அது என்ன என்று தெரிந்துகொண்டு பேசலாம்", என்று துரியோதனனை அடக்குகிறான்.

விதுரர் மேலும் தொடர்கிறார்: "ஆனால், இந்திரப்பிரஸ்ததை தன் ஆளுகையில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இதுவரை அரசர் சபையில் அறிவிக்கவில்லை. நாடை இழந்தது போன்ற தோற்றத்தில் யுதிஷ்டிரன் இருக்கிறான். குற்றம் யாருடையது என்று தீர்மானிக்கப்படும் போது, குற்றம் துரியோதனனுடையது என்று சொக்கட்டான் ஆட்டதின் மூலம் தீர்மானிக்கப்படும் போது யுதிஷ்டிரன் நாட்டை இழக்கவில்லை என்பது தானாகவே முடிவாகிவிடுகிறது. அத்துடன் துரியோதனன் பதிமூன்று வருடம் வனவாசம் செல்ல, இளவரசன் பட்டத்தையும் துறந்துதான் செல்ல வேண்டும். தண்டனை அனுபவிக்கும் போது, எந்த பதவியும் அரசர் கொடுக்க முடியாது. பட்டத்தை யாருக்கு சூட்டுவது என்பதை அரசர் அப்போது தீர்மானிக்க வேண்டும். அந்த நிலையில், யுதிஷ்டிரன் தனது நாட்டை திரும்ப பெறுகிறான். அதே சமயம் மன்னர், ஹஸ்தினாபுரத்து இளவரசராக துரியோதனன் சகோதரர்களில் யாருக்கவது பட்டம் சூட்ட வேண்டும்.

ஆகவே, இப்போது நாடு ஒன்றாகிவிட்டதா அல்லது இரண்டு அரசாக, ஹஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்த்தம், என்று தனித்தனியாக இருக்கிறதா என்பதை முதலில் அறிந்து கொள்ளவே வேண்டும். அரசர் 'குற்றவாளி என தீர்மானிப்பதற்கு மட்டும் தான் ஆட்டத்தில் தோற்றவர் காடு செல்ல வேண்டும் என அறிவித்தார். வெற்றி பெற்றவர் என்ன பெறுவார் என மன்னர் அறிவிக்கவில்லையே?' என்ற வினாவை தெரிந்தே எழுப்பினேன். அதற்கு காந்தார இளவரசர் சகுனி தன் எண்ணத்தில் உள்ளதை உடனே சொல்லிவிட்டார். அது அவர் அபிப்பிராயம். ஆனால் மன்னர் இந்த ஆட்டத்தை சூதாக நினைக்கவில்லை என்று தெரிகிறது. இருவரில் எவருக்கு தண்டனை என்பதை தீர்மானிக்க இது ஒரு வழியாகக் கருதுகிறார்.

யுதிஷ்டிரன் தோல்வி மூலம், அவன் தன் நாட்டை, சகோதரர்களை பணயமாக வைத்து விளையாடியது தவறு என்றாகிறது. துரியோதனன் தோல்வி மூலம், அவன் விளையாட்டை வினையாக நினைத்து, நாடு நகரமெல்லாம் சூதின் மூலம் தன் சகோதரனிடமிருந்து வென்றுவிட்டதாக நினைப்பது தவறு என்றாகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors