தமிழோவியம்
திரைவிமர்சனம் : திருவிளையாடல் ஆரம்பம்
- மீனா

Dhanush,Prakashrajமௌலி - சரண்யா தம்பதியின் மூத்த மகன் தனுஷ். படித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷின் நண்பர்கள் கருணாஸ், சுகுமார் & கோ. பஸ்ஸில் பிளாக் டிக்கெட் விற்று பக்கத்துக்கு ஏரியாவில் வயதிற்கு வந்த இன்ஸ்பெக்டர் பெண்ணுக்கு போஸ்டர் அடித்து வாழ்த்தும் அளவிற்கு பொறுப்பானவர். உருப்படியாக ஏதாவது ஒரு வேலைக்குப் போ என்று அப்பா கொடுக்கும் அட்வைஸை நிராகரிக்கும் தனுஷ் சொந்தமாகத் தொழில் தொடங்க 1 லட்சம் ரூபாயை அப்பாவிடம் கேட்கிறார். மெளலி பணம் தர மறுக்க - அப்பா பிள்ளைக்குள் வாய்ச்சண்டை முற்றி தனுஷை வீட்டிவிட்டே விரட்டுகிறார் மெளலி.

கோவிலில் ஸ்ரேயாவைப் பார்க்கும் தனுஷ் தன் மனதை பறிகொடுக்க அவரோ மிகப்பெரிய தொழிலதிபரான பிரகாஷ்ராஜின் ஒரே தங்கை. தன் தங்கையை யாராவது முறைத்துப் பார்த்தாலே அடி பின்னுகிற ரகம் பிரகாஷ்ராஜ். நண்பர்கள் எல்லாம் இந்தக்க்காதல் கைகூடாது என்று சொல்லியும் விடாப்பிடியாக ஸ்ரேயாவின் மனதில் இடம்பிடித்து தங்கள் காதலை உறுதி செய்கிறார் தனுஷ்.

தங்கையை மறந்துவிடு என பிரகாஷ்ராஜ் பேரம் பேச தன்னுடைய முதலீட்டுக்கு சரியான தருணமாக அதனை பயன்படுத்திக்கொள்ளும் தனுஷ் அதன்பிறகு நடத்தும் கூத்துகள் தான் கதை. பஸ் டிக்கெட்டை ப்ளாக்கில் விற்கும் முதல் காட்சியிலேயே காமெடியில் கலக்கத்துவங்குகிறார் தனுஷ். சீனுக்கு சீன் இவரே காமெடி செய்வதால் கருணாஸ் போன்றவர்கள் காணாமல் போகிறார்கள். பஞ்ச் டயலாக்குகள் இல்லை.. ஆய் ஊய் என்று கத்திக்கொண்டு இல்லை என்பதெல்லாம் மிகப்பெரிய ஆறுதல்.

ஸ்ரேயா பொம்மை போல 4 காட்சிகளில் தலையைக் காட்டுகிறார். நாலு பாடல்களில் தனுஷ¤டன் டூயட் Dhanush,Shreyaபாடுகிறார். அவ்வளவே. படத்தில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுவது பிரகாஷ்ராஜ் மட்டுமே. ஒரு வேலையில்லாத வெட்டிப்பயல் தன் தங்கையைக் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன் அவர் சீறுவது சூப்பர். பெரிய வில்லன் - எதாவது வித்தியாசமாக செய்வார் என்று பார்த்தால் தனுஷின் பபூன் தனத்திற்கெல்லாம் பயந்து அவர் கேட்பதை எல்லாம் கொடுக்கும் சீனில் சப்பென்று ஆகிவிடுகிறது. பிரக¡ஷ்ராஜின் நிலையே இப்படி என்றால் இதை விடப்பரிதாபமாக உள்ளது அவரது உதவியாளராக வரும் இளவரசுவின் நிலை. காட்சிக்கு காட்சி எல்லோரும் சீரியஸாக நடித்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

பொறுப்பான அப்பா - பாசமான அம்மாவாக வரும் மெளலி சரண்யா இருவரும் பாதிப்படத்தில் காணாமல் போகிறார்கள். இவர்களது இளைய மகனாக வரும் பொடியன் உண்மையிலேயே கலக்குகிறான். எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஹாய் சொல்வதாகட்டும், அண்ணன் எத்தனை தோசை சாப்பிட்டான் என்று கணக்கு பண்ணுவதாகட்டும், தன்னை ஸ்கூலிற்கு அழைத்துச் செல்லும் போது தனுஷ் ஸ்ரேயாவைப் பார்த்து அவரை பாலோ பண்ண - இதனால் கடுப்பாகி போலீஸிடம் இவன் என்னை கடத்திட்டான் என்று சொல்லுவதாகட்டும் - தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கலக்குகிறான் பொடியன்.

இமான் இசையில் பாடல்கள் ஓக்கே. என்னம்மா கண்ணு ரீமிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது. வைத்தியின் ஒளிப்பதிவு அருமை.

வேலை ஒன்றும் இல்லாமல் வெட்டித்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷ் மிகப்பெரிய தொழிலதிபர் பிரகாஷ்ராஜின் ஒரே தங்கையான ஸ்ரேயாவை கண்டதும் காதல் கொள்வதும், அதை பிரகாஷ்ராஜிடமே சென்று சொல்வதும், தன் தங்கையை திரும்பிப் பார்த்தாலே அவர்களை பதம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் தனுஷ் விஷயத்தில் லட்சம் லட்சமாய் கொடுத்து தங்கையை மறக்கச் சொல்வதும், காதலை பணத்திற்காக விற்று அதன் மூலம் முன்னேறி பிறகு அதே பணத்தைக் கொடுத்து காதலை தனுஷ் வாங்குவதும், தனக்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்த தனுஷை கிளைமாக்ஸில் பிரகாஷ்ராஜ் மன்னித்து தனுஷின் தன்னம்பிக்கையைப் பாராட்டுவதும் - எல்லாவற்றியும் விட முக்கியமாக டம்மி பொம்மையாக அமெரிக்கா மாப்பிள்ளை மணமேடையில் உட்கார்ந்திருக்க - தனுஷை மாப்பிள்ளையாக பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரேயா ஏற்றுக்கொள்ள..... இப்படி படம் முழுக்க பல காட்சிகள் அபத்தமாக இருந்தாலும் ஏதோ இரண்டு மணி நேரம் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொஞ்சம் சிரிக்க வைத்திருப்பதே திருவிளையாடல்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors