தமிழோவியம்
திரைவிமர்சனம் : பீமா
- மீனா

Trisha, Vikramகாவல்துறை அதிகாரியான பாலாசிங்கை தாக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார் நல்ல தாதாவான பிரகாஷ்ராஜ். இதை சிறுவயது விக்ரம் பார்த்து - தனக்கான உதராண புருஷராக பிரகாஷ்ராஜை மனதில் ஏற்றுக்கொள்கிறார். வளர்ந்ததும் தன் புத்திசாலித்தனம் மற்றும் புஜபலம் இரண்டையும் கொண்டு பிரகாஷ்ராஜுக்கு வேண்டிய காரியங்களை அவர் கேட்காமலேயே செய்து முடிக்கிறார். இதனால் பிரகாஷ்ராஜின் அபிமானத்திற்கு உரியவராகிறார் விக்ரம். இன்னொரு தாதாவான ரகுவரன் கொடுக்கும் தொல்லைகளை சமாளித்து பிரகாஷ்ராஜைக் காப்பாற்றுகிறார் விக்ரம்.

இதற்கிடையே தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் த்ரிஷாவை உதட்டளவில் துரத்தினாலும் மனதளவில் அவர் மீது காதல் கொள்கிறார் விக்ரம். ஒரு கட்டத்தில் போலீஸ் கமிஷனர் ஆசிஷ்வித்யார்த்தி தலைமையில் ரெளடிகளை வேட்டையாட போலீஸ் கிளம்ப அவர்களிடமிருந்து தன்னையும் பிரகாஷ்ராஜையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார் விக்ரம்.

தன் திட்டங்களுக்கு எல்லாம் இடஞ்சலாக இருக்கும் விக்ரமை எப்படியாவது தீர்த்துக்கட்ட ரகுவரன் போராட - இந்தப் போராட்டத்தில் த்ரிஷாவை இழக்கிறார் விக்ரம். பிரகாஷ்ராஜை விக்ரம் கடைசி வரை போலீஸ் மற்றும் ரகுவரம் கும்பலிடமிருந்து காப்பாற்றினாரா? த்ரிஷாவை இழந்த அவரது வாழ்க்கை என்ன ஆனது - படத்தின் முடிவில் இதற்கான விடைகிடைக்கிறது.

Trisha, Vikramமிரமிக்க வைக்கும் உடல்கட்டுடன் வலம்வருகிறார் விக்ரம். பத்துபேர் சூழ்ந்தாலும் ஒற்றை ஆளாய் விக்ரம் அடிக்கும்போது உறுத்தலாக இல்லாமல் இருக்க பெரிதும் உதவியிருக்கிறது அவரது உடல்கட்டு. ஆக்ஷன் காட்சிகளில் பின்னியெடுக்கும் விக்ரம் காதல் காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார். த்ரிஷாவைப் பார்ப்பதற்கு முன்பு துணிவுடன் எதிரிகளுடன் போராடும் விக்ரம் த்ரிஷாவைக் காதலிக்க ஆரம்பித்ததும் நீர்க்குமிழிகளை உடைத்துப் பார்ப்பது அருமையான ரசனை. சிங்கமாக வலம் வருபவர் த்ரிஷாவின் முடிவு கண்டு துவண்டு விழும்போது நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.

அர்த்த ராத்திரியில் கூரையை உடைத்துக் கொண்டு மேலே விழும் விக்ரம் மீது கண்டதும் காதல் கொள்ளும் த்ரிஷாவிற்கு நடிக்க சந்தர்ப்பமே தரவில்லை இயக்குனர். இரண்டு டூயட் பாடுவதோடு சரி.. பொம்மை மாதிரி வந்துபோகிறார்.

நல்ல தாதாவாக வரும் பிரகாஷ்ராஜ் வழக்கம் போல நடிப்பில் அசத்துகிறார். விக்ரமை பார்த்து வியந்து ரசிக்கும்போது அவரிடம் வெளிப்படும் நளினம் சூப்பர். தன் பழைய காதலை நினைத்து அவர் உருகும்போதும் விக்ரம் த்ரிஷா காதலை வாழ்த்தும்போதும் நெகிழ்கிறார்.

கெட்ட - வயதான தாதாவாக வரும் ரகுவரன் நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை. போலீஸ் கமிஷ்னராக வரும் ஆசிஷ்வித்தியார்தி நல்ல போலீஸாக வருகிறார். அவ்வளவே.

ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆங்கில படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை நேர்தியாக எடுத்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓக்கே. பாட்ல்களுக்கு பட்ட சிரமத்தை விட பின்னணி இசையில் துப்பாக்கி சத்தத்திற்கு அதிகமாக சிரமப்பட்டிருப்பார் போலும். படத்தின் இன்னொரு நாயகன் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors