தமிழோவியம்
திரைவிமர்சனம் : சரவணா
- மீனா

Simbu Jyothikaஎப்போதும் ஜாதிச்சண்டையும் கலவரங்களும் கணக்கற்ற எண்ணிக்கையில் நடக்கும் கிராமத்தின் முக்கிய பிரமுகர் பிரகாஷ்ராஜ். உள்ளூரில் கலவரத்தை தூண்டிவிடுபவர்களுக்கு மத்தியில் தான் வாழும் பூமியில் கலவரம் நடப்பதை தன்னால் முடிந்த அளவிற்குத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தான் படித்து முன்னேறியதைப் போலவே தன்னுடைய உடன்பிறப்புகளும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய தம்பி கிருஷ்ணா மற்றும் தங்கை ஜோதிகாவை பெங்களூர் மற்றும் லண்டன் அனுப்பி படிக்க வைக்கிறார். கிருஷ்ணாவின் உயிர் நண்பரான சிம்பு கல்லூரி விடுமுறைக்கு தன் நண்பனுடன் அவரது கிராமத்திற்கு வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே கிருஷ்ணாவின் தங்கை ஜோ மீது சிம்பு காதல் கொள்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லை என்ற நிலையில் எப்படி நண்பனின் காதல் வெற்றி பெறும் என்று சந்தேகம் கொள்கிறார் கிருஷ்ணா. ஜோவிடம் தன் காதலைச் சொல்லாத நிலையிலேயே சிம்புவின் நடத்தை பிடித்துப் போக சிம்புவிற்கு ஜோவைத் திருமணம் செய்து தரும் முடிவிற்கு வருகிறார் பிரகாஷ்ராஜ். இந்த ஏற்பாடுகள் எதுவுமே தெரியாத நிலையில் கோவில் திருவிழாவின் போது நடக்கும் கலவரத்தில் ஜோவின் அண்ணன்கள் இருவரும் வில்லனின் சூழ்ச்சியால் கொல்லப்பட, ஜோவைக் காப்பாற்றும் பொறுப்பை சாகும் நிலையில் சிம்புவிடம் ஒப்படைக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் கிருஷ்ணாவும். ஜோவைக் காப்பாற்றும் நேரத்தில் வில்லனின் தம்பியைப் போட்டுத் தள்ளுகிறார் சிம்பு. அப்போதிலிருந்து வில்லன் கோஷ்டியினர் சிம்பு மற்றும் ஜோவைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள்.

தன் வீட்டிற்கு ஜோவை அழைத்து வரும் சிம்பு முதலில் கிராமத்தில் நடந்தது எதையும் சொல்லாமல் மறைக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினர்கள் பெற்றோர் என அனைவரும் ஜோவைப் பற்றித் தவறாகப் பேச, நடந்த சம்பவத்தை தன் வீட்டாரிடம் சொல்லும் சிம்பு ஜோவிற்காக தான் தன் உயிரையும் கொடுப்பேன் என்கிறார். சிம்பு தன்னைக் காதலிப்பதைப் பற்றி தெரியாத ஜோ ஒரு கட்டத்தில் லண்டன் போவதுதான் தன் விருப்பம் என்று தெரிவிக்க, ஜோவை லண்டன் அனுப்பும் முடிவிற்கு வருகிறார் சிம்பு.

இதற்கிடையே சிம்பு மற்றும் ஜோவைத் தேடிக்கொண்டிருக்கும் வில்லன் கோஷ்டி அவர்களைக் கண்டுபிடிக்க, அதே நேரத்தில் ஜோவிற்கும் சிம்பு காதல் தெரியவர - வில்லன்கள் அனைவரையும் வதம் செய்து காதலர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

வழக்கமாக தனது படங்களில் விரல் வித்தை காட்டும் சிம்பு இந்தப்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார். ஆனால் அவரது ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் அவர் வசனம் பேசிப்பேசி செய்த டார்ச்சரைக் கொஞ்சம் குறைக்கின்றன. இந்தப்படத்தில் அவர் காமெடி செய்ய முயற்சி செய்வதை வரவேற்கலாம். மற்ற நாயகர்களைத் தாக்கி சிம்பு வழக்கமான பேசும் பஞ்ச் டயலாக்குகள் இந்தப்படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். மற்றபடி சிம்புவிடம் புதிதாக பாராட்டும்படி ஒன்றும் இல்லை.

Jyothika, Simbuஅமைதியாக ஜோ. அவரது வழக்கமான துறுதுறு நடிப்பு கொஞ்சம் என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய அமைதியான பயந்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆனால் சில இடங்களில் பார்க்க சிம்புவின் அக்கா மாதிரி இருப்பதைப் பற்றி என்னவென்று சொல்ல..

நடிப்பிற்கு ஜோதிகா என்றால் படத்தில் கவர்ச்சி காட்ட மேக்னா நாயுடு. சிம்புவைத் துரத்தி துரத்தி காதலிக்கிறார். வழக்கமான இரண்டாவது கதாநாயகியாக பாடல்காட்சிகளில் குத்தாட்டம் போடுகிறார். ஒரு கட்டத்தில் மேக்னாவின் அப்பா நிழல்கள் ரவியை சிம்பு கேள்விகளால் துளைக்கும் போது விதவிதமாக முகபாவம் காட்ட முயற்சி செய்கிறார். அவ்வளவே..

அருமையான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போடுகிறார் பிரகாஷ்ராஜ். நீங்கள் எல்லோரும் படிக்காத கிராமத்து ஆட்கள் என்று சிம்பு சொல்லும் போது தன்னுடைய மற்றும் தன் மனைவியின் கல்வித் தகுதி பற்றி பேசும் இடத்திலும் சமாதானமாகவே இருக்க விரும்பிய தான் அருவாளைத் தூக்கும் நிலைக்கு ஏன் ஆளானோம் என்பதைப் பற்றிச் சொல்லும்போதும் மிகச்சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் என்ற பட்டத்திற்கு தான் எந்த அளவிற்கு தகுதியான ஆள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

இப்போதெல்லாம் வில்லன் என்றாலே காட்டுக்கத்தல் கத்தவேண்டும் என்பது எழுதப்படாத நியதியாகிவிட்டதோ என்று நினைக்கும்படி காட்டுக்கத்தல் கத்துவதைத் தவிர வில்லனாக வருபவர் ஒன்றுமே செய்யவில்லை. ஒரே டயலாக்கை படம் முழுவதும் திரும்ப திரும்ப பேசியே போரடிக்கிறார்.

படத்தில் விவேக்கும் இருக்கிறார் என்பதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி சின்னகலைவாணர் காமெடியில் ஒன்றுமே செய்யவில்லை. ராதாரவி, நிழல்கள் ரவி, நாகேஷ் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

அருமையான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த கணல் கண்ணன் மற்றும் அக்காட்சிகளை திறமையாக படமெடுத்த ஆர்தர் வில்சன் இருவருக்கும் பாராட்டுகள். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் தான்.

கிட்டத்தட்ட சண்டைக்கோழி படத்தின் கதையைத் தான் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருக்கிறாரோ கே.எஸ் ரவிகுமார் என்று சந்தேகப்பட வைக்கிறது படத்தின் கதை. என்ன ஆச்சு இயக்குனருக்கு என்று சந்தேகப்படும் படி திரைக்கதையில் ஏகப்பட்ட ஒட்டைகள். முழுமனது வைத்திருந்தால் நிச்சயம் ரவிகுமாரால் இதை விட இன்னமும் பலமடங்கு சிறப்பாக படத்தை இயக்கியிருக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors