தமிழோவியம்
சிறுகதை : துடிப்பு - சிலிர்ப்பு - தவிப்பு
- குமரவேலன்

நளினியின் பிரிவு ஒரே வாரத்தில் தன்னை இப்படிப் பாடாய்ப்படுத்தும் என்று சுரேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே டல்லடித்துப் போயிற்று. வீடு சிலை இல்லாத கோவில் போல, பூ இல்லாத சோலை போல களையிழந்து, சூன்யமாய் நிற்கிறது. கல்யாணமாகி மூன்று மாதங்களுக்குள்ளேயே, நளினி அவ்வளவு நெருக்கமானவளாகிவிட்டாள்.

இரவுகளில் நேரம் போவதே தெரியாமல், கேலியும் கிண்டலும், சீண்டலுமாய் அவர்கள் பொழுதைப்போக்கியது ஒரு இனிய சுவாரஸ்யமான கதை. நளினியின் கொள்ளை அழகும், கண்ணைப் பறிக்கும் இளமையும் அள்ளிப் பருகி ரசித்து அனுபவித்த அந்தரங்க ரகசியங்களை அவர்கள் படுக்கை அறையின் நான்கு சுவர்கள் மட்டுமே அறியும்.

அந்த நினைவுகளில் அவன் லயிக்கும்போது--அவற்றை மீண்டும் மீண்டும் அசை போட்டுப்பார்க்கும்போது-- ஆனந்தத்தால் அவன் உடல் சிலிர்த்துப் போகும்.

அவனுக்கு நன்றாக  ஞாபகமிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன் அண்ணி பத்மா அண்ணாவைப் பிரிந்த சமயத்தில் எல்லாம் அண்ணா எப்படியெல்லா, தவியாய்த் தவித்தான்? எதையோ பறிகொடுத்துவிட்டவன் போல தாடி மீசையுடன், ஏக்கமே உருவாக  தேவதாஸை நினைவுறுத்தும் வகையில் நடமாடியது அவனுக்கு மிகவும் வேடிக்கையாய்த்தானிருந்தது.' மனைவி கூடவே இல்லாவிட்டால் உலகமே அஸ்தமித்துவிடுமா?'  என்ற எண்ணம் கூட அவனுள் தோன்றியிருக்கிறது.

ஆனால் இப்போது--

அந்த வேதனையை அவனே அனுபவிக்கும்போதுதான் பிரிவின் ஏக்கத்தை அவனால் உணர முடிகிறது.

வீட்டில் தங்கவே பிடிப்பதில்லை. எந்த வேலையிலும் மனம் முழுக்கவனத்துடன் ஈடுபடாமல் சண்டித்தனம் செய்தது. சுதாவின் அழகு முகமும் வசீகரப் புன்னகையும், கேலிப் பேச்சுகளும், காதல் சீண்டல்களும் ,படுக்கை அறை அந்தரங்கங்களும் சதா அவன் மனத்திரையில் தோன்றி அவனை வாட்டி வதைத்தன.

எப்படியோ கஷ்டப்பட்டுப் பதினைந்து நாட்களை ஓட்டிவிட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு யுகாமாய் நீளும் விந்தையையும் அப்போதுதான் உணர்ந்தான்.

பதினாறாம் நாள்தான் ஆபத்து அவனைத்தேடி வந்தது--ராஜுவின் உருவத்தில். அவன் ஒரு உல்லாசப்பேர்வழி. மனைவி இறந்து நான்கு வருடங்கள் ஆயிற்று.

வந்தவன் ஏதேதோ வம்பளந்தான். விஷமத்தனமாக அவன் வாயைக் கிளறினான்.

"எப்படிடா கல்யாணமான் புதுசிலேயே பெண்டாட்டியைப் பிரிஞ்சு இருக்க முடியறது உன்னாலே?"

"ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு. நீ பிரிஞ்சு இருந்ததில்லையா?"

"ஏன் இல்லை? ஒவ்வொரு பிரசவத்தின் போதும் கிட்டத்தட்ட நாலு மாசம். அது தவிர மாமனார் வீட்டிலே ஏதாவது 'பன்க்ங்ஷன்'னு போனா கொஞ்ச நாள் அங்கேயே 'டேரா' போட்டுடுவா. ஆனா அப்போவெல்லாம் நான் உன்னை மாதிரி இடிஞ்சுபோய் மூலையிலே உக்காந்ததா ஞாபகமில்லை." - அவனுக்கே உரிய பாணியில் பொடிவைத்துப் பேசினான்.
         
ஆச்சரியத்துடனும் அப்பாவித்தனமாகும் அவனைப் பார்த்தான் சுரேஷ். நண்பனின் அனுபவம் என்ன என்று அறிந்து கொள்வதில் தீவிர ஆவல்.

"சரியான ஆள்டா நீ! உன் மனைவி ஒருத்தி தான் பெண்ணா? காசைக் கொஞ்சம் தாராளமாக செலவு செய்தால் 'டெம்பரரி' மனைவியாயிருக்க எத்தனையோ பேர் ரெடி. அதனாலே மனைவி இல்லையேன்னு ரொம்ப '·பீல் பண்றதில்லை?"

இந்தப் பேச்சைக்கேட்டு சுரேஷ் அதிர்ந்து போனான்.

பிறருடைய வீக்னஸைத் தெரிந்து கொண்டு விட்டால் சிலருக்குக் கொண்டாட்டம். 

ராஜூ விடுவதாயில்லை. சுரே¨ஷை ஒரு வழி செய்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவன் போல் நடந்தான். அடிமேல் அடித்து அம்மியை நகர்த்தினான். வார்த்தை ஜாலத்தில் சுரேஷை மடக்கி, அவன் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, சுரேஷின் கட்டுப்பாட்டிற்கும் வைராக்கியத்திற்கும் டைனமைட் வைத்துவிட்டான். முடிவில் சுரேஷ் தோற்றுப்போனான். 'அந்த' விஷயத்தில் ராஜுவைத் தன் குருவாக சுவீகரித்துக்கொண்டான்.

அடுத்த நாள். ஆபீஸ் முடிந்ததும் இருவரும் கிளம்பினார்கள்.

பழைய மாம்பலத்தின் ஒரு ஒதுக்குப் புறத்தில் ஒரு குறுகலான சந்தில் இருந்தது அந்த வீடு. கதவைத் தட்டினான் ராஜு.

இருபது வயசுப் பெண்ணொருத்தி கதவைத் திறந்தாள். கேரளத்துச் சிவப்பு மேனி; ஆயிரம் கதை சொல்லும் அகல விழிகள். ஏகப்பட்ட கவர்ச்சியைத் தன்னுள் அடக்கியிருந்த வாளிப்பான சரீரம். அதீத மேக்கப்பில் அவள் அழகு மேலும் பளிச்சிட்டது. ஆடைகளைத் திமிறிக்கொண்டு வந்த அவள் அங்கங்கள் அவனுள் ஒரு உஷ்ணத்தை உண்டாக்கின.

வசீகரச்சிரிப்புடனும் கவர்ச்சியான பார்வையாலும் அவர்களை வரவேற்றாள்.

"அம்மு குட்டி, சாரு நமக்கு ரொம்ப நெருக்கமான தோஸ்து. பிரமாதமா, மறக்கவே முடியாமெ கவனிச்சு அனுப்பணும், சரியா?"

அறிமுகமும் சிபாரிசும் பலமாகவே இருந்தது.

"நீ எதுக்கும் பயப்படாம ஃப்ரீயா இருக்கலாம்" ராஜு உற்சாகமளித்தான்.

குற்றத்தின் சுமை சுரேஷின் தலையைத் தாழ்த்தியே வைத்திருந்தது. அவன் நெஞ்சுக்குள் திக் திக்.

போனான் முடித்தான் திரும்பினான்.

நான்காவது நாள்.

உடம்பில் திடீரென்று அத்தனை வலியும் வேதனையும் எரிச்சலும் எதனால் ? வலியச் சென்று வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ ? பரபரப்பில் ஒரு விஷயத்தை அவன் மறந்து விட்டது நினைவிற்கு வந்தது. நிலைமையின் விபரீதம் நெஞ்சில் முள்ளாய் உறுத்தியது. பயம், வெட்கம் அவமானம் அவனை அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்தன.

வேறு வழி தெரியாமல், மீண்டும் ராஜூவிடமே சரணாகதி.

ராஜூ இந்த விஷயங்களில் கரைகண்டவன். கொஞ்சமும் திடுக்கிடவில்லை. டயரியிலிருந்து ஒரு டாக்டரின் விலாசத்தைக் கொடுத்தான்.

டாக்டர் ராவ் யாரோ ஒரு பொடியனுடன் செஸ் விளையாடிக்கொண்டிருந்தார். தடித்த மூக்குக் கண்ணாடியின் வழியே சுரேஷை ஊடுருவிப் பார்த்தார். "யெஸ்?" என்றார் கேள்வியாக.
 
நடுக்கத்துடனும் பயத்துடனும் தன் நிலமையைத் தந்தி அடித்தான்.

"ஏன்யா, பாத்தா ரொம்பப் படிச்சவன் மாதிரி இருக்கே. இது மாதிரி விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டாமோ? டி.வி.லேயும் ரேடியோவிலேயும் சாதா அலறராங்களே  'பாதுகாப்பா இருங்க'ன்னு மண்டையிலே ஏறலையா? இப்பிடி ஏமாந்து வாங்கிகிட்டு  வந்து நிக்கறயே, வெக்கமாயில்லை உனக்கு?" -- டாக்டரின் வார்த்தைகள் சாட்டை அடிகளாய் விழ, கூனிக் குறுகி நின்றான் சுரேஷ்.

ராவ் எழுந்து வேலையில் இறங்கினார். ஒரு தடித்த ஊசி ஈட்டியாய் அவன் புட்டத்தில் இறங்கியது. ஒரு கணம் வலியில் அவன் உயிர் போய்த் திரும்பியது. நெருப்பையா திரவமாக்கி உள்ளே செலுத்தினார்.-- தாங்க முடியாத எரிச்சல் ! இப்படிப் பத்து நாட்கள் பத்து ஊசி.

கடைசி இஞ்செக்ஷனன்று -

"அட்லீஸ்ட் டூ மன்த்ஸ் -- கீப் எவே -- ஒய்·பை நெருங்கவே கூடாது. இன்பெக்ஷன் கம்ப்ளீட்டாக் க்யூர் ஆகணும். இல்லாட்டி அவங்களுக்கும் டிரபிள் வரலாம்." அந்த எச்சரிக்கை இடியாய் இறங்கியது அவன் தலையில்.

பத்து நாட்கள் கழித்து நளினி சென்னைக்குத் திரும்பினாள்.

அன்று இரவு கையில் பால் சொம்புடன் படுக்கை அறையில் நுழைந்தாள்.

சுரேஷ¤க்கோ திருடனுக்குத் தேள் கொட்டியது போல் தவிப்பு. ஓரக்கண்களால் அவளைப் பார்த்தான். அயர்ந்து போனான்!

நளினி குளித்துவிட்டு, மிகப்பிரமாதமான அலங்காரத்துடன் அழகுத் தேவதையாய் நின்று அவளுக்கே உரிய வசீகரப் புன்னகையைப் பொழிந்தாள். மெல்லிய சென்ட் மணம் அவனை கிறுகிறுக்க வைத்தது.

"ஐயோ பாவம்! பார்க்கவே பரிதாபமாயிருக்கு. ரெண்டு மாசமா நான் இல்லாமத் தவியாத் தவிச்சிருப்பீங்களே. பயங்கரமாப் பட்னி போட்டுட்டேன் இல்லையா, சாரிடா, மன்னிச்சுக்கோ...
எனக்கும் ஊர்லே போய் இருப்பே கொள்ளலை.. சதா உங்க நினைப்பேதான்..

சுரேஷ் அவள் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி கையில் வைத்திருந்த புத்தகத்தில் லயித்துவிட்டது போல் பாவனை செய்தான். அவனுக்கு உள்ளூர மனசு கஷ்டப்பட்டது.

"அடேயப்பா, கோபத்தைப் பாரு என் செல்லத்துக்கு. அதான் இப்போ வந்துட்டேனே வட்டியும் முதலுமா திருப்பித் தர"-- அவன் முகத்தை உயர்த்தித் தன் முகத்தில் பரிவோடும் பாசத்தோடும் பதித்துக்கொண்டாள்.

அப்போதும் சுரேஷ் உணர்ச்சியே இல்லாத சிலை போலத் தான் இருந்தான்.

அடுத்த நிமிடமே----

எதிர்பாராதவிதமாக அவன் மடியில் ரோஜாச் செண்டாகச் சரிந்தாள் நளினி. அவனை இதமாக அணைத்துக்கொண்டாள். லேசாக அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்.

அவன் உணர்ச்சிகள் மீட்டப்பட்டு, உடலில் உஷ்ணம் ஏறியது.

சட்டென மனதில் ஒரு மின்னல்! டாக்டர் ராவ் உருட்டிய விழிகளுடன் அவன் கண் முன் தோன்றி எச்சரித்து மறைந்தார். ஒரு நொடியில் மயக்கத்திலிருந்து விடு பட்டுச் சுதாரித்துக் கொண்டான் சுரேஷ்.

முகத்தில் கோபத்தையும் கடுகடுப்பையும் வரவழைத்துக்கொண்டான்.

"சீ சனியனே! போடி அந்தாண்டே! நீ வரலைன்னு யார் அழுதா? ரெண்டு மாசத்திலே எனக்குப் பிரமோஷனுக்காக ஆபீஸ் பரிட்சைகள் எழுதணும். அதுக்காகச் கடுமையா உழைச்சுப் . படிச்சுகிட்டிருக்கேன். வந்துட்டா குலுக்கி மினுக்கிகிட்டு! இதோ பார், சொல்லிட்டேன் உனக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்கு என் கிட்டேயெ வரக் கூடாது. என் கவனத்தைத் திசை திருப்பாமே என் கண்ணிலேயே படாமே எங்கேயாவது ஒழிஞ்சு போடி. உன்கிட்டே கொஞ்சிக் குலாவிக்கிட்டிருந்தா நான் உருப்பட்டாப்பிலேதான்.."

வார்த்தைகளை நெருப்புப் பந்துகளாய் ஆவள் மீது வீசினான். நளினி மிரண்டு அரண்டு நடுங்கினாள். அவளால் நம்ப முடியவில்லை. தன்னை உயிருக்குயிராய் நேசித்த கணவனா இப்படித் தாறுமாறாய்த் திட்டுவது? மனதளவில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? நடவடிக்கையே முற்றிலும் வித்தியாசமா இருக்கிறதே!

சிறிது நேரம் செய்வதறியாது விழித்தாள். பிறகு தன் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு ஹாலில் போய் படுத்துக்கொண்டாள். தேக்கிவைத்திருந்த துக்கத்தையெல்லாம் ஓவென்று கதறிக் கரைத்தாள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors