தமிழோவியம்
தராசு : நந்திகிராமம் - மார்ச் 14 கருப்பு தினம்
- மீனா

மாமியார் உடைத்தால் மண்குடம்.. மருமகள் உடைத்தால் அது பொன் குடம் என்ற பழமொழி தற்போது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசுக்கு அது ரொம்பப் பொருந்தும். மத்திய அரசுடனும் மற்ற மாநில அரசுகளுடனும் எதற்கெடுத்தாலும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பற்றி பேசும் இடதுசாரிகள் தாங்கள் அரசாங்கம் செய்யும் மேற்கு வங்கத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் விஷயத்தில் அங்குள்ள மக்களிடம் காட்டிவரும் கடுமையும் பிரச்சனையை எதிர்கொள்ளும் விதம் கடுமையாக  கண்டிக்கத்தக்கது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நந்திகிராமம் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக மேற்கு வங்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்காக இப்பகுதியில் இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே களமிறங்கியது. ஆனால், அப்பகுதி விவசாயிகள் காட்டிய கண்டனத்தைத் தொடர்ந்து அரசு அம்முயற்சியிலிருந்து பின்வாங்கியது. அதைத் தொடர்ந்து அரசுக்கும் மக்களுக்குமிடையே நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 6 பேர் கொல்லப்பட்டார்கள். 

இந்நிலையில், கடந்த 14ம் தேதியை நிலம் கையகப்படுத்தும் நாளாக மேற்கு வங்க அரசு அறிவித்தது. ஆயிரக்கணக்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் அந்தப் பகுதிக்குள் நுழைய, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கே திரள -  இரு தரப்புக்கும் இடையில் நடந்த மோதலில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பதினான்கு பேர் மரணமடைய கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்

சில மாதங்களுக்கு முன்னால்தான் இதே மாநிலத்தில் சிங்கூர் பகுதியில் டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் இந்தியாவையே ஆட்டியெடுத்தது. அதன் சூடு ணிவதற்குள்ளாகவே இப்பிரச்சனை.. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தைக் கண்டித்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் அரசைக் கலைக்க வேண்டும் என்ற போர்க்குரலை எழுப்பியிருக்கின்றன.

சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதில் தமிழகத்திலும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அது பெருங்கலவரமாக மாறுவதற்குள் சாமர்தியமாக அதற்கு முடிவுகட்டினார் தமிழக முதல்வர். ஆனால் தொட்டதெற்கெல்லாம் சமத்துவம் பேசும் மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? தொடரும் வன்முறைகளும் பலியாகும் அப்பாவிகளும் தான்..

மாநிலத்தை முன்னேற்றுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தொழில் அதிபர்களுக்காக மாநிலத்தையே அடகு வைக்கத் துணிந்துவிட்ட மேற்கு வங்க முதல்வர், முதல்கட்டமாக மாநிலத்தின் விளைநிலங்கள் அனைத்தையும் தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கத் துவங்கியிருக்கிறார். இதுவரை ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதுதான் அம்மாநில மக்களை கொதித்தெழ வைக்கிறது.

மக்களுக்காக செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமும் அவர்களை பெருமளவில் பாதிக்காதவாறு இருக்கவேண்டும். அதை விட்டு மக்களில் பாதி பேரைக் கொன்று புதைவிட்டு அதன் மீது அரண்மணை கட்டி சொந்த பந்தங்களை இழந்து தவிக்கும் மீதமிருக்கும் மக்களிடம் - "வாருங்கள் மகாஜனங்களே! உங்களுக்காக நாங்கள் அரண்மணை கட்டியுள்ளோம்.. வந்து தங்கி மகிழுங்கள்.." என்று அறைகூவல் விடுப்பதற்கு சமம் மேற்கு வங்க அரசு தற்போது செய்யும் செயல். இதை ஆட்சியாளர்கள் உணருவார்களா?

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors