தமிழோவியம்
சிறுகதை : செவத்திமீன்
- திரு

செவத்தி...

யார் இவள்?

தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில் உயிரை ஏந்திக்கொண்டும், பசியால் அழும் கைக்குழந்தையின் வாயினை தங்கள் பசையற்ற மார்பகங்களில் திணித்துக் கொண்டும் காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களில் இவளும் ஒருத்தி.

கடலுக்குச் சென்றவர்கள் கொண்டு வரும் மீன்களை விற்றால்தான் அடுத்த நாள் இவர்களின் வீடுகளில் அரிசி உலையிலிடப்படும். செவத்தியின் வீடு ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.

மீன் கிடைக்காமல் வீடு திரும்பும் பட்சத்தில், வீட்டில் இருப்பதை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, கணவன் திரும்பிய சந்தோஷத்தில் மனைவியும், மனைவியைப் பார்த்த பூரிப்பில் கணவனும் பசியாறும் வினோத   விருந்தோம்பல்களும் சில சமயங்களில் நடைபெறும்.

செவத்தியின் கண்களில் வெகு நாட்களாக ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறி...பல நாட்களாக தேக்கிவைக்கப்பட்ட ஏக்கங்கள் ததும்பி நிற்கின்றன, அவளின் விழிகளின் விளிம்புகள் வரை...சோகத்தால்           பீடிக்கப்பட்டு சிதைவுண்டு கொண்டிருக்கும் முகம்...

செவத்தியின் இந்த தேடல் யாருக்காக? இந்த நீளமான காத்திருப்புத் தவம் எதற்காக?

சில வருடங்களுக்கு முன்பு...

''கஞ்சி எங்கல? வெள்ளன கடலுக்குப் போகோணும்'', வலையைப் படகில் ஏற்றிவிட்டு குடிசைக்கு வெளியில் மணல்மேட்டில் உட்கார்ந்தான் நமுண்டு.

''தெக்குமூள கறுத்து தெரண்டிருக்கு....அவசியம் போகோணுமா?'', செவத்தி கஞ்சி கலையத்தை மணற்திட்டில் வைத்தாள்.

''பொழப்புல....போய்தான் ஆகோணும்...புள்ளைய பாத்துக்க''

''சீக்கிரம் வந்துருவில்ல?''

''என்ன என்னிக்கும் இல்லாம....'', மார்போடு அணைத்துக் கொண்டான்.

''இன்னிக்கு மனசு ரொம்ப கனமா.....தெரியல என்ன ஆச்சுன்னு'', செவத்தியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

செவத்திக்கும், நமுண்டுவுக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 3 வயது மகன் சூசை, சிறிய குடிசை, சிறு சிறு இன்னல்களுக்கு மத்தியில் சிறு சிறு சந்தோஷங்கள் என இவர்களின் வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. இவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்பட்டவர்களும் உண்டு.

அன்று என்னமோ தெரியவில்லை, செவத்திக்கு சில விஷயங்கள் நேர்மாறாகவே நடந்தன. ஏதோ அசம்பாவிதம்     நடக்கப்போவதாக உணர்ந்தும் உணர முடியாதவளாய் தவித்தாள். இனம்புரியாத கலக்கம் அவளைத் தொற்றிக்கொண்டது. பயந்தாள்.....கடலுக்குச் சென்றவன் நல்லபடியாக திரும்ப வேண்டுமென்று....

அன்று மாலை செய்தி கேட்டு பதறிய பல பெண்களில் செவத்தியும் ஒருத்தி.

''......அந்நாட்டு ராணுவத்தினரால் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்''

மனதில் நடுக்கம்...கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. ஒரு சில நிமிடங்கள் உலகத்தில் இருந்து வேற்று கிரகத்திற்கு தூக்கி எறியப்பட்டது போன்ற உணர்வு. புலன்கள் அனைத்தும் நிசப்தமாக நின்றன. துக்கம் அழுகையாக பீறிட்டுக் கொண்டு வந்தது. யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும்? இவளைத் தேற்றவும் ஆளில்லை.

நாட்கள் நகர்ந்தன.

கானாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி, விசாரணை என்ற பெயரில் செவத்தியின் வீட்டுக்கு வந்து, தகவல்களை சேகரித்துக் கொண்டும், ஊர்ஜிதப்படுத்திக் கொண்டும் சென்றார்கள். சென்றவர்கள் சென்றவர்கள்தான். எவ்வித பதிலும் இல்லை. இதே நிலைதான் மற்ற பெண்களுக்கும்....

நியாயப்படுத்தக் கூடிய உணர்ச்சிகள் இவர்களின் உள்ளங்களில் குமுறிக் கொண்டிருந்தாலும், அதனை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு புறக்கணிக்கப்பட்டவர்கள்.

செவத்திக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவளது பார்வை கடலை நோக்கியே.  4 வருட திருமண வாழ்க்கையின்   நினைவுகளில் மட்டுமே உயிர் சுமந்திருந்தாள். நமுண்டு எங்கே? உயிரோடு இருக்கிறானா? அந்நாட்டு ராணுவம் கொன்றுவிட்டதா?

''பொட்டிக்கடை வைக்கலாம்னு பாக்கேன்'', சிலமுறை விரக்தியோடு சொல்லியிருக்கிறான் நமுண்டு.

நமுண்டு கூறியது சரியோ? அதிக சங்கடங்களை சந்திக்க வேண்டிய தொழில் என்பதால்தான் அவ்வாறு சொன்னானா?

'அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை' என்றார்கள்....'அந்நாட்டு ராணுவம் மீனவர்களை விடுவிக்கப் போகிறது' என்றார்கள். அறிவிப்புகள் பன்மாடிக் கட்டிடங்களைப் போல் மிளிர்ந்து உயர்ந்து நின்றன....அடிதளத்தில்           வலுவில்லாமல்.

இதுபோன்ற பல 'கானல் நீர்' சந்தோஷங்களுக்குப் பிறகு 10 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அன்று காலையிலிருந்தே படகின் வருகையை நோக்கி காத்திருந்த பெண்கள் கூட்டத்தில் செவத்தியும் இருந்தாள். வந்து இறங்கியவர்களில் நமுண்டு இல்லை.

''அழுவாத புள்ள! அடுத்த போட்ல வந்துருவான்''

காத்திருந்தாள்........காத்துக்கொண்டிருக்கிறாள்.

இன்று...

மணற்திட்டில் கடலைப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கிறாள்...இவளின் நடைபிண வாழ்க்கையைப் பார்த்து 'பித்து', 'பைத்தியம்', என்று சொன்னவர்கள் பலர். செவத்தி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவளின் உலகம் மிகச் சிறியது...அவளும் நமுண்டுவும் மட்டும்தான் அதில். இவர்கள் இருவருக்கிடையில் உள்ள அன்பின் ஆழம் மிகப் பெரியது என்பது வெளியில் கேலிபேசியவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவளுக்குத் தூக்கம் வந்தது. கண்கள் கிறங்கின. அப்படியே மணற்திட்டில் சாய்ந்தாள். மெல்லிய இளங்காற்று அவள் தூக்கத்திற்கு சாமரம் வீசியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நிம்மதியான தூக்கம் அவளுக்கு.

'கடலலைகளைக் கிழித்துக் கொண்டு மீனாக வருகிறான் நமுண்டு. கரையில் இறங்கி, தூங்கிக் கொண்டிருக்கும் செவத்தியின் கண்ணங்களில் முத்தமிடுகிறான். தூக்கம் கலைந்து நெகிழ்ந்து போகிறாள் செவத்தி. அடுத்தகணம் இவளும் மீனாக மாறுகிறாள். நமுண்டுவுடன் கைகோர்த்தது கடலில் நீந்திச் செல்கிறாள்'.

''செவத்திக்கா!உன் புருசனை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொண்ணுடிச்சாம்! பிணம் படகில வருதுன்னு போலீஸ்காரங்க சொன்னவ'', செவத்தியை எழுப்பினாள் ஜான்சி.

''.................''

''செவத்திக்கா?''

செவத்தி உயிரோடு இல்லை. அவளின் காத்திருப்புத் தவத்திற்கு வரம் கிடைத்துவிட்டது. அவளுக்கு நமுண்டு கிடைத்துவிட்டான்.

''ஆல் இண்டியா ரேடியோ....முக்கியச் செய்திகள்...

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது'',

குப்பத்து டீக்கடை ரேடியோவில் செய்தியை கேட்டுக்கொண்டே வலையைத் தோளில் சுமந்தபடி கடலை நோக்கி நடந்தான் சூசை....செவத்தியின் மகன்.

''என்ன செய்வது? பிழைப்பாயிற்றே!.......வயிறு என்று ஒன்று உள்ளதே!''

கடலை நோக்கியபடி சூசையின் மனைவி.....மீண்டும் ஒரு செவத்தி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors