தமிழோவியம்
திரைவிமர்சனம் : தம்பி
- மீனா

கண்ணுக்குக் கண் - பழிக்குப் பழி என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் நாடு நிச்சயம் நாசமாய்தான் போகும் - வன்முறை என்றைக்கும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதைச் சொல்வதுதான் தம்பி.

madhavan,pooojaஅம்மா, அப்பா, அழகான தங்கை என்ற அருமையான குடும்பம் மாதவனுக்கு. ஒருநாள் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு கொலையைப் பார்த்து அதைப் பற்றி சாட்சி சொல்கிறார் மாதவன். கொலை செய்த சண்முகராஜன் பிரபல தாதா பிஜுமேனனின் தம்பி. தம்பியைக் காப்பாற்றுவதற்காக சாட்சி சொன்னால் குடும்பத்தையே கூண்டோடு அழித்துவிடுவேன் என்று மாதவனை மிரட்டுகிறார் பிஜுமேனன். மீறி சாட்சி சொல்லி சண்முகராஜனுக்கு தண்டனை வாங்கித் தருகிறார் மாதவன். அதனால் தன் குடும்பம் முழுவதையும் இழக்கிறார். பழிக்குப் பழி என்ற வெறியோடு பிஜுமேனன் வீட்டிற்குச் செல்பவர் அங்கே பிஜுமேனனின் அன்பான குடும்பத்தைப் பார்த்து திகைக்கிறார். தான் தன் குடும்பத்தை இழந்து வாடுவதைப் போல இந்தக் குடும்பம் தன் தலைவனை இழக்கலாமா என்று யோசிக்கிறார். விளைவு - பழி வாங்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஜுமேனன் போன்ற ரவுடிகளைத் திருத்த முற்படுகிறார். அன்பாகச் சொன்னால் கேட்காதவர்களைத் திருத்த அடிக்கிறார்.

முதலில் மாதவனுடன் சண்டை போடும் பூஜா அவரது நல்ல குணத்தைப் புரிந்து கொண்டு அவர் மீது காதல் கொள்கிறார். பூஜாவின் காதலை ஏற்க மறுக்கும் மாதவன் பிறகு மனம் மாறி அவர் மீது காதல் கொள்கிறார்.

ஒருகட்டத்தில் மாதவனின் போக்கால் பெரிதும் பாதிக்கப்படும் பிஜுமேனன் மாதவனைக் கொல்ல ஒரு செயற்கை கலவரத்தை உருவாக்குகிறார். அந்தக் கலவரத்தில் அவரது தாயும், மகளும் பாதிக்கப்படுகிறார்கள். சொந்தங்களை இழப்பதன் வலியைப் புரிந்து கொள்கிறார் பிஜுமேனன். மகளையும் தாயையும் காப்பாற்றிய மாதவனின் உயர்ந்த எண்ணத்தை அவர் புரிந்து கொள்ளும் வேளையில் சிறையிலிருந்து வெளிவரும் சண்முகராஜன் மாதவனை வெட்டிச் சாய்க்கிறார். பிஜுமேனன் மனம் திருந்தியதைப் போல உண்மையை உணரும் சண்முகராஜனும் மனம் திருந்துகிறாரா? வெட்டப்பட்ட மாதவனின் நிலை என்ன? இதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

அலைபாயுதேவில் அறிமுகமான மாதவனா இப்படி நடித்திருக்கிறார் என்று சீனுக்கு சீன் வியந்து பாராட்டும்படியாக அற்புதமாக நடித்துள்ளார் மாதவன். வசன உச்சரிப்புகளாகட்டும், சண்டைக் காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும் - அனைத்திலும் கலக்கியுள்ளார். அதிலும் கண் இமைக்காமல் நடித்ததற்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். மாதவனின் திரையுலகில் இந்தப் படம் நிச்சயம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தன்னுடைய நாட்டிய நிகழ்சியின் நடுவே புகுந்து அடிதடி செய்தார்கள் என்பதற்காக மாதவன் மற்றும் அவரது நண்பர்களை நடுரோட்டில் கன்னாபின்னாவென்று கத்தும் பூஜா அதற்கான காரணத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் காட்சியில் அழகாக நடித்துள்ளார். மாதவன் மீது தான் கொண்ட காதலை செடிகள் மூலம் சொல்லும் காட்சி அருமை.

வழக்கமான வில்லன் வேலையை முதலில் செய்யும் பிஜுமேனன், தன் தரப்பு தவறுகளை உணர்ந்து திருந்துவது சூப்பர். வடிவேலுவின் நகைச்சுவை இந்தப் படத்தில் பெரிதும் எடுபடாததற்கு கதையின் வலுவான போக்கு ஒரு காரணம் என்றாலும் காமெடி டிராக்கில் வடிவேலு இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. பாலசுப்ரமண்யத்தின் ஒளிப்பதிவும் விக்ரம் தர்மாவின் சண்டைக் காட்சிகளும் படத்திற்கு வலுவூட்டியுள்ளன.

கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் சாட்டையடியாக அற்புதமான - புரட்சிகரமான கருத்துக்களை சொல்லியுள்ள இயக்குனர் சீமான் தமிழில் ஆழமான கருத்துகளைச் சொல்லி படமெடுக்கும் இயக்குனர்களில் முக்கியமான ஒருவராக நிச்சயம் கருதப்படுவார். இவரது முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors