தமிழோவியம்
தராசு : ஆட்டிப்படைக்கும் கிரிக்கெட்
- மீனா

உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் சென்ற இந்திய அணி முதல் தகுதிச் சுற்றுக்குக் கூடத் தேறாமல் வெளியேறியிருப்பது வருத்தமான விஷயம் என்றால் இந்திய அணியை நம்பி பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களும் அது தொடர்பான வியாபாரமும் முடங்கிப் போயிருப்பது மிக மிக வருத்தமான விஷயம். இந்திய அணியின் இந்த மோசமான தோல்வியால் எங்களுக்கு கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் நஷ்டம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றன பல நிறுவனங்கள்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் மட்டும் தான் என்ற அளவிற்கு கிரிக்கெட் மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிப்படைக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அளவிற்கதிகமாக புகழும் பணமும் தான் இதற்கு முக்கிய காரணம். வீரர்கள் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக எல்லாவிதமான பிராத்தனைகள் மற்றும் இன்னபிற செயல்களில் ஈடுபடும் ரசிகர்கள் - போட்டியில் ஜெயித்தால் வீரர்களை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடும் அதே ரசிகர்கள் போட்டியில் தோற்றால் வீரர்களை துவம்சம் செய்யத்தயங்குவதே இல்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியதற்காக இந்திய வீரர்களை வீடு புகுந்து மக்கள் அடித்து துவம்சம் செய்துவிடுவார்களோ என்று பயந்து வீரர்கள் ஒவ்வொருவரது வீட்டிற்கும் எக்கச்சக்க போலீஸ் பந்தோபஸ்தை மாநில அரசுகள் போட்டுள்ளன.

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? உலக அளவில் இந்தியாவிற்கு புகழ் சேர்த்த ஹம்பி, விஸ்வநாதன் ஆனந்த், ஜஸ்பால் ராணா போன்ற பலர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கி பின் சர்ச்சையில் சிக்கிய சாந்தி தற்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ஹாக்கி இன்று இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் முடிங்கிப் போய் இருக்கிறது. ஹாக்கியின் நிலையே இதுவென்றால் கால்பந்தாட்டமெல்லாம் கணக்கிலேயே வருவது இல்லை. கோடிக்கணக்கில் கிரிக்கெட்டில் மட்டும் பணம் புழங்கிக்கொண்டிருக்க - மற்ற விளையாட்டுகள் எல்லாம் கவனிக்க ஆளில்லாமல் நசிந்துகொண்டிருக்கின்றன.

மக்களுக்கும் அரசுக்கும் வேண்டுகோள் இதுதான். கிரிக்கெட்டிற்குத் தரும் மரியாதை மற்றும் முக்கியத்துவத்தில் கொஞ்சமாவது மற்ற விளையாட்டுகளுக்கும் நாம் தர ஆரம்பிக்கவேண்டும். ஹாக்கி. கால்பந்தாட்டம், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் பிரகாசிக்கத் துடிக்கும் வீரர்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பி  அவர்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு செய்து தர வேண்டும். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தர கிரிக்கெட் மட்டுமலாமல் மற்ற விளையாட்டு விரர்களுக்கும் திறமை உண்டு என்பதை மக்களும் அரசும் உணர்ந்தால்தான் மற்ற விளையாட்டுகள் நம் நாட்டில் பிரகாசிக்கும். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அப்போதுதான் நாம் ஒரு பதக்கமாவது வாங்க முடியும். இல்லாவிட்டால் கிரிக்கெட்டை மட்டுமே தலையில் கட்டிக்கொண்டு நாம் அழவேண்டியதுதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors