தமிழோவியம்
கட்டுரை : நசிந்து வரும் தொழில்
- திருமலை கோளுந்து

CowLaadamகிராம மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருப்பது மாடுகள். அதிலும் பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என்று பல வகை உண்டு. இதில் வண்டி மாடுகள் என்ற வகை மாடுகள் பார்ப்பதற்கு கம்பீரமாக காட்சி அளிக்கும். இந்த மாடுகளுக்கு காலில் லாடம் கட்டும் முறை பழங்காலத்தில் இருந்து இன்று வரை இருந்து வருகிறது. சமீபகாலமாக வண்டி மாடுகள் வளர்ப்பதும், மாட்டு வண்டிகள் பயன்பாடு மறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும்  வண்டி மாடுகளுக்கு லாடம் கட்டக் கூடிய தொழில் இன்று மறைந்து வருவதாக கிராமப் புற வாசிகள் சொல்கிறார்கள்.
 
ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் தான் மாடுகள் வளர்ப்பதும், அதனை விவசாயத்திற்கு பயன்படுத்துவதும் அதிகமாக இருந்தன. அந்த மாடுகளில் மாட்டு வண்டி மாடுகள் என்று தனி மாடுகள் உண்டு. இவை பெரும்பாலும் காங்கேயம் காளைகள் என்ற சொல்லப்படும். இந்த மாடுகளை மாட்டு வண்டியில் பூட்டி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தி வந்தார்கள். இப்படி விளை பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதிக பாரம் ஏற்றி மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் பொழுது மாட்டின் கால்கள் தேய்ந்து, அதன் கால் குழம்புகளில் இருந்து இரத்தம் வந்து விடும். அதனை தடுக்கத் தான் அதன் கால்களுக்கு லாடம் கட்டும் முறையை அந்தக் காலத்தில் கொண்டு வந்தனர். லாடம் கட்டுவது என்பது மெல்லிய இரும்புத் தகடுகளை, மாட்டின் கால்களின் அகல, நீளத்திற்கு ஏற்ப வெட்டி அதில் சிறிது ஓட்டை போட்டு, அதனை மாட்டின் கால் குழம்போடு சேர்த்து இரும்பு ஆணியால் அடித்து, மாட்டின் காலின் அடிப்பகுதியில் கீழே விழாதபடி அறையப்படுவது ஆகும். ஒரு மாட்டின் நான்கு கால்களிலும் இப்படி லாடம் கட்டப்படுகிறது.
 
Laadamமாட்டிற்கு லாடம்  கட்டும் முறை சற்று சுவராய்ச்சியமானதாக இருக்கிறது. முதலில் மாட்டின் கால்களை பெரிய கயிறுகளால் கட்டி மாட்டினை கீழே சாய்க்கிறார்கள். அதன் பின் மாட்டின் நான்கு கால்களையும் ஒன்றாக சேர்த்துக் கட்டி பின் வண்டி மாட்டின் கால்களுக்கு லாடம் கட்டப்படுகிறது. இப்படி லாடம் கட்டும் சுப்பையா ஆசாரியிடம் இது பற்றி கேட்ட பொழுது...

வண்டி மாடுகளுக்கு லாடம் கட்டுவது எனது குலத் தொழில். கொல்லாசாரி என்ற ஆசாரி சமூகத்தை சேர்ந்த நாங்கள் இதனை எங்களின் குலத் தொழிலாக இதனை பார்த்து வருகிறேன். வண்டி மாடுகளுக்கு லாடம் கட்டுவதற்கு இரண்டு மாடுகளுக்கு நூறு ரூபாய் கூலியாக வாங்குகிறேன். ஒரு மாட்டிற்கு 3 இஞ்சு நீளம், 4 இஞ்ச் அகலம் கொண்ட இரும்பு தகடால் லாடத்தை வரும் பொழுதே செய்து கொண்டு வந்து, பின் அதனை மாட்டிற்கு கட்டுகிறேன். இந்தத் தொழில் முன்பு போல் இல்லை. இரும்பு விலை அதிகமாகி விட்டது. முன்பு போல் மாட்டு வண்டிகள் இப்பொழுது கிராமப் புறங்களில் இல்லை. அனைத்து வேலைகளையும் தற்பொழுது டிராக்டர்கள், மினி ஆட்டோக்கள் வந்து விட்டதால் மாடுகளை வைத்து யாரும் வண்டி அடிப்பதில்லை. இருந்தாலும் மாட்டு வண்டிகள் கிராமப் புறங்களில் இன்னும் இருப்பதால் அதற்கு மட்டும் லாடம் கெட்டி வருகிறேன். ஒரு நாளைக்கு ஜந்து மாட்டிற்கு கட்டுவதே அதிகம் தான். 

மனிதர்கள் எப்படி செருப்பு போட்டுக் கொண்டு நடக்கிறார்களோ அதே போல் தான் மாட்டு வண்டி மாடுகளுக்கு லாடம். இந்த லாடம் கட்டிய மாடுகள் எந்த வித பிரச்சினைகள் இல்லாமல் பாரத்தை இழுத்துச் செல்லும். பொதுவாக மாடுகள் மண் தரையில் செல்லும் பொழுது லாடம் தேவையிருக்காது. ஆனால் இன்று அனைத்து சாலைகளும் சிமிண்ட், தார் சாலைகள் வந்து விட்டதால் மாட்டு வண்டி மாடுகள் லாடம் கட்டாமல் பாரம் இழுத்துச் செல்லாது. அப்படியே இழுத்துச் சென்றாலும் அதன் கால் குறுத்து வரை வலி எடுத்து இரத்தம் கசிந்து விடும். இன்றைக்கு ஒரு மாட்டு வண்டி காங்கேயம் மாடுகள் வாங்க வேண்டும் என்றால் 20,000 பணம் வேண்டும். அந்த மாடுகளுக்கு லாடம் கட்டினால் தான் நீண்ட நாள் மாடுகள் நன்றாக இருக்கும். இப்படி கட்டப்படும் லாடம் 15 நாள்களுக்கு ஒரு முறை தேய்ந்து விடும். அதன் பின் புதிதாக கட்ட வேண்டும். நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எனது தந்தை பகல் முழுவதும் மாடுகளுக்கு லாடம் கட்டிக் கொண்டிருப்பார். இரவு முழுவதும் இரும்பு தகட்டை லாடமாக மாற்றிக் கொண்டிருப்பார். ஆனால் எனது காலத்தில் இந்த தொழிலே அழிந்து விடும் மாதிரி இருக்கிறது. இருக்கின்ற மாடுகளுக்கு ஆவது லாடம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதனை பார்த்து வருகிறேன். எனது மகனை இந்த தொழிலுக்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன். ஆனால் அவனோ இது ஒரு தொழிலா என்று சொல்லி விட்டு மில்லுக்கு வேலைக்கு போகிறான் என்ன செய்வது என்று வருத்தப்படுகிறார் சுப்பையா ஆசாரி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors