தமிழோவியம்
தராசு : ராஜ்குமார் மனம் மாறுவாரா?
- மீனா

சிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் வரும் 9ஆம் தேதி பெங்களூரில் நடிகர் ராஜ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. மொழி, இனம், தேசம் ஆகிய அனைத்துத் தடைகளையும் கடந்ததுதான் உலக திரையுலகம். திரையுலகில் மகத்தான சாதனைகள் பலவற்றை செய்தவர் சிவாஜிகணேசன். அதனாலேயே உலக அளவில் பல விருதுகளை அவரால் பெறமுடிந்தது. சிவாஜி தமிழ் மக்களின் சொத்து - தமிழ் மக்கள் மீது மாறாத அன்பு கொண்டவர் என்றாலும் பிற மொழி மக்களை அவர் என்றுமே தூஷித்ததில்லை. பிறமொழி படங்கள் மற்றும் அவற்றின் வளர்சிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்தது கிடையாது.

ஆனால் அப்படிப்பட்ட சிவாஜியின் பெயரால் நடக்கும் விழாவில் பங்கேற்கப்போகும் கன்னட நடிகர் ராஜ்குமாரோ தமிழர்கள் மீது அன்பு வைத்திருப்பதாக தமிழ் பத்திரிக்கைகளில் மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் கர்நாடக மாநிலத்திலேயே முதல் ஆளாக இருப்பவர் இவர். தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான மனஸ்தாபத்தை பெரியதாக்கியதில் பெரும் பங்கு வகிப்பவர் ராஜ்குமார்.

சந்தன வீரப்பனிடம் ராஜ்குமார் சிக்கி மீண்ட போது தமிழக முதல்வரையும் காவல்துறையையும் மனதாரப் பாராட்டியவர் - என் உயிரைக் காப்பாற்றினீர்கள், உங்களுக்கு வேண்டிய உதவிகளை எப்போதும் செய்யக் கடமைப் பட்டவன் நான் என்று சினிமா வசனம் போல நிஜவாழ்விலும் பக்கம் பக்கமாக வசனம் பேசியவர், பெங்களூர் திரும்பியதும் முதல் வேலையாகச் செய்தது தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்று கர்நாடக திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்தியது தான். மேலும் தமிழ் திரைப்படங்களை கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் திரையிடவேண்டும் என்றும் போராட்டம் நடத்தியவர் ராஜ்குமார்.

மக்களிடையே இனம், மொழி, ஜாதி விரோதங்களைத் தோற்றுவித்து அதில் குளிர்காய்பவர்கள் அரசியல்வாதிகள். அது அவர்களின் குணம். ஆனால் கலையுலகைச் சேர்ந்தவர்களோ இந்த அனைத்து வேற்றுமைகளையும் மறந்து உலக மக்கள் ஒற்றுமைக்கும் நல்வாழ்விற்கும் பாடுபடவேண்டியவர்கள். இதனாலேயே ஒரு மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படம் பல மொழிகளிலும் மாற்றம் செய்யப்படுகிறது. அதை மக்களும் ரசிக்கிறார்கள். அப்படிப்பட்ட கலையுலகைச் சேர்ந்த ராஜ்குமார் உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யாவிட்டாலும் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்குமான மனவேற்றுமைகளை களையவும் காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒரு சுமூகமாக தீர்வு ஏற்படவும் தன்னுடைய கலையுலக செல்வாக்கை உபயோகிக்க வேண்டுமே தவிர பிரச்சனைகளைப் பெரிதாக்க முயலக்கூடாது.

பவர்புல் மீடியா சினிமா என்ற வார்த்தைக்கேற்ப திரையுலக நட்சத்திரங்கள் என்ன சொன்னாலும் கேட்ட ரசிகர்கள் தயாராக உள்ளனர். அதிலும் ராஜ்குமார் போன்றவர்கள் சொன்னால் அதற்கு மறுப்பே கிடையாது என்ற நிலையில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தீர்க இயலாத பிரச்சனையாக உள்ள காவிரிப் பிரச்சனையைத் தீர்க ராஜ்குமார் முன்வரவேண்டும். கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும். அப்படிச் செய்தால் ராஜ்குமார் கன்னடர்களின் பொக்கிஷம் என்றில்லாமல் இந்தியாவின் பொக்கிஷம் என்ற பாராட்டைப் பெறுவார்.

இத்தனை நாட்கள் கன்னடர்களுக்காகவே ராஜ்குமார் வாழ்ந்தது போகட்டும். சிவாஜியின் பெயரால் நடக்கவுள்ள பாராட்டு விழாவிற்குப் பிறகாவது ராஜ்குமார் இந்தியர்களுக்காக வாழ்வாரா? மனம் மாறுவாரா? என்று பார்ப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors