தமிழோவியம்
திரைவிமர்சனம் : இன்பா
- மீனா

Shyam, Snehaவாழ்கை என்றால் வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது. ஆனால் சிறுவயது முதற்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்திக்கும் ஒருவன் வாழ்வில் எப்போது - எப்படி வெற்றி பெறுகிறான் என்பதுதான் இன்பாவின் கதைச் சுருக்கம்.

சிறுவயதில் சந்தர்ப சூழ்நிலையால் தன்னைக் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய தன் பள்ளித் தோழியை எதிர்பாராத விதமாக கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போகிறார் புத்திசாலி மாணவரான ஷாம். தண்டனை முடிந்து வெளியே வரும் ஷாம் தன் தாய் மற்றும் தங்கையைக் காப்பாற்ற கிடைத்த வேலைக்கெல்லாம் போகிறார் - ஆனால் ஒன்றிலும் அவரால் நிலைத்திருக்க முடியாமல் போகிறது. இந்தச் சூழ்நிலையில் தன் தங்கை சிநேகாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஆதித்யாவிடமிருந்து காப்பாற்ற ஷாமை தங்கையின் பாதுகாவலராக நியமிக்கிறார் தாதாவான அருண் பாண்டியன்.

முதலில் ஷாமை வெறுக்கும் சிநேகா ஒரு கட்டத்தில் ஷாம் மீது காதல் கொள்ள - தன் சிறு வயதில் நடந்த சம்பவத்தால் காதலை அடியோடு வெறுக்கும் ஷாம் சிநேகாவின் காதலை ஏற்க கண்டிப்பாய் மறுக்கிறார். ஆனாலும் சூழ்நிலைகளால் சிநேகாவின் காதலை ஏற்கும் நிலைக்கு ஷாம் தள்ளப்பட - அண்ணன் அருண்பாண்டியனிடமிருந்து பலமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஒரு புறம் அருண்பாண்டியன் செய்யும் சதி, மறுபுறம் சிநேகாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஆதித்யா என அனைவரும் காதலர்களை துரத்த - காதலர்கள் இணைந்தார்களா ? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

நாயகன் ஷாம் - தாடி வைத்திருப்பது - எடுப்பது இது இரண்டைத் தவிர சோக - சந்தோஷக் காட்சிகளில் ஷாமின் நடிப்பில் வேறு வித்தியாசம் தெரியவே இல்லை. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்களில் கொஞ்சம் தேவலை.

சிநேகாவா இப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்படவைக்கிறார் - நடிப்பால் அல்ல - கவர்சியால். ஆனாலும் ஷாமுடன் ஒப்பிடும்போது சிநேகா எவ்வளவோ தேவலை. பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் பார்த்த சிநேகாவா இது என்று நிச்சயம் நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே விதமான முக பாவம் - பேசும் தன்மை என்று படுத்துகிறார் அருண்பாண்டியன். அவர் செய்யும் வில்லத்தனத்தில் ரசிக்கும்படி ஒன்றுமே இல்லை. நடிக்கவே மாட்டேன் என்ற விஷயத்தில் ஷாமுடன் போட்டி போடுகிறாரே என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அழிச்சாட்டியங்கள் கடுப்பை கிளப்புகிறதே தவிர சிரிப்பை அல்ல. புதுமுக இசையமைப்பாளர் பாலாஜியின் இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். சுபாவின் வசனம் மட்டுமே ஆறுதல் அளிக்கிறது படத்தில். குறிப்பாக பூ‌ர்‌ணிதா இட‌ம் பெறு‌ம் ‌பிளா‌‌ஷ்பே‌க் ஆறுத‌ல் அளிக்கிறது.

கதை ஓரளவிற்கு சுமார் என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வேந்தன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் - இது இயக்குனருக்கு மட்டுமல்ல - ஷாம், அருண்பாண்டியன், கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors