தமிழோவியம்
தராசு : பீகாராகும் தமிழகம்
- மீனா

  சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற சென்னை வார்டு தேர்தலின் போது நடந்த வன்முறைகளும், மறியல்களும் எந்த ஒரு சிறிய அளவிலான தேர்தலாக இருந்தாலும் சரி 2 கழகங்களாலும் மிகப்பெரும் வன்முறைகளில் ஈடுபடமுடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாக விளக்கியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ஒரு சிறிய பகுதிக்கான வார்ட் பகுதிக்காக நடைபெற்ற தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசு முறைகேடுகள் செய்ததாக குற்றம் கூறி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க உறுப்பினர்கள் சென்னையில் மறியலில் ஈடுபட, மறியல் செய்த ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி அ.தி.மு.க மந்திரிகள் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் பதில் மறியலில் ஈடுபட - இந்தக் கூத்தால் பாதிக்கப்பட்டதென்னமோ அப்பாவி பொதுஜனம் தான். தேர்தல் அமைதியாக நடப்பதற்கு வேண்டிய பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே ஒருதலைப் பட்சமாக செயல்பட்டார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டு வேறு.. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததைப் போல காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் நடக்கப்போகும் இடைத் தேர்தலிலும் இதைவிட உக்கிரமான கலவரங்கள் நடக்கும் என்பதை சூசகமாகக் கோடிக்காட்டியுள்ளார் ஸ்டாலின்.

இரண்டு கழகத்தினரிடமும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி எவ்வளவு தூரம் பரவிக்கிடக்கிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான் இந்த வார்டு தேர்தல் கலாட்டா. இதற்கே இப்படி என்றால் அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எவ்வளவு அராஜகங்கள் நடக்குமோ?

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் அமைதிப்பூங்கா என்பதெல்லாம் சும்மா வாய்வார்த்தைக்குத்தான்.. தமிழகம் மற்றொரு பீகாராக வேகமாக உறுமாறிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எந்த நிலைமையிலும் நடுநிலைமை வகிக்க வேண்டிய தமிழகக் காவல் துறையினர் ஆட்சியாளர்களின் கூஜாதூக்கிகளாக மாறி  வெகுகாலம் ஆகிவிட்டது என்பதை தமிழக மக்களும் மத்திய தேர்தல் கமிஷனும் புரிந்துகொள்ள வேண்டும். நடக்கப்போகும் இடைத்தேர்தலிலும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலிலும் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழக போலீசாரை நம்புவதை விடுத்து இந்திய ராணுவத்தினரை அழைக்கவேண்டும். ராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாமல் இருப்பது மிக அவசியம்.

இப்படியெல்லாம் செய்தால் தான் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் உண்மையான ஜனநாயகத் தேர்தலாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழக வாக்காளர்கள் கொளுத்தும் வெய்யலில் மண்டை காய நின்று போடும் ஓட்டுகள் அனைத்தும் வீண்தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors