தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : அறிவுறை கூறும் வழி முறைகள்
- பத்மா அர்விந்த்

சொல்லுதல் யாவர்க்கும் எ ளிய- அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்பது போல  நாள் தோறும் நமக்கு கிடைக்கும் அறிவுறைகளுக்கு பஞ்சமே இல்லை. தொட்டதெற்கெல்லாம் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்தில் என்று எல்லோரும் எல்லாவற்றிலும் தங்கள் கருத்தை, அறிவுறையைச் சொல்வதை நீங்கள் கூட அனுபவப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலான சமயம் நாம் பதின்ம வயதினரை போல நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்பது போல நடந்து கொள்கிறோம். அதே அறிவுறை தொடர்ந்து வருமென்றால், ஒருவித கோபத்திற்கு உள்ளாகி மனத்தாங்கல்கள் வருகின்றன. இதற்கு மேலும் என் அறிவுறையை நீ கேட்காவிட்டால், உன்னுடன் பேசுவதில்லை என்பது போல கணவன் மனைவியிடத்து, பெற்றோர்கள் பிள்ளையிடத்து கட்டளைகள் போடும் இடத்தில் இது இன்னும் அடங்காத மனதின் வடிகாலாய், "நான் செய்தே தீருவேன் அதை கேட்க நீ யார்" என்று ஈகோ சண்டையில் போய் முடியும். இதற்காக நாம் அக்கறைபடுபவரிடத்து அறிவுறை கூறக் கூடாது என்றில்லை, அதை ஒரு வித பக்குவத்தோடு சொல்ல வேண்டும் என்கிறார் நியுஜெர்ஸி மருத்துவ, பல் விஞ்ஞான பல்கலை கழக பேராசிரியரும், மன நிலை மருத்துவருமான Dr.Pat Clifford.

உடல் நல  பழக்க வழக்கங்களில் உடல் பயிற்சி, நல்ல உணவு உண்ணுதல் போன்றவற்றில் அறிவுறை கூறுதலும் அதை பயன் படுத்துவதும் எளிது. ஆனால் குடிப்பது, தொலை காட்சி பார்ப்பது, வீடியோ விளையாட்டு விளையாடுவது, புகைப்பது போன்றவைகளில் இது மிகவும் கடினம். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு, குழந்தை வளர்ப்பை பற்றி எடுத்து சொல்ல சென்ற செவிலித்தாயிடம் அந்த பெண் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கேள்விப் பட்டு விசாரித்ததில், அளவுக்கதிகமான அறிவுறைகள் கேட்டு கேட்டு அந்த பெண்ணுக்கு தான் செய்வது எதுவுமே சரியில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த செவிலி பெண்ணிடம் கடுமையாக நடக்க இதுவே காரணமாகிவிட்டது. புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமியார் அறிவுறை கூற போக, எனக்கென்ன ஒன்றுமே தெரியாதா என்ன என்று மருமகள் மனதில் நினைக்க அதுவே பின்னாளில் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

அறிவுறை கூறுவது இரண்டு பிரிவுகள் உண்டு.

ஒன்று ஒரு செயலை பற்றிய செய்திகளை மட்டுமே கூறுவது (informative)

உதாரணமாக புகை பிடிப்பதால் வரும் தீமைகள் அதன் விளைவுகள் இதைப் பற்றிய  செய்திகளை மட்டுமே சொல்வது. எதிரிலிருக்கும் புகை படிப்பவரின் செயல்களைப் பற்றி சிறிதும் அதில் சேர்க்காமல். இந்த நடைமுறை குடிப்பவர், புகை பிடிப்பவர், AIDS நோய் உள்ளவர் ஆகியோரிடத்து கடைபிடிக்க வேண்டிய முறை ஆகும். ஏனெனில் சம்பந்த பட்டவரின் நடவடிக்கையை இதில் சேர்த்து குழப்பினோமென்றால், என் விருப்பத்தை குறை கூற நீயும் சேர்ந்து கொண்டாயா என்ற தன்னிரக்கமே மிகும். இங்கே நோயாளியிடம் அறிவுறை கூறுபவர் அந்த துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக, ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும். இந்த முறையில் பழக்கம் எந்தவகை தீமைகளை தரும் என்பதையும் சொல்லி மனதில் பயத்தை விளைவிக்கவும் செய்யலாம்.

மற்றொரு முறையில், அறிவுறை கூறுபவர் ஊக்கம் ஊட்டுபவராகவும் இருத்தல் அவசியம். (persuasive)

ஒரு 55 வயது நீரிழிவு நோய் உள்ளவரிடம் மருத்துவர் அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இனிப்புகளை சேர்க்க கூடாது, தினமும் தன்னுடைய சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியும் பயனில்லாமல் போனது. மருத்துவர் ஒரு உடல் நல படிப்பாளியை அணுக அவரால் நோயாளியின் நடவடிக்கைகளை மாற்ற முடிந்தது.  இது எப்படி சாத்தியமானது என்பதற்கு கீழ்க்கண்ட உரையாடலை கவனியுங்கள்:

உடல்நல படிப்பாளி : உங்களுக்கு உலகிலேயே அதிக மகிழ்ச்சியை தரும் ஒன்றை மட்டும் கூறுங்கள்.

நோயாளி: சந்தோஷமாக இருக்க வேண்டும்

படிப்பாளி: உங்களுக்கு எது சந்தோஷம் தரும்

நோயாளி: அலுவலக பணி உயர்வு, பிள்ளைகளுடன் விளையாடுவது, வீட்டில் மனைவியின் உடல் நலம், அமைதி

படிப்பாளி: உங்கள் பிள்ளையுடன் விளையாடுவதுண்டா

நோயாளி: நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். இப்போதெல்லாம் அவனுக்கு ஈடு கொடுக்க என்னால் முடிவதில்லை. தளர்ச்சி அடைந்துவிடுகிறேன்

படிப்பாளி: எனக்கும் ஒரு மகன் உண்டு. அவன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் படிப்பு படித்து நல்ல நிலையில் இருப்பதைக்காண எனக்கு மிகவும் ஆசை. உங்களுக்கும் அப்படிப்பட்ட கனவுகள் உண்டுதானே ?

நோயாளி: என்னுடைய மகன் கல்லூரியில் படித்து முடித்து நல்ல நிலையில் வாழ்வதை பார்த்தல் (குழந்தைகள் உள்ள பெரும்பான்மையான பெற்றோர் தரும் கருத்து) என்னுடைய ஒரே கனவு. கடவுள் புன்ணியத்தில் எனக்கு கிடைக்காத வாய்ப்புக்கள் அவனுக்கு கிடைக்குமாயின் அதை அடைவதில் அவனுக்கு உறுதுணையாக இருக்கவும் முயற்சி செய்வேன்.

படிப்பாளி: உங்கள் பிள்ளை கல்லூரிக்கு செல்லும் வரை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றும் அதற்கான செயல்களை செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

நோயாளி: ஆமாம். எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அவன் மிக கஷ்டப்படுவான். நீங்கள் சொல்வது சரி. ஒரு பெற்றோரால்தான் அடுத்தவர் மனத்தை புரிந்து கொள்ள முடியும். எனக்கென்ன பொறுப்பில்லையா.

படிப்பாளி: அப்படி யார் சொன்னது. உங்களுக்கு பொறுப்பில்லாமல் இருக்குமா என்ன? (மீண்டும் ஒருமுறை) உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். எதனால் தளர்ச்சி வருகிறது? அலுவலகத்தில் வேலை அதிகமோ?

நோயாளி: இல்லை, எனக்கு நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. அது சில சமயம் அளவிற்கதிகமாக போய்விடுகிறது அதனால் தான் இருக்கும். தினமும் சர்க்கரை அளவை சரிபார்க்க நினைக்கிறேன் முடியவில்லை. மறந்து போய் விடுகிறது. பிறகு என் மனைவியடமும் மருத்துவரிடமும் பேச்சு கேட்க வேண்டியிருக்கிறது.

படிப்பாளி: இப்படித்தான் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். சர்க்கரை அதிகமாகி, கோமா வந்துவிட்டால் அவருடைய பிள்ளையல்லவா கஷ்டப்படும். அதனால், காலையில் பல் விளக்கியவுடன் குளியலறையிலேயே சரி பார்த்துவிடுகிறார். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சரி, எனக்கு நேரமாகிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எனக்கு தொலை பேசுங்கள்.

இம்முறையில், நோயின் தீவிரம் மட்டுமே பேசப்படுவதில்லை. ஆனால் அதே சமயம் அதன் விளைவுகள், எது சந்தோஷம் என்பது போல சில விஷயங்கள் நோயாளிக்கு புரிய வைக்கப்பட்டது. சர்க்கரை சரிபார்க்க எளிய முறையும் போதிக்கப் பட்டது என்பதையும் கவனித்து கொள்ளுங்கள். பல் விளக்குவது போல சர்க்கரை அளவை சரிபார்ப்பது ஒரு நித்திய பழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இங்கே அறிவுறை சொல்லப்பட்டபோதும் அது நோயாளியின் முடிவாகவே திரித்து சொல்லப் பட்டது. இம்முறையில் உள்ள சில தொழில் நுட்பங்களையும், குழந்தைகளுக்கு ஒரு சீராக பழக்கங்கள் வர உபயோகிக்கும் முறைபற்றி வரும் வாரம் பார்க்கலமா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors