தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்!
- எம்.கே.குமார்

காசீனோ ! கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரை கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தை! 'கைப்பொருளழிந்தாலும் மனம் கன்னியரை நாடுதடா' என்று சித்தர்கள் பாடியது போல சிங்கப்பூர் அரசாங்கமும் சிங்கை மக்களும் 'வேண்டுமா வேண்டாமா' என்று மனதுக்குள்ளேயும் வெளியிலேயும் புலம்பித்திரிந்து மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்கிறார்கள். இருந்து விலகி, வெறுத்து விரும்பி, உருகி உறைக்கும் காதலை விட 'இமாலய இம்சை' கொண்டதாய் மாயை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது அது! அப்படி என்னதான் இருக்கிறது அதில்?

'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று ஜக்கி குருதேவ் சாமியார் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களில் சிலர் இந்தச் சூதாடிகள். மஹாபாரத காலமெல்லாம் சும்மா துக்கடா! அதில் வரும் கதைகளும் முடிவுகளெல்லாம் கூட புனைகதைப் புராணமாகவோ இழுத்துக்கட்டிய இதிகாசங்களாகவோ இருக்கலாம். வெள்ளிச்செம்பை உருட்டியதுபோல கலகலவென கட்டைகளை உருட்டி, காசையும், நாட்டையும், பெண்களையும், பெண்களுடையை தோழிகளையும் சுருட்டியதெல்லாம் கருவாட்டுக்கதை! இன்றைய கதையே வேறு!

கர்ணனுக்கு குண்டலங்களெனில் சீன இனத்தவர்களுக்குச் சூதாட்டங்கள். 'தொண்டைக்கும் நெஞ்சுக்கும்' இழுத்துக்கொண்டிருக்கும் போது கூட, எந்த அணி எத்தனை கோல் போடும் என்று பந்தயம் கட்டி, காசு பார்க்கும் 'தோன்றிற் புகழொடு தோன்றின்' ஆட்டக்காரர்கள் அவர்கள். சீனாவில் மட்டுமின்றி சீன இனத்தவர்கள் பரவிய பகுதிகளனைத்திலும் புழு பூச்சிகளைப்போல சூதாட்டமும் பலவித வடிவங்களில் பல்கிப்பெருகிவிட்ட காலம் இது. இவர்களை மூலதனமாக்கி தங்களது சம்பாத்திய தாகத்தைத் தீர்த்துக்கொண்டவர்களும் தீர்க்க முனைபவர்களும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றனர். அந்த வகையில் இதுவரை, சிங்கப்பூரில், பரமபத 'பசையாட்டங்கள்' பேர் சொல்லக்கூடிய அளவில் தான் வாழ்ந்து வந்திருக்கின்றன.

"4-D!" - நான்கிலக்க எண்ணில் வரும் தனலெட்சுமி, ஜெயலெட்சுமிகளின் விளையாட்டு. சாயங்காலம், 'சாயபு' கடையில், 'ஓஸி'யில் 'சாயா' குடித்துக்கொண்டிருந்தவனை விடியலில் வெள்ளி மாளிகையில் உட்காரவைக்கும் லட்சிய விளையாட்டு; லட்சங்களின் விளையாட்டு.  தூக்கத்தில் வரும் கனவுப்பெண்ணிடம் கூட 'நான்கு இலக்க' எண்களைக் கேட்கும் மனநிலையைத் தழுவிவிட்டவர்கள் இந்தச்சூதாடிகளில் சிலர். TOTO (டோடோ) அடுத்த விளாசல் வில்லன். வயதான மூதாட்டிகளையும் தாத்தாக்களையும் அதிகாலையில் கையில் காசோடு டிக்கெட் வாங்க, கடைகளின் முன்னே நிற்க வைக்கும் காரியக்காரன். குதிரைப்பந்தயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதுபோக உலகில் நடக்கும் கிரிக்கெட், கால்பந்து உட்பட எல்லா விளையாட்டுகளிலும் சூதாட்டம் இப்போது. பின்னே? எத்தனை நாளைக்குத்தான் இரண்டு காலில் ஓடிச் சம்பாதித்து குடும்பத்தை நடக்க வைப்பது?

'சைமன் லீ' நாற்பது வயதுக்காரர். சிங்கப்பூரர். இரு குழந்தைகளின் தந்தை. அண்மையில் பனிரெண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்குள்ளே நுழைந்து பார்த்தபோது அவரது இரு குழந்தைகள் மற்றும் மனைவி, விஷமருந்தி இறந்துபோய்க் கிடந்தார்கள். விசாரித்தபோது அண்மையில், ஹாங்காங்கிலோ மச்சாவிலோ(MACAU) ஜெண்டிங்கிலோ (GENTING) அவர் பல ஆயிரம் டாலர்களை இழந்து கடன் தொல்லையில் வாடியது தெரியவந்தது. அரசாங்கத்தின் காசீனோ வடிவமைப்புத்திட்டத்தை எதிர்த்து வந்தவர்களுக்கு இது ஒரு உந்துதலாகி காசீனோ திட்டத்தின் தலைமுடியைக் கையில் பிடித்துக்கொண்டார்கள்.

"சைமன் லீ ஒரு சாம்பிள்; சிங்கப்பூரில், 'காசீனோ சூதாட்ட விடுதி' வைத்தால் இதுபோல இன்னும் ஆயிரம் நடக்கும். பொதுமக்கள் நிம்மதியாய் வாழமுடியாது. குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிடும்" இப்படியாய் ஆடினார்கள் எதிர் தரப்பு.

"சிங்கப்பூரில் காசீனோ என்ன, கார்பந்தயம் நடத்துவதற்குக் கூட அனுமதிக்க, முடியவே முடியாது; வருமானத்தை விட மக்களின் அமைதியான வாழ்க்கை வசதியும் நிம்மதியுமே முக்கியம் என்று 1970களிலும் பிறகும், தீவிரமாக அதை எதிர்த்து வந்தவன் நான். இன்றைய கால கட்டத்தில் உலகம் செல்லும் திசையில் நாமும் சேர்ந்து பயணிப்பதும், கலந்து விரைவாக உடன் ஓடுவதும் மட்டுமே நம்மையும் வாழவைத்துக் கொண்டிருக்கும் என்பதையுணர்ந்து இதோ இன்று, காசீனோவை அமைப்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆக மாற்றங்கள் தவிர்க்க இயலாதது. சக உலக நடப்புகளுக்கு ஏற்றவாறு சிங்கப்பூரர்களும் இயைந்து போனால் தான் அவர்களாலும் இவ்வுலகில் வாழமுடியும்" என்று மனம் திறந்து கோடி காட்டினார் திரு. லீ குவான் யூ அவர்கள்.

"1980 களின் இறுதியில் சிங்கப்பூரின் பிரதமர் திரு. கோ சோ டோங்க் அவர்களும் கூட இத்திட்டத்தை ஆரம்பித்து, பிறகு, வேண்டாம் என்று விலக்கி வைத்தார்கள். வருடத்திற்கு சுமார் 6 பில்லியன் டாலர்களை உள்ளூரிலும் சுமார் 1.5 பில்லியன் டாலர் பணத்தை வெளியூர் மற்றும் கப்பல்களிலும் செலவளிக்கும் சீமான்களாக இருக்கிறார்கள் சிங்கப்பூரர்கள். இன்றைய திட்டப்படி இன்னும் 15 சதவீதம் பேர் அதிகமாக அல்லது ஒரு பில்லியன் டாலர்கள் அதிகமாக உள்ளூரில் செலவளிப்பவர்கள் அதிகமாகலாம். இதற்கு மேல் இவர்களின் எண்ணிக்கை கூடாது. உள்ளூர்காரர்கள் உள்ளே நுழைவதற்கு கட்டணத்தொகை வசூலிப்பதன் மூலமும், அளவுக்கு மீறி செலவளிப்பதற்கும், கடனில் விளையாடுவதற்கு தடைகளை வைத்தும், சூதாட்டத்தில் அவர்களது அதிக ஈடுபாடு கட்டுப்படுத்தப்படும். வெளியூர்க்காரர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள்.

'LAS VEGAS' மாதிரி வடிவமைப்பில் உருவாக இருக்கும் இதன் மொத்த செலவு '2 முதல் 4 பில்லியன் டாலர்'களுக்குள் இருக்கும். 'செந்தோசா' தீவிலும் மெரீனா முன் திடலிலும் பெரிய அளவில் எல்லா நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் பொருட்டு இது அமைக்கப்படும். மொத்தம் 35000 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும். வருடத்திற்கு நான்கு மில்லியன் சிங்கப்பூரர்கள் வெளியூருக்கு இதன் பொருட்டும் பயணம் செய்கிறார்கள். இனி இங்கேயே அவற்றை அமைப்பதன் மூலம் அந்தச்செலவும் அவர்களுக்கு குறையும். அதே நேரம் வெளியூரிலிருந்து இங்கே வருபவர்களின் எண்ணிக்கையும் அதன் மூலம் நமது வருமானமும் கூடும்.

4டி, டோடோ, சிங்கப்பூர் பூல்ஸ் போன்றவற்றில் கிடைக்கும் பணம் எவ்வாறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அதுபோல இதனால் வரும் வருமானமும் நல்ல காரியங்களூக்குப் பயன்படுத்தப்படும். 'மச்சாவு' மற்றும் 'ஹாங்காங்' போல இங்கு அமைக்கப்படுபவை வெறும் காசீனோ சூதாட்ட விடுதி மட்டுமில்லை; ஒருங்கிணை உல்லாச விடுதிகள் (INTEGRATED RESORTS)! 'தீம் பார்க்'குகளும் வியாபாரக் கடைகளும், கண்காட்சி அரங்குகள், பொருட்காட்சி திடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் அரங்குகளும் இதனுடன் சேர்ந்து அமைக்கப்படும்.

மதத்தைக் காரணம் காட்டி யாரும் இங்கு இவற்றைத் தடை செய்யமுடியாது. சிங்கப்பூர் போன்ற பல்வேறு மத, மொழி, இனத்தாரிடையே ஒற்றுமையையும் அதே சமயம் வளரும் பொருளாதார முறைகளையும் நாம் ஒருங்கே உருவாக்க வேண்டியது நமது கடமையாகிறது. எனவே.." சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் திரு. லீசியன் லூங் அவர்கள் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 18 அன்று இது தொடர்பாக இப்படிப்பேசினார்.

"வேலை வாய்ப்பு பெறும் 35000 பேரில் எத்தனை பேர் உள்ளூர்வாசிகள்? வரும் வருமானம் அரசாங்கத்துக்கா இல்லை பன்னாட்டு நிறுவனங்களுக்கா? எல்லா விதத்திலும் நல்ல பேர் எடுத்துவரும் சிங்கப்பூருக்கு இது தேவைதானா? சமுதாயச் சீர்கேடு ஏற்படும்; இளையவர்களும் கெட்டுப்போவார்கள். குற்றச்செயல்களும் பெருகி அதன் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கெட்ட பெயர்தான் மிஞ்சும்." 'வேண்டும்' என்று சொல்ல நினைப்பவர்களுக்கு எத்தனை பாயிண்டுகள் கையில் கிடைக்கின்றனவோ அவற்றை விட ஒன்று அதிகமாகவே, 'வேண்டாம்' என்று சொல்பவர்கள் தேடிக்கொண்டிருந்துவிட்டு பிறகு வெந்நீர் பட்டவர்கள் போல அலறுகிறார்கள்.

பாராளுமன்ற அரங்கில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே 'கீச்சுக்குரலில்' எதிர்க்குரல் எழுப்பினார்கள். அவர்களில் இருவர் எதிர்க்கட்சியினர்; ஒருவர் உறுப்பினராக்கப்பட்டவர். எல்லா இடங்களிலும் இது பற்றித்தான் பேச்சு. நால்வரில் இருவர் வேண்டும் என்று சொல்ல, மற்ற இருவர் வேண்டாம் என்கிறார்கள். கடந்த 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் சூதாட்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டவர்கள் 56 பேர். இவற்றில் ஒரு இந்தியர் ஒரு முஸ்லீம் தவிர மற்ற அனைவரும் சீனர்கள்.

அரசாங்கம் அதிக அளவில் இது தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பொதுமக்களிடமிருந்து வர வைக்க முயல்கிறது. யாரையும் எதுவும் கேட்காமல், அரசாங்கம், நாளையே கூட இதைச் செய்துவிட்டுப் போய்விடமுடியும்; ஊர்வலமாய், போராட்டமாய் இதை எதிர்க்கப்போகிறவர்கள் யாரும் கிடையாது. பாலியல் விடுதிகளும் அது சார்ந்த நடப்புகளும் மற்ற அண்டைய நாடுகளை விட சிங்கப்பூரில் மிகவும் குறைவு. மிக நளினமாய் அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டவர்கள், மற்ற ஒழுங்கின்மையையும் குற்றங்களையும் எல்லைக்கோட்டுக்குள்ளே வரையறுத்துக்கொண்டவர்கள் இதிலும் என்ன பாதுகாப்பின்மையுடனா திட்டங்களைச் செயல்படுத்துவார்கள்? 

"எனது குடும்பத்தில் சிலரும் சூதாடிகளாக இருந்தார்கள். அவர்கள் ஒரு கால கட்டத்தில் திருந்திய பிறகுதான் நாங்களும் நிம்மதியாக வாழ ஆரம்பித்தோம். சுற்றுலாத்துறையை பெருமளவு நம்பியிருக்கும் நாட்டில் காசீனோ எனப்படும் செல்வம் கொழிக்கும் இதைச் செய்வதன் மூலம் இன்று நாம் வருந்த நேர்ந்தால் நாளை இதைச் செய்யாததற்காக மிகவும் வருத்தமடைய நேரிடும். எது சிறந்தது என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்வது நல்லது" என்கிறார் திரு. லீ குவான் யூ அவர்கள். மூத்த மதியுரை அமைச்சர்!

"நான் மிக உறுதியானவன், மன திடம் உள்ளவன். ஒன்றைச் செய்தால் அது மிகவும் பயன்பாடுள்ளதாக, சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைத்தேனாகில் அதைச்செய்வதற்காக என் உயிர், உடல் அனைத்தையும் அதற்குள் நுழைத்துக்கொள்வேன்; ஈடுபடுத்துவேன்" இதைச்சொல்பவர் யார் தெரியுமா? வேறு யார்? அவரேதான்!

(தொடரும்.)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

சிங்கப்பூர் மே 02. சிங்கப்பூரில் மே தின விழா கூட்டங்கள் நேற்று சிறப்பாக நடைபெற்றன. '·பேரர் பார்க் பிளாசாவினுள்' நடைபெற்ற வண்ணமயமான ஒரு விழாவில் இளையர் நலம் மற்றும் சமுக நல அமைச்சுவின் அமைச்சர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பேசிய அவர், சிங்கப்பூரர்கள் எல்லாவித முன்னேற்றங்களுடன் சிறந்த வாழ்க்கை வாழ்வதாகக் குறிப்பிட்டார். இளையர்கள் கல்வி விளையாட்டுகளில் மிகவும் சிறந்து உலகத் தரத்துடன் விளங்குவதாகவும் இது தமக்குப் பெருமை தருவதாகவும் இதுபோல இன்னும் பலப்பல சாதனைகளை அவர்கள் செய்யவேண்டும் என்று தான் வாழ்த்துவதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக்கான மானியத்தொகைகள் நிறுத்தப்பட்டு விட்ட போதிலும் தொடர்ந்த அவர்களின் வெற்றி சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது எனவும் படிப்பை முடித்த மாணவர்கள் வெளிநாடு சென்று படித்தபின் அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிடக்கூடாது எனவும் சிங்கப்பூருக்கு வந்து சேவை ஆற்றவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் இளையர்கள், குறிப்பாக ஆண்கள், அயல்நாடு சென்று வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொள்வதாகவும் அதேபோல பெண்களும், சீனாவிலும் இந்தியாவிலும் பிறந்தவர்களை மணம் முடித்துக்கொள்வதாகவும் இது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் சமுதாய வாழ்வுக்கும் நல்ல பலன்களைத் தராது எனவும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் பெண்களையும் ஆண்களையுமே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகளால் சிங்கப்பூர் ஆண்களும் பெண்களும் தனிமையில் வாழும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் குற்றங்களுக்கு இது ஒரு வழியும் விளைவுமாய் ஆகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Copyright © 2005 Tamiloviam.com - Authors