தமிழோவியம்
டிவி உலகம் : வீடுதோறும் கெட்டிமேளம் (புதிய தொடர்)
- குமார்


அந்த வேன் குன்றத்தூர் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. உள்ளே ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம். சந்துகளில் நெளிந்துநின்று கேமராமேன் படம் பிடித்துக்கொண்டிருந்தார். மிகவும் முக்கியமான காட்சி. சீரியலுக்கே பெரிய திருப்பம் தரவிருக்கிற காட்சி.

நடிகர்கள் உணர்ச்சிமயமாகப் பேசி நடித்துக்கொண்டிருக்க, இயக்குநர் மானிட்டரில் கவனமாக இருக்க, உதவியாளர்கள் வசனத்தாளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க, திடீரென்று வேன் ஒருவளைவில் நிலை தடுமாற, கதவு திறந்துகொண்டுவிட, கதவோரம் இருந்த நடிகை நர்மதா அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

கேமராவில் அந்தக் காட்சி பதிவான வினாடியில்தான் நடந்தது படப்பிடிப்பல்ல, நிஜமான ஒரு விபத்து என்பதே குழுவினருக்குப் புரிந்தது.

ஒரு வினாடிதான். கீழே விழுந்த நர்மதா இடதுபுறம் உருண்டிருந்தாலோ, அல்லது வேன் வலதுபுறம் வளைந்திருந்தாலோ என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே முடியாது. மிகப்பெரிய விபத்து.

விழுந்தவர் வலப்புறம் உருண்டு ஓட தலையில் அடிபட்டு, சில சிராய்ப்புகள் மட்டும் ஏற்பட்டன. வேன் தற்செயலாக இடதுபுறம் திரும்பி பிரேக் அடித்து நின்றது.

பதறியடித்துக்கொண்டு சீரியல் குழுவினர் இறங்கி ஓடி அவரைத் தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். யாருக்கும் பேச்சுமூச்சு இல்லை. இரண்டு மணிநேரம் கழித்து, நர்மதா நார்மலாக இருக்கிறார்; அபாயம் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொன்னபிறகுதான் குழுவினருக்கு உயிரே வந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.

மாலை மயங்கும் நேரத்தில் படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு கார் வந்து நின்றது. யாரது? நர்மதாவா! ஆம். அவரேதான்.

"நான் ரெடி சார். வந்துட்டேன்" என்று மேக்கப்புடன் ஷ¥ட்டிங்குக்கு வந்துவிட்டார்.  யாராலும் நம்பவே முடியவில்லை.

கையில் பட்ட காயங்கள் தவிர உடம்பெங்கும் உள்காயம் ஏற்பட்டிருந்தது அவருக்கு. எப்படியும் ஒரு வாரமாவது ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனாலும் ஒளிபரப்பு நாள் நெருங்கும் அவசரத்தைக் கருதி படப்பிடிப்புக்கு வந்துவிட்டிருந்தார் நர்மதா.

இது நடந்தது கடந்தவாரம். ஜெயா டிவியில் வருகிற மே 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கும் (தினசரி இரவு 9 மணிக்கு) 'கெட்டிமேளம்' மெகா தொடரின் படப்பிடிப்பின்போது நடந்தது.

'Kettimelam' Team கெட்டிமேளம் தொடரின் இயக்குநர் விக்கிரமாதித்தன், டிவி உலகுடன் நீண்டநாள் பரிச்சயம் உள்ளவர். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த அட்சயா தொடரை இயக்கியவர். இன்றைய தேதியில் நம்பர் ஒன் சீரியலான மெட்டிஒலியில் செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றி, அதன் வெற்றியில் பெரும்பங்கு வகித்தவர்.

அவர் கூறும்போது, "சீரியல்களின் முக்கியமான பார்வையாளர்கள் பெண்கள்தான். ஆகவே, பெண்கள் விரும்பக்கூடிய கதையாக, அதே சமயம் இதுவரை சொல்லப்படாத விஷயங்களைத் தொடுவதாகக் கெட்டிமேளம் இருக்கும். அஸ்வினி, ராகசுதா, ராஜேஸ்வரி, குயிலி, சண்முகசுந்தரம், தீபக், அமரசிகாமணி, சக்திகுமார், நர்மதா, மைதிலி, ஜானவி என புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் நடிக்கிறார்கள்.  ஆல்ரைட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்துக்காக நடிகை ஜெயசுதாவும் அவரது கணவர் நிதின் கபூரும் இதனைத் தயாரிக்கிறார்கள்" என்றார்.

தொலைக்காட்சித் தொடர்களின் வெற்றியில் அவை ஒளிபரப்பாகும் நேரத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கெட்டிமேளம் தொடர் ப்ரைம் டைம் என்று சொல்லப்படும் இரவு 9 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகவிருக்கிறது. மக்கள் அதிகம் விரும்பும் இந்தநேரம் 'கெட்டிமேள'த்துக்குக் கிடைத்திருக்க, பார்வையாளர்களைக் கட்டிப்போடும் விதத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது இந்தத் தொடரில்?

Ashwini in 'Kettimelam'இயக்குநர் கூறும்போது "இது மூன்று பெண்களின் கதை. அல்லது அந்த மூன்று பெண்கள் சந்திக்கும் மூன்றுவிதமான நூதனமான பிரச்னைகளின் கதை என்றும் கூறலாம். இந்தப் பெண்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின் தம்பி மிகவும் பாடுபடுகிறான். ஆனால் அவனையே அள்ளி விழுங்கிவிடுகிறது ஒரு இமாலயப்பிரச்சினை. இந்தக் குடும்பக் கதை, இந்தியாவையே உலுக்கிய, மறக்கமுடியாத ஒரு மாபெரும் பிரச்சினையின் மையப்புள்ளியில் போய் எப்படி இணைகிறது என்பதுதான் சஸ்பென்ஸ். இதுவரைவந்த தமிழ் சீரியல்களிலிருந்து இந்த அம்சம் முற்றிலும் மாறுபட்டதாக அமையும்" என்று கூறினார்.

இதுதவிர, முதல்முறையாக ஒரு முழுநீள காமெடி டிராக் இந்தத் தொடரில் இடம்பெறுகிறது. தமிழில் காமெடி சீரியல்கள் உண்டே தவிர, ஒரு சீரியஸ் தொடரில் காமெடி டிராக் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல எழுத்தாளர் பா. ராகவன் இந்தத் தொடருக்குக் கதை வசனம் எழுதுவதன்மூலம் முதல்முறையாக தொலைக்காட்சித் தொடர்கள் உலகில் அடியெடுத்து வைக்கிறார். சரத் சந்திரன் இத்தொடருக்கு ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை எழுதி இயக்குபவர் விக்கிரமாதித்தன்.  மே 2 முதல் திங்கள் முதல் வெள்ளிவரை தினசரி இரவு 9 மணிக்கு ஜெயாடிவியில் ஒளிபரப்பாகிறது, கெட்டிமேளம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors