பாடல் 103
கவிஞர். வாலி எழுதிய ஒரு புதுக்கவிதை, 'அக்னி சாட்சி' என்னும் திரைப்படத்தில் வாசிக்கப்பட்டது :
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், நிழலையோ பூஜிக்கிறேன். அதனால்தான், உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக்கூட நெற்றியில் நீறுபோல், திருநீறுபோல் இட்டுக்கொள்கிறேன் !
- இந்தப் பாடலின் காதலி, காதலனின் நிழல் விழுந்த மண்ணை, பொக்கிஷமாய் மதித்து, நெற்றியில் பூசிக்கொள்கிறாள்.
இதெல்லாம் வெறும் காதல் பிதற்றல் என்று நினைக்காதீர்கள் - இவளுக்கு ஒரு பழைய முன்னோடி இருக்கிறாள் - அவள்தான் இன்றைய முத்தொள்ளாயிரப் பாடலின் நாயகி. அவள் இருக்கும் இடத்தைப் பாண்டியன் கடந்து சென்றதும், அவனுடைய குதிரையின் காலடி பட்ட மண்ணை எடுத்து வைத்துக்கொண்டு உற்சாகமாய்க் கூத்தாடுகிறாள். (அந்தக் குதிரையின் பெயர் : கனவட்டம்)
'வயலில் பூத்த மலர்களைத் தொடுத்து, அழகான வட்ட மாலையாய்ச் செய்து, அதைத் தனது மார்பில் அணிந்த பாண்டியனை, தங்கத் தேரில் அழைத்துவந்த குதிரையே, உன்னுடைய காலில் பட்டுத் தெறித்த அந்தப் புழுதிகூட, எனக்கு உயர்வானதுதான் !'
காதலனோ, அவனுடைய குதிரையோ மிதித்துச் சென்ற புழுதியை உயர்வாக நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால், அந்தப் புழுதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? அதுதான் அவளுக்கும் தெரியவில்லை. அந்தப் புழுதியை வைத்துக்கொண்டு, ஆனந்த பரவசத்தில் என்னென்னவோ கற்பனைகள் செய்கிறாள்.
'என் காதலன் தொட்டுப் புனிதமாக்கிய, இந்தப் புழுதியை நான் என்ன செய்வேன் ? அப்படியே அந்தப் புழுதியில் புரண்டு ஆடட்டுமா ? அல்லது, உடம்பெங்கும் அதைப் பூசிக்கொள்ளட்டுமா ? அல்லது, அதை என் தலையில், பூவுக்கு பதிலாக சூடிக்கொள்ளட்டுமா ?'
- இப்படிப் பலவிதமாய்க் கற்பனை செய்தபின், அவளுக்கு ஒரு அபாரமான யோசனை தோன்றுகிறது, 'அல்லது, இந்தப் புழுதியில் தண்ணீரும், நறுமணப் பொருள்களும் கலந்து, வண்ணக் குழம்புபோல் ஆக்கி, பூ இதழால் தூரிகை செய்து, அதைத் தொட்டுத்தொட்டு, என் மார்பில், அவன் உருவத்தை ஓவியமாய் வரைந்துகொள்ளட்டுமா ?'
ஆடுகோ சூடுகோ ஐதார் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ நீடு புனவட்டப் பூந்தெரியல் பொன்தேர் வழுதி கனவட்டம் கால்குடைந்த நீறு.
(ஆடுகோ - ஆடுவதா ? ஐது - அழகு / ஐதா - இளகிய ஏடு - பூ இதழ் கோடு - எழுதும் கொம்பு / தந்தம் நீடு - நீளமான புனம் - வயல் பூந்தெரியல் - மலர் மாலை கனவட்டம் - பாண்டியனின் குதிரை கால்குடைந்த - கால் பட்ட நீறு - சாம்பல் / தூசு)
பாடல் 104
சாதாரணமாக, பெண்கள் தங்களின் காதல் உணர்ச்சிகளை வெளிப்படையாய்ச் சொல்வதில்லை என்று ஒரு கணிப்பு அல்லது கவனிப்பு அல்லது ஆதங்கம் அல்லது குற்றச்சாட்டு உண்டு.
இதற்கு என்ன காரணம் ? இந்த முத்தொள்ளாயிரப் பாடல், அதை விளக்க முயல்கிறது :
பூக்கொம்புபோல் மென்மையான பெண்களின் காதல், அத்தனை சீக்கிரத்தில் வெளிப்படுவதில்லை - குடத்தினுள் ஏற்றிவைத்த விளக்கைப்போல, அவளுக்குள்ளேயே மறைந்திருக்கும் ஒரு ரகசிய பரவசமாகவே அது இருந்துவிடுகிறது.
ஆனால், இந்த சாத்வீகமெல்லாம், பூக்களைத் தொடுத்து மாலையாய் அணிந்த அழகன் பாண்டியன், தனது அரண்மனைக்குள் இருக்கும்வரைதான் - அவன் வெளியே உலாச் செல்லக் கிளம்பிவிட்டால், சட்டென்று இந்தப் பெண்களின் குணம் மாறிவிடுகிறது - அவர்களுக்குள் இருந்த, அவர்கள் வெகு கவனமாய் மறைத்துவைத்திருந்த காதல் உணர்வுகள் அனைத்தும், எல்லோரும் அறியும்படி வெளிப்படத்துவங்கிவிடுகிறது.
ஆனால், இந்தக் காதல் உணர்ச்சி தோன்றிய மறுகணம் - இன்னொரு ஆபத்தும் தோன்றிவிடுகிறது. பசுக்கள் கூட்டமாய்ச் சென்று, மேய்ந்து திரும்புகிற அழகான மலையில், காட்டுத் தீ பற்றியதுபோல, அந்தப் பெண்களைப்பற்றிய வதந்திகளும், பழிச்சொல்களும், ஊரெங்கும் உலவத்தொடங்கிவிடுகிறது - அந்த ஊரில் இருக்கிற உத்தமர்கள் எல்லோரும் ஒரு கட்சியில் சேர்ந்துகொண்டு, காதல் என்பது பெருங்குற்றம் என்பதாக வாதிட்டு, இந்தப் பெண்களைப்பற்றித் தவறாய்ப் பேசஆரம்பித்துவிடுகிறார்கள்.
இப்படியாக, 'நீங்கள் உங்கள் காதல் உணர்ச்சிகளை வெளிப்படையாய்த் தெரிவித்தால், நாங்கள் உங்களைப்பற்றி வதந்தி பேசுவோம்', என்று சமுதாயம் ஒரு அயோக்கியத்தனமான கொள்கை வைத்திருக்கும்போது, எந்தப் பெண்தான் தனது காதலை வெளியே சொல்ல நினைப்பாள் ?
குடத்து விளக்கேபோல் கொம்புஅன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடுஅறி கௌவை தரும்.
(அன்னார் - போன்றவர்கள் புறப்படுதல் - வெளியே தெரிதல் / தோன்றுதல் தார் - மாலை ஆ - மாடுகள் அணிமலை - அழகிய மலை கௌவை - பழிச்சொல்)
|