தமிழோவியம்
கவிதை : என்னை நானே
- சத்தி சக்திதாசன்


உள்ளத்தினுள்ளே
உண்மையைத் தேடி
என்னை நானே
கேட்கும்
கேள்விகள் கோடி

அடுத்த மனிதன்
நிலையிலிருந்து
ஜந்து நிமிடம்
சிந்தித்தாயா ?
கேட்ட கேள்வி
என்னை நானே

பறந்து உலகில்
உண்மை
நிலையை மறந்து
ஓட்டப் போட்டியில்
ஓடிக் களைத்தாயே
வெற்றி என்ன
கூறுவாயா ?
கேட்ட கேள்வி
என்னை நானே

வெட்டிப் பேச்சு
பேசும்
வீணர் கூட்டத்தில்
தலைமைப் பதவிக்கு
ஏன் தவிக்கின்றாயோ?
கேட்ட கேள்வி
என்னை நானே

அன்பைக் கொடுத்து
துன்பம்
வாங்கியும் ஏன்
இன்னமும்
வாழ்க்கைச் சந்தையில்
உனக்கு
வியாபாரம் ?
கேட்ட கேள்வி
என்னை நானே

துயர் துடைக்க
விரலில்லா
கைகளின் சொந்தக்காரன்
என்பதன் பெருமையென்ன ?
கேட்ட கேள்வி
என்னை நானே

விடையற்றுப் போன
வினாக்கள்
விலையாகாமல் மனதை
நிறைக்கும் போது
பல சமயங்களில்
கேட்கும் கேள்வி
என்னை நானே

சத்தி சக்திதாசன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors