தமிழோவியம்
பேட்டி : நடிகர் செந்தில் பேட்டி
- திருமலை கோளுந்து

Senthilஇவரா அவர் என்ற எண்ணம் தான் மனதில் ஏற்படுகிறது. நடிகர் செந்தில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரது பேச்சினை கேட்க கூட்டம் அதிகளவு கூடுகிறது. சினிமாவில் எப்படி அப்பாவியாக பேசுவாரோ, அதே உத்தியைத் தான் தனது தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்துகிறார். ஆனால் அவரது பேச்சில் சரக்கு இருக்கிறது என்பது தான் உண்மை. தென் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வந்த இவரிடம் திருமங்கலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல்.

தமிழோவியம் : திடீரென்று நீங்கள் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் தான் என்ன?

செந்தில் : நான் திடீரென்று எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. நன்கு யோசித்த பின்பு தான் வந்தேன். அரசியலுக்கு முன்பே நான் எம்.ஜி.ஆர். ரசிகன். அதன் தாக்கத்தில் தான் பரட்சித் தலைவி அம்மா அவர்களை சந்தித்து என்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன். அன்று முதல் இன்று வரை பிரச்சாரம் செய்து வருகிறேன். மக்களும் எனது பேச்சினை ஆர்வமாக கேட்கின்றனர். இவை தவிர மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு.

தமிழோவியம் : உங்களது பிரச்சாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கூட பாதித்துள்ளது. உங்களை கிறுக்கன் என்று கூட அவர் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

செந்தில் : நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் பிரச்சாரத்தை மக்கள் ஆர்வமாக கேட்கின்றனர். அதனை பார்த்து கருணாநிதிக்கு எரிச்சல் வந்து இருக்கலாம். அதனால் அப்படி சொல்லி இருப்பார். உண்மையில் தமிழில் கிறுக்கன் என்றால் பற்று இல்லாதவன் என்று ஒரு பொருள் இருக்கிறது. ஒரு வேலை கருணாநிதி என்னை பற்று இல்லாதவன் என்று சொல்கிறார். ஆனால் அவரோ இந்த வயதிலும்  குடும்ப பற்றோடு இருக்கிறார். அதனால் தான் இன்னமும் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்க்க ஆசைப்படுகிறார். யார் கிறுக்கன் என்பதை தமிழக தேர்தல் முடிவு சொல்லும்.

தமிழோவியம் : நீங்கள் முதலில் நடிகர் கார்த்திக் உடன் அதிகமாக இருந்தீர்கள். இப்பொழுது அவர் தனித்து போட்டியிடுகிறார். அவர் தனித்துப் போட்டியிடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

செந்தில் : அவர் தனியாக போட்டியிடுகிறார் என்பதை விட தனித்து போட்டியிட வைக்கப்படுகிறார் என்பது தான் நிஜம். அவரை இயக்கும் சக்தி முழுவதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான். கருணாநிதி சொல்படி தான் கார்த்திக் செயல்படுகிறார். கார்த்திக்கை தனித்து போட்டியிட வைத்தால் குறிப்பிட்ட சதவித ஓட்டுக்கள் பிரியும், நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என கருணாநிதி மனக்கணக்கு போடுகிறார். ஆனால் மக்கள் நடிகர் கார்த்திக்கின் நடவடிக்கையை விரும்பவில்லை. அவரை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைப்பார்கள். நான் கார்த்திக்குடன் இருந்திருக்கிறேன். அவருக்கு அதிகளவு கொடுத்து இன்னும் தூண்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழோவியம் : ஆனால் நடிகர் கார்த்திக் தன்னை அ.தி.மு.க.வினர் மிரட்டுவதாக புகார் சொல்கிறாரே, அவரால் தோல்வி ஏற்படும் என்று  தானே அவருக்கு மிரட்டல் விடப்படுகிறது?

செந்தில் : முதலில் இந்த மிரட்டல் என்பது எல்லாம் சுத்த பொய். அப்படி மிரட்டுகிறார்கள் என்றால் போலீஸில் போய் புகார் செய்ய வேண்டியது தானே. தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வேண்டியது தானே. ஆனால் இது வரை ஒரு புகார் கூட அவரோ, அவரது கட்சியினரோ கொடுத்ததாக செய்தி இல்லையே. மிரட்டல் என்பது எல்லாம் மக்களை திசை திருப்பும் வேலை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

தமிழோவியம் : தி.மு.க.வினர் தாங்கள் தான் வெற்றி பெருவோம் என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

செந்தில் : கண்டிப்பாக அ.தி.மு.க. வெற்றி பெற்று அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது உறுதி.

தமிழோவியம் : எதன் அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்?

செந்தில் : அம்மா அவர்கள் அப்படி மக்களுக்கு செய்திருக்கிறார்கள். ஏழை குழந்தைகளுக்கு இலவச பாட பத்தகம், இலவச சைக்கிள், சுனாமி, வெள்ள பாதிப்பு போன்றவைகளில் மக்களுக்கு ஓடிச் சென்று உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் சுனாமி ஏற்பட்ட பொழுது கருணாநிதி மக்களை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாம் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டவர். அவை தவிர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து இருக்கிறது. தமிழக மக்களுக்கு அனைத்துப் பகுதியிலும் தரமான குடிநீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். அதனால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெருவோம்.

தமிழோவியம் : ஆளும்கட்சியின் செயல்பாடுகளை பற்றி குறை சொல்லி ஓட்டுக் கேட்காமல், இலவசங்களை தி.மு.க. கூட்டணியினர் சொல்லி ஓட்டுக் கேட்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

செந்தில் : இலவச டி.வி.யை நாம் கொடுப்போம், நமது பேரன் கேபில் இணைப்பு கொடுக்கட்டும், இன்னும் கொஞ்சம் அதிகமா கொள்ளை அடிப்போம் என்பது தான் கருணாநிதியோடு ரகசிய பிளான். இலவச டி.வி. தருவதற்கு அவங்க கூட்டணியில இருக்கிற தா.பாண்டியனே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் இருந்து டி.வி. கொடுத்தால் எதிர்ப்போம் என்று அவர் சொல்லி இருக்கிறார். இலவச நிலம் தருவேன் என்கிறார். எங்கே இருந்து கொடுப்பார். நான் நிலங்களை தேடி பார்த்தேன் அது எங்கயும் இல்லை. கடல்ல தான் நிலம் இருக்கிறது என்று கருணாநிதி சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். அதனை எல்லாம் மக்கள் ஏற்க மாட்டார்கள். கருணாநிதிக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக பட்டை நாமத்தைத் தான் போடப்போகிறார்கள்.

பிரச்சாரத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லி பரபரப்பாகிறார். கட்சிக்காரர்களிடம் வேட்பாளர் பெயர் உட்பட பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டு மைக் பிடிக்கிறார். கூடிய கூட்டம் ஆர்வமாக பேச்சை கேட்க ஆரம்பிக்கிறது. சினிமாவில் மார்க்கெட் போனாலும், அரசியலில் நடிகர் செந்தில் ஜெயித்து விடுவார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors