தமிழோவியம்
திரைவிமர்சனம் : அரசாங்கம்
- மீனா

திருவிளையாடல் பாணியில் பிரிக்க முடியாதது என்னவோ என்று கேட்டால் - கேப்டனும் போலீஸ் வேடமும் என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட போலீஸ் படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள அரசாங்கம் வித்தியாசமாகத் தான் அமைந்துள்ளது.

Vijayakanthஇந்தியாவின் முன்னேற்றத்திற்கு மூளையாக இருக்கும் விஞ்ஞானிகள் சிலர் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பிஜூமேனன் நியமிக்கப்படுகிறார். மும்பியில் விமானம் ஏறும் அவர் விமானம் சென்னை வந்து சேர்வதற்குள் காணாமல் போய்விடுகிறார். நடுவானில் பறக்கும் விமானத்திலிருந்து அவர் மாயமாய் எங்கு சென்றார் ? தொடர்சியாக நடைபெற்றுவரும் கொலைகளைச் செய்பவர்கள் யார் ? அவர்களது நோக்கம் என்ன ? என்று விடை தெரியாத கேள்விகளுடன் சுழலும் காவல்துறை, கிரிமினாலஜிஸ்ட் விஜயகாந்திடம் கேஸை ஒப்படைக்கிறது. தனது மனைவியின் அண்ணனான பிஜூமேனன் காணாமல் போன வழக்கில் அடிப்படை விஷயங்களில் மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கும் விஜயகாந்த், இந்தியா வல்லரசு நாடாவதைத் தடுத்துவிடும் நோக்கத்தில் சில வளர்ந்த நாடுகள் இங்குள்ள வறுமை மற்றும் வேலையின்மையைப் பயன்படுத்தி இளைஞர்களை தேசத்துக்கெதிராகத் திருப்புகின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார். இக்கூட்டத்தின் நோக்கத்தை எப்படி கேப்டன் அழிக்கிறார் என்பதே மீதிக்கதை.

ரொம்ப காலத்திற்கு பிறகு விஜயகாந்த் அழுத்தமாக இதில் நடித்துள்ளார். பக்கம் பக்கமாக டயலாக் கிடையாது - பஞ்ச் வசனங்கள் கிடையாது - ஓவர் ஆக்டிங் கிடையாது - முக்கியமாக அரசியல் சம்மந்தப்பட்ட வசனங்களோ காட்சிகளோ இல்லவே இல்லை.. ஆனால் சில காட்சிகளில் கேப்டனிடம் அந்த வழக்கமான சுறுசுறுப்பும், ஆக்ரோஷமும் மிஸ்ஸிங்.

கேப்டனுடன் டூயட் பாடுவதையும், வில்லன்களிடம் சிக்கி அவதிப்பட்டு கேப்டனின் உதவியைக் கேட்பதையும் தவிர நவ்நீத் கவுர், ஷெர்லின் பிண்டோ இருவருக்கும் பெரிதாக வேலையில்லை. ஆனாலும் விஜயகாந்தின் மனைவியாக காதுகேளாத கதாபாத்திரத்தில் வரும் நவ்நீத் கவுர், கணவனின் லட்சியத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் போது தனக்கு கொஞ்சூண்டு நடிக்க வரும் என்பதை நிரூபிக்கிறார். இன்டர்போல் போலீஸான ஷெரில் பிரிண்டோ காவல் துறை அதிகாரியாகக் கலக்காமல் கவர்சியில் கலக்குவது ஹ¥ம்..

போலீஸ் அதிகாரி, தீவிரவாத வில்லன் என இரட்டை வேடம் பிஜு மேனனுக்கு. அவரது திறமைக்கு நிச்சயம் இன்னும் பிரமாதப்படுத்தியிருக்கலாம்.. ஏமாற்றிவிடுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கொஞ்சம் நம்பமுடியாத காட்சிகள் படத்தில் அங்கங்கே இருந்தாலும் கூட ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்புகளையும் கடைசி வரை ஏமாற்றாமல் கொண்டு சென்றதற்காக இயக்குனர் மாதேஷ¤க்கும் இன்றைய அரசியலில் ஒரு பரபரப்பான கட்சித் தலைவராக இருந்தாலும் பட டைட்டிலைத் தவிர வேறு எங்குமே அரசியல் வாடை இல்லாத ஒரு படத்தை வழங்கியதற்காக - இயக்குனர் சொன்னதை அப்படியே செய்ததற்காக கேப்டனுக்கும் பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors