தமிழோவியம்
திரையோவியம் : ஜெய்ராம்
- மீனா

சின்னத்திரையில் பல சீரியல்களை வெற்றிகரமாகத் தயாரித்துவரும் ராதிகாவின் ராடான் மீடியா தயாரித்திருக்கும் முதல் படம் ஜெய்ராம். காதலையும் நாட்டுப்பற்றையும் இந்து - முஸ்லீம் பிரச்சனைகளையும் கலந்துகட்டி வித்தியாசமாக கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் தேஜா.

நவ்தீப் ,  சந்தோஷிராணுவத்தில் பணிபுரிந்து சண்டையில் இறந்துபோன அப்பா - மிகப் பெரும் தொழிலதிபரான அம்மா - இவர்களுடைய ஒரே வாரிசு அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் ஜெய்ராம். அம்மாவிற்கு மகனிடம் நேரில் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாத அளவிற்கு தொழில் ரீதியான அயல்நாட்டு பயணங்கள். பாஸ்கெட்பால் சாம்பியனான ஜெய்ராமை அவருக்குத் தெரியாமலேயே பார்த்து ரசிப்பவர் சாதாரண பேக்கரி வைத்திருக்கும்
முஸ்தபாவின் மகளான ஃபரா. தான் செய்யாத தவறுக்காக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் ஜெய்ராம், தன் அம்மாவின் பணபலத்தால் ஃபரா படிக்கும் கல்லூரில் சேர்கிறார். முதல்நாள் எதிர்பாராத விதமாக கல்லூரியின் ரவுடி மாணவனை ஜெய்ராம் பகைத்துக்கொள்ள, அவனால் புரட்டி எடுக்கப்படுகிறார். இதைப் பார்த்து ஜெய்ராம் மேல் பரிதாபப்படும் ஃபரா, தன் தகப்பனாரிடம் கூறி, ஜெய்ராமுக்கு பாக்ஸின் பயிற்சிக்கு
ஏற்பாடு செய்கிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இதை அறிந்து கொதித்துப்போகிறார்கள் ஜெய்ராமின் அம்மாவும், ஃபராவின் அண்ணனும்.  ஆனாலும் ஃபராவின் தந்தை இவர்களது காதலை ஆதரிக்கிறார்.

இதற்கிடையில் தொழில் ரீதியாக ஜெய்ராமின் அம்மா ஏற்பாடு செய்யும் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றிபெறும் பாக்கிஸ்தான் வீரர், "என்னை எதிர்க்க இந்தியாவின் ஒருவரும் இல்லை" என்ற ரேஞ்சில் சவால் விட, அதை எதிர்க்கிறார் ஜெய்ராம். ஜெயராமை நேர்மையான வழியில் தோற்கடிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த எதிரணியினர், சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதையெல்லாம் முறியடித்து ஜெய்ராம் வெற்றி பெற்றாரா? ஜெய்ராம் - ஃபரா காதல் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

ஜெய்ராமாக புதுமுகம் நவ்தீப். தாய்பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளிலும், கல்லூரியில் ரவுடி மாணவனிடமிருந்து முதலில் விலகி ஓடும் காட்சிகளிலும் (பிறகு அவனை புறட்டி எடுக்கும் சீன் எதிர்பார்த்ததுதான்), இந்தியாவிற்காக பொங்கி எழும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். ஸ்டண்ட் மற்றும்
டான்ஸ் ஓரளவிற்குத் தேவலை. அடுத்த படங்களை கவனமாகத் தேர்வு செய்தால் தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நிலைமைக்கு வர வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன.

ஃபராவாக புதுமுகம் சந்தோஷி. யதார்த்தமான நடிப்பு மற்றும் இளமைத் துள்ளல். கல்லூரியில் இவர்களுடன் படித்துக்கொண்டே காலேஜிலேயே மொபைல் பொட்டிக்கடை வைத்திருக்கும் பையனாக வருபவர் பார்க்க பொன்னம்பலத்தின் பையன் மாதிரி இருக்கிறார். காமெடியில் இவர் இன்னும் சற்று கவனம் செலுத்தவேண்டும்.

காலேஜ் பிரின்ஸிபாலாக வரும் பாண்டியராஜன், அதிகாரி மதன்பாப், வெண்ணிராடை மூர்த்தி ஆகியோர் சுத்த வேஸ்ட்.

கதையில் சில நெருடல்கள். இந்தியா - பாக்கிஸ்தான் உறவு சீரடைந்து வரும் வேளையில் இந்தியர்களை மட்டம் தட்டுவதற்காகவே இந்தியா வருகிறார் பாக். குத்துச்சண்டை வீரர். மேலும் முதலில் நடக்கும் இந்தியா - பாக்கிஸ்தான் பாக்ஸிங் போட்டிக்கு ரெஃப்ரியாக ஹீரோயின் அப்பா. இரு நாடுகளுக்கிடையே நடக்கும் குத்துச்சண்டைப் போட்டிக்கு ரெஃப்ரியாகும் அளவிற்கு அவருக்கு என்ன தகுதி இருகிறது என்பதைச் சரியாகக்
காட்டவில்லை. கிராபிக்ஸ் என்ற பெயரில் ஹீரோ அடிவாங்கும்போது அவரது உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைக் காட்டும் சீன்.. ஹூம் ஹூம்.  மேலும் 56 நாட்களில் ஹீரோவின் பஞ்சிங் பவர் இருமடங்காகிறது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கேற்றபடி அவரது உடலமைப்பில் மாறுதல்கள் ஒன்றும் இல்லை. பார்ப்பதற்கு குட்டிப்பையனைப் போலவே இருக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளரான அனுப்ரூபன்ஸ் இசை ரசிக்கும்படி உள்ளது. ரவிவர்மனின் கேமரா அட்டகாசம். தற்போது தமிழ் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையே அருமையான ஒளிப்பதிவு இருக்கிறது. தமிழில் தன்னுடைய முதல் படத்தை இயக்கியுள்ளார் தேஜா. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவரே.  படத்தில் பல புதுமுகங்கள். அவர்கள் அனைவரையும் ஓரளவிற்கு நன்றாக நடிக்க வைத்துளார். பாராட்டுக்கள்.  கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors