தமிழோவியம்
திரைவிமர்சனம் : பச்சகுதிர
- மீனா

Parthiban, Namithaகெட்டவனாக உள்ள ஒருவன் நல்லவனாக எப்படித் திருந்துகிறான் என்பதே பச்சகுதிர கதை. ஏற்கனவே தான் இயக்கிய புதியபாதை படத்தையே இன்னும் கொஞ்சம் வக்கிரமாக எடுத்து அதற்கு பச்சகுதிர என்று பெயர் சூட்டியுள்ளார் பார்த்திபன்.

முதல் காட்சியிலேயே இது ஒரு வக்கிரமாதித்யனின் கதை என்று சொல்லிதான் ஆரம்பிக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக சிரிக்கும் குழந்தையை கிள்ளி அழவிட்டு வேடிக்கை பார்ப்பது, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் பெண்ணை கிணற்றில் தள்ளிவிடுவது, காப்பாற்று என்று கதறும் ஒருவனைக் காசுக்காக காட்டிக்கொடுப்பது என்று வக்கிரமான காரியங்களைச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர் பார்த்திபன். தன்னைப்பற்றி ஊர் ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைத்து பார்த்திபன் தான் இறந்துவிட்டதாக தானே புரளியைக் கிளப்புகிறார். அதைக் கேட்டு ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷப்பட, ஊர் மக்களைப் புரட்டி எடுக்கிறார்.

ஒருநாள் சந்தடி சாக்கில் ஒரு கல்யாண மண்டபத்தில் நுழையும் பார்த்திபன் அங்கே உடை மாற்றிக்கொண்டிருக்கும் மணப்பெண் நமிதாவைப் பார்த்து டன் கணக்கில் ஜொள் விடுகிறார். நமிதாவைத் தானே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தால் நடக்க இருக்கும் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி தானே நமிதாவைத் திருமணம் செய்து கொள்கிறார்.

முதலில் பார்த்திபனைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கும் நமிதா போகப்போக பார்த்திபனைப் பற்றி புரிந்துகொள்கிறார். இந்நிலையில் கர்ப்பமாகும் நமிதா தானே சென்று கருகலைப்பு செய்து கொள்கிறார். ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கும் பார்த்திபனிடம் இன்னொரு ரவுடி உருவாவதை தான் விரும்பவில்லை என்று கூறுகிறார் நமிதா. இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பார்த்திபனின் தாய் நமிதாவிடன் "நீ ஏன் கருக்கலைப்பு செய்தாய்? நான் தானே இந்த வேலையைச் செய்து இருக்கவேண்டும்" என்று கூறுகிறார். இதைக் கேட்டு மனம் வருந்தும் பார்த்திபன் மனம் திருந்தி நல்லவனாக வாழ விரும்புகிறார். இந்த நேரத்தில் லோக்கல் தாதாவால் பார்த்திபனுக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள் வருகின்றன. நல்லவனாகவே பார்த்திபன் வாழ்கிறாரா இல்லை மீண்டும் வக்கிரமாதித்யனாக மாறுகிறாரே என்பதே கிளைமாக்ஸ்.

ஒட்டுமொத்த கெட்ட குணங்களையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி பார்த்திபன். புதிய பாதையிலாவது கொஞ்சம் தேவலாம் என்று நினைக்கும் அளவிற்கு வக்கிரத்தின் மறு உருவமாகத் திகழ்கிறார். படம் முழுவதுமே பார்த்திபனின் கோணங்கித் தனங்கள் கொடிகட்டிப்பறக்கின்றன என்றாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி ரொம்பவும் டூமச்.

இந்தப்படத்தில்தான் நமிதா நடித்திருக்கிறார் என்று பார்த்திபன் வாய்கிழிய பேசியது எல்லாம் பொய்யோ என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு சும்மா பொம்மை மாதிரி வந்து போகிறார் நமிதா. கருகலைப்பு செய்துகொள்ளும் காட்சியில் மட்டும் கொஞ்சூண்டு நடிக்க முயற்சி செய்துள்ளார். பொறுக்கிப் பிள்ளையை எப்படித் திருத்துவது என்பது தெரியாமல் திண்டாடும் அம்மாவாக லதாராவ். பாந்தமான நடிப்பால் மனதைக் கவர்கிறார்.

இசை சபேஷ்-முரளி. ஒன்றும் சொல்வதற்கில்லை. வக்கிரத்தின் உச்சகட்டமான ஒரு சாடிஸ்ட் பாத்திரத்தை எப்படி படைப்பது என்பது புரியாமல் ஏகத்திற்கும் குழம்பிப் போய் இருக்கிறார் பார்த்திபன். அதனாலேயே படத்தில் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஏராளமான காட்சிகளைத் திணித்துள்ளார். புதியபாதை, ஹவுஸ்புல் போன்ற படங்களைத் தந்த பார்த்திபனா இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று நம்மை வியக்க வைப்பதுதான் பச்சகுதிர மூலமாக பார்த்திபன் செய்துள்ள சாதனை..

Copyright © 2005 Tamiloviam.com - Authors