தமிழோவியம்
திரைவிமர்சனம் : புதுப்பேட்டை
- மீனா

ன்பான அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்துவருபவர் தனுஷ். குடும்பத் தகராறில் தனுஷின் அப்பாவே அம்மாவைக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலையை பார்த்துவிடுகிறார் தனுஷ். அம்மா கோண்டான தனுஷை வெளியே விட்டால் அவரே தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் தனுஷைக் கொல்ல அவரது அப்பா முடிவு செய்கிறார். இதை அறிந்து கொள்ளும் தனுஷ் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். வயிற்றுப் பிழைப்பிற்காக பிச்சை எடுக்கும் தனுஷை கஞ்சா கடத்தியவர்களுடன் சேர்ந்து போலீஸ் கைது செய்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் பாலாசிங்கின் ஆட்கள். தன் ஆட்களை வெளியே எடுக்கும் பாலாசிங் தனுஷையும் வெளியே எடுத்து தன்னுடன் தன் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்.

ரெளடி கும்பலில் சேரும் தனுஷ் அவர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பது, கை கால் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் எதிர் கோஷ்டியின் முக்கிய ஆள் ஒருவனை தனுஷ் தனியாளாக கொல்ல, அவருடைய புகழ் பரவுகிறது. தானே ஒரு பெரிய தாதாவாகிறார். தன்னைக் கொல்ல நினைத்த தன் தந்தையைக் கொல்கிறார். அமைச்சரின் ஆதரவு தனுஷிற்கு கிடைக்கிறது. இந்நிலையில் விலைமாது சினேகாவின் சகவாசம். சினேகாவைத் தான் தனுஷ் திருமணம் செய்து கொள்வார் என்று கூட்டாளிகள் அனைவரும் நினைத்திருக்கும் வேளையில் தன் நண்பன் தங்கை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு செல்லும் தனுஷ், சோனியாவின் மீது கண்டதும் மோகம் கொண்டு அவருக்குத் தானே தாலி கட்டிவிடுகிறார். தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்தால் சோனியாவின் அண்ணனைக் கொன்று விடுவதாக சோனியாவை மிரட்டுகிறார்.

Dhanush,Snehaதனுஷ் தன்னை ஏமாற்றியதை உணரும் சினேகா தனுஷை விட்டு விலகிச் செல்ல முடிவு செய்கிறார். அப்போதுதான் தான் கர்ப்பமாக இருப்பதை உணரும் சினேகா அதை தனுஷிடம் கூறுகிறார். அதிலிருந்து சினேகாவை அதிகம் நேசிக்க ஆரம்பிக்கும் தனுஷ், தனக்குப் பிறக்கும் குழந்தை மீது உயிராக இருக்கிறார். இதற்கிடையே தனுஷைப் பழிவாங்க எதிர் கோஷ்டி மும்முரமாக முயல்கிறது. இதில் சினேகா கொல்லப்படுகிறார். தன் குழந்தை தன்னுடன் இருந்தால் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் தனுஷ் குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறார். கடைசியில் தன்னை எதிர்க்கும் அரசியல்வாதையை கொல்கிறார் தனுஷ். போலீஸ் பிடியில் சிக்குகிறார். அதற்குப் பிறகு அவர் நிலை என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

தன்னுடைய உருவத்திற்கும் வயதிற்கும் பொருத்தமான பாத்திரங்களில் தனுஷ் நடிக்க ஆரம்பித்தால் புண்ணியமாய் போகும். ஒட்டடை அடிக்கும் குச்சி கணக்காக இருந்து கொண்டு எதிரிகளை ஒற்றை ஆளாக அவர் துவம்சம் செய்வது எல்லாம் ரொம்ப ஓவர். படம் முழுக்க ஒரு காட்சியிலுமே அவருடைய நடிப்பு நம்பும்படி இல்லை. "ஏய் ஏய்" என்று அவர் கத்தும்போது நம் பொருமை எல்லை மீறுகிறது.

Dhanush,Sonia Agarwalசோனியா அகர்வால் மீது இயக்குனருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. வெறும் நாலே காட்சியில் தான் அவர் தலையைக் காட்டுகிறார். மற்றபடி அவரது நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே இல்லை. சோனியாவிற்கு சினேகா தேவலை. விலைமாதுவாக வந்து அனுதாபத்தை சம்பாதிக்க நினைக்கிறார். ஆனாலும் இந்தப்படத்திற்காக தனக்கு அவார்ட்டு நிச்சயம் என்ற ரேஞ்சில் சினேகா பேட்டி அளித்ததெல்லாம்....சரி சரி எல்லாம் சகஜம்.

டும்டும்டும் இயக்குனர் அழகம் பெருமாள் இந்தப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். யதார்த்தம் மிளிர்கிறது நடிப்பில். பாலசிங், சோனியாவின் அண்ணனாக வரும் நிதிஷ் ஆகியோரின் நடிப்பு ஓக்கே ரகம்.

யுவனின் இசையில் பாடல்கள் எல்லாம் சுமார். எதையோ சொல்ல நினைத்து புதுப்பேட்டையில் யதார்தத்தை மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். மொத்தத்தில் புதுப்பேட்டை ரொம்ப ரொம்ப சுமார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors